கல்விக் கூடங்களில் 60 சதவீதம் முஸ்லிம் பெண்கள்! .
போபால்: மத்தியப் பிரதேசம் போபாலில் செயல்படும் மதரசாவில் 60% இடங்களை பெண்களே ஆக்கிரமித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மையப் பகுதி நகராக விளங்கும் போபாலில் நவாப்புகள், பேகம்கள், மதரஸாக்கள் ஆகியவை முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்துக்கு, அவர்களுக்குக் கல்வி அளிப்பதே சிறந்த வழி என்று செயல்படுகிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தில் 5300 மதரசாக்கள் உள்ளன. இங்குள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில் 60 சதவீதம் பெண்களே! அதுபோல், பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், மதரசா-இ-நிஸ்வானின் வார்டன் தய்யபா பயா, பர்தா அணிவதை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார். தன்னை புகைப்படம் எடுப்பதைக் கூட அவர் அனுமதிக்கவில்லை.
இந்தப் பள்ளியில் பயிலும் இளைய தலைமுறையினரோ, தங்களுக்குள் விவாதக் கலாசாரத்தை வளர்த்துக் கொண்டு உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராகின்றனர்.
இந்த மதரஸாவில் பயிலும் சம்ஷத் என்ற மாணவி தான் பொறியாளராக வரவேண்டும் என்று விரும்புவதாகக் கூறியுள்ளார். வழக்கமான ஆங்கிலப் பள்ளிக் கல்வி முறையில் வராவிட்டாலும் கூட, மதரஸாவில் இயல்பான கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
“முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கொடுமைபடுத்தப் படுவதாகவும், சிரமப்படுவதாகவும் கூறப்படுவது எந்த அளவுக்கு பொய்யானது என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளே சாட்சி, இதுபோன்ற மாணவிகளின் ஆர்வம் எங்களுக்குப் பெருமை தரக்கூடிய விசயம்” என்று மதரசா போர்டின் தலைவர் ரஷித் கான் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மதரசாக்களில் பயிற்றுவிக்கப்படும் மதக் கல்வியோடு இணைந்த நவீன கல்வி மூலம் முஸ்லிம் பெண்களும் இளைய தலைமுறையும் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர்.
source:www.inneram.com