தாடி, தலைமுடி முதலியவற்றிற்குக் கறுப்புச் சாயம் பூசுவது கூடுமா? கூடாதா?
“நிச்சயமாக யூதர்களும், கிருஸ்தவர்களும் தாடி, தலைமுடி ஆகியவற்றிற்குச் சாயம் பூசிக்கொள்வதில்லை. ஆகவே அவர்களுக்கு வேறுபட்டு நடவுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்)
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவாசிகளில் தாடிகள் வெளுத்திருந்த வயோதிகர்களின் பக்கம் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்களை நோக்கி “மதீனாவாசிகளே! நீங்கள் சிவப்புச் சாயமோ, அல்லது மஞ்சள் சாயமோ பூசிக் கொள்ளுங்கள். மேலும் வேதக்காரர்களுக்கு வேறுபட்டு நடந்து கொள்ளுங்கள்’ என்றார்கள். (அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்)
மேற்காணும் ஹதீஸ்களில் தாடி, தலை ஆகியவற்றில் நரைத்துள்ள உரோமங்களுக்கு சிவப்பு, அல்லது மஞ்சள் சாயம் பூசிக் கொள்வது வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணுகிறோம்.
“அல்லாஹ் கறுப்புச் சாயம் பூசுவோரின் முகத்தை மறுமை நாளில் கறுப்பாக்கி விடுவான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அபுத்தர்தாஃ ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ)
இதன் அறிவிப்பாளர் தொடரில் வளீனு பின் அதாஃ என்ற நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். இவர் பற்றி பலகீனமானவர் என்று “இப்னு ஸஃது’ அவர்களும், இவர் ஹதீஸ் கலை யில் போதிய ஆற்றலின்றி எதையும் எடுத்துக் கூறுபவர் என்று “ஜவ்ஸஜானி’ அவர்களும் விமர்சித்திருப்பதால் இவ்வறிவிப்பு பலகீனமானதாகும். ஆகவே கறுப்புச் சாயம் பூசிக் கொள்ளக் கூடாது என்பதைத் தெளிவான முறையில் எடுத்துக் காட்டுவதற்கு ஒரு ஹதீஸும் இல்லை. மாறாக சிவப்புச் சாயத்துடன், கறுப்புச் சாயத்தையும் சேர்த்து பூசிக் கொள்ளும்படி பின் வரும் ஹதீஸ் கூறுகிறது.
“நரைமுடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்கு மிகவும் சிறந்த பொருள் மருதாணியும், கறுப்புச் சாயம் தயாரிக்கப்படும் க(த்)தம் என்ற ஒருவகைச் செடியின் இலையுமாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு, நஸயீ)
இந்த அறிவிப்பில் பூசப்படும் சாயம் சிவப்பாக இருக்க வேண்டும் என்று மட்டும் கூறி நிறுத்திக் கொள்ளாமல், அத்துடன் கறுப்புச் சாயத்தையும் சேர்த்துப் பூசிக்கொள்ளுமாறு சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கறுப்பையும், சிவப்பையும் சேர்க்கும்போது இயற்கையான முடியின் நிறம் ஏற்படும் என்பதை எவரும் அறியலாம்.
“மக்கா வெற்றியின் போது “அபூகுஹாஃபா’ (வெனும் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அப்போது அவருடைய தலையும், தாடியும் “ஸகாமா’ என்னும் ஒரு வகை பூண்டைப் போன்று வெளுத்துப் போயிருந்தன. அப்போது (இவருடைய) “இந்த நரையை ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு மாற்றிவிடுங்கள். ஆனால் கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயிலாக இப்னு மாஜ்ஜா வில் “இவரை இவருடைய (வீட்டில்) ஒரு பெண்ணிடம் கொண்டு சென்று அப்பெண்களின் மூலம் இந்த நரையை மாற்றும்படி செய்யுங்கள். ஆனால் இவருக்குக் கறுப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ என்று இடம் பெற்றுள்ளது.
