எங்கிருந்து வரும் சுன்னத்தும் ஜமாஅத்தும்?
மௌலவி ஸய்யிது ஷம்சுத்தீன் ஸாதிக் ஃபாழில் மன்பஈ
முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் நம்மிடம் அந்த சுன்னத்தும் இல்லை ஜமாஅத்தும் இல்லை என்பதைக் காணும்போது உள்ளம் குமுறுகிறது. வட்டியும் வரதட்சணையும் ஒருபுறம் விழுதுகள் பல விட்டுக்கொண்டே போகின்றது.
அனாச்சாரங்களும் வீண் சடங்குகளும் மறுபுறம் கிளைகள் பல விட்டுக்கொண்டே போகின்றது. வீண் பெருமையும் அதனால் எழும் பகைமையும் விரிந்து கொண்டே போகிறது. இரத்த உறவுகள் முறிந்து கொண்டே போகின்றது. இதில் எங்கிருந்து வரும் சுன்னத்தும் ஜமாஅத்தும்?
பெற்ற குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள மற்றும் அழகிய பெயரை சூட்டும்படியும் பிறந்த ஏழாம் நாளில் ஆண்பிள்ளையாக இருந்தால் இரண்டு ஆடுகளையும் பெண் பிள்ளையாக இருந்தால் ஒரு ஆட்டையும் அறுத்து அகீகா கொடுக்கும்படியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியுள்ளார்கள். (திர்மிதி, நஸாயி)
நம்மில் எத்தனை நபர்கள் இந்த ஹதீஸின் பிரகாரம் செயல்படுகிறோம்? பிள்ளையை பெறுகின்ற வரை அல்லாஹ் அல்லாஹ் என்கின்றோம். பெற்ற பிறகு அவனையும் மறந்து விடுகின்றோம். அவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையும் புறந்தள்ளி விடுகின்றோம். நாற்பது கழிந்தால் தான் பெயர் வைப்போம் என வீண் பிடிவாதம் செய்யும் தாய்மார்கள் அகீகாவையும் சேர்த்துக் கொடுக்கின்றார்களா? என்றால் இல்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் வசதி வேண்டும் என நொண்டிச்சாக்கு சொல்கின்றனர்.
குழந்தை பிறந்து நாற்பது நாள் கழியும் வரை பெயர் சூட்ட மறுக்கும் தாய்மார்கள், மகள் பருவ வயதை அடைந்தால் மட்டும் ஏழே நாட்களில் அவசர அவசரமாய் புனித நீராட்டு விழாவிற்கு தயாராகி விடுகின்றார்கள்.
இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் என கணவன்மார்கள் கண்டும் காணாமல் இருந்ததின் விளைவு இப்போது அது வரம்பை மீறிக்கொண்டு செல்கின்றது. பூ புனித நீராட்டு விழா என ஊராரை அழைப்பது, ஊரே திண்ணும் அளவிற்கு பல ஆடுகளை அறுத்து தடல்புடலாக விருந்து கொடுப்பது,வந்தவர்கள் அப்பெண்ணுக்காக மொய் செய்வது, என ஒரு கல்யாணமே செய்து முடித்து விடும் அளவிற்கு செலவு செய்வது அதை வந்தவர்களிடம் மொய்யாக எதிர்பார்ப்பது! ஏன் இந்த இழிநிலை? யார் தடுப்பது இவர்களை? அல்லாஹ்வின் பயம் கொஞ்சமும் இல்லையா?
மாற்று மதத்தவர்களின் இது போன்ற விஷேசங்களுக்கு செல்வதின் பிரதிபலிப்பு இன்று நம்மவர்கள் வீட்லும் செயல் வடிவம் பெற்றுவிட்டது. மார்க்க அறிவற்றவர்கள் தான் இந்த செயலில் ஈடுபடுகின்றார்கள் என எண்ணிக்கொண்டிருந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. இன்று மார்க்கம் அறிந்தவர்களே இந்த காரியத்தை வழிமொழிந்து பின்னின்று ஊக்கப்படுத்துவதாக வரும் தகவல் வெந்த புண்ணில் நெருப்பால் சுடுவதைப் போலுள்ளது
இந்த நிகழ்ச்சிமூலம் இவர்கள் அடையும் இலாபம் என்ன?
உறவினருக்கும் ஊராருக்கும் மகள் பருவ வயதை அடைந்ததை அறிவிப்பதன் மூலம் நல்ல வரன் அமைய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களெல்லாம் அவர்கள் மகள் பருவவயதை அடைந்த போது ஏழாம் நாளன்று நமக்கு கொடுத்த விருந்தைபோல அல்லது அதைவிட கொஞ்சம் அதிகமாகவே விருந்துபசரிப்பு செய்வது, ஏராளமானவர்களை அழைப்பதின் மூலம் அதிகமான மொய்யை எதிர்பார்ப்பது, இவைதான் இந்த நிகழ்ச்சியை நடத்துவதின் மூலம் இவர்கள் அடையும் இலாபங்கள்.
