பெண் சமூகத்தை ஒரு கருத்துப் போலிக்குள் முடக்கி விடுவதே காலம் காலமாக நடந்து வரும் தீர்வெனும் தவறு!
பெண்ணுக்கு ஆன்மாவே இல்லை’ ‘பெண்கள் அனுபவித்து சுவைக்கவே’ பெண்கள் பாலியல் கருவியாகி (SEX MACHINES) பாவிக்கப்பட்டார்கள்.பெண் விடுதலை, கருப்பை சுதந்திரம், ஆணுக்கு நிகரான பெண் சமத்துவம், போன்ற கோஷங்கள் அன்றாடம் எழுப்பப்பட்டும், சட்டரீதியான அதன் வடிவங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டும் இருக்கும் நிலையிலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள், அடக்கு முறைகள், அத்துமீறல்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இது தொடர்பில் சட்டத்தின் பாதுகாப்பும், கிரிமினல் குற்றங்களுக்கான தண்டனைகளும் கேள்விக்குறியான நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனது சமூக வாழ்வு குறித்து அச்சப்பட்டே காலம் நகர்த்த வேண்டியுள்ளது.
தொட்டில் முதல் மயானம் வரை தொடரும் இந்த அநியாயம் தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பெண்கள் சமூகம் மீண்டும் மீண்டும் கவர்ச்சிகரமான பாதையில் தவறான இலக்குகளை நோக்கியே இது விடயத்தில் இழுத்துச் செல்லப் படுகின்றது. இறுதியில் அனுசரித்தால் வாழலாம் என்ற தத்துவத்தை சொல்லாமல் சொல்லி பெண்கள் சமூகத்தை ஒரு கருத்துப் போலிக்குள் முடக்கி விடுவதே காலம் காலமாக நடந்து வரும் தீர்வெனும் தவறாகும்.
இது விடயத்தில் தீர்வு என முன்வைக்கப்படும் நவீனம், விடுதலை என்ற அப்பட்டமான முதலாளித்துவ சுயநலக் கண்களினால் பெண்ணை ஒரு இலாபம் தரும் நடமாடும் பண்டமாகவே அலைய விட்டுள்ளது. இந்த பார்வையின் உச்ச விளைவை வன்முறை வடிவில் எதிர்நோக்கும் போது மட்டும் அவ்வப்போது ஆவேசமாக கூக்குரலிடுவதில் அர்த்தமில்லை. எனவே இதற்கு சரியான தீர்வென்ன?
சமூகக் கோட்பாட்டில் பெண்கள் ஒரு சுருக்க வரலாற்றுப் பார்வை :
வரலாற்று ரீதியில் பெண்கள் தொடர்பான பல்வேறு சமூகங்களின் கருத்துக்களை முதலில் நாங்கள் ஆராய்வது பொருத்தமானது . ஏனென்றால் இந்த ஆய்வின் மூலம் இன்றைய சூழலில் அவ்வாறான பார்வைகள் இருக்கின்றதா என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் .
கிரேக்க சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது?
‘பண்டோரா’ எனும் பெண்ணே முதல் பெண், இவளே எல்லா தீமைகளுக்கும் ஆணி வேராகும். இந்த அடிப்படையில் பெண்களிடமிருந்தே எல்லாத் தீமைகளும் உற்பத்தியாகின்றன. அவள் மனிதப் பிறவியே அல்ல. இந்த பார்வையின் கீழ் அவர்கள் பெண்களை விலங்குகளை விட கேவலமாக நடாத்தினார்கள். அங்கு பெண்களின் உரிமை பற்றியோ, சலுகை பற்றியோ எவ்வித பேச்சுக்கும் இடமிருக்கவில்லை, எவ்வளவு மோசமாக கேவலப் படுத்த முடியுமோ அவ்வளவு மோசமாக கேவலப் படுத்தினார்கள்.
ஆனால் காலப் போக்கில் பெண்கள் தொடர்பான இவர்களது அணுகுமுறைகளில் சற்று மாற்றம் ஏற்பட்டது அதுவும் சிலகாலம்தான். மீண்டும் கிரேக்கம் நாகரீகத்தின் உச்சமாக தன்னை காட்டி நின்ற இன்னொரு பொழுதில் காமம் என்ற உணர்வு கட்டுப்பாடிழந்து விபச்சாரம் கட்டாய சேவையாகியது. திருமணம் என்பது ஒரு வகையான அனாவசியமான கட்டுப்பாடு என எண்ணினார்கள்.