அஹ்மத், அபூயஃலா, பஜ்ஜார் ஆகிய நூல்களில் இதே அறிவிப்பு மக்கா வெற்றியின் போது, அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது தந்தை “அபூ குஹாஃபா’ அவர்களைத் தாம் சுமந்தவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வந்து வைத்தார்கள். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் தாம் சங்கை செய்யும் பொருட்டு, அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி “நீர் இந்த முதியவரை அவருடைய வீட்டிலேயே இருக்கும்படி செய்திருந்தால் நாம் அவரிடத்தில் வந்திருப்போமே’ என்றார்கள். உடனே அவர் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது அவருடைய தலையும், தாடியும் “ஸகாமா’ என்னும் ஒருவகைப் பூண்டைப் போன்று வெளுத்துப் போயிருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இவ்விரண்டின் நிறங்களையும் மாற்றி விடுங்கள்; இவருக்குக் கறுப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மேற்காணும் இரு அறிவிப்புகளிலும் இவருக்குக் கறுப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று அவரைக் குறிப்பிட்டுக் கூறியிருப்பதால், அவரையும் அவரைப் போன்று முதியவராக இருப்போரையும் மட்டுமே இந்த வாசகம் கட்டுப்படுத்துமே தவிர, பொதுவாக இளமைப் பருவத்தில் நரைத்துள்ளவர்களையும் சேர்த்துக் கட்டுப்படுத்தும் என்று கூறுவதற்கில்லை. காரணம் அவரைப் போன்ற முதியவர்களுக்கு கறுப்புச் சாயத்தை தாடி, தலைமுடி ஆகியவற்றில் பூசும்போது அவருடைய வயதுக்கும் அந்தக் கறுப்புச் சாயத்திற்கும் சிறிதும் பொருத்தமாக இராது. ஆகவே தான் அவருக்குக் கறுப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளும்படி கூறப்பட் டிருக்கிறது. இல்லை என்றால் மேற்கண்டவாறு “நரைத்த முடியின் நிறத்தை மாற்றுவதற்கு மிகவும் சிறந்த பொருள் மருதாணியும், கறுப்புச் சாயம் தயாரிக்கும் க(த்)தம் என்ற செடியின் இலையுமாகும்’ என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கத் தேவையே இல்லை.
ஆகவே மேற்காணும் ஹதீஸ்களில் “இவருக்குக் கறுப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ எனும் வாசகத்தை வைத்துப் பார்க்கும்போது அவருக்கும் அவரைப் போல் தள்ளாடும் பருவத்தில் உள்ள முதியோ ருக்கும் சிவப்பு, அல்லது மஞ்சள் சாயங்கள் மட்டுமே பொருத்தமாகுமே அன்றி கறுப்புச் சாயம் பொருத்த மல்ல என்பது தெளிவாகத் தெரிவதோடு, பொதுவாக அனைவருக்கும் கறுப்புச் சாயம் கூடாது என்று கூறுவது முறை அல்ல என்பதும் தெளிவாகிறது.
“பிற்காலத்தில் சிலர் புறாவின் நெஞ்சைப் போன்று கறுப்பாகச் சாயம் பூசிக்கொள்வார்கள். அவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக் கூட அடைந்து கொள்ளமாட்டார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத்)
மேற்காணும் இந்த ஹதீஸையும் இதற்கு முன் கூறப்பட்டுள்ள அபூகுஹாஃபா சம்பந்தப்பட்ட ஹதீஸையும் அடிப்படையாக வைத்து சிலர் கறுப்புச் சாயம் பூசிக் கொள்வது ஹராம் என்றும் மற்றும் சிலர் மக்ரூஹ் என்றும் கூறுகிறார்கள்.
“அபூகுஹாஃபா’ அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸில் ஒட்டுமொத்தமாக கறுப்புச் சாயம் பூசிக் கொள்வதற்கு ஆதாரம் இல்லாமல் இருப்பது போன்றே இந்த ஹதீஸிலும் கறுப்புச் சாயம் பூசிக் கொள்வது கூடாது என்பதற்கும் ஆதாரமில்லை.
