விபச்சாரத்தை அங்கீகரிக்க கூடாது! ஏன்?
[ பாலியல் வக்கிரங்கள் அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது சிலரின் கருத்து. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.
பாலியல் உணர்வு என்பது மனிதன் உள்ளிட்ட எல்லா விலங்கினத்திற்கும் உள்ள இயற்கையான உயிரியல் உணர்ச்சிதான். ஆனால் அந்த விலங்கின உணர்ச்சியிலிருந்து காதல், ரசனை, தேர்வு, என்ற நாகரீக கட்டத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த நாகரீகம் விலங்கினங்களுக்கு கிடையாது.
அதாவது நமது காதலில் விலங்குணர்ச்சி உள்ளதோடு மனிதனது நேசம், ரசனை என்ற சிந்தனைரீதியான பண்பாட்டு அம்சமும் கலந்திருக்கிறது. அதே நேரம் இந்த விலங்குணர்ச்சியும், கலாச்சார உணர்ச்சியும் கலந்த காதலில் விலங்குணர்ச்சியை மட்டும் துண்டித்து வெறியோடு வளர வைக்க முதலாளித்துவ சமூக அமைப்பின் சூத்திரதாரிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.
அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே. இன்று எண்ணிறந்த வகைகளில் பாலியல் தொழில் என்பது ஆபாசப்படங்கள், செய்திகள், சினிமாக்கள், சேனல்கள், கருவிகள், கடைகள், நடனங்கள் என்று செல்பேசி முதல் இணையம் வரை பரவிக் கிடக்கின்றது. சுற்றுலா என்றாலே அது விபச்சாரச் சுற்றுலாதான் எனும் அளவுக்கு மாறிவிட்டது. முக்கியமாக மேற்குலகின் வக்கிர நபர்களுக்கான விபச்சார விடுதிகளாக கீழை நாடுகளின் சுற்றுலா நகரங்கள் மாறிவிட்டன.]
விபச்சாரத்தை அங்கீகரிக்க கூடாது! ஏன்?
இந்துமதப் புராணங்களிலும் தேவலோக அழகிகளான ரம்பா, ஊர்வசி, மேனகையின் ”வரலாற்று” பாத்திரங்களையும், முக்கியமாக முனிவர்கள் தவமிருந்து பவர் பெறும் நேரத்தில் அவர்களை முடக்கும் சல்லாபக் கதைகளையும் அறிவோம். வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும் சேர்ந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்.
அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். அதை இந்துமதக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரம், பார்ப்பனியப் பண்பாடு என்றும் சொல்லலாம். இது குறித்து அம்பேத்கரும், பெரியாரும் எழுதியவற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.
முழு நாட்டு மக்களையும் வேசி மக்கள் என்று தூற்றியதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் உலகெங்கும் எல்லாக் கலாச்சாரங்களிலும் விபச்சாரம் இருந்திருக்கிறது. விபச்சாரத்தை வெறும் ஒழுக்கம் குறித்த பிரச்சினையாகப் பார்க்காமல் அதை சமூக பொருளுற்பத்தி வரலாற்றில் வைத்துப் புரிந்து கொண்டால் பல கேள்விகளுக்கு விடை தெரியும்.
இயற்கையை மட்டும் சார்ந்து, சொத்துடமை பிரிவினைகள் ஏதுமற்ற ஆதிகாலப் புராதானப் பொதுவுடமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இயங்கியது. இங்கு வாழ்ந்த இனக்குழு சமூகத்தின் மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் மக்கள் என்று அறியப்பட்டார்கள். பெண்ணே சமூகக் குழுக்களின் தலைவியாகவும் இருந்தாள். இயற்கையான வேட்டையிலிருந்து, திட்டமிட்ட வேட்டை, கால்நடை, பயிர் என்று பொருளுற்பத்தி மாறியதும் சொத்துடமைகள் தோன்றி வர்க்கங்கள் எனும் சமூகப் பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பாலின ரீதியில் வேலைப்பிரிவினையும் தோன்றுகின்றன.