இந்த மாற்றத்தில் கிரேக்கத்தில் பெண்ணுக்கான தரத்தை கடவுள் அந்தஸ்தில் உயர்த்தினார்கள். அதுவும் சாதாரண கடவுள் அல்ல; காதலுக்கே உரிய கடவுள். அவளின் பெயர் ‘APHRODITE’ இவள் ஒரு ஆண் கடவுளின் மணைவி. அத்தோடு இன்னும் மூன்று ஆண் கடவுள்களோடு காதல் தொடர்பு வேறு (கள்ளமாக) வைத்திருந்தாள். இந்த தகாத தொடர்பால் ‘CUPID’ எனும் இன்னொரு கடவுளும் பிறந்தார் என தொடர்கிறது அந்த அசிங்கப் புராணம்.ரோம் சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது?
இவர்களது அணுகு முறையும் கிரேக்கர்களைவிட சற்றும் குறைந்ததாக இருக்க வில்லை. ‘பெண்ணுக்கு ஆன்மாவே இல்லை’ என்பதே இவர்களின் தத்துவம். பின்னர் கிரேக்கர்களை போலவே ஒரு தளர்வான மனோ நிலையில் சில காலம் வாழ்ந்தார்கள். இவர்களது வேதாளமும் கிரேக்கர்களைப் போல் சற்று வித்தியாசமாக முருங்கை மரத்தில் ஏறியது.
‘பெண்கள் அனுபவித்து சுவைக்கவே’ என்ற கொள்கை இங்கு நடைமுறை ஆகியது. விளைவு அவர்கள் பாலியல் கருவியாகி (SEX MACHINES) பாவிக்கப்பட்டார்கள். அவர்களின் இந்த அடாத செயல்களுக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இதோ…’ப்ளோர’ எனும் ஒரு விளையாட்டு; இதில் பெண்கள் முழு நிர்வாணமாக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வார்கள். ஆண்கள் அந்த விளையாட்டை கண்டு களிப்பார்கள். இங்கு பெண்கள் பல ஆண்களை அடக்கி ஆண்டார்கள் அதிகாரத்தால் அல்ல, உரிமைகளால் அல்ல, மாற்றமாக தங்கள் உடல்களால்!
ஐரோப்பிய சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது?
ஐரோப்பிய நாகரீகத்தில் பெண்கள் என்ற விடயத்தை நாம் ஆராயும் போது, இன்றைய நவீனத்தின் நாம் ஆராயும் விடயத்தின் அடிப்படையை தொட்டவர்களாக ஆகிவிடுவோம். இருண்ட ஐரோப்பா என்ற வரைவிலக்கணத்தை வரலாற்றுப் பாடத்தின் ஒரு தகவலாக அனேகமாக எல்லோரும் கற்றுள்ளோம். அதில் ‘கிறிஸ்தவ சர்ச்சுகளின்’ சர்வதிகாரம் சகலதையும் கடவுளின் பெயரால் தவறாக செய்தது. அந்த தவறில் இருந்து பெண்ணியத்தின் கண்ணியமும் அகௌரவமாக சித்தரிக்கப்பட கிரேக்க, ரோம நாகரீகத்தை விட சற்று வித்தியாசமான அடக்கு முறையை பெண்களின் மீது மதத்தின் பெயரால் கிறிஸ்தவம் செய்தது.
‘முதல் பாவம்’ என்ற கோட்பாட்டில் இருந்து பெண் நோக்கப்பட்டாள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் என்ற முதல் மனித படைப்பின் ஆரம்பத்தில் தடுக்கப்பட்ட சுவனத்தின் கனியை சுவைக்கத் தூண்டியது ஹவ்வாவே (ஏவாள் ). ஆகவே முதலில் பாவத்தின் பக்கம் மனிதனை தூண்டியவள் பெண்; இதுவே ஆதி பாவம், இதனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்திலேயே பிறக்கின்றன என்ற கோட்பாட்டை சமூக மயமாக்கினார்கள்.
விளைவு அது ஐரோப்பாவையே ‘பெண்களுக்கு ஆன்மா உண்டா, இல்லையா? என்ற விவாதத்தில் ஈடுபடவைத்தது. ஒரு உயர் குடி சீமான்களின் குழு அன்று அவளுக்கு ஆன்மா இல்லை என அடித்துக் கூறியது.
TERTULIAN என்ற கிறிஸ்தவப் பாதிரியார் பின்வருமாறு பெண் விடயத்தில் கருத்துக் கூறினார்.
“அவள் சாத்தானிய உணர்வுகளை தூண்டுபவள். மனிதனை தடுக்கப்பட்ட மரத்தின் பக்கம் கொண்டு சென்றவள், இறைவனின் கட்டளைகளை உடைத்தவள் ,மனிதனை ஒழுக்கக் கேட்டில் ஆழ்த்துபவள்.” என்று கூறி நின்றார். இதனடிப்படையில் பெண்கள் தாழ்வாக பார்க்கப் பட்டார்கள். அவளது அடிப்படை உரிமைகள் கூட இங்கு கேள்விக்குறியானது.
