வேறுபாடுகளைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொள்ளும் வழிமுறை
உண்மையில் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அமுல்செய்யக்கூடிய பொறுப்பும், தூய்மையுமுள்ள தலைமை இல்லாமையே.
பெரும்பாலும் இஸ்லாத்தின் நீதியும், பாதுகாப்பும் மட்டுமே, பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்னாலேயே அவை உருவாகாமல் இருக்க வழி செய்து விடுகின்றன. எனினும் அதனையும் தாண்டி பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் இஸ்லாமியத்தலைமை அதனை ஷாPஆவின் பிரகாசத்தில் தீர்த்து வைத்துவிடுகிறது.
இஸ்லாம் ஒர் சம்பூரண வாழ்க்கைத்திட்டமாகையால் அது எவ்வகையான பேதங்களையும் தீர்த்துவைக்கும் ஆளுமையைக் கொண்டுள்ளது. அது கிலாஃபாவின் குடிமக்களுக்கும், கலீபாவுக்கும் இடையில் தோன்றும் பேதங்கள் தொடக்கம் வெவ்வேறு குழுக்கள், இயக்கங்கள் என்பவற்குக்கிடையில் தோன்றும் சச்சரவுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக எழும் கருத்து வேறுபாடுகளால் உருவாகும் பிரச்சனைகள் வரை அனைத்து வகையான சச்சரவுகளையும் தனக்கேயுரிய பாங்கில் தீர்த்து வைத்து விடுகிறது. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் பேதங்களைக் களைந்து அவர்களை ஓரணியாக மாற்றி பிளவு எனும் பாரிய ஹராத்திலிருந்து பாதுகாப்பதற்கு கிலாஃபா ஒன்றினாலேயே சாத்தியமாகும்.
கிலாபத் ஆட்சியிலே குடிமக்களுக்கும், கலீபாவுக்குமிடையில் தோன்றும் பிரச்சனைகளை மஹ்கமத் அல் மதாழிம் (அநீதச் செயல்களுக்கான நீதிமன்றம்) என்ற விஷேட நீதிமன்றம் தீர்த்து வைக்கும். அதேபோல ஒரு குறித்த விடயத்தில் ஷரீஆவின் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றும் கருத்து பேதங்கள், கலீஃபா அந்நிலைப்பாடுகளில் (இஜ்திஹாத்) ஒன்றைத்தேர்வு செய்து முஸ்லிம்கள் மீது அமுல்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருப்பதால் அச்சிக்கல் நடைமுறை ரீதியாகத் தீர்க்கப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையும், கிலாபத்தின் ஒறுமைப்பாடும் உறுதி செய்யப்படும்.
மேலும் தனிநபர்களோ, அல்லது குழுக்களோ தங்களுக்கிடையில் முரண்பட்டுக்கொண்டால் அவர்களுக்கென நியமிக்கப்படும் நீதிபதி அது குறித்து விசாரித்து அவர் மேற்கொள்ளும் தீர்மானம் இறுதித்தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இத்தகைய பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். எனவே கிலாபத்தை உருவாக்குவதில் நாம் முனைப்புக்காட்டுவது எமது முரண்பாடுகள் பலவற்றை தீர்ப்பதற்காக நாம் எடுத்து வைக்கும் எட்டுக்களாகும்.
எனினும் கலீபா இல்லாத நிலையில் தாண்தோன்றித்தனமாக இப்பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கலீபா ஒருவர் இல்லாத நிலையில் கூட முஸ்லிம் குழுக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் ஷாPஆவிற்கு கட்டுப்பட்டு அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தமது முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதன்போது எவர்களேனும் அல்லாஹ்வின் சட்டத்தை அத்துமீறி நடந்தால் அவர்களை அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்தனது திருமறையில் கீழ்வருமாறு கட்டளையிடுகிறான்.
“விசுவாசிகளிலுள்ள இரு கூட்டத்தார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருவருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரின்மீது அக்கிரமம் செய்து வரம்பு மீறினால் (வரம்பு மீறிய) அக்கூட்டத்தவர் (அல்லாஹ்வுடைய கட்டளையின் பால்) திரும்பி வரும் வரை நீங்கள் போர் செய்யுங்கள். அக்கூட்டத்தார் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பிவிட்டால் அவ்விருவருக்கிடையே நீதியைக்கொண்டு சமாதானம் செய்து வையுங்கள். (இதில்) நீங்கள் நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.” (49:9)
ஆகவே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ, அல்லது தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றோ அல்லது கிலாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் விடயத்தில் கூட வன்முறைகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு இரத்தம் சிந்துவதை இஸ்லாம் முற்றாக மறுத்துரைக்கிறது. இன்று முஸ்லிம் அரசுகளுக்கும் அதனை எதிர்த்து போராடும் போராட்டக்குழுக்களுக்குமிடையே இடம்பெறும் அதிகமான ஆயுதப் போராட்டங்களை எடுத்துக்கொண்டால் அவை இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றத்தை அரச மட்டத்தில், சமூகத்தில் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என முனையும் கூட்டத்தாருக்கும், அவற்றை நசுக்க முனையும் அரசுக்மிடையிலான போராட்டங்களாகவே இருக்கின்றன. எனவே முஸ்லிம்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகளுக்கு காரணமான இந்த முக்கிய விடயம் குறித்து இங்கே மிகச்சுருக்கமாக குறிப்பிடுவது பொருத்தமாகும்.
இஸ்லாமிய அரசை ஏற்படுத்த அல்லது ஷரீஅத்தை அமுல்படுத்த முனையும் இயக்கங்கள் இஸ்லாம் இது குறித்து எத்தகைய வழிகாட்டலை வழங்குகிறது என்பதை நிதானமாக ஆராய வேண்டும். அத்துடன் கிலாபத்தை நோக்கிய பாதை இஸ்லாத்தின் வெளித்தில் தீர்க்கமாக தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் எவ்வாறு கிலாபத்தை நோக்கி இயங்கினார்கள் என்பதையும், அவர்களுடைய பாதை எவ்வித முரண்பாடுகளுமின்றி எவ்வாறு தெளிவாக அமைந்தது என்பதையும் ஆராய்வது மிக மிக முக்கியமாகும். அல்லாஹ்தனது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம்நீங்கள் வழிநடாத்தும் உங்கள் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறுங்கள் என்று கீழ்கண்டவாறு சொல்கிறான்.
“(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான்(உங்களை)அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின்மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (12:108)
கிலாஃபத்தை நோக்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பயணத்தில் இராணுவ வழிமுறை உள்ளடங்கியிருக்கவில்லை என்பதை நாம் தெளிவாப்புரிந்து கொள்ள வேண்டும். மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து அவர்களை முற்றுமுழுதான இஸ்லாமிய முன்மாதிரிகளாக மாற்றினார்கள். இவ்வாறு எவரெல்லாம் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் இஸ்லாத்தி;ன ஷரிஆவிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு சுவர்க்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பற்ற அவாவுடன் உறுதியாக இஸ்லாத்திற்காக உழைத்தார்கள்.
பின்னர் ஈமானிலும், திருக்குர்ஆனிலும் நன்கு தோய்த்தெடுக்கப்பட்ட அந்த ஆரம்ப முஸ்லிம்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையிலான ஒரு அரசியல் சமூகக் குழுவாக செயற்பட்டு மக்காவில் ஒரு அறிவார்ந்த போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் மேற்கொணடார்கள். இதன்மூலம் அங்கு நிலவிவந்த பழக்க வழக்கங்களையும், சமூக, அரசியல் கட்டமைப்புக்களையும், அங்கு நிலைகொண்டிருந்த பாரம்பரியம், வழக்காறுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் துணைகொண்டு எதிர்த்தார்கள்.
