“கடுகளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் புகுத்துவேன்”
ஐயம் : கடுகளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் புகுத்துவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபிமொழி உள்ளது. (இதனை வைக்காத நிலையில்) ஆனால் குர்ஆனில் 2:275வது வசனத்தில் வட்டி வாங்கி தின்பவன்”என்றென்றும்’ நரகில் தங்கிவிடுவரென்று அல்லாஹ் கூறுகிறான்.
ஒருவர் எல்லா அமல்களும் செய்கிறார். ஆனால் வட்டி வாங்குவது ஹராம் என்று தெரிந்தும் வட்டி வாங்கி தின்கிறார். இருப்பினும் இணைவைக்காத நிலையில் மரணிக்கிறார். இவருக்கு அல்லாஹ் சுவர்க்கம் கொடுப்பானா?
அல்லாஹ் வாக்குறுதி மாறாதவன். மேற்கூறிய ஹதீஸையும் குர்ஆன் வசனத்தை பார்க்கும் போது சற்று குழப்பமாக உள்ளது. இது குறித்து எங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தரவும்.
தெளிவு : ”கடுகளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகிலிருந்து வெளியேற்ற சுவர்க்கத்தில் புகுத்துவேன்” என்று அல்லாஹ் கூறியதாக ஹதீஸில் இருப்பது உண்மையே. திருகுர்ஆன் 2:275 வசனத்தில் வட்டி வாங்கித் தின்பவன் என்றென்றும் நரகில் தங்கி விடுவானென்று அல்லாஹ் கூறியிருப்பதும் உண்மையே. அல்லாஹ் வாக்குத் தவறாதவன் என்பதும் உண்மையே. மேலே குறிப்பிட்ட இரண்டு மட்டுமல்ல அவனது வாக்குகள். தான் நாடியவர்களை தண்டிப்பான். தான் நாடியவர்களை மன்னிப்பான்(2:284, 3:129, 5: 18, 48:14) வாக்குகளாகும். இந்த உரிமையில் கேள்வி கேட்க எவருக்கும் அதிகாரம் கிடையாது.
ஒரு தடவை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு எவர் இணைவைக்காமல் மரிக்கிறாரோ அவர் நிச்சயம் சொர்க்கம் புகுவார். இதனை செவியுற்ற நான் அம்மனிதர் திருடியிருந்தாலும், விபச்சாரம் செய்திருந்தாலுமா என்று கேட்டேன். அதற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆம். அவர் திருடியிருந்தாலும் விபச்சாரம் செய்திருந்தாலும் அல்லாஹ் நாடினால் அக்குற்றங்கள் மன்னிக்கப்பட்டு அவர் சொர்க்கம் நுழைவார் என்றார்கள் என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : புகாரி 2/329, 4/445, 7/717, 8/285, 450,451, 9/579 முஸ்லிம் 1/171,172, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)
தாங்கள் குறிப்பிட்டுள்ள நபர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் வட்டி வாங்கி உண்டிருப்பாரேயானால் அல்லாஹ் நாடினால் அவரது வட்டி பாவத்தை மன்னித்து சுவர்க்கம் புகுத்தலாம்; அல்லது அவர் செய்த வட்டி பாவத்திற்காக அல்லாஹ் நாடிய காலம் அவருக்கு தண்டனையளித்து விட்டு அவரது உள்ளத்தில் கடுகளவாவது ஈமான் இருந்திருக்குமேயானால் அவரை கடைசியில் சொர்க்கம் புகுத்தலாம்.
ஒருவேளை அவரது இறை நம்பிக்கையிலேயே நாமறியாத ஆனால் அல்லாஹ் நன்கறிந்த தவறுகள் இருக்குமேயானால் அவர் நிரந்தரமாக நரகத்திலும் இருக்கலாம். இவையனைத்தும் அல்லாஹ்வின் ஏகபோக உரிமையில் உள்ளவை. எனவே இதைப்பற்றி சர்ச்சை செய்யாமல் நரகத்தின் கொடிய தண்டனையை அவருக்கு நினைவூட்டி வட்டி எனும் கொடிய பவாத்திலிருந்து விடுவிக்கச் செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு உதவிபுரிவானாக.
