Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தலைமுறை இடைவெளி

Posted on December 20, 2012 by admin

தலைமுறை இடைவெளி

சிறுகதை…

விரல்

அரங்கத்தில் இடம் பிடிப்பதில் சலீமுக்குச் சிரமம் இருக்கவில்லை. அதிகமான இருக்கைகள் காலியாகவே இருந்தன. அது ஒரு அரபி மதரசாவின் பட்டமளிப்பு விழா. இருவர் ‘ஆலிம்’ பட்டமும் ஒருவர் ‘ஹாஃபிள்’ பட்டமும் பெறுகிறார்.

விழா ஏற்பாடு தூள் கிளப்பியது. மக்கள்தான் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மௌலானாக்களின் தலைகள் தெரிந்தன. ஓதுகிற பிள்ளைகள் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தார்கள். பட்டம் வாங்குவோரின் உறவினர்கள் ஏதோ கல்யாண வைபவத்திற்கு வந்தவர்கள்போல் புத்தாடைகள் சரசரக்க வேன்களில் வந்து இறங்கிக்கொண்டிருந்தனர்.

சலீம், சென்னை மருத்துவக் கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவன். எம்.பி.பி.எஸ்.ஸில் இடம் கிடைத்து குடும்பத்தில் முதலாவது டாக்டர் ஆகப்போகிறவன். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவன் ஆர்வத்தோடு விழாவில் நண்பனுடன் கலந்துகொண்டிருந்தான்.

ஏண்டா இந்த மீட்டிங்கிற்கெல்லாம் வந்து பொழுதை வீணாக்குகிறாய்? என்னையும் வற்புறுத்தி அழைத்து வந்து கழுத்தை அறுக்கிறாய்? -என்று நண்பன் கரீம் சடைந்துகொண்டான். துறை மாறும்போது ஓர் அந்நியம் தலைகாட்டுவது இயல்புதானே! அதுவே வெறுமையாகி வெறுப்பாகவும் மாறிவிடுவதுண்டு.

டேய் கரீம்! நான் ஒரு ஆலிம் குடும்பத்தின் வாரிசு என்பது உனக்குத் தெரியும்தானே! என் தாத்தா (தந்தையின் தந்தை) ஒரு பிரபலமான ஆலிம். அவரது உரையைக் கேட்க கூட்டம் காத்திருக்கும். சமுதாயத் தலைவர்கள் முதல் அரசியல் தலைவர்கள்வரை அவருக்குத் தொடர்பு இருந்தது. எங்கள் குடும்ப விசேஷங்களில் பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். சுயமரியாதையோடு வாழ்ந்தவர். எந்தப் பணக்காரரிடமும் கையேந்தாதவர். நல்ல எழுத்தும் பேச்சும் அவரைப் புகழின் உச்சிக்கே கொண்டுசென்றன. மார்க்கக் கல்வியின் சிறப்பு பற்றி எங்களுக்கு அடிக்கடி கூறுவார். மதரசாவில் கற்றது, பட்டம் வாங்கியது, மார்க்கப் பணியாற்றியது எனத் தாம் கடந்துவந்த பாதைகளையெல்லாம் நினைவுகூர்ந்து மகிழ்ந்துபோவார். அந்த ஈரம்தான் என்னை இங்கு ஈர்த்துவந்தது -என்றான் சலீம்.

மூதாதையரின் உயர்வு, அவர்களின் மறைவுக்குப் பிறகுதானே இளைய தலைமுறைக்குத் தெரிகிறது! சரிடா! தெரியாமல் கேட்டுவிட்டேன்; ஐ ஆம் சாரி என்றான் கரீம்.

பட்டமளிப்பு விழா தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. சிறப்புப் பேச்சாளர், மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்தும் உலமாக்களின் சேவைகள் குறித்தும் அழகாகப் பேசினார். ”இந்த ஊரில் பிறந்து எங்களூரில் 34 ஆண்டுகள் இமாமாகப் பணிபுரிந்த அந்த பெருந்தகையைப் பற்றி இங்கு நான் குறிப்பிடாவிட்டால் நன்றி கொன்றவனாகிவிடுவேன்; நான் ஆலிமானதற்குக் காரணமே அவர்தான்; இன்று உங்கள்முன் சிறப்புரையாளனாக நான் நிற்பதற்கு அவர் கொடுத்த ஊக்கம்தான் காரணம்” என்ற நீண்ட முகவுரையுடன் சலீமின் தாத்தாவின் பெயரைக் குறிப்பிட்டுப் புகழ்ந்து தள்ளினார்.

சலீம் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்; பெருமையுடன் நண்பன் கரீமைப் பார்த்தான். அன்றிரவு சலீமுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. தாத்தாவின் நினைவில் மூழ்கிப்போனான். தாத்தா மதரசாவில் ஓதிக்கொண்டிருந்த நாட்களில் லீவில் ஊருக்கு வந்திருக்கிறார். தாத்தாவின் அத்தாவை அவருடைய உறவுக்காரர் ஒருவர் சந்திக்க வந்தார். தாத்தாவைப் பார்த்துவிட்டு, ”இவன் என்ன செய்கிறான்?” என்று உறவுக்காரர் கேட்க, ”ஆலிமுக்குப் படித்துக்கொண்டிருக்கிறான்” என்று தாத்தாவின் அத்தா சொல்ல, உறவுக்காரரோ ”ஓதி முடித்துவிட்டு ஊர் ஊராகப் பிச்சையெடுக்கவா ஓதவைக்கிறாய்?” என்று கேட்டுவிட்டார்.