இவ்வாறு ஜாஹிலிய சமூக வழமைகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து அதற்கு பகரமாக இஸ்லாமிய சிந்தனைகளையும், தீர்வுகளையும் முன்வைத்தார்கள். இவ்வாறு வளர்ந்த போராட்டத்திற்கு மத்தியில் இஸ்லாத்திற்கான உதவியை அதாவது நுஸ்ராவை சமூகத்தலைமைகளை நோக்கியும், ஆட்சி மற்றும் அதிகார வர்க்கத்தை நோக்கியும் கோருமாறு அல்லாஹ் முஹம்மத்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிட்டான். அந்த தீர்க்கமான பாரிய முயற்சியில் இடைவிடாது முயற்சித்துக்கொண்டிருந்த முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறுதியாக நுஸ்ராவை யத்ரிபின் அன்ஸார்களிடமிருந்து அல்லாஹ்வழங்கினான். இந்த பரிணாம வளர்ச்சியையே நாமும் எமது உம்மத்தின் மத்தியில் பொறுமையுடன் ஏற்படுத்த வேண்டும். இது எமக்குளேயே நாம் ஐக்கியமிளந்து ஒருவரை ஒருவர் குறி வைக்கும் அழிவிலிருந்து பாதுகாக்கும்.
உம்மத்தின் பிளவும் காலத்துவ சக்திகளின் ஆதிக்கமும் உண்மையில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தம் செய்து கொள்வதன் மிகப்பாரதூரமான அடுத்த விளைவு காலனித்துவ குஃப்ஃபார்கள் (kuffaar) நம்மீது தமது இரும்புக்கரத்தை மென்மேலும் பிரயோகிப்பதற்கு வழிவிடுவதாகும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். ஏனெனில் அமெரிக்கர்களும், ஐரோப்பியரும் முஸ்லிம் உம்மத்தின் பலத்தை குறைவாக எடைபோடவில்லை. ஐரோப்பாவின் ஒரு பாரிய பகுதியைக் கூட (அந்தலுசியா – இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் உட்பட்ட பகுதி) முஸ்லிம் உம்மத் கிலாபத்தின் கீழ் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தது என்பதையும், முஸ்லிம் உம்மத்தை ஓர் கட்டமைக்கப்பட்ட உம்மத்தாக யுத்தத்தில் சந்திப்பது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்கள் முஸ்லிம் உம்மத்தை எவ்வாறெல்லாம் பலகீனப்படுத்த முடியுமோ அத்தகைய அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள்.
எம்மை மென்மேலும் பிளவுபடுத்த முனைவார்கள். இது குறித்துநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய கீழ்வரும் ஹதீஸ் ஓர் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
“எவ்வாறு ஒரு பெரிய உணவுப்பாத்திரத்தை நோக்கி மக்கள் சூழ்ந்து கொள்வார்களோ, அதேபோல உங்களை நோக்கி பல தேசங்கள் சூழ்ந்துகொள்ளும். “அப்பொழுது நாங்கள் சிறிய எண்ணிக்கையில் இருப்போம் என்பதாலா அவ்வாறு ஏற்படும்” என ஒருவர் கேட்டபோது, இல்லை, அப்பொழுது உங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும், எனினும் நீங்கள் வெள்ளத்தில் உருவாகும் நுரைகளைப்போலிருப்பீர்கள்.” (அபுதாவூத்)
எனவே நிராகரிப்பாளர்களின் நாடுகள் எமது பிளவுகளை வலுப்படுத்தி எம்மை ஆதிக்கம் செலுத்த முனைவார்கள் என்பதையும், இதனையே காலணித்துவ தசாப்த்தங்களில் அவர்கள் நேரடியாக மேற்கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. காலனித்துவ நாடுகள் எம்மீது முதலாளித்துவம் என்ற குப்ர் கட்டமைப்பை திணித்து அவர்களின் அரசியற் கைதிகளாக வைத்துக்கொள்ள முனைந்தார்கள். இதன்மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்தி எமது வளங்களை அளவுகணக்கின்றி சுரண்டினார்கள்.
