இஸ்லாமும் அடிமைத்தனமும்
அபூ ஆஸியா
மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். நீங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவராகத் தோன்றியவர்களே. என்று மனிதர்களின் பரிபூரண சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட இஸ்லாம் அடிமைத்தனத்தைத் தனது சமூக வாழ்க்கையின் ஒர் அம்சமாகக் கொள்ளுமா?
ஆதத்தின் மக்களை நாம் உண்மையிலேயே கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறும் குர்ஆனே மனித சமுதாயத்தில் ஒரு கூட்டதார்களை வீட்டுத் தட்டு முட்டு சாதனங்களைப் போல் விற்கப்பட்டுக் கொண்டும், வாங்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்யுமா?
‘எவர்; எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ.. அவர்.. அவர்களுடைய பழுவான சுமைகளையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும் இறக்கிவிடுவார்’ (7:157) என்றே குர்ஆன் கூறுகிறது.
எனில் அடிமைகளை வைத்துக் கொள்ளவும், நிர்வகிக்கவும் சில விதிமுறைகளை ஏற்படுத்தியது என்றால் அது காலச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஒரு தற்காலிக விதிமுறையாகும்.
முந்தைய கால கட்டங்களில் போருக்குப் பின் வெற்றி பெற்ற நாட தோல்வியடைந்த நாடுகளின் போர் வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக உபயோகப்படுத்துவதையும், விற்கப்படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலை திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட கால கட்டத்தில் இறக்கியருளிய நாட்டிலும், அதன் சுற்றுச்சூழலிலும் இருந்து வந்தது. மேல் நாடுகளில் 18-ம் நூற்றாண்டின் கடைசி வரை கூட இருந்து வந்தது. அதுவும் யுத்தக் களத்தில தோல்வியடைந்தவர்களையல்ல. யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிரபராதிகளையாகும்.
அமெரிக்காவில் மேற்கிந்தியர் எனப்படும் கருப்பு இனமக்களை பிடித்து விற்பனை செய்யும் வழக்கம். இந்த 20-ம் நூற்றாண்டு வரை இருந்தது. மேனாட்டவர் ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் வாழ்ந்த கருப்பு இனமக்களை மிருகத்தனமாக வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பதற்காக கப்பலேற்ற உபயோகிக்கப்பட்ட கடற்கரைக்கு அடிமைக்கரை என்று பெயரே வைக்கப்பட்டது. இப்படி ஒரு நூற்றாண்டுக்குள் (1680-1786) பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்ட கருப்பர் தொகை இரண்டு கோடி என்று அவர்களின் அறிக்கையே கூறுகிறது.1790-ம் ஆண்டில் மட்டும் 75,000 அப்பாவி மக்கள் அடிமைகளாக்கப்பட்டு பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன்; காலக்கட்டம் வரை கூட அடிமைத்தனம் இருந்து வந்தது என்று அலெக்ஸ்ஹெய்ல் தன்னுடைய The Roots என்றும் நூலில் கூறுகிறார்.அடிமைகள் (சூத்திரர்) கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் அவர்கள் பிறப்பாலே இழிந்தவர்கள். பிராமணர், ஷத்திரியர், வைஷியர் இட்டப் பணியை ஏற்றுப் நடப்பதே அவர்கள் தலைவிதியாகையால் அதனை அவர்கள் எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது என்று சாதி இந்துக்கள் நம்பி நடத்தினர். அவர்களுக்கு கடவுள் இட்ட ஒரே வழி மரணத்திற்கு பின் தன் ஆன்மாக்கள் மறுபிறவியில் ஒரு தலைசிறந்த நிலையினை அடையலாம் என்ற நம்பிக்கையில் தன் இழிநிலையையும், தண்டனையையும் மிகப் பொறுமையுடன் சகித்து கொண்டு வாழ வேண்டாம் என்று போதிக்கப்பட்ட, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் மிக இழிந்த நிலைக்கு அவர்களை தாழ்தியதோடு நில்லாது, அடிமைகள் தம்மை இவ்இழிநிலைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கிய அநீதியான சமூக அமைப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் எண்ணத்தைக் கூட அகற்றி வைத்தனர்.