அதற்கு, ”அப்படிப்பட்டவர்களின் வழியில் செல்லாமல், கண்ணியமாக வாழும் ஆலிம்களின் வழியில் நம் பிள்ளை செல்ல வேண்டியதுதானே!” என்று தாத்தாவின் அத்தா சாந்தமாகப் பதிலளித்தார். இதைத் தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்திருந்த சலீம், தாத்தாவின் அத்தாவை நினைத்துப் பேருவகை கொண்டான்.

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த சலீமின் மனத்தில் விசித்திரமான கேள்வியொன்று எழுந்து அழுத்தியது. நியாயங்கள் உச்சத்தை எட்டும்போது திரைபோட்டு மறைக்க முடிவதில்லை.

இவ்வளவு உயர்வான கல்வியைக் கற்றுப் பெயரும் புகழும் பெற்று வாழ்ந்த தாத்தாவின் வயிற்றில் பிறந்தவர்தானே என் தந்தை. அவர், தாமும் ஆலிமாகாமல் ஒரு பொறியாளர் ஆனார்; என்னையும் மருத்துவராக்கப் பாடுபடுகிறார். இப்படியே போனால், நம் குடும்பத்தில் தாத்தாவின் கல்வி வழி அழிந்துபோய்விடாதா? இது தாத்தாவுக்குச் செய்யும் ஒருவகை துரோகமாகிவிடாதா?

விடிந்ததும் தந்தை ரஹீமிடம் கேட்டேவிட்டான் சலீம். ”இதுவெல்லாம் வற்புறுத்தி வருவதில்லை. அவரவர் விருப்பத்தின்பேரில் கற்க வேண்டும்” என்று சமாளித்தார் இன்ஜினியர் ரஹீம்.

அக்கறையுடன் வினவிய மகனை சமாதானப்படுத்த ஒரு பதிலை அவர் சொல்லிவிட்டாரே தவிர, நிஜம் அவர் மனத்தை அரிக்க, பின்னோக்கிச் சென்றன நினைவுகள்…

தந்தை இமாமாகப் பணியாற்றிய ஊரிலேயே அந்தப் பொறியியல் கல்லூரி இருந்தது. கல்லூரி தாளாளர் ஜியாவுத்தீன் ஹாஜியார் இமாமின் நெருங்கிய நண்பர்; ஒருவகையில் உறவினரும்கூட. எனவே, ரஹீமுக்கு குறைந்த கட்டணத்தில் கல்லூரியில் இடம் கிடைத்தது.

படித்து முடித்த கையோடு பெரிய கம்பெனி ஒன்றில் வேலையும் கிடைத்தது. கை நிறைய சம்பளம். சொந்த வீடு, கார் என்று இமாமின் குடும்ப நிலை உயர்ந்தது. ரஹீமுக்குப் பெண் பார்க்கத் தொடங்கினார் இமாம். உறவில் படித்த பெண்கள் இல்லை என்பதற்காகத் தரகர் மூலம் பெண் தேடினார்.

பெங்களூரில் ஒரு சம்பந்தம். பெண்ணின் தந்தையிடம் ரஹீமின் புகைப்படம், பயோடேட்டா, சம்பளம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு… என எல்லா தகவல்களையும் தரகர் அளித்தார். பெண் வீட்டாருக்குப் பையனை மிகவும் பிடித்துவிட்டது. இறுதியாக ஒரு விவரம் கேட்டார் பெண்ணின் தந்தை: பையனின் தகப்பனார் என்ன செய்கிறார்?

அவர் ஒரு ஆலிம்; இமாமாகப் பணியாற்றுகிறார். நீங்கள்கூடக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரபலமான பேச்சாளர். முற்போக்குச் சிந்தனையாளர். எழுத்தாளர்… என அடுக்கிக்கொண்டுபோனார் தரகர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் பெண்ணின் தந்தை சொன்னார்: பையனின் தந்தை ஆலிம்சாவா? அப்படியென்றால் பெண் கொடுக்க முடியாது. இடத்தைக் காலி செய்யுங்கள்!

தகவல் அறிந்த இமாமுக்கு மட்டுமன்றி, ரஹீமுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆலிம் என்றால் அவ்வளவு இளக்காரமா? இதனால்தான், அத்தா மார்க்கக் கல்விக்கு நம்மை வற்புறுத்தவில்லையோ! வசதிகள் ஆயிரம் இருந்தும் சமூக அந்தஸ்து இல்லாதிருந்தால் என்ன பயன்? என ரஹீம் எண்ணிக்கொண்டான்.

வேறொரு நடுத்தர குடும்பத்தில் ரஹீமுக்குத் திருமணமாகி, சலீமும் பிறந்தான். சலீம் பிளஸ் டூ முடித்தபின், அவனுடைய தாத்தா வழியில் இறக்கிவிட வேண்டும் என்ற ஆசை ரஹீமுக்குத் தலைதூக்கியது. ஒரு பெரிய மதரசாவின் விண்ணப்பப் படிவத்தையும் பெற்று பூர்த்தி செய்து வைத்தார் ரஹீம். அதற்கு முன்பே, மருத்துவம் படிக்கும் வாய்ப்பும் சலீமுக்கு வந்தது. அதற்கான கலந்தாய்வு படிவத்தையும் பெற்று பூர்த்தி செய்து வைத்திருந்தார் சலீம்.

சொந்த ஊரில் ஜமாஅத்தில் ஒரு பிரச்சினை என்று தகவல் வரவே ஊருக்குப் பயணமானார் இன்ஜினியர் ