கோட்டைக் குடும்பப் பெண்!
சிறுகதை
“பேராசிரியர் அலாவுதீனின் மகனுக்குக் கல்யாணம்” என என் மனைவியிடம் சொன்னேன்.
“எப்போது?” என என் மனைவி என்னைக் கேட்டாள்.
“நோன்புப் பெருநாள் கழித்து…”
“அவருக்கு எத்தனை பிள்ளைகள்?”
“ஆணொன்று, பெண்ணொன்று.”
“முதல் மனைவி பிள்ளைகளா இவர்கள்? அல்லது இரண்டாவது மனைவியின் பிள்ளைகளா?”
“என்ன மறதி உனக்கு. முதல் மனைவிதான், இரண்டாவது மனைவியைப் பேராசிரியர் கல்யாணம் முடித்தவுடன் முதல் மனைவியே விவாகரத்து (குலா) பெற்றுவிட்டாரே! இரண்டாவது மனைவிக்குத் தான் பிள்ளைகள்.”
“விருத்தாசலம் கல்லூரியில் நீங்களும் அவரும் வேலை பார்த்தபோதுதான் அடிக்கடி அவர் நம் வீட்டுக்கு வருவார். அவருடைய கல்யாணத்துக்குக்கூட வந்தவாசி சென்று வந்தோம். முதல் மனைவியுடன் வந்த அவருக்கு நாம் விருந்துகூட கொடுத்தோம். அதன்பின் அவருடைய நேரடி தொடர்பு குறைந்துவிட்டது. நாம் சென்னை வந்துவிட்டோம். அவர் திண்டிவனம், கடலூர் என மாற்றலாகிச் சென்றுவிட்டதாக சொன்னீர்கள்.”
“காலந்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. நமக்கும் வயதுக்கு வந்த மூன்று பெண் பிள்ளைகள்!”
“முதல் மனைவி ஏன் விவாகரத்து பெற்றார்?”
“அலாவுதீனின் இரண்டாவது திருமணத்தை முதல் மனைவி அங்கீகரிக்கவில்லை!”
“இஸ்லாத்தில் ஓர் ஆண்மகன் நான்கு பெண்கள்வரை திருமணம் செய்துகொள்ளலாம் எனும்போது ஏன் முதல் மனைவி அவ்வாறு செய்தார்?”
“மார்க்கம் அங்கீகரிக்கிறது. மனம் அங்கீகரிக்கவில்லை. நான் இரண்டாவதாக ஒருத்தியை மணம் முடிக்க நீ சம்மதித்திருப்பாயா?, மாட்டேன் எனத்தான் சொல்லியிருப்பாய்.”
“உங்கள் நண்பரின் சூழ்நிலை என்னவென்று நமக்குத் தெரியாது. அதைப்போல் அவரின் முதல் மனைவியின் மனநிலை என்னவென்றும் நமக்குத் தெரியாது.”
“இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. எப்போதாவது டெலிபோனில் பேசுவதோடு சரி. இப்போதுகூட போனில்தான் மகனுக்குத் திருமணம், நேரடியாக வந்தழைப்போம் என்றார்.”
“எங்கே கல்யாணமாம்…?”
“வந்தவாசியில்தான். வந்தவாசி கல்யாணத்திற்குச் சென்றுவிட்டு அப்படியே செஞ்சிக்கோட்டை, திருவண்ணாமலை, சாத்தனூர் அணை சென்று வரலாம் எனத் திட்டம் போட்டுள்ளேன்.”
“ஓ! அப்படியா? அப்படியானால் நல்ல சுற்றுலாதான்!”
***
பேராசிரியர் அலாவுதீனும் அவருடைய துணைவியாரும் சென்னை சைதாப்பேட்டைக்கு வந்து எங்களுக்கு அழைப்பிதழைத் தந்துவிட்டு நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
என் மனைவி வாஞ்சையோடு வந்தவர்களுக்கு சிற்றுண்டி அளித்தாள். அவர்கள் சிற்றுண்டியைச் சுவைத்துக் கொண்டிருந்தபோது திருமண அழைப்பிதழைப் பார்த்தேன்.
உறையில் மணமக்களின் பெயர்கள், நிகழிடம், தேதி இருந்தது. பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக இல்லை; கிறிஸ்துவப் பெயர்கள் போல் இருந்தன. மண நிகழ்விடம் புனிதமாதா தேவாலயம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனக்குள் குழப்பம். அலாவுதீனை ஏறிட்டுப் பார்த்தேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தவர் கண்ணசைவில் ஏதோ சொல்ல முயன்றார்.