இந்த நிகழ்ச்சிமூலம் மார்க்கத்திற்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் ஏற்படும் அவப்பெயர் என்ன?
நம் தாய்மார்கள் இந்தக் காரியத்தை மிகவும் கச்சிதமாகவும் மாற்றுமதத்தவர் செய்வதைபோன்றே செய்வதில் மிகவும் கவனமாகவும் இருக்கின்றார்கள்.ஊராரை அழைப்பதில்கூட சடங்குக்கு வரும்படிதான் அழைக்கின்றனர்.
பிற மதத்தவரின் செயல்களை ஒரு முஸ்லிம் செய்தால் அவன் அந்த மதத்தைச் சேர்ந்தவனாகவே மாறிவிடுகிறான் என நமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அபூதாவூத், அஹ்மது)
செயலளவில் ஒரு ஹிந்துவாகவோ அல்லது கிருத்தவனாகவோ இருந்துகொண்டு பெயரை மட்டும் முஸ்லிமுடையதாக வைத்துகொண்டால் அவரை பெயரளவு முஸ்லிம் என்றுதான் கூற இயலும். தீபாவளிக்கும் ஆங்கில புத்தாண்டுக்கும் மாற்று மதத்தவர் வெடிகளை வெடித்து கொண்டாடுகிறார்கள். அவர்கள் செய்வதைப் போல ஒரு முஸ்லிமும் செய்தால் அவர்களுக்கும் இவனுக்கும் என்ன வேறுபாடு?
பருவ வயதை அடைந்த பெண் பிள்ளைக்கு ஏழாம் நாளன்று மாற்று மதத்தவர் புனித நீராட்டு விழா நடத்துவதைப் போல கர்ப்பிணிப் பெண்ணுக்கு 9 வது மாதத்தில் வளைகாப்பு நடத்துவதைப்போல வந்த அனைவரிடமும் மொய்யை எதிர்பர்ப்பதை போல ஒரு முஸ்லிமும் செய்தால் அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? பெயர் மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கமுடியும்!
இவர்களின் இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கு இஸ்லாத்தில் அணு அளவும் அனுமதியில்லை என்பது அவர்களின் கணவன்மார்களுக்கு தெரியாதா? தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருக்கின்றனரா? அல்லது தெரிந்து கொள்ளாமலேயே வாழ்கின்றனரா?
நம் தாய்மார்கள் செய்யும் இதுபோன்ற சடங்குகளால் உறவினருக்கும் ஊராருக்கும் அவர்களின் பெண் வயதுக்கு வந்தது தெரிவதோடு மட்டுமல்லாது, முஸ்லிம் சமுதாயத்தை காவு வாங்கக் காத்திருக்கும் காவிக் கூட்டத்திற்கும் தெரிகின்றது என்பதை இவர்கள் மறந்துவிடுவது ஏனோ?
மாற்றார்களின் கலாசாரத்தை நம்தாய்மார்கள் கையில் எடுப்பதின் மூலம் நம் பெண்பிள்ளைகளை கயவர்களிடம் நாமே காட்டிக் கொடுக்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் மற்றும் நமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை.
இந்த இரண்டையும் கடைபிடிக்கும் குடும்பத்தில் மாற்றார்களின் கலாச்சாரமான சடங்கு&வளைகாப்பு&மொய் போன்ற தீய சக்திகள் உள்ளே நுழையாது.ஆனால் அவ்விரண்டையும் ஓரங்கட்டும் குடும்பத்தில் ஷைத்தான் தன் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவான். கயவர்களை குடும்பத்தில் ஒருவனாக பழகச் செய்திடுவான். எந்தக் குடும்பத்தில் ஃபர்ளும் சுன்னத்தும் செயல்பாட்டில் இல்லையோ, அக்குடும்பத்தில் ஹராமும் பித்அத்தும் தானாகவே வேரூன்ற ஆரம்பித்துவிடும் என்பதில் எல்லளவும் ஐயம் வேண்டாம்.
எது மார்க்கம் என்பதை முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அம்மார்க்கத்தில் எது ஆகும் அது ஆகாது என்பதையும் தெரிந்து அதன்படி செயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் முஸ்லிம். இல்லையேல் வெறும் பெயர்தாங்கி முஸ்லிம்களாகத்தான் வாழ நேரிடும். இம்மையில் அல்லாஹ்வின் பொருத்தத்தை இழந்து இழிவான வாழ்க்கை வாழ நேரிடும். நாளை மறுமையில் அதற்குரிய தண்டனைகளைப் பெற்று நரகில் வேக நேரிடும். இந்நிலை நம்மவர்களுக்கு ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக. ஆமீன்.
– மௌலவி ஸய்யிது ஷம்சுத்தீன் சாதிக் ஃபாழில் மன்பஈ தேரிருவேலி (ஷார்ஜாஹ்)