பிறகுதான் மனித உறவுகள் சொத்துடமையின் நீட்சியாக பரிணமிக்கின்றன. அதாவது தனக்குரிய நிலம், கால்நடைகள், அடிமைகள் முதலான சொத்துக்களை காக்கும் வாரிசுரிமை தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. இப்படித்தான் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகம் பிறக்கிறது. இந்தப் பெண்ணிற்கு பிறந்த மக்கள் என்பதிலிருந்து இந்த ஆணுக்கு பிறந்த வாரிசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஆணுக்கு பிறந்தவர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்தப் பெண்ணுக்கு பிறந்தவர்கள் என்பது முக்கியமல்ல. குடும்பத்தின் தோற்றம் இப்படித்தான் இருந்தது என்பதை பலரும் நம்ப மாட்டார்கள். ஒரு ஆண்டை அல்லது முதலாளி அவனது சொத்துக்களை பாதுக்காப்பதற்கு குடும்பம் எனும் ஒரு தார மணமுறையே பொருத்தமாக இருக்கிறது என்பதும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
சொத்துடமையின் படிக்கட்டுகளில் மேலே செல்லச் செல்ல குடும்பத்தில் இருக்கும் பாலியல் வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாகவே நீடிக்கிறது. ஊருக்கும், சொத்துடமையின் வாரிசு பிரச்சினைக்காக மட்டுமே திருமணங்கள், குடும்பங்கள் தேவைப்பட்டன. ஊருக்கு ”கற்பு”, ஆசைக்கு விபச்சாரம் என்பது ஆண்டைகளின் இயல்பாக மாறியது. அதே போன்று ஆண்டைகளின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள்.
இப்படி சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அழைக்கிறார். இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூரியேவின் மேற்கோளையும் ஏங்கெல்ஸ் காட்டுகிறார்.
இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் சொத்துடமை வர்க்கங்களில் வாரிசுரிமையை ரத்து செய்ய முடியாது என்பதால் காதல் பொய்த்துப் போனாலும் குடும்ப வாழ்க்கையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமெங்கும் உள்ள அநேக குடும்பங்கள் இந்த அச்சில்தான் சுற்றி வருகிறது என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ”குடும்பத்தின்” செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ”கள்ள உறவுக்கு” ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த கள்ளஉறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது.
மேட்டுக்குடி வர்க்கங்களின் இன்பநாட்டத் தேவைகள் அவர்களது பணத்திமிர் காரணமாக எல்லா துறைகளிலும், எல்லா உணர்ச்சிகளிலும் அளவிறந்து காணப்படுவது போலவே பாலியல் விசயத்திலும் நடைபெறுகிறது. இதுவும் இன்றல்ல, நேற்றல்ல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்கிறது. நமது பண்ணையார்களும், மிட்டா மிராசுதார்களும், ஜமீன்தார்களும் சட்டப்பூர்வமாகவும், மறைமுகமாகவும் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள். மைனர் என்ற பெயரில் அவர்களது வக்கிரங்கள் இயல்பானதென்று நியாயப்படுத்தப்பட்டன. இது போக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையும் குறிப்பாக அவர்களுக்கு மணமானால் முதலிரவில் பண்ணையாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற கொடுமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்களால் இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன.
ஆக விபச்சாரம் உள்ளிட்டு பல்வேறு பாலியல் வக்கிரங்களின் ஊற்றுமூலம் மேட்டுக்குடியினர்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து இன்று பாலியல் வக்கிரங்கள் ஏன் அதிகம் நடைபெறுகின்றது என்பதை பார்க்கலாம். அப்படி அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது சிலரின் கருத்து. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.
பாலியல் உணர்வு என்பது மனிதன் உள்ளிட்ட எல்லா விலங்கினத்திற்கும் உள்ள இயற்கையான உயிரியல் உணர்ச்சிதான். ஆனால் அந்த விலங்கின உணர்ச்சியிலிருந்து காதல், ரசனை, தேர்வு, என்ற நாகரீக கட்டத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த நாகரீகம் விலங்கினங்களுக்கு கிடையாது. அதாவது நமது காதலில் விலங்குணர்ச்சி உள்ளதோடு மனிதனது நேசம், ரசனை என்ற சிந்தனைரீதியான பண்பாட்டு அம்சமும் கலந்திருக்கிறது. அதே நேரம் இந்த விலங்குணர்ச்சியும், கலாச்சார உணர்ச்சியும் கலந்த காதலில் விலங்குணர்ச்சியை மட்டும் துண்டித்து வெறியோடு வளர வைக்க முதலாளித்துவ சமூக அமைப்பின் சூத்திரதாரிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.
அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே. இன்று எண்ணிறந்த வகைகளில் பாலியல் தொழில் என்பது ஆபாசப்படங்கள், செய்திகள், சினிமாக்கள், சேனல்கள், கருவிகள், கடைகள், நடனங்கள் என்று செல்பேசி முதல் இணையம் வரை பரவிக் கிடக்கின்றது. சுற்றுலா என்றாலே அது விபச்சாரச் சுற்றுலாதான் எனும் அளவுக்கு மாறிவிட்டது. முக்கியமாக மேற்குலகின் வக்கிர நபர்களுக்கான விபச்சார விடுதிகளாக கீழை நாடுகளின் சுற்றுலா நகரங்கள் மாறிவிட்டன.