ரோமிலும், கிரேக்கத்திலும், பரசீகத்திலும், பண்டைய இந்தியாவிலும் அடிமைகளை எவ்வாறு எவ்வளவு குரூரமாக நடத்தினார்கள் என்பதை இன்று நினைத்தாலும் வேதனை பொங்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை எடுத்து போதித்த அரபு நாட்டின் நிலையோ அடிமைத்தனம் பேணுவதில் எந்நாட்டவர்களுக்கும் சளைத்தவர்களாக இருந்ததில்லை. அச்சூழ்நிலையில் மனித குலத்தின் அருட்கொடையாக வந்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த மார்க்கம் அடிமைத்தனத்தை நிறுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.
கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்தையுமே அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டு கடினமான வேலைகள் வாங்கியும், அவர்களுடைய சம்பாத்தியத்தை அனுபவிக்கவும் செய்திருந்த ஒரு சமூகமாயிருந்தது அரபு சமூகம். அத்தகைய சமூகத்தில் இஸ்லாம் அடிமைத்தனத்தை உடனே தடை செய்யாமல் படிப்படியாக குறைத்து முடிவு நிலைக்கு கொண்டு வந்தது. நேரடியாக தீடிரென்று அடிமைத்தனத்தை தடை செய்யுமாயின் அது சுய சமூகத்தில்; மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல், பிற சமூகத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதாலே அடிமைத்தனத்தை திடிரென்ற தடை செய்யாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்தது.
அடிமைகளைப் பேணுதல்
நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்த இஸ்லாம் அவர்களை எவ்வாறு பேண வேண்டும் என்று சில வரைமுறைகளை வகுத்துத் தந்தது.
‘தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினகளக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமையுடையோர்களாக இருப்பவர்களை நேசிப்பதில்லை (4:36)
‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்களே. எனவே யார் தனது ஆதிக்கத்தில் ஒரு சகோதரரைப் பெற்றிருக்கினறரோ அவர் தாம் உண்பது போலவும் உடுப்பது போலவும் தமது சகோதரருக்கும் உண்ணவும் உடுக்கவும் கொடுக்க வேண்டும். அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் செய்யுமாறு அவர்களைக் கேட்க வேண்டாம். அப்படியான எதையும் செய்யம் படி கேட்டால் அதில் அவர்களுக்கு உதவிபுரியுங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசித்துள்ளார். (புகாரி)
உங்களில் எவரும்’இவன் எனது அடிமை’, ‘இவள் எனது அடிமைப்பெண்’ என்று சொல்லக்கூடாது பதில் ‘இவர் எனது ஆள்’ என்றும் ‘இவள் எனது பணிப்பெண்’ என்றும் சொல்ல வேண்டும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்துள்ளார்கள். இன்னும்
‘யார் தனது அடிமையைக் கொல்கிறாரோ அவரை நாம் கொல்வோம். அவரது மூக்கை அங்கவீனப்படுத்துபவரின் மூக்கை நாம் அறுப்போம், அடிமைக்கு விதையடிப்பவரை அதற்குப்பதில் நாம் விதையடிக்கச் செய்வோம்’ என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
அடிமைகளுக்கு விதையடித்து பாலியல் உணர்வுகளை நசித்து மிருகங்களைப் போல் நடத்திவந்த காலச் சூழ்நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விவாக பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூட இஸ்லாம் கட்டளையிட்டது.
உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண் பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள் (24:32)
‘தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக விபச்சாரத்திற்கு (அவர்களை) நிர்பந்திக்காதீர்கள்’ (24:33) என்றும் கட்டளையிட்டது.