இந்த காலகட்டத்தில் தான் கிறிஸ்தவ சர்வாதிகாரத்திற்கும், அறிவியலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு சமரசத்தின் அடிப்படையில் தவறான ஆன்மீகம், உலகியலில் இருந்து பிரிக்கப் பட்டு சர்ச்சுகளுக்குள் முடக்கப் பட்டது, மதச்சார்பின்மை வாழ்வியல் கொள்கையாக ஆட்சி ஏறியது. அடங்கியிருந்த பெண்களும் தமது விடுதலை உணர்வுக்கு அது சிறந்த உணவு தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். விஷத்திற்கு அமுதம் என்ற பெயர் கொடுத்து அவளது விடுதலை கீதம் இங்கும் இசைக்கப்பட்டது. எவ்வாறு? என்பதை தொடர்ந்தும் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் .
முன்னைய சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஆராயும் தொடரில் கிரேக்கம், ரோம், ஐரோப்பா போன்ற பகுதிகளை நாங்கள் இதுவரை பார்த்தோம். இன்றைய உலகின் ஆதிக்க சக்தியாய் வீற்றிருக்கும் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் ஆரம்ப அத்திவாரமாக குறிப்பிடப் படும் சமூகங்களே நான் இதுவரை குறிப்பிட்டவை. இதே வரிசையில் இஸ்லாத்திற்கு முந்திய அரேபியா, மற்றும் ஆபிரிக்க, ஆசிய பகுதிகளோடு தொடர்பு பட்ட நாகரீகங்களில் பெண்கள் தொடர்பான பார்வை மற்றும் நடத்தை பற்றியும் சிறிதளவு ஆராய்வது பொருத்தம்.
உண்மையில் இந்த நாகரீகங்களிலும் வழிவரான கலாச்சாரம், மதக் கோட்பாட்டு அழுத்தங்களுடன் கூடிய சாதிக் கோட்பாடு என்பவற்றின் கீழ் பெண்கள் சமூகம் தரக்குறைவாக நடத்தப் பட்டமைக்கு பல ஆதாரங்களை நாம் காண முடியும். ஒப்பீட்டளவில் கிரேக்கம், ரோம், ஐரோப்பா போன்ற பகுதிகளை ஒத்த செயலையே சில வடிவ மாறுபாட்டோடு இந்த சமூகங்களும் செய்துள்ளன.
O பெண் சிசுக் கொலை
O தேவதாசிக் கோட்பாடு
O தாழ் சாதி விதியின் கீழ் மேலாடை அணியத் தடை .
O உடன் கட்டை ஏறுதல்.
-போன்ற விதிகளின் கீழ் தனது சமூகத்திற்கு உள்ளும், பிற சமூகங்களுக்கு மத்தியிலும் மிக அதிகமாகவே பெண்கள் சமூகம் தாழ்த்தப்பட்டது. இந்த தரக்குறைவான நியதிகளின் கீழ் பேசும் விலங்கு என்ற போலித் தத்துவத்தை அவள் உருவப் படுத்தினாள். சில ஆபிரிக்க பழங்குடியினர் அவளின் மீதான நம்பிக்கையீனத்தின் சான்றாக அவளின் யோனித் துவரங்களை கூட குறிப்பிட்ட காலம் தைத்து விடுவார்களாம்!
தொட்டில் பழக்கத்தில் இருந்து பெண்கள் தொடர்பில் தவறான கருது கோள்களே சமூகங்காளால் கற்றுத் தரப்படுகின்றன. அதாவது கலாச்சாரப் பாரம்பரியங்கள், மதங்கள், சிந்தனைகள் போன்ற எல்லாமே பெண்கள் தொடர்பில் ஒரு வகையான வன்முறைப் பார்வையையே கற்றுக் கொடுக்கின்றன
“பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்! அதன் கொள்கைகள் கொலைக் களங்களை பிரசவிக்கும்! அதன் சட்டங்களும் கோரமாக இரத்தம் குடிக்கும் !சுயநல மேடை போட்டு நீதியை மிதித்து அங்கு அநீதி ஆனந்தக் கூத்தாடி மகிழும்! – இதுதான் இன்றைய அதிகாரங்கள் அரசியலாக கற்றுத் தருபவை” டெல்லியில் நடந்த அந்த மிருகத் தனமான பாலியல் வன்முறையோடு கூடிய படுகொலையோ, அல்லது அதே இந்தியாவில் காஸ்மீரில் இந்த முஸ்லீம் உம்மத்தின் சகோதரிகளின் உடல்கள் மீது படுபயங்கரமாக இந்திய இராணுவ ஜவான்களால் நிகழ்த்தப்படும் பயங்கர வாத எதிர்ப்பு யுத்தமோ, அரசியல் தரத்தில் இரண்டு வேறுபட்ட பார்வைகள். மனித குலத்தின் கீழ்த்தரமான அணுகு முறைகளுக்கு இது சிறந்த உதாரணம்.