திருமண அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்தேன். மணமக்களின் பெயர்கள் கிறிஸ்துவப் பெயர்கள்தான் என்பதற்கு முக்கிய சாட்சியங்களாக அலாவுதீன் பெயரைத் தவிர மூன்று பெயர்கள் இருந்தன. ஒன்று இஸபெல்லா அலாவுதீன், மற்ற இரண்டு ஜோசப் – நிர்மலா ஜோசப்.
அது கிறிஸ்துவ திருமணந்தான் என்பதை மெய்ப்பிக்க நிகழுமிடமான புனிதமாதா தேவாலயமும் நடத்தி வைக்கும் ஃபாதர் தேவசகாயமும்ஸ
‘அலாவுதீன் முஸ்லிமாகத்தானே இருந்தார். முதல் மனைவியும்
முஸ்லிமாகத்தானே அமைந்தார். இரண்டாவது மனைவியாக கிறிஸ்துவர் எப்படி வந்தார்?’ எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு அப்போது பதில் பெற முடியவில்லை. அலாவுதீன் கண் ஜாடை காட்டினார்.
“கல்யாணத்திற்குக் கட்டாயம் வந்துவிடுங்க” என்றார் இஸபெல்லா.
“கட்டாயம் வருவோம், எங்கள் பிள்ளைகளோடு வருவோம். அப்படியே செஞ்சி – சாத்தனூர் அணையெல்லாம் செல்லவுள்ளோம்” என என் மனைவி கதீஜா உற்சாகத்தோடு சொன்னாள்.
“கட்டாயம் வந்துடுங்க” என்ற அலாவுதீன் என் கரங்களைப் பற்றிப் பிடித்து விடைபெற்றார். அவர் கண்களின் ஓரத்தில் நீர் அரும்பி நின்றது. ஏதேதோ சொல்ல நினைத்திருப்பார் போலும், எதையும் சொல்லாமல் புறப்பட்டுவிட்டார்.
——
“என்னங்க உங்க தோழமையோட மனைவிகிட்டே ஒரேயொரு அடையாளத்தைத்தவிர முஸ்லிம்குற அடையாளமே இல்லே!” என கதீஜா தன் ஆராய்ச்சி முடிவைச் சொல்லத் தொடங்கினாள்.
“அந்த ஒரேயொரு அடையாளந்தான் என்ன?”
“நெத்தியில பொட்டில்லே!”
“உண்மையில அவுங்க முஸ்லிமே இல்லே” எனச் சொல்லிய நான் திருமண அழைப்பிதழை எடுத்து கதீஜாவிடம் கொடுத்தேன்.
அழைப்பிதழைப் பார்த்த கதீஜாவின் நெற்றியில் சுருக்கங்கள். மேகங்கள் சூழ்ந்த வானமாய் முகம்!
“என்னங்க?” என்ற கதீஜாவின் குரலில் அதிர்வலைகள். பல கேள்விகளும் ஒரே கேள்வியாய்!
“அலாவுதீன் கிறிஸ்துவராயிட்டாரா? இவ்வளவு நாளா இது தெரியாமல் போய்விட்டதே!” என கதீஜா கேள்விகளால் குடையத் தொடங்கினாள்.
“அலாவுதீன் பெயரில் மாற்றமில்லையே! அவர் முஸ்லிம் பெயர் அடையாளத்துடனும் மனைவி பிள்ளைகள் கிறிஸ்துவ அடையாளத்துடனும் வாழ்கிறார்கள் போலும்!”
“அதைப் பற்றி நான் இப்போது கவலைப்படப் போவதில்லை. நாம் கல்யாணத்திற்குப் போகத் தேவையில்லை!” இது என் மனைவியின் பிரகடனம்!
அழைப்பிதழைப் பார்க்கும் வரை விண்ணிலவாய்த் திகழ்ந்த பேராசிரியர் அலாவுதீன் என் மனைவிக்கு மண்புழுவாய் ஆனாரோ?
“நாம் எல்லோரும் செல்லத் தேவையில்லே. நான் மட்டும் போய் வருகிறேன். அங்கு போனால் அவரைப் பற்றிய நிலைமைகள் தெரியவரலாம்!”
“உங்க விருப்பம்” என்ற கதீஜா அலாவுதீனின் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அலாவுதீன் என்ற யானை பானைக்குள் எப்படி?
——-
சரித்திரப் பேராசிரியரான நான் வந்தவாசிப் போரைப் பற்றியெல்லாம் படிக்காமலிருந்திருப்பேனா? ஆனால் நான் வந்தவாசி, செஞ்சி போன்ற இடங்களையெல்லாம் பார்த்ததில்லை.
