ரம்மியமான ரபீஉல் அவ்வல்
மௌலவி முஹம்மது யூசுஃப் எஸ்.பி, காரைக்கால்
ஹிஜ்ரி ஆண்டின் மூன்றாம் மாதமான ரபீவுல் அவ்வல் ஓர் ரம்மியமான மாதமாகும்.
ரபீஉல் அவ்வல் என்றால் முதல் வசந்தம் என்று பொருள். இது வசந்தகாலத்தின் துவக்கமாக இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.
ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதம். ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று தவறாக எண்ணி மீலாது விழா, மௌலிது ஷரீபு என வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறுவது வாடிக்கை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும்.
யார் தன் பிள்ளை பெற்றோர் மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கவில்லையோ அவர் உண்மையான முஃமினாக முடியாது.
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் –
”அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.” (அல்குர்ஆன் 9:24)
”என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக தன் பெற்றோர் இன்னும் பிள்ளைகளைவிடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது” என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)
(ஒருநாள்) நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களையும் விட உங்களை நான் மிகவும் நேசிக்கின்றேன் என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக உன்னை விட நான் மிக நேசமுள்ளவராக ஆகும் வரை நீர் உண்மையான முஃமினாக முடியாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இப்போது நீங்கள் என் உயிரை விடவும் என்னிடத்தில் மிக நேசமானவர்கள் எனக் கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்போதுதான் நீங்கள் உண்மையான முஃமீன் எனக்கூறினார்கள். (நூல் : புகாரி)
இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உண்மையான முறையில் நேசிப்பது கட்டாயமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது எப்படி?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதென்பது அல்லாஹ்வும் இன்னும் அவனின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏவியவைகளை எடுத்து நடந்தும் தடுத்தவைகளை தடுத்தும் நடப்பதுதான் உண்மையான நேசமாகும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்க வேண்டும்.
(நபியே!) நீர் கூறும், “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:31)
நபித்தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி நேசித்தார்கள்?
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை அடிதவறாமல் பின்பற்றினார்கள் என்று சொல்வதைவிட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் பின்பற்றினார்கள் என்பதுதான் பொருத்தமாகும்.
1. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி நேசிக்கக்கூடியவர்களாக இருந்தீர்கள்? என அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களின் பொருட்கள், பிள்ளைகள், தந்தை, தாய்மார்கள் மற்றும் தாகத்தின் போது குளிர் தண்ணீரை விடவும் எங்களிடம் மிகவும் நேசமுள்ளவர்களாக இருந்தார்கள் என விடை பகர்ந்தார்கள்.
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற வதந்தி உஹது யுத்தத்தில் பரவிய போது நபித்தோழர்கள் திகைத்துப் போனார்கள். அப்போது ஒரு நபித்தோழி திகைத்துப் போன நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக உஹதுப் போர்களத்திற்கு வந்தபோது தன்னுடைய மகன், தந்தை, கணவன் இன்னும் சகோதரர் ஷஹீதாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். அவர்களில் யாரை முதலில்பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரியாது அந்த நபித்தோழி ஷஹீதாக்கப்பட்டவர்களை கடந்து செல்லும் போதெல்லாம் இவர் யார் என வினவிய போது இது உமது தந்தை, உமது சகோதரர், உமது கணவர், உமது மகன் என்று சொல்லப்பட்டது. அப்படி சொல்லப்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே? என்றுதான் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொஞ்சம் முன்னால் நிற்கின்றார்கள் என நபித் தோழர்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்த அவர்கள் அன்னாரின் ஆடையின் ஓரத்தைப் பிடித்தவாறு, கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் அர்ப்பணமாகட்டும், நீங்கள் நலமடைந்து விட்டால் நான் எந்த அழிவைப்பற்றியும் கவலைப்படமாட்டேன் எனக்கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி)
நபித்தோழர்களும் நபித்தோழிகளும் உண்மையாகவே நபியவர்களை நேசித்தார்கள் என்பதற்கு இது போன்ற எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை கூறலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியதையும் தடுத்ததையும் நபித்தோழர்கள் எடுத்தும் தடுத்தும் நடந்தார்கள் என்பது மட்டுமல்லாமல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக தன் உயிரையே அர்ப்பணித்தார்கள். நபியவர்களின் விருப்பத்தை தன் விருப்பமாக்கினார்கள். இப்படித் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட்டுவிட்டு, ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபியவர்கள் பேரில் மௌலிது படித்துவிட்டு அல்லது மீலாது விழா நடத்திவிட்டு நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து விட்டோம் என்பது போலி நேசமாகும்.
நபியை நேசிப்பதன் அளவுகோல்:
நபியை ஒருவர் நேசிப்பதற்கான அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே அல்குர்ஆனும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளும் எடுத்துக்கூறுகின்றன.
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என (முஹம்மதே) கூறுவீராக! (அத்:3.வச:31). என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியைப்பற்றி நில்லுங்கள். உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (நூல்: புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பிறந்த தினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள் அது பற்றி நபித்தோழர்கள் வினவிய போது:
அந்நாளில் நான் பிறந்தேன், அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது என பதில் கூறினார்கள். (முஸ்லிம்). முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் “அந்நாளில் நான் நபியாக அனுப்பப்பட்டேன் எனக் கூறியதாகவும், திர்மிதீயில் இடம் பெறும் அறிவிப்பில் “பிரதி வியாழன், திங்கட் கிழமைகளில் அடியார்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. எனது அமல்கள் நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அவனிடம் எடுத்துக்காட்டப்பட விரும்புகின்றேன் என மற்றொரு காரணம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பிறந்ததினத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவோர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்ற காரணத்தாலும், மேலும் அத்தினத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றுள்ளதாலும் நபியைப் போன்று நோன்பு நோற்பது அவர்களை நேசிப்பதற்கான அடையாளமாகும். அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதற்கு இந்த ஹதீஸை விட ஆணித்தரமான வேறு சான்று வேண்டியதில்லை. மீலாத் தினத்தை கொண்டாடும் சகோதரர்கள் சிந்திப்பார்களா?