இன்னும் அடிமைகள் தங்கள் உணர்வுகளை தவறான வழிகளில் தணித்துக் கொள்ளும் வகையில் சென்றடாதிருக்க அவர்களின் உணர்வுகளை மதித்து விவாகம் செய்து வையுங்கள். அல்லது நீங்களே திருமணம் செய்து கொள்ளுங்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:25) என்றும் போதிக்கப்பட்டது.
இணைவைக்கும் ஒரு பெண் உங்களை கவரக்கூடியவர்களாக இருந்த போதிலும் அவளைவிட மூஃமினான ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவன் ஆவாள் (2:221) என்று கூறி அடிமைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு சம அந்தஸ்தையும் வழங்கியது.
அடிமைகளை கண்ணியத்தோடு பேணினாலும், அடிமைத்தனத்தை முற்றாக தடை செய்யாமல் போர்க்கைதிகளை மேலும் மேலும் அடிமைகளாக்கி வைத்துக் கொண்டது ஏனென்றால்: தூதரின் கால கட்டத்திலும் சரி பின் சில கால கட்டங்களிலும் சரி யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைத்துக் கொண்டதென்றால் அது எதிரி நாட்டார்கள் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூண்டால் பிடிபட்ட யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைப்பதும், சித்திரவதை செய்து கொல்வதுமான பழக்கம் பழங்காலந்தொட்டு நிலவி வந்தது.
UNIVERSAL HISTORY OF THE WORLD என்னும் வரலாற்று கலைக்களஞ்சியத்தில் (PAGE 2273) பின்வரும் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. ‘599-ம் ஆண்டில் ரோம சக்ரவர்த்தி ஆண்டில் மாரியஸ் போர்களில் தன் படைகள் கைப்பற்றிய இலட்சக்கணக்கான கைதிகளில் ஒரு சிலரைக் கூட விடுதலை செய்ய மறுத்துவிட்டான். பதிலாக அவர்கள் அனைவரையும் வாளுக்கு இறையாக்கினான். இவ்வாறு செய்யக் காரணம் அவர்களை வாழ விடுவதை விடக் கொன்றுவிடுவதே சிக்கனமானது என்ற அவன் கருதியதாகும்’.
யுத்தக் கைதிகளை கூட்டதோடு கொன்று குவிக்கும் பழக்கம் பிற்காலத்திலும் தாராளமாக இருந்தே வந்தது. தேசத் துரோகிகள் என்றும் எதிரிநாட்டு உளவாளிகள் என்றும், எதிரி நாட்டு கைதிகள் என்றும் கூறி கொன்று குவித்த சம்பவங்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலும், முசோலினியின் இத்தாலியிலும் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியாக இருந்த ரஷ்யாவிலும். அண்மையிலே கன்பூசியாவிலும் நடந்ததுண்டு. இத்தகைய கொடூரமான மிருகச் செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ செய்ததில்லை.
(மூஃமீன்களே! வலிந்து உங்களுடன் போரிடவரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுக்களை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடுபெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். (47:4) என்று இறைவன் கூறுகிறான்.
இவ் இறைவசனத்தில் எதிரிகளை போர்க்களத்தில் வைத்து நேருக்கு நேர் போரிடும் போது மட்டும் வெட்டுங்கள் என்று கட்டளையிடுகிறது. போருக்குப்பின் போர்வீரர்களை கைதிகளாக பிடித்திருந்தால் அவர்களுக்கு பதிலாக ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டோ அல்லது உபகாரமாகவோ விடுவித்து விடுங்கள் என்று கூறுகிறது.