பார்வையின் கோணத்தில் இருந்தே நடைமுறைகள் தீர்மானிக்கப் படுகின்றன. அந்த பார்வையை தீர்மானிப்பது கொள்கைகள் என்றால் அது மிகையான கருத்தல்ல. இது பொதுவாக எல்லா விடயங்களுக்கும் பொருந்தும். எப்போதும் எமக்கு முன் ஏற்படும் அநீதமான வன்முறைகள் தொடர்பாக எமது தீர்வுகள் தற்காலிகமான சில உணர்ச்சி கரமான நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்கின்றன. ஒரு அடிப்படைக் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக அந்த வன்முறை பார்க்கப் படுவதில்லை.
இன்று எம்முன் நிற்கின்ற ஒட்டு மொத்த கொள்கைகள், சிந்தனைகள் பெண்கள் தொடர்பில் எவ்வாறான கருத்தை வைத்திருக்கின்றது? என ஆராயப் போகும் போது ஒரு விரிவான தேடல் அவசியமாகின்றது. ஆனால் பொதுக்கருத்தில் பெண்கள் தொடர்பான கருத்தில் பல உடன்பாடுகளை அவை கொண்டிருக்கின்றது; என்பதை நிரூபிக்க பக்கம் பக்கமாக ஆராயும் அவசியம் இருக்காது. கிரேக்கமோ, ரோம் சமூகமோ அல்லது ஐரோப்பாவோ, அரேபியாவோ, ஆபிரிக்காவோ, ஆசியாவோ, தமது கருத்தில் பெண்கள் தொடர்பான நிலைப்பாட்டை விளக்க அல்லது அவைகளின் பெண் தொடர்பான பொதுப் பண்பை விளக்க சில உதாரண சம்பவங்களே போதுமாக இருந்தது.
இந்த விதி இன்று எம்முன் நிற்கும் கொள்கைகள், சிந்தனைகள் பற்றி ஆராயவும் போதுமானதாகும். அந்த வகையில் முதலாளித்துவமோ, கம்பியூனிசமோ, பெண் தொடர்பில் பார்த்த பார்வை என்ன? என்று நாம் ஆராய முற்படுகையில், எல்லாம் பாலியல் கவர்ச்சியே என்ற ‘சிக்மன் புரைடின்’ சிந்தனை ஆதிக்கமும், சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் அறிந்தும் அறியாமலும் இரண்டறக் கலந்த கோட்பாடுகளாகவே (முதலாளித்துவமும், கம்பியூனிசமும்) இருக்கின்றன என்ற முடிவிற்கு எம்மால் வரமுடியும்.
இந்த விடயத்தை ஆராய முன் இன்னும் ஒரு விடயத்தை விளக்க வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது. அது ஒரு கேள்விக்கான விடையாய் வந்து எம்மை ஆச்சரியப் படுத்தும். அந்தக் கேள்வி இதுதான் ‘மனித குல வரலாற்றின் மிகப் பழமையான தொழில் எது?’ என்ற வினாவே அதுவாகும்.
பல வருடங்களுக்கு முன்னர் உளவுத்துறை சம்பந்தமான ஒரு ஆய்வு நூலில் இது பற்றி நான் படித்துள்ளேன். அதன் விடையைக் கண்டு நான் சற்று ஆச்சரியம் அடைந்தேன். அதன் விடை இவ்வாறு இருந்தது 1. விபச்சாரம், 2. உளவு வேலை என்பதாக இருந்தது. அதிலும் இந்த இரண்டு தொழில்களிலும் வெற்றிகரமாக இயங்கியவர்கள் பெண்கள் என்பதாகவும், பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்றும் இலாபகரமாக இயங்கும் நிறுவனங்கள் இவைதான் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனநாயக நெருப்பின் முன்
ஒரு விட்டில் பூச்சியாய் பெண்
உலகில் உலா வந்தாள்!
சம வாழ்வுரிமை, வாக்குரிமை
தொழில் உரிமை, ஆணோடு சம உரிமை
எல்லாம் கிடைத்தது
காமப் பார்வைகளின் தொடரில்
நிம்மதியை மட்டும் விலை பேசியதாக!
கருப்பை சுதந்திரத்தின் முன்
கட்டில் சுகத்தோடு அவள்
விடுதலை வீட்டில் அவமானத்தை
உரிமையோடு தொட்டில்
கட்டவும் கேட்டாள்!
அந்த விபச்சார விலாசத்தை தேடி
நோபல்’ பரிசோடு அணிவகுத்தார்கள்
அந்த நவீனத்தின் காவலர்கள் !
source:http://islamicuprising.blogspot.in/ இணையத்தில் வெளியான ”தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன?” எனும் கட்டுரையிலிருந்து.