ஐயம் : புதுப் பள்ளிவாசலுக்கு திறப்பு விழா நடத்துவதையும், அதில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதையும் இஸ்லாம் புனிதமாக கருதுகிறதா? ஏழு பள்ளிவாசல் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜுச் செய்ததற்குச் சமம் என்கிறார்களே இவற்றுக்கெல்லாம் ஹதீஸில் ஆதாரமுண்டா?
தெளிவு : ஒருவர் அல்லாஹ்வுக்கு ஒரு பள்ளி வாசல் கட்டினால் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதால் உள்ள பலாபலன்களை எடுத்துக் கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்காக ஆர்வமூட்டியுள்ளார்களே தவிர, அதற்காகத் திறப்பு விழா நடத்த வேண்டுமென்றோ, அதற்காக முஸ்லிம்கள் செல்ல வேண்டும் என்றோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை.
பெரும்பாலும் இன்று பள்ளி கட்டி, திறப்பு விழா நடத்துவதெல்லாம் அதை நடத்தும் ஊர் வாசிகளின் பெருமையை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. ஓர் ஊரில் பெரிய தொரு பள்ளிவாசல் கட்டப்படுகிறதென்றால் அப்பள்ளியை தொழுகையாளிகளைக் கொண்டு நிரப்புவதில் தான் அந்த ஊருக்கு கைர்-பரகத்-சிறப்பு முதலியவை இருக்கிறதே தவிர பள்ளித் திறப்பு விழா என்ற பெயரால் பிற ஊர் சகோதர முஸ்லிம்களுக்கு அழைப்புக் கொடுத்து அவர்களெல்லாம் வந்து பள்ளியை நிரப்புவதன் மூலம் என்ன பயன் இருக்க முடியும்?
பள்ளிவாசல்களின் வகையில் மக்கள் ஒருவருக் கொருவர் பெருமையாகப் பேசிக் கொள்ளுவது யுக முடிவுகால அறிகுறிகளில் ஒன்றாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், நஸயீ, தாரமி)
இன்று மேற்காணும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதுபோல அநேக ஊர்களில், நமது பள்ளிவாசல் “”மினாரா” 10 கிலோ மீட்டருக்கு அப்பால் நின்று பார்க்கும்போதே தெரிகிறது. நமது பள்ளியைப் போன்று கவர்ச்சிகரமான பள்ளி இந்தப் பகுதியிலேயே கிடையாது.
அந்த ஊர் பள்ளியை விட நமதூர் பள்ளிதான் மிக அலங்காரமாக, பார்வைக்கு எடுப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசிக்கொள்வதை சர்வ சாதாரணமாக நாம் பார்க்கிறோம். அப்பள்ளியில் தொழுவோரைப் பார்க்கப் போனால் ஒரு ஸஃப்புக்கு இழுபறியாக இருக்கும்.
7 பள்ளிவாசல்களின் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜுச் செய்வதற்கு சமம் என்பது ஏதோ ஒரு புண்ணியவானால் கட்டி விடப்பட்ட சரடே அன்றி வேறில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் இவ்வாறு எதுவுமில்லை. 7 பள்ளிவாசல் திறப்புவிழா மட்டு மின்றி 700 பள்ளிகளின் திறப்பு விழாக்களுக்குச் சென்று வந்தாலும் அவை ஒரு ஹஜ்ஜுச் செய்வதற்குச் சமம் என்று கூற முடியாது.
காரணம் ஹஜ் ஜுச் செய்வது என்பது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றாகும். பள்ளிவாசலுக்கு திறப்புவிழாச் செய்வதென்பதும், அதற்காகச் செல்ல வேண்டும் என்பதும் அல்லாஹ்வினாலும் அவனது ரசூலினாலும் ஏவப்பட்டவை அல்ல.
“”நமது இம்மார்க்கத்தில் இல்லாதோர் அமலை ஒருவர் செய்வாரேயானால் அது மறுக்கப்பட வேண்டியதாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
ஐயம் : என் நண்பருடைய தகப்பனார் இறந்து விட்டார். விருந்து அளித்து துஆ செய்யும்படி கூறினார். இந்த விருந்துக்கு செல்வது சுன்னத் ஆகுமா?