நபித்தோழர்களில் பிரசித்திப்பெற்ற இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு குர்ஆன் வியாக்யானிகளான ஹஸன் பஸரி, ஹம்மாத் இப்னு அபீசுலைமான் போன்றோர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளை கொல்வது கூடாது என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள். அப்படியாயின் போர்க்கைதிகளை என்ன செய்ய வேண்டும். ஆயுட்காலம் முழுவதுமோ அல்லது சொற்ப காலமோ சிறையிலடைத்து வைக்க வேண்டும் என்றால் அத்தகைய சிறைச்சாலை வசதி ஏற்பாடுகள் எதுவும் அக்காலக்கட்டத்தில் இருந்ததில்லை. எனவே போர்க்கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்ட வழங்கிவரும் வழக்கத்தை கையாண்டது. அடிமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களை பராமரித்து வந்தனர். இவர்களே அடிமைகளாக கருதப்பட்டு வந்தனர். இத்தகைய அடிமைத்தனத்தை நிர்பந்தத்தின் அடிப்படையில் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
முஸ்லிம்களுக்கும், எதிரிகளுக்குமிடையில் பலபோர்கள் நடைபெற்றன. இப்போர்களில் கைதிகளாக்கப்பட்ட பல முஸ்லிம்கள் எதிரிகளால் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதோடு அக்காலத்தில் அடிமைகள் அனுபவித்த எல்லாவித இன்னல்களையும், அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. பெண்மணிகளின் கண்ணியம் மிக மோசமாக பங்கப்படுத்தப்பட்டது. தந்தையும் மகனும், நண்பர்களுமாக பல ஆண்கள் ஒரே பெண்ணை பகிர்ந்து கொண்டனர். கைப்பற்றப் பட்ட குழந்தைகள் வெறுக்கத்தக்க இழிவான அடிமை நிலையில் வளர்க்கப்பட்டனர். இத்தகைய நிலைமைகள் அக்கால வாழ்க்கையில் நிலைத்துவிட்டதால் இஸ்லாத்தின் கைக்குள் வந்த எல்லா கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது சாத்தியமாகவில்லை.
கைது செய்யப்பட்ட முஸ்லிம்களும் அவர்களின் உற்றார் உறவினர்களும், பகைவர்களால் அடிமைகளாக்கப்பட்டு மிகக் கொடிய சித்திரவதைக்குள்ளும் மானபங்கப்படுதத்பபட்டுமிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம்கள் கைது செய்தவர்களை விடுதலை செய்வது, அடிமைப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்கு உற்சாக மூட்டவதாகவும் அமைந்திருக்கும். எதிரி நாட்டு போர்க்கைதிகளை அடிமைப்படுத்தாமல் விட்டுவிட்டாலோ அவர்கள் திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். நாம் வெற்றி பெற்றால் அவர்களை அடிமைப்படுத்தி அனுபவிக்கவும், கொடுமைப் படுத்தவும் செய்யலாம். நாம் தோற்றுவிட்டாலோ நம்மை முஸ்லிம்கள் கைது செய்யவம் மாட்டார்கள் அடிமைப்படுததவும் மாட்டார்கள் என்ற கருதி திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். எனவே மேலும் மேலும் போரைத் தவிர்க்க இஸ்லாம் மேற்கொள்ளத்தக்கதாக இருந்த ஒரே சிறந்த வழி தனது கைதிகளையும் அடிமைகளாக நடத்துவதாகும்.
பகைவர்கள் தாம் யுத்தங்களிற் சிறைப்படுத்தியவர்களைத் தொடர்ந்து பிடிவாதமாக அடிமையாக்கி வர இஸ்லாம் மட்டும் தனது போர்க்கைதிகளை அடிமைகளாக்குவதைச் தன்னிச்சையாக ஒழித்துவிட இயலாது. எனவே இதற்கு மாற்றுவழி இல்லாதவரையும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யுத்தக் கைதிகளை அடிமைகளாகவன்றி வேறு விதத்தில் நடத்துவதற்கான ஓர் அடிப்படைப் பற்றி இணக்கம் காணும் வரை இஸ்லாம் அடிமைத்தனத்தை சகித்துக. கொள்ள வேண்டியதாயிற்று.
அரசு நடத்தும் போர் அல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை அடிமையாக்க முடியாது என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடிமை விடுதலை
இஸ்லாம் தன் வசமிருந்த எல்ல வழிவகைகளையும் பயன்படுத்தி அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்ததேயன்றி கொள்கையளவில் கூட அதனை அங்கீகரிக்கவில்லை.