காரணம் என்னவெனில் இவ்வறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரும் கறுப்புச் சாயம் பூசிக் கொள்வது பற்றியோ, அல்லது அவ்வாறு அதைப் பூசிக் கொள்ளக் கூடாது என்பது பற்றியோ எதையும் எடுத்துக் கூறாமல் பொதுவாக பிற்காலத்தில் கறுப்புச் சாயம் பூசிக் கொள் ளும் நிலையில் சிலர் இருப்பார்கள் அவர்களுக்கு சுவர்க் கத்தின் வாடை கூட கிடைக்காது என்று இத்தன்மை வாய்ந்த எதோ ஒரு கூட்டத்தாரைப் பற்றி செய்தி அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அக்கூட்டத்தார் சுவர்க்கத்தின் வாடையைக் கூட தாம் அடைந்து கொள்ளாத அளவுக்கு என்ன பாவங்கள் செய்தார்கள் என்பதையும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக் காட்டவில்லை.
ஷிர்க்கு-இறைவனுக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறு பெரும் பாவம் செய்தவர்களின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு சுவர்க்கத்தின் உள்ளேயே அவர்கள் செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக அல்குர்ஆன் பறை சாற்றிக் கொண்டிருக்கும்போது ஒருவர் தமது வெள்ளை முடியைக் கறுப்பு முடியாக ஆக்கியமைக்காக சுவர்க்கத் தின் வாடையைக் கூட அவர் அடைந்து கொள்ளமாட்டார் என்று கூறுவது முறைதானா?
அல்குர்ஆனின் அந்த வசனங்களாவன:
”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.” (அல்குர்ஆன் 4: 48, 116)
உங்களுக்கு விலக்கப்பட்டுள்ள பெரும் பாவமான காரியங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்களுடைய (மற்ற சிறிய) பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை மிகவும் மரியாதைக்குரிய இடங்களில் புகுத்துவோம். (அல்குர்ஆன் 4: 31)
ஆகவே மேற்காணும் அந்த அறிவிப்பிலிருந்து கறுப்புச் சாயம் பூசிக் கொள்வது கூடாது என்று எவ்வாறு சட்டம் எடுக்க முடியும்? “அல்ஹலாலு பய்யின்-வல் ஹராமு பய்யின்’ ஹலாலும் தெளிவானதாகும். ஹராமும் தெளிவானதாகும் என்ற ஹதீஸின் அடிப்படையில் இதைப் பார்க்கும்போது, கறுப்புச் சாயம் பூசிக் கொள்வது கூடாது என்பதைத் தெளிவாக-அப்பட்டமாக எடுத்துக் காட்டும் வகையில் மேற்காணும் இரு ஹதீஸ்களும் இல்லாமலிருக்கும்போது, தெளிவில்லாத ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு செய்கையை ஹராம் என்றோ மக்ரூஹ் என்றோ கூறுவதற்கு யாருக்கு என்ன உரிமையிருக்கிறது?
குர்ஆனையும் ஹதீஸையும் முறையாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்றை ஹலால் என்றோ, ஹராம் என்றோ கூறுவோரைப் பின்வரும் வசனம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உங்கள் நாவில் வந்தவரெல்லாம் பொய் கூறுவதைப் போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) “இது ஆகும், இது ஆகாது’ என்று அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்ப னைச் செய்யாதீர்கள். எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சய மாக சித்தியடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 16: 116)
நரைத்த முடியின் நிறத்தை மாற்றுவதற்கு மிகவும் சிறந்த பொருள் மருதாணியும், கறுப்புச் சாயம் தயாரிக்கும் க(த்)தம் என்ற ஒரு வகை செடியின் இலையுமாகும்’. என்ற ஹதீஸை ஊர்ஜிதம் செய்யும் வகையில் சஹாபாக்களின் நடைமுறை.
