பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் 635 ஆனால் இதுவரை தண்டனை பெற்றதோ ஒரே ஒருவர்தான்!
இந்தியாவின் மானத்தைப் பறித்த பஸ்!
கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அறிந்து… ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துள்ளது. ‘குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்’ என்று நாடெங்கும் போராட்டம் நடக்கின்றன!
தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுரியில் பிசியோதெரபி படித்த 23 வயது மாணவி அவர். பொறியாளரான தனது நண்பருடன் கடந்த 16-ம் தேதி சினிமா பார்த்து விட்டு, இரவு 9.30 மணிக்கு முனிர்கா பேருந்து நிலையத்தில் நின்றார். ஒரு பேருந்து வந்து நிற்கவே, இருவரும் அதில் ஏறினர்.
உள்ளே இருந்தது மொத்தமே ஆறு பேர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரிடம், ‘இந்த நேரத்தில் ஒரு பொண்ணுகூட என்னடா பண்ற?’ என்று மிரட்டி இருக்கிறார்கள். உடனே, அந்தப் பெண் குறுக்கிட்டு, ‘நாங்கள் நண்பர்கள். படம் பார்த்துவிட்டு வருகிறோம்’ என்று சொல்லவும் ‘நீ பேசாதடி’ என்று இரும்புக் கம்பியால் தாக்கி இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பரையும் தாக்கி பேருந்தில் இருந்து அவரை வெளியே தள்ளினர்.
அடுத்து அவர்கள் செய்த காரியங்கள் கொடூரத்தின் உச்சம். அந்த மாணவியை இரும்புக் கம்பியால் பல இடங்களிலும் தாக்கவே, ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார். வலியால் துடித்த பெண்ணை அந்தப் பேருந்துக்கு உள்ளேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மஹில்பூர் என்ற இடத்தில் உள்ள மேம் பாலத்தில் பேருந்தை நிறுத்தி, அலங்கோலமாக்கி விட்டு அந்த மாணவியை வெளியே வீசி இருக்கிறார்கள். இப்போது, அந்த மாணவி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த இந்தச் சம் பவத்தைக் கண்டித்து மொத்த நாடும் கனன்று கொண்டு இருக்கிறது.
இதுதொடர்பாக வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம் சிங் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியது டெல்லி போலீஸ், அக்ஷய் குமார் மற்றும் ராஜு என்ற இருவரைத் தேடி வருவதாகக் கூறும் டெல்லி போலீஸார், வெளியிட்ட உண் மைகள் பகீர் ரகம்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ‘யாதவ் டிராவல்ஸ்’ நிறுவனத்தின் பேருந்து, டெல் லியில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏற்றிச்செல்லும் கான்ட்ராக்ட் பேருந்து. ராம் சிங் என்பவர்தான் கடந்த 10 மாதங்களாக அந்தப் பேருந்தின் ஓட்டுனராக இருந் தார். 16-ம் தேதி மாலை தன் நண்பர்கள் நால்வர் மற்றும் தனது தம்பி முகேஷுடன் சேர்ந்து மது அருந்தியவர், பேருந்தை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்ட் போகலாம் என்று கிளம்பி இருக்கிறார். பேருந்துக்காக மாணவி தன் நண்பருடன் காத்திருப்பதைக் கண்டதும், பயணிகள் பேருந்தைப்போல் நிறுத்தி, அவர்களை ஏற்றிக் கொண்டனர். நண்பரை அடித்து வெளியே எறிந்து விட்டு, மாணவியைப் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை ஓட்டுனர் ராம் சிங் பலாத்காரம் செய்த போது, அவனுடைய தம்பி முகேஷ் பேருந்தை ஓட்டி இருக்கிறார். அந்த பஸ் கறுப்புக் கண்ணாடியுடன் இருந்ததால், உள்ளே நடந்த எதுவுமே வெளியில் யாருக்கும் தெரியவில்லை. மாணவியை வெளியே வீசிய பிறகு, பேருந்தை ஷெட்டுக்கு எடுத்துச்சென்று ரத்தக் கறைகளைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருக்கிறார்கள்.
மாணவி சேர்க்கப்பட்டுள்ள டெல்லி சப்தர்ஜிங் மருத்துவ மனையின் டாக்டர் பி.டி.அதானி, ”அந்த மாணவியின் உடலில் பல முக்கிய உறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் செயற்கை சுவாசம்தான் அளித்து வருகிறோம். இதுவரை நான்கு அறுவைச் சிகிச்சைகள் செய்து இருக்கிறோம்.. இன்னும் சில அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல்நிலை இல்லை. அந்த ஆறு பேரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவரது அடிவயிறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஐ.சி.யு-வில்தான் இருக்கிறார். இப்படி ஒரு மோசமான கேஸை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை” எனக் கவலை தெரிவித்து இருக்கிறார்.
இந்த வழக்கை சூ-மோட்டாவாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ”மக்கள் உங்கள் மீது வைத் திருக்கும் நம்பிக்கையை இழந்து விட்டனர். சம்பந்தப்பட்ட பேருந்து டெல்லியில் அனுமதி இல்லாத கறுப்பு நிற ஸ்டிக்கர், ஜன்னல் துணிகளுடன் சென்று இருக்கிறது. இந்தச் சம்பவம் நடக்கும்போது ஐந்து போலீஸ் செக் பாயின்ட்களை பேருந்து கடந்துள்ளது. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?” என்று, டெல்லி போலீஸாரைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளது.
அனைத்துத் திசைகளில் இருந்தும் சரமாரியாகப் புகார்கள் குவியவே, ”கறுப்புக் கண்ணாடி, திரைகள் போட்டுள்ள பேருந் துகளை உடனே கண்காணித்து உரிமத்தை ரத்து செய்யுங்கள். இரவு ரோந்து போலீஸாரின் எண்ணிக்கையை பலப்படுத்துங்கள். புதிதாக ரோந்து வாகனங்களை வாங்குங்கள். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸாரை நியமியுங்கள்” என்று அடுக்கடுக்கான சட்டங்களை உள்துறை விதித்துள்ளது.
2012-ல் மட்டும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இதுவரை தண்டனை பெற்றதோ ஒரே ஒருவர்தான்.
எங்கே போகிறது இந்தியா… அதுவும் தலைநகர்?
– ஆ.அலெக்ஸ்பாண்டியன்
நன்றி: ஆனந்த விகடன்