மிகுந்த ஆர்வத்தோடு கல்யாணத்திற்கு முந்திய நாளே வந்தவாசிக்குச் சென்றேன். விடுதியொன்றில் தங்கிக்கொண்டு அலாவுதீனுக்குத் தகவல் சொன்னேன். அவர் தன் உறவினர் ஒருவரோடு விடுதிக்கு வந்தார். எனக்கொரு கைகாட்டி கிடைத்தார்.
“உங்களோடு நிறைய பேச வேண்டும், உங்கள் உள்ளத்தில் எழுந்திருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். இப்போது அவகாசமில்லை. இவர் என் உறவுக்காரர் மட்டுமல்ல, இங்குள்ள உயர்நிலைப் பள்ளியின் சரித்திர ஆசிரியர். இவர் உங்களோடு இருப்பார். வேண்டிய உதவிகளைச் செய்வார்” எனச் சொல்லி சலீமென்னும் அன்பரை விட்டுச் சென்றார், ஆச்சர்யக் குறியாய் நின்ற அலாவுதீன்.
சலீம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தார். பகல் தொழுகைக்கு கடைத் தெரு பள்ளிவாசலுக்குச் சென்றோம்.
“இந்தப் பள்ளிவாசலின் பெயர் கடம்பூரார் மஸ்ஜித்” என்றார் சலீம்.
“கடம்பூரார் என்றால் என்ன அர்த்தம்?”
“திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கயத்தாறுக்கு அருகில் இருக்கிறதே கடம்பூர், அந்தக் கடம்பூரிலிருந்து வந்தவர்களின் பள்ளிவாசல் இது!”
“முந்நூறு மைல்களுக்கு அப்பால் அல்லவா இருக்கிறது கயத்தாறு. அங்கிருந்தா வந்தார்கள்? அதனால்தானோ வந்தவாசி?”
“அங்கிருந்து வந்ததாகத்தான் பரம்பரையாக சொல்லப்பட்டுவருகிறது. கயத்தாறிலும் பத்தமடையிலும் இன்னும் கோரைப்பாய் முடைகிறார்கள். இங்கும் நாங்கள் கோரைப்பாய் முடைகிறோம். பாய் சந்தையில் அவர்களும் நாங்களுந்தான் போட்டியாளர்கள்!”
“அவர்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா?”
“தொலைவும் காலமும் தொடர்புகளைத் துண்டித்துவிட்டது. என்றாலும் இன்றும்கூட கடம்பூரார் வகையறாக்கள் தம் பெயர்களுக்கு முன் ‘கானா’ போட்டுக் கொள்கிறார்கள். ராணிப்பேட்டை பழைய எம்எல்ஏ. கே.ஏ. வகாப்,
‘குயில்’ மாத இதழை திண்டிவனத்தில் நடத்திய டாக்டர் கே.எம்.ஏ. வகாப் போன்றவர்களின் விலாசத்திலுள்ள ‘கே’ கடம்பூரையே குறிக்கும்.”
சலீம் ஒரு தகவல் களஞ்சியம்!
“ஓ! நல்ல தகவலாக இருக்கிறதே. தொடக்கத்தில் நான் வந்தவாசி போன்ற வட ஆற்காடு மாவட்ட ஊர்களில் உருது பேசும் முஸ்லிம்கள் மட்டும்தான் வாழ்கிறார்கள் என எண்ணியிருந்தேன். பின்னர்தான் எனக்கு தமிழ் பேசும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது தெரிந்தது.”
பகல் உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு மாலை தொழுகைக்காக பெரிய பள்ளிவாசலுக்குச் சென்றோம். அதன் பின் கோட்டைப் பகுதிக்கு வந்தோம்.
எனக்குள் ஆங்கிலேயர் கால நினைவுகள்! வந்தவாசி – ஆற்காடு நவாப்கள், பிரிட்டிஷ் பிரெஞ்சுத் தளபதிகள் கால்பட்ட பூமி!
1760- ஆற்காடு நவாப் வாரிசுகளிடையே அரசுரிமை பெற போட்டி. முகம்மதலி ஒருபக்கம்; சந்தாசாகிபு மறுபக்கம்! பிரெஞ்சுபடை ஒருபக்கம்; பிரிட்டிஷ்ப் படை மறுபக்கம்!
பிரெஞ்சுப் படைத் தளபதி லாலியின் படையை பிரிட்டிஷ்ப் படைத் தளபதி சர் அயர்கூட் முறியடித்தார்.
சரித்திரப்பாடம் நினைவுக்கு வந்தது; பின்னர் உரையாடல் தொடர்ந்தது.
“முஸ்லிம்கள் தவிர இங்கு யாரார் வசிக்கிறார்கள்?” என நான் ஆசிரியர் சலீமைக் கேட்டேன்.
