முந்தானை அணிவதில் உஷார்!
வீடு தான் பெண்களின் உலகம் என்பார்கள். ஏனெனில் பொதுவாக பெண்கள் அதிகமான நேரத்தை வீட்டிலேயே கழிக்கிறார்கள். ஒரு பெண் தன் வீட்டினுள் விரும்பிய முறையில் ஆடை அணிவதிலோ, சுதந்திரமாக செயற்படுவதிலோ எவ்வித குற்றமும் இல்லை. இருப்பினும் சில நேரங்களில் தன் கற்பைப் பேணுவதற்காக தன்னை இஸ்லாமிய கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றாள்.
வீதியில் உலா வரும் தனக்குத் தெரியாத பல ஆண்களினால் ஏற்படும் குழப்பங்களை விட வீட்டுக்குள் வரும் தான் அறிந்த ஒரு ஆணால் ஏற்படும் குழப்பங்கள் அதிகமாகும்.
அவ்வப்போது நம்முறைய வீட்டுக்கு வரும் கணவனின் நண்பர்களோ அல்லது தனது உறவுகளோ; வீட்டின் தேவை காரணமாக கூலியாட்கள் கூட வந்துவிடலாம் அந்நேரங்களில் நம் பெண்கள் அறிந்தும் அறியாமலும் தவறிழைத்து விடுவதினால் நினைத்தும் பார்க்காத விதங்களில் குடும்பப் பெண்கள் உட்பட கன்னிகளும் தம் கற்பைப் பறிகொடுத்து விடுகின்றார்கள்.
கணவனின் நண்பனோடு கள்ளக் காதல். அண்ணனின் நண்பனோடு தலைமறைவு, சகோதரியின் கணவனுடன் சல்லாபம், வளர்ப்பு மகனுடன் பாலியல் இது போன்ற பல ஒழுக்கக் கேடான செயல்களுக்கு நம் சகோதரிகள் துணை செல்கின்றார்கள். ஆகவே இவற்றுக்கான காரணங்கள் நமக்குள்ளே இருந்தாலும் அவை அடிப்படையில் இருந்தே கிள்ளி எறியப்பட வேண்டும்.
முந்தானை அணிவதில் உஷார்!
அதிகமான பெண்கள் வெளியே செல்லும் போது அபாயா என்ற ஆடையுடன் பர்தாவோ அல்லது முந்தானையோ தலையில் அணிந்து செல்வதினால் முகம், கை, கால் தவிர மற்றைய பகுதிகளை இஸ்லாம் கூறியதைப் போல் மறைத்தாலும் தன் வீட்டிற்கு அந்நிய ஆண் ஒருவர் வந்துவிட்டால் எது இஸ்லாமிய ஆடை என்பதை மறந்துவிடுகின்றாள். தலையையும், மார்பையும் மறைக்கின்றோம் என்ற பெயரில் ஒரு முந்தானையை அரைகுறையாக அணிவதன் மூலம் முகத்துடன் சேர்த்து கழுத்துப் பகுதியும், தலை முன்பாகமும், மணிக்கட்டுக்கு மேலுள்ள குடங்கைகளும் வெளிக்காட்டப்படுகின்றன.
இதுமட்டுமின்றி சேலை அணியும் பெண்கள் தங்களது வயிற்றுப்பகுதியை காற்றோட்டமாக திறந்து வைத்திருப்பதும் தவறாகும். அதையும் மறைத்தே ஆக வேண்டும்.
கணவனிடம் காட்டுவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கவர்ச்சிப்பகுதிகளை மற்றவர்களுக்கு காண்பிப்பது மிகவும் தவறாகும். குற்றமும் ஆகும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)
ஆகவே நாம் அணியும் முந்தானைகள் கனமாக இருப்பதுடன் கழுத்துப் பகுதி, தலையின் முற்பகுதி, குடங்கை என்பவற்றை மறைக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
வளர்ப்பு மகனை தமது சொந்த மகனைப் போல் கருதி அவனுடன் உறவாடும் வளர்ப்புத் தாய்மார்களையும் சகோதரிகளையும் நாம் காணலாம். ஒரு வளர்ப்பு மகன் இரண்டு வருடங்களுக்குள் பசி தீரும் அளவு ஐந்து தடவைகள் குறிப்பிட்ட தாயிடம் பால் அருந்தினால் மாத்திரமே தனக்கு சொந்த மகனாக ஆகுவதுடன் குறிப்பிட்ட தாயின் குழந்தைகளுக்கும் சொந்த சகோதரன் போல் ஆகிவிடுகின்றான். இப்பால்குடியினால் ஏற்படும் உறவல்லாமல் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தை பருவ வயதை அடைந்த பின் குறிப்பிட்ட தாய்க்கோ, சகோதரர்களுக்கோ அவனுடன் தொட்டுப் பழகவோ அவனுக்கு முன் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்காமல் இருப்பதோ குற்றமாகும்.
வளர்ப்புப் பிள்ளைகள் ஆகிய அனைவரையும் நாம் அந்நிய ஆண் போலவே கருதி அவர்களிடமும் பெண்கள் அணியும் முந்தானைகள் கனமாக இருப்பதுடன் கழுத்துப் பகுதி, தலையின் முற்பகுதி, வயிறு, குடங்கை என்பவற்றை மறைக்கும் வண்ணம் இருந்து தமது கற்பை பேணிப் பாதுகாக்க வேண்டும்.