எதையும் மிகைப்படச் சொல்லாதீர்கள்!
ஒருவர் 10 சதம் மட்டுமே உண்மை பேசுவார். 90 சதம் பொய் பேசுபவர் எனில் அவரை 91 சதம் பொய் பேசுபவர். 9 சதம் மட்டுமே உண்மை பேசுவார் என்று மிகைப்படுத்திக் கூறக்கூடாது.
ஐந்து இலட்சம் பெறுமானமுள்ள சொத்துக்குரியவரை ஐந்து கோடி சொத்துக்குரியவர். தூக்கிப் பேசக்கூடாது. ஐந்து கோடிசொத்துக்காரரை ஐந்து இலட்சம் சொத்தாளர். குறைத்துக் கூறவும் கூடாது.
பெண், மாப்பிள்ளை பார்க்கச் செல்லுமிடத்தில், பையன் 10,000ம் சம்பாதிக்கிறான் என்றால் அதை மட்டும் கூறணும். பெருமைக்காக அதிகப் படுத்திக் கூறுதலாகாது. பையனுக்கு என்னென்ன பழக்க வழக்கங்கள், நோய்கள் உள்ளன. குணத்தின் போக்கு, உள்ளதை உள்ளபடி அப்படியே பெண் வீட்டாரிடம் கூறணும். பெண் வீட்டாரும் தமது மகளின் குணம். பண்பு. நோய் தன்மை அறிவிக்கணும். இருபுறமும் மறைத்து கூடுதலாக உரைத்து பின்னர் வேதனைப் படுதலாகாது.
ஒருவர் பிரச்சினையில் தாக்கப்பட்டால், தண்டிக்கப்பட்டால், நட்டப்பட்டால், நிகழ்வு குறித்து ஒரு புள்ளி அளவு கூட கூடுதலாகக் கூறக்கூடாது. எதிராளி தண்டிக்கப்படவேண்டியது அவசியம். அதிகப்படியான தண்டனைக்குள்ளாகி விடக்கூடாது.
தமது குடும்ப நிலை. பிள்ளைகள் பெருமை குறித்து கூறலாம். அளவுக்கதிகமாக உயர்த்திக் கூறாது. உண்மை நிலையை உணர்த்தலாம்.
வணிக நிறுவனத்துக்கு பொருள் வாங்க வந்தவரிடம் பொருளின் தரம் குறித்து உண்மையைக் கூறி விற்கலாம். அவர் வாங்கியே தீரணும் என்பதற்காக அதிகப் படியாகக் கூறி நம்பகத் தன்மையூட்டி ஏமாற்றக்கூடாது.
பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையை நிர்வாகம் விலக்கி வீட்டுக்கு அனுப்ப நினைத்தால் பிள்ளையின் உண்மை நிலையை எடுத்துரைத்து அனுப்பலாம். வெளியே தள்ள வேண்டும் என்பதற்காகவே கூடுதலாக பிள்ளையின் தரத்தை இறக்கிக் கூறி வெளியேற்றக்கூடாது.
வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும். அல்லது பங்காளிகளுக்குள். அடுத்தடுத்து வசிப்போரிடையே வழக்கு நடந்தால் இருபுறமும் தம்மை நிலைநிறுத்த கூடுதல் குறைவாகக் கூறிக் கொள்வர். சிறு இழப்புக்கும் உட்படாது, விட்டுக் கொடுத்தலில்லாது வாழ்வின் 25 சதமானத்தை வழக்காடுமன்றத்தில் கழிப்பர். ஒருவருக்கொருவர் மிகைத்தலில் வரும் நிலை.
காவல் நிலையத்தில் சாமான்யர், எளியவரெனில் கடுமையான தண்டனைக்குட்படுத்துவது. பணிசார்ந்த கட்டளைகளுக்குப் பயன்படுத்துவதில் ‘மிகை’க்கு உட்படுத்துதல். வலிமையாளரை எளிமையாக விட்டுவிடுதல்.
தேர்தல் நேரம்-. ஆட்சி சமயங்களில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான குற்றங்கள் சுமத்திக் கொள்வது வழக்கம். இங்கு கூறப்பட்டுள்ள பாதகமான போக்குகள் கூடவே கூடாது என்பதை உட்பொருளாய் வைத்த ஒளவை ஒரு வரியில் கூறியிருக்கிறார் ”மிகைபடச் சொல்லேல்.”
-ஜெ.ஜெ.
முஸ்லிம் முரசு ஜனவரி 2013