“பிளவுபடுத்துதலும், ஆக்கிரமித்தலும்” என்ற இந்த யுக்தியை டி.ஈ. லோரன்ஸ் (லோரன்ஸ் ஒப் அரேபியா) பின்வருமாறு கூறுகிறான். “அவரது அரசியல் மாற்றம் ஓர் வன்முறையான அரசியல் மாற்றமாக உருவெடுக்க செய்துவிட்டால் இஸ்லாம் என்ற அந்த சக்தியின் மீதான எமது அச்சத்தை அழித்துவிடலாம். பிரிப்பதன் மூலம் இஸ்லாத்தை அதன் இதயத்திலேயே அதற்கு எதிராகவே திருப்பிவிடலாம். பின்னர் துருக்கியில் ஒரு கலீபா இருந்து, அரேபியாவில் ஒரு கலீஃபா இருந்து மதச்சண்டை உருவாகும். பின்னர் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தலான ஒன்றாக இருக்காது”. இந்த யுக்தியை பின்பற்றியே சைக் – பிக்கட் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பூமி பிரித்தானியாவுக்கும், பிரான்ஸிற்குமிடையே பங்கு போடப்பட்டது. இந்த ஒப்பந்தமும், ஏனைய ஐரோப்பிய சூழ்ச்சித்திட்டங்களுமே ஒரே கிலாபத்தின் கீழ் இணைந்திருந்த முஸ்லிம் தேசம் இன்று ஐம்பதுக்குமேற்பட்ட தேசங்களாக பிரிந்து முஸ்லிம்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அவல நிலையை தோற்றிவித்துள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்களின் வழித்தடத்ததை பின்பற்றி அதற்கு தலைமைப்பொறுப்பை ஏற்று இன்று ஐக்கிய அமெரிக்கர் தொடர்ந்து வருகிறது. ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை பிளவுபடுத்தி எமது தேசத்தை தாம் விரும்பியவாறு பிரித்து, கூறுபோட்டு வரைந்தெடுத்த தேசப்படத்தை அமெரிக்கா திருப்த்தியுடன் பார்க்கவில்லை. மென்மேலும் அத்தேசங்களை கூறுபோட்டு தனது வேட்டைக்கேற்ற ஒரு புதிய தேச வரைபடத்தை வரைவதற்கு முஸ்லிம் தேசத்திற்குள் கால்பதித்து நிற்கிறது. முஸ்லிம் தேசங்களை மேன்மேலும் பிரிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டம் அமெரிக்க இராணுவ துருப்புக்களின் சஞ்சிகையொன்றில் 2006ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இத்திட்டத்தில் ஈராக், துருக்கி, பாக்கிஸ்தான், சவூதி அரேபியா உட்பட மேலும் பல முஸ்லிம் நாடுகளை மென்மேலும் பலகீனமான சிற்சிறு நாடுகளாக பிளவுபடுத்தும் சூட்சுமை அடங்கியிருந்தது.
இந்தத்திட்டத்தின் அறுவடையையே ஈராக்கிலும், தற்போது பாக்கிஸ்தானிலும் நாம் கண்டு வருகிறோம். எனவே ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. ஓர் உம்மத் என்ற கோட்பாடுடையவர்களை “உம்மைடிஸ்” என்று அழைக்கும் “ராண்ட்” என்ற அமெரிக்கச் சிந்தனைத் தளமொன்று ‘பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் வியூகம்’ என்ற தனது கட்டுரையில் எத்தகைய வெட்கமுமற்று.” முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளுக்கு எதிராக பழமைவாதிகளுக்கு ஆதரவு அளியுங்கள். பழமைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்குமிடையில் கூட்டிணைவு ஏற்படுவதை மட்டந்தட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.
இவ்வாறு குப்பார்கள் தமது குறிக்கோளில் தெளிவுடன் வெளிப்படையாகவே எம்முடன் மோதிவரும் நிலையில் நாம் எமக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு அவர்கள் விரித்த வலையில் அதுவும் அவர்கள் இங்கே வலையை விரித்து வைத்துள்ளோம் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்ற பொழுதும்கூட நாம் அல்லாஹ்வுக்கு மாறு செய்த நிலையில் அதற்குள் சென்று அகப்பட்டுக்கொள்வோமானால் எம்மை எப்படி வர்ணிப்பது?எனவே கிலாஃபத்தை நிலைநாட்டுவதன் மூலமாக முஸ்லிம்களை முரண்பாடுகளிலிருந்து பாதுகாத்து அவற்றை ஷரீஆவின் அடிப்படையில் தீர்த்து வைத்து எதிரிகளின் சவால்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக்கூடிய ஒரு நீதியான ஆட்சியாளரை அல்லாஹ் நமக்கு நல்குவானாக!
“நிச்சமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் நன்கறிந்தவன். (யாவரையும்) நன்குணர்பவன்.”(49:13)
source: http://warmcall.blogspot.in/2009/11/blog-post_25.html