ஒரு முறை அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாயம் பூசியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலையிலுள்ள நரைமுடிகளைக் கணக்கிட நாடியிருந்தால் என்னால் கணக்கிட்டிருக்க முடியும். (அவர்களின் நரை மிகவும் குறைவாகயிருந்தமையால்) அவர்கள் சாயம் பூசிக் கொள்ளவில்லை. மற்றொரு அறிவிப்பில்- முஸ்லிமில் ஆனால் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மருதாணியையும், கறுப்புச் சாயம் தயாரிக்கும் க(த்)தம் என்ற ஒருவகைச் செடியின் இலையையும் கொண்டு சாயம் பூசியுள்ளார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ மருதாணியைக் கொண்டு மட்டும் சாயம் பூசியுள்ளார்கள். (ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாயம் பூசியுள்ளார்களா? என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தாடியின் முற்பகுதியில் 17 அல்லது 20 நரை முடிகளைத் தவிர வேறு எதுவும் நரைக்கவில்லை. மற்றொரு அறிவிப்பில்-அஹ்மதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தலையிலும், தாடியிலும் சேர்த்து மொத்தம் 20 உரோமங்களைத் தவிர மற்றவை நரைக்கவில்லை என்று உள்ளது.
இவ்வாறு அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிவிட்டு “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நரைக்கு இலக்காகவில்லை’ என்றும் கூறினார்கள். அப்படி என்றால் நரை என்பது குறைபாடானதா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நீங்கள் அனைவருமே நரையை வெறுக்கத் தானே செய்கின்றீர்கள் என்று கூறிவிட்டு, ஆனால் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மருதாணியைக் கொண்டும், க(த்)தம் என்னும் செடியின் இலையைக் கொண்டும் சாயம் பூசியுள்ளார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ மரு தாணியைக் கொண்டு மட்டும் சாயம் பூசியுள்ளார்கள் என்றார்கள். (ஹுமைத் ரளியல்லாஹு அன்ஹு, அஹ்மத்)
நான் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மருதாணியைக் கொண்டும் கறுப்புச் சாயம் தயாரிக்கும் க(த்)தம் என்ற ஒருவகைச் செடியின் இலையைக் கொண்டும் சாயம் பூசியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (அம்மாருபின் அபீஅம்மார் ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ)
நான் ஹஸன், ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு இருவரையும் மருதாணியைக் கொண்டும், க(த்)தம் என்ற செடியின் இலையைக் கொண்டும் சாயம் பூசியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (ஈராஜு பின் ஹுரைஸ்ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ)
அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கறுப்புச் சாயம் பூசிக் கொண்டிருந்தார்கள். (முஹம்மது பின் அலி ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ)
நான் ஜரீரு பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது தலைக்கும், தாடிக்கும் கறுப்புச் சாயம் பூசியிருப்பதைப் பார்த்துள்ளேன். (ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ)
நான் உக்பத்து பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கறுப்புச் சாயம் பூசியிருப்பதைப் பார்த்திருப்பதோடு, “நாம் இவற்றின் மேற்பாகத்தைக் கறுப்பாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றின் அடிபாகங்களோ அதனை மறுத்துக் கொண்டிருக்கின்றனவே! என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்ததையும் கேட்டிருக்கிறேன். (அபூ உஷ்ஷானா ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ)
ஒருமுறை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்ருபின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது நரைமுடிகளுக்கு காக்கையின் இறகை போன்று கறுப்புச் சாயம் பூசியிருப்பதைப் பார்த்து அபூ அப்தில்லாஹ் அவர்களே! இது என்னவென்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அமீருல் மூமினீன் அவர்களே! நான் (முன்பு) இருந்த நிலையிலேயே தோற்றமளிக்க விரும்பினேன்’ என்றார்கள். அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதைத் தடுக்கவுமில்லை. அதற்காக அவர்களைக் குறை கூறவுமில்லை (அப்துல்லாஹ்பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ)
மேற்காணும் சஹாபாக்களின் ஆதாரபூர்வமான நடைமுறைகளைப் பார்க்கும்போது நரை முடியை மாற்றுவதற்காக மருதாணியைப் போன்ற சிவப்புச் சாயம், அல்லது மஞ்சள் சாயம், அல்லது சிவப்பும், கறுப்பும் சேர்ந்துள்ள வகையிலும் முடியின் இயற்கை நிறத் திலுள்ள சாயம் ஆகியவற்றைப் பூசிக்கொள்வது ஆகும் என்பதை அறிகிறோம்.
சில சஹாபாக்கள் கறுப்புச் சாயமே பூசியுள்ளதாகக் கிடைத்துள்ள அறிவிப்புகளைப் பார்க்கும்போது, ஒருவர் சிவப்பையும், கறுப்பையும் சேர்த்துப் பூசியிருக்கும் போது முடி கறுப்பாகவே தோற்றமளிப்பதைக் கண்டு சஹாபாக்கள் கறுப்புச் சாயமே பூசியிருப்பதாகக் கருதி அவ்வாறு மற்றவர்கள் அவர்களைப் பற்றி எடுத்துக் கூறியிருக்க ஏதுவாகலாம் என்று கருதுவதற்கும் இடமிருக்கிறது. உதாரணமாக மேற்கண்டவாறு ஹஸன், ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சிவப்புச் சாயமும், கறுப்புச் சாயமும் பூசியுள்ள தாக ஒரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த அறிவிப்பில் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கறுப்புச் சாயம் பூசிக் கொண்டிருந்தார்கள் என்றும் உள்ளது.
இவற்றின் மூலம் சிவப்பு, கறுப்புச் சாயங்களைச் சேர்த்துப் பூசுவதற்கு இடமிருப்பது போன்றே கறுப்புச் சாயத்தை மட்டும் பூசுவதும் ஆகும் என்பதை அறிகிறோம்.
இமாம் ஜுஹ்ரீ அவர்கள் கறுப்புச் சாயம் பூசியுள்ளார்கள். (மஃமர் ரஹ்மதுல்லாஹி அலைஹி, அஹ்மத்)
இமாம் ஜுஹ்ரீ அவர்கள் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஸஹ்லு பின் ஸஃது ரளியல்லாஹு அன்ஹு, அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, ஸஃது பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு முதலிய 10 நபி தோழர்களை நேரில் கண்டவரும் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிரதான ஆசிரியருமாவார்கள். அவர்கள் கூறுகிறார்கள்.
முகம் இளமையானதாக இருப்பின் நாங்கள் தலைக்கும், தாடிக்கும் கறுப்புச் சாயம் பூசிக் கொள்வோம். தலையும், பற்களும் ஆட்டம் கண்டுவிடும்போது அதை விட்டு விடுவோம். (இப்னு அபீஆஸிம், ஃபத்ஹுல் பாரீ பாகம் 10, பக்கம் 355)
உண்மையில் இன்று தாடி வைப்பது சுன்னத்து எனக் கருதி அநேகர் தாடி வைக்க முன் வந்தாலும் கூட, பலருக்கு இளமையிலேயே நரை கண்டுவிட்டதாலும், மத்ஹபு வாசிகள் தாடி, தலைமுடி ஆகியவற்றிற்கு ஒட்டு மொத்தமாக அறவே கறுப்புச்சாயம் பூசிக் கொள்வது ஹராம், மக்ரூஹ் என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருப்பதாலும், தாடியைச் சிரைப்பது போல் அதற்குக் கறுப்புச் சாயம் பூசுவதும் ஹராம் என்று கூறப்படுவதால் ஒரு வழியாக தாடியைச் சுத்தமாகச் சிரைக்கும் ஹராமை மட்டும் செய்து விட்டு இருந்து கொண்டிருக்கும் அவல நிலையைப் பார்க்கிறோம்.
ஆகவே முடியின் இயற்கையான அமைப்பில் கறுப்பும், சிவப்பும் சேர்ந்துள்ள சாயம் பூசிக் கொள்வதற்கு ஸஹீஹான ஹதீஸ்களின்படி தக்க ஆதாரமிருப்பதை அறிந்து கொண்ட நமது சகோதரர்கள் இம்முறைகளை அனுசரித்து இனியேனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைப் பேணி தாடி வைக்க முன் வருவார்களாக!
“ஹதீஸ்கள் மொழி பெயர்க்கப்பட்டு “அல்ஹதீஸ்’ எனும் பெயரால் நம் தமிழகத்தில் வெளிவந்துள்ள நூலில் மேற்காணும் ஹதீஸில் இடம் பெற்றுள்ள “க(த்)தம்’ என்ற பதத்திற்கு நீல நிறம் என்று தவறாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் கவனிக்கவும்.