“உடையார், வன்னியர், தலித்கள் எனப் பல்வேறு மக்கள் வாழ்கின்றனர். இந்தக் கோட்டைப் பகுதியில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வேதக்காரர்கள்!”
“அவர்கள் கிறிஸ்துவர்கள்தானே! வெள்ளைக்காரர்கள் காலத்தில் மதம் மாறிய அடித்தட்டு மக்களாக இருக்கலாம்!”
“ஆமாம், அவர்கள்தான்; அவர்களுக்கும் எங்களூர் முஸ்லிம்களில் சில குடும்பத்தினருக்கும் கொள்வினை உண்டு, பெரும்பாலும் இரண்டாம் மனைவியாக!”
“கொள்வினை என்றால்..”
“வேதக்காரப் பெண்களை முஸ்லிம்கள் மணம் முடித்துக்கொள்வார்கள் என்பதையே நான் கொள்வினை என்றேன். ஆனால் கொடுப்பினை கிடையாது. மணமகனாக எவரையும் ஏற்பதில்லை!”
“புதிய தகவலாக இருக்கிறதே! இப்போதும் உண்டா? இப்பழக்கம் வேறு ஊர்களில் இருப்பதாகத் தெரியவில்லையே!”
“இப்போது குறைந்துவிட்டது. அவ்வாறு சம்பந்தம் செய்தவர்களில் நம் அலாவுதீனும் ஒருவர்” என சலீம் சொன்னபோது திருமண அழைப்பிதழில் உள்ள பெயர் மர்மங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தன.
“வேதம் வழக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களை முஸ்லிம் ஆண்கள் மணந்து கொள்ளலாம் என இஸ்லாம் கூறுவதைப் பின்பற்றியிருக்கிறார்களோ? என்றாலும் அத்தகைய பெண்களைப் படிப்படியாக இஸ்லாத்திற்குள் நுழைத்திருக்க வேண்டுமே, அதைச் செய்யவில்லையே அலாவுதீன்” என நான் ஆதங்கப்பட்டேன்.
“பெரும்பாலும் வேதக்காரப் பெண்கள் மணமாகியபின் முஸ்லிமாகிவிட்டால் பிரச்சினை இருக்காது. இல்லையேல் இழப்புகள்தான். அலாவுதீன் இஸ்லாமியப் பெயரில், மனைவி பிள்ளைகள் கிறிஸ்துவப் பெயர்களில்!” என நான் கூறியபின் சலீம் சொன்ன சங்கதி எனக்குப் பிடித்திருந்தது.
“பல்வேறு சாதிகளிலிருந்து பல்வேறு நிலை மக்கள் கிறிஸ்துவர்களாகியிருந்தும் அவர்கள் சாதி அடையாளங்களை இழந்துவிடவில்லை. தேவாலயங்கள்கூட தனித்தனியாகவே உள்ளன. கோட்டையிலுள்ள குடும்பங்கள் மொத்தமும் முஸ்லிமாகியிருந்தால் இன்றும் இழக்காமல் இருக்கும் தலித் அடையாளத்தை இழந்திருப்பார்கள். முஸ்லிம் ‘உம்மா’வோடு சங்கமித்திருப்பார்கள்! கொள்வினையோடு கொடுப்பினையும் நடந்திருக்கும்!”
“அதற்கான முயற்சிகளில் யாரும் இறங்கியிருக்க மாட்டார்கள்.”
“அதற்கான காலம் கடந்துவிட்டது. தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர் என்ற அடிப்படையில் அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டு முஸ்லிமாக சம்மதிக்க மாட்டார்கள்.”
“அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். இறைவன் நாடினால் எதுவும் நடக்கும். தேவாலயத்தின் ஃபாதர் கல்யாணத்தை நடத்தி முடித்தபின் மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் நான் வாழ்த்திப் பேசப் போகிறேன். அப்போது என்னால் முடிந்த இஸ்லாமியக் கருத்துகளை எடுத்துச் சொல்வேன். நம்முடைய கருத்துகள் மாற்றுத்தரப்பாரிடம் சொல்லாததே நாம் பெரும்பான்மையினர் ஆகாததற்கான முக்கிய காரணம்!” என நான் சொன்னபோது சலீம் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.
“என்ன யோசனை?” என நான்தான் கேட்டேன்.
“என் மனைவியைப் பற்றி யோசித்தேன்.”
“உங்கள் மனைவியைப் பற்றி என்ன யோசனை?”
“என் மனைவிகூட கோட்டைக் குடும்பப் பெண்தான்! அவள் ஜெயசீலியாக இருந்து ஜெஸீமா ஆனவள்!”
நன்றி – தூது ஆன்லைன்