நபித்தோழர்களும் மீலாத் விழாவும்:
இரண்டாம் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் இஸ்லாமிய ஆண்டை நபியின் பிறந்த நாளில் இருந்து கணிக்காமல் அவர்களின் “ஹிஜ்ரத்” பயணத்தை கவனத்தில் கொண்டு ஹிஜ்ரி ஆண்டை நிர்ணயம் செய்த நிகழ்வும், நபித்தோழர்களின் காலத்தில் மீலாத் தின கொண்டாட்டங்கள் இடம் பெறாததும், அவர்கள் மத்தியில் மீலாத் தினம் முக்கிய இடத்தைப் பெறவில்லை என்பதை உணர்த்தப் போதுமான சான்றாகும்.
ஃபாத்திமிய்யாக்கள் என்ற ஷியாப்பிரிவினரே மௌலிதுகளை உருவாக்கினர்:
மீலாத் தின கொண்டாட்டங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்திருக்கவில்லை. ஃபாத்திமிய்யாக்கள் (ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்.) என தமக்கு பொய் நாமம் சூட்டிக் கொண்ட “பனுஉபைத்” கூட்டத்தினர் பக்தாதிலுள்ள அப்பாஸியர் ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து, அங்கு ஆட்சியைக் கைப்பற்றினர்.
தமது நிர்வாகத்தில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை சமாளிப்பதற்காகவும், தமதாட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள் தமக்கெதிராக புரட்சியில் ஈடுபடாமலிருக்கவும், மக்களின் கவனத்தை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும் “மவ்லிதுன் நபி” “மவ்லிது அலி” “மவ்லிது ஹஸன்” “மவ்லிது ஹுஸைன்” “மவ்லிது ஃபாத்திமா” “மவ்லிது கலீபதில் ஹாழிர்” (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி ஹிஜ்ரி 230 ற்குப் பின் பிறந்து 1200 ற்கும் மேற்பட்ட வருடங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹ்தி) என ஆறு மவ்லித்கள் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களை அக்காலத்தில் கருவறுத்த “அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி” என்றழைக்கப்படும் ஆட்சியாளனால் ஹிஜ்ரி 362-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இவனைத் தொடர்ந்து “அல்முயிஸ்” என அழைக்கப்படும் இவனது மகன் அதனைப் பேணி வந்தான். இவனது ஆதரவாளர்கள் இவனை பிற்காலத்தில் வெளிவரவிருந்த மஹ்தி என்றும் கூறிவந்தனர். இவர்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த “சுன்னத் வல்ஜமாஅத்” ஆதாரவாளரான “அல் அஃப்ழல் அமீருல்ஜுயூஷ் பின் பத்ர் அல்ஜமாலி” என்பவரால் நடை முறையில் இருந்து வந்த மவ்லித் ஹிஜ்ரி 448 ல் ஒழிக்கப்பட்டது.
பின்னர், “ஷியா” ஆதரவாளரான “அல்ஆமிர் பிஅஹ்காமில்லாஹ்” என்பவரால் ஹிஜ்ரி 524 ம் ஆண்டு மீண்டும் புத்துயிரூட்டப்பட்டது. (இதுவே மவ்லிதின் சுருக்கமான வராலாறு).
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக் களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப்பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் போற்றப்பட்ட முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மீலாது விழாவும் கிறிஸ்துமஸும்
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விழாக் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?
பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.
பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?
ஆண்டுக்கொரு முறை மட்டும் நேசிப்பதா?
ஆண்டுக்கொருமுறை தாம் விரும்பும் அரசியல் தலைவர்களையும் பேச்சாளர்களையும் அழைத்து கூட்டம் கூட்டி, விழா நடத்தி, போட்டிகள் வைத்து, பரிசளித்து கலைவது என்பது மட்டும் நபியை மதிப்பதாகாது. வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.
நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் – அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
அன்பான அழைப்பு:
மவ்லிதை ஓதி, மீலாத் விழா நடத்தும் சகோதரர்களே! முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசியுங்கள். எப்படித் தொழுதார்கள்? எவ்வாறு திருமணம் செய்தார்கள்? அல்லது எப்படி திருமணம் செய்யச் சொன்னார்கள்? எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள்? எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள்.? குழந்தைகளை எவ்வாறு வளர்த்தார்கள்? அண்டை அயலவர்கள், ஏழைகள் விருந்தினர்கள், எதிரிகள், குழந்தைகள், மனைவியர் ஆகியோருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தாடி எவ்வாறு வளர்த்தார்கள்? மீசை எவ்வாறு வைத்திருந்தார்கள்? எவ்வாறு உறங்கினார்கள்? உணவருந்தினார்கள்? நீர் பருகினார்கள்? காலை, மாலையில் என்ன திக்ர்” பிரார்த்தனை ஓதினார்கள். என்பன போன்ற நூற்றுக்கணக்கான நபியின் உன்னத நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் பெரிய மீலாத் விழா வேறொன்றுமில்லை. ஆகவே ரம்மியான ரபீவுல் அவ்வல் மாதத்தை நன்மைகளை விளைவிக்கும் வசந்த காலமாக மாற்றிட முயல்வோம்.