தெளிவு : இறந்து விட்டவருக்காக விருந்து அளித்துத்தான் துஆ செய்யவேண்டும் என மக்களுக்குப் போதித்தவர்கள், துஆவை பிரதான ஒன்றாகக் கருதுவதாகத் தோன்றவில்லை; மாறாக விருந்தைத்தான் முக்கிய ஒன்றாக எதிர்பார்ப்பது தெரிகிறது. துஆ கேட்க வேண்டியது அல்லாஹ்விடம் மட்டுமே. அல்லாஹ்விடம் துஆ கேட்பதற்கு “விருந்து’ என்ற “லஞ்சம்’ அவனுக்குத் தேவையில்லை.
இறந்தவருக்காக பாவமன்னிப்புக் கோரியும், வேதனைகளிலிருந்து பாதுகாவல் தேடியும், சுவர்க்கத்தை யாசித்தும் இன்னும் இவை போன்றவைகளை நாடி அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும். இதற்காக விருந்தளிப்பது மார்க்கத்தில் இல்லாத நூதன அனுஷ்டானமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஜீவித காலத்தில் மரணித்துவிட்ட அவரது அருமை மனைவி (அன்னை) கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவிற்குப் பின்னும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அருமை மகன் இப்ராஹீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின்னும், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விருந்தளித்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
மேலும் எண்ணற்ற ஸஹாபா பெருமக்கள் பல போர்களில் (ஷஹீத்) மரித்து விட்ட சமயங்களில் கூட, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்காக விருந்தளித்ததாக சான்றுகளில்லை. மரணித்த வருக்காக விருந்தளிக்க சொல்வது சுன்னத்தா என கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஐயம் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் சிறிய தந்தையின் (அபூதாலிப்) மரணத் தருவாயில், தன் எச்சிலால் உடல் முழுதும் தடவியதாகவும், பாதங்கள் பகுதியில் தடவ வரும்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு காபிர்களுக்கு சிறிய தண்டனையுமின்றி இருக்கக் கூடாது என்ற ஹதீஸ் மிஷ்காத்தில் இருப்பதாக ஒரு நண்பர்-மெளலவி அறிவிக்கிறார். இது சரியா?
தெளிவு : தோழரே! மிஷ்காத் என்பது பற்பல ஹதீஸ் நூல்களிலிருந்து ஹதீஸ்களை பொறுக்கி தலைப்பு வாரியாக அமைக்கப்பட்ட ஒரு நூல். இந்நூல் ஹிஜ்ரி 737 முதல் 740க்குள் வலியுத்தீன் முஹம்மது இப்னு அப்தில்லாஹ் அல்-கதீப் அத்திப்ரீஸி என்பவரால் தொகுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு தலைப்பையும் 3 பிரிவுகளாகப் பிரித்து முதல் பிரிவில் மிகவும் உண்மையானவை எனக் கொள்ளப்படும் புகாரீ, முஸ்லிம் நூல்களிலிருந்து ஹதீஸ்களைத் தருவார். இரண்டாவது பிரிவில்: ஹஸன் (அழகான) தரத்தையுடைய ஹதீஸ்களை அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜ்ஜா போன்ற நூல்களிலிருந்து தருவார். மூன்றாவது பிரிவில் மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்களைத் தருவார்.
இம்மூன்று பிரிவுகளிலும் முழு இஸ்னாத்-அறிவிப்பாளர் வரிசைகள் இருக்கவே இருக்காது.
இந்நூலை ஆராய்ந்த பல ஹதீஸ் கலா வல்லுநர்கள் இதில் பல பலஹீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நூலை தொகுத்த வலியுத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒவ்வொரு ஹதீஸின் முடிவிலும் தான் எந்த நூலிலிருந்து பெற்றார் என்பதைக் குறிப்பிடத் தவறவில்லை.
எனவே தங்களிடம் மிஷ்காத்தில் இருப்ப தாக கூறிய நண்பர்-மெளலவியிடம் மிஷ்காத்தில் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை மட்டும் கேளுங்கள். இந்த ஹதீஸின் நிலை உங்களுக்கே புரிந்து விடும். அவரது குட்டும் வெளிப்படும். அவரை மிஷ்காத்தின் ஒரிஜினலை விட்டு ஓரக் குறிப்புகளுக்கு செல்ல அனுமதிக்காதீர்கள். இந்நூலின் ஓரக் குறிப்புகள் “”இரஹ்” விளக்கம் என்ற பெயரில் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பதையும் கவனத்தில் கொண்டு அவரிடம் அணுகுங்கள். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
பதில் : மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்