‘பின்னர் ஓர் உதவியாக அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அல்லது யுத்தம் முடியும் வரை அவர்கள் பணங்கொடுத்து தம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள அனுமதியுங்கள் (47:4) என்று குர்ஆன் உபதேசிக்கிறது. இஸ்லாத்திற்காக நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட சில கைதிகளை முஸ்லிம்களை மீட்பதற்குப் பதிலாக விடுதலை செய்தனர். அத்துடன் வேறு சிலரை கருணையின் நிமித்தம் விடுதலை செய்தனர்.
அடிமைகளைப் படிப்படியாக ஒழிக்க திட்டமிட்ட இஸ்லாம் முதலாவதாக எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைகள் என்ற உணர்வை மக்களிடையே பரப்பி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இறைவனை வழிப்படுவதில் எள்ள ஏற்றத்தாழ்வின் மூலமமேயன்றி வேறு எதிலும் கணிக்க முடியாது. இஸ்லாமிய வாழ்க்கை முறையை நம்பி அதை ஏற்று வாழும் யாவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்தது. மக்கள் மனங்களில் அன்பு, ஆதரவு அரவணைப்பு, ஆறுதல் கூறல் போன்ற அருட்குணங்களை வளர்த்து அப்போதிருந்த அடிமைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை அன்போடும், பண்போடும் நடத்தச் செய்தது. அடிமைகளை விடுவித்தல் இதை அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான ஒரு செயலாக அறிமுகம் செய்து இறைநேசர் பலரும் தம்மிடமிருந்த அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது.
‘(நன்மை தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும் அவன் கணவாயைக் கடக்கவில்லை.
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும் (அது) ஒர் அடிமையை விடுவித்தல்…’ என்று குர்ஆன் (90:10,14) போதித்தது.
ஒரு சமயம் நபித்தோழர் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். ‘அடிமைகளை விடுவித்தலில் மிகச் சிறப்பானது எது? என்ற அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எஜமானனின் மிகவும் விலையுர்ந்த அடிமைகளை விடுவித்தலாகும்’ என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
பல்வேறு குற்றங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் தண்டனையாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்னும் சட்டத்தையும் கூறி அடிமைகளை விடுவிக்க ஏற்பாடுகளை செய்தது. உதாரணமாக
1. ஒரு முஸ்லிம் தன் மனைவியுடன் பாலுறவு கொள்வதன் மூலம் தன் நோன்பை முறிப்பாராயின் இச்செயலுக்கு தண்டனையாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
2. அவ்வாறே ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மனைவியுடன் பாலுறவு கொண்டாலும் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
3. ஒரு முஸ்லிம் தன் மனைவித் தன் தாய் போன்றிருக்கிறாள் என்ற ஒப்பிட்டுக் கூறினால் இது ஒரு தீயப் பேச்சாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்திற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் என்றது.
-இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவத அல்லாஹ்வின் அன்பைப் பெறுதலுக்குரிய மிகச் சிறந்ததோர் செயலாகும் என்றும். உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அவ்வடிமையை உரிமை விட்டவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற உதவும் என்றும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்ட ஆரம்ப கால முஸ்லிம்கள், தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல இயன்றளவு அடிமைகளை விலைகொடுத்து வாங்கியும் உரிமையிட்டடார்கள். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளதாகவும், அவர்களின் அருமை மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்ததாகவும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
அடிமைத்தளையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பொருளோ, பணமோ தேவைப்படும் அடிமைகளுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுத்தும் அவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது (பார்க்க குர்ஆன் 9:60)
இஸ்லாம் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை. அடிமைத்தளையை அறுத்தெரியவும் மனிதனுடைய சமத்துவத்தைக் காக்கவும் அக்கரை எடுத்துள்ளது.
ஆக்கம் எழுதியவர் – அபூ ஆஸியா