மேலும் நேரடி பாலியல் வக்கிரங்களைத் தாண்டி சராசரியான செய்தி, விளம்பரம், பாடல், புகைப்படம், மொழி என அனைத்தும் பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை பாலுணர்வின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் ஆண்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. சராசரி பெண்ணுடல் என்பது சக மனித இனம் என்பதைத் தாண்டி எப்போதும் நுகர்வதற்குரிய ஒரு பண்டமாக நம் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகு, அலங்காரம், நடை, உடை, பாவனை சகலமும் இதைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எற்றுக்கொள்ளுமளவு பெண்களும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.
சரி, இத்தகைய பிரம்மாண்டமான பாலியல் தொழில் வலைப்பின்னல் மனிதர்களின் பாலுணர்வுக்கு போதிய ”தீனி” போட்டு ஆற்றுப்படுத்தலை செய்திருக்கிறதா? இல்லை. அப்படி முடியாது என்பது இதன் நோக்கத்திலும், இயல்பிலும் உள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட பாலுணர்வு வெறி என்பது ஒரு போதும் அடங்காது. அதனாலேயே பழையமுறைகள் சலித்துப்போய் புதிது புதிதாக தேடும் வெறி தூண்டப்படுகிறது. விபச்சாரத்தில் கூட பெண்கள், விதவிதமான தேசிய இனப்பெண்கள், கன்னி கழியாத பெண்கள், பல வயது பெண்கள், என்று போய் தற்போது குழந்தைகள் வரை வந்து நிற்கிறது. எனினும் இந்த வேட்டை இத்தோடு நின்றுவிடாது. வேறு வேறு விதங்களில், முறைகளில் தொடரும்.
8 எம். எம் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு பணக்காரனது திருப்திக்காக ஒரு அப்பாவி இளம் பெண்ணை வன்புணர்ச்சி செய்து பின்னர் உண்மையாகவே கொலை செய்து அதை படமெடுத்து (SNUFF FILM) அவனுக்கு காட்டுகிறார்கள். அப்போதுதான் அவனது உணர்ச்சி திருப்தி அடைகிறது. அதற்காக அவன் பெரும் பணத்தை செலவழிக்கவும் தயாராக இருக்கிறான். இது உண்மையா, பொய்யா என்று பார்ப்பதை விட இவை போன்றவற்றை சாத்தியப்படுத்தும் வழிகளில்தான் பாலியல் வக்கிரங்கள் பெரும் பணத்தை அள்ள முடியும்.மனிதர்களின் மறு உற்பத்திக்கென்று இயல்பான முறைகளில் இருக்கும் உடலுறுவு பின்னர் பாலுணர்வு வெறிக்காக விதவிதமாக மாற்றப்பட்டு ஓதப்படுகிறது. அவையெல்லாம் அறியாதவர்கள் இன்பத்தை முற்றிலும் அறியாதவர்கள், நுகராதவர்கள் என்று பொதுக்கருத்தை உருவாக்கி மிரட்டுகிறார்கள். பதற்றம் கொள்ள வைக்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்களில் இரத்தம் தெறிக்க கொலை செய்யும் விளையாட்டுக்கள் போல வன்புணர்ச்சி செய்யும் ரேப் விளையாட்டுக்களும் வந்துவிட்டன. ஆனால் இவை விளையாட்டோடு நிற்காமல் அந்த பிஞ்சு மனங்களில் ஊடுறுவி என்றாவது வினையாற்றாமல் போய்விடுமா என்ன?
முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் இத்தகைய சமூக சூழலே பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையான காரணம். விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றுவதன் மூலமாக இவற்றை ஒழித்துவிட முடியாது. அதனால்தான் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் கேளிக்கைகள் சட்டப்பூர்வமாகவே நிறைந்திருக்கும் அமெரிக்காவில் கூட பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்து விடவில்லை. உண்மையில் இந்த வன்முறைகள் அமெரிக்காவிலேதான் அதிகம். வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளிலும் கிட்டத்தட்ட அதே நிலைமை.
பொருளாதாரத்தில் வளராத ஏழை நாடுகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு மேற்கண்ட சமூகச்சூழலே காரணம். இந்தியாவில் -கற்பு — விபச்சாரம் – இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்பாடு இரண்டு முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அதில் ஒன்று சமூக ரீதியாக இங்கு சுதந்திரக் காதல் சாத்தியமற்ற நிலை. சாதி, மதம் விட்டு காதலிப்பது இன்றும் கூட இங்கு போராட்டம்தான். எதிர்பாலினத்தவரை பார்ப்பது, சகஜமாக பழகுவது கூட இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மறையாக பாலியல் வக்கிரங்கள் வளருவதற்குரிய பொருத்தமான சமூக நிலைமையை பார்ப்பனியம் வழங்குகிறது.
மேலும் சாதி, மதம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் நிறைந்திருக்கும் நமது நாட்டில் ஒரு பெண் காதலிப்பது என்பது இத்தனை தடைகளை தாண்டித்தான் முடியுமென்பதால் உண்மையில் பெண்களுக்கு இங்கே தேர்வு செய்யும் உரிமை இல்லை. இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதும் கூட சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி தேர்வு செய்யும் சமரச நிலைமையே. இது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல காரணமாகிறது.
சொத்துடமை தோற்றுவித்திருக்கும் வாரிசுரிமைக் குடும்பம்தான் நம்நாட்டிலும் செல்வாக்கோடு செலுத்துகிறது. இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் பாலியல் பிரச்சினைகளில் ஒரு மனிதனின் தனித்துவ விருப்பமும், அதற்கு சமூகம் விதித்திருக்கும் தடைகளும் ஒரு முரண்பாட்டை வீரியத்துடன் உருவாக்குகின்றன. அந்த முரண்பாட்டின் பிரச்சினைகளோடுதான் நாமனைவரும் வாழ்கிறோம்.
நேர்மறையில் இந்த முரண்பாட்டினை சமூக விழுமியங்களோடு, சமூக நோக்கிலான வாழ்வோடு கடந்து செல்ல வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் முதலாளித்துவ அமைப்போ இந்த முரண்பாட்டை கேடாக பயன்படுத்தி வெறியை வளர்த்து காசு பார்க்கிறது. இதை ஒழிக்காமல் பாலியல் வன்முறைகளையும், நமது குழந்தைகளையும் பாதுகாக்க முடியாது. அதற்கு விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதும் பலனளிக்காது.
அடுத்து எந்த நிலையிலும் நாம் விபச்சாரத்தை ஏற்க இயலாது. ஏனெனில் மனிதனின் அகவய தேவையை பண்பாட்டு தரத்துடன் நிறைவேற்றும் பாலியலை ஒரு தொழிலாக செய்வது என்பது மனித சாரத்திற்கு எதிரானது. இன்று ஏழ்மை, மறுகாலனியாக்க நெருக்கடிகள், மேற்குலகின் முதலாளிகள் மற்றும் அவர்களது இராணுவத் துருப்புகளுக்காக நம்மைப் போன்ற ஏழை நாட்டு பெண்கள் வேறு வழியின்றி விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.
பணக்காரர்களின் வக்கிரங்களுக்கான மேட்டுக்குடி விபச்சாரத்தைத் தாண்டி உழைக்கும் வர்க்க ஆண்களும் கீழ்தட்டு விபச்சாரத்தை நாடி செல்கின்றனர். உதிரித் தொழில்களில் அதிக உடலுழைப்பை செலவழித்து இறுதியில் தமது மனித சாரத்தை பறி கொடுக்கும் இந்த மனிதர்கள் ஒரு இயந்திரம் போல தமது கேளிக்கைகளை நாடுமாறு அவர்களது பணிச்சூழல் கோருகிறது. புகை, போதை வஸ்து, பான்பராக், மது, விபச்சாரம் அனைத்தும் இவர்களை மேலும் கடினமாக உழைப்பதற்கு ஒரு வகையில் உதவுகிறது. இவர்கள் எவரும் வக்கிரங்களுக்காக விபச்சாரத்திற்கு செல்வதில்லை. இவர்களது கொடுமையான வாழ்க்கைச் சூழலை மாற்றி அவர்களும் மனைவி, குழந்தைகளோடு ஒரு இனிமையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்தால் இவர்கள் ஏன் விபச்சாரத்திற்கு போக வேண்டும்?
காதலில் காமம் இருக்கிறது. காமவெறியில் வெறும் விலங்குணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ காதலுடன் முத்தமிடுவது வேறு, காமவெறியுடன் மிருகம் போல கடிப்பது வேறு!
காதல் சாத்தியப்படும் போது காமவெறிக்கு தேவை இல்லை. ஆனால் காமவெறி இல்லாமல் முதலாளித்துவ பாலியல் நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாது.
ஆகவே பாலியல் வன்முறைகளை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை நாம் மாற்றுவதற்கு முன்வரவேண்டும். ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் ஒரு சமூக அமைப்பில் சுதந்திரக் காதல் பூத்துக் குலுங்கும். அங்கே மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். விலங்குகளுக்கு வேலை இல்லை.