ஐயம் : குர்ஆன் கூறுவது போன்று நடந்தால் போதும். அதை ஓதிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை என்று ஒருவர் கூறுகிறார். நான் ஓதிக் கொண்டும் அதன்படி இயன்றளவும் நடந்துக் கொண்டும் வருகிறேன். குர்ஆன் ஓதுவதால் நன்மையா? என்பதைத் தெளிவுப்படுத்தவும்.
தெளிவு : நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக அது கியாமத் நாளில் அதை ஓதியவர்களுக்கு ஷஃபாஅத்து-அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார். (அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
*ஒருவர் அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனிலிருந்து ஒரு ஹர்ஃபை – எழுத்தை ஓதினால் அவருக்கு அதனால் நன்மையுண்டு, ஒரு நன்மை என்பது அதுப் போன்ற பத்தைக் கொண்டதாகும். (சுருக்கம்) (இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதீ, தாரமீ)
ஆகவே மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக குர்ஆனை நாம் ஓதுவதால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மை நமக்கு கிடைப்பதோடு, மறுமை நாளில் அது அல்லாஹ்விடம் நமக்கு சிபாரிசு செய்யும் வாய்ப்பையும் அடைகிறோம். குர்ஆனை விளங்கி, அதன்படிச் செயல்படும் நோக்கத்துடன் ஓதுவதே அதிக பலனைத் தரும்.
ஐயம் : நம் பகுதிகளில் கணவன் உயிரோடிருக்கும்போது இறந்த பெண்களுக்கு சிவப்புத் துணியிலும், விதவைப் பெண்களுக்கு வெள்ளைத் துணியிலும் கபனிடும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக கபனுக்காக புதிதான மல் துணியே பயன்படுத்தப்படுகிறது.
கலீபாக்கள் மற்றும் ஸஹாபாக்களின் வரலாற்றில் அவர்களின் பழைய ஆடைகளான வேஷ்டி போன்றவற்றால் கபனிடப்பட்டதாகப் பார்க்கிறோம். அப்படியானால் நாம் பழைய வேஷ்டிகளையும் பெண்கள் அவர்களின் பழைய சேலைகளையும் கபனுக்காகப் பயன்படுத்தலாமல்லவா?
அது புதிய வெள்ளைத் துணியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டா? கபனிடுவதில் விதவை, சுமங்கலி என்ற வேறுபாடு உண்டா?
தெளிவு : கபனிடுவதில் சுமங்கலி, விதவை என்ற வேறுபாடு ஹதீஸ்களின் வாயிலாக எதுவுமில்லை. கபனுக்காக புதிய துணிதான் வேண்டும் என்ற கட்டாயமும் ஹதீஸ்களில் இல்லை. கலீஃபாக்களும், மற்றும் சஹாபாக்களும் தமது பழைய வேஷ்டி, துப்பட்டி போன்ற ஆடைகளை கபனுக்காகப் பயன்படுத்தியது போல் நாமும் பயன்படுத்துவது மேலானதேயாகும்.
ஆனால் கபன் வெள்ளை நிறமானதாக இருக்க வேண்டும் என்பது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் ஹதீஸில் காணப்படுவ தால் பொதுவாக கபன் வெள்ளை நிறமாக இருப்பது மேலாகும் என்பதை அறிகிறோம்.
“உங்கள் ஆடைகளில் வெள்ளை நிறமான வற்றை அணியுங்கள்; ஏனெனில் வெள்ளை நிற ஆடையே உங்கள் அடைகளில் மேலானவை யாகும். மேலும் உங்களுடைய மய்யித்துகளை வெள்ளை நிறத் துணிகளை கொண்டே கபனிடுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.(சுருக்கம்) இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத், திர்மிதீ)
சிக்கனத்தின் அடிப்படையில் பழைய ஆடைகளைக் கொண்டு கபனிடுவது மேலாகயிருப்பினும் நடைமுறைப்படி புதிய வெள்ளை நிற மல்துணியால் கபனிடுவதை இஸ்ராஃப்-விரயம் என்று கூறுவதும் சரி அல்ல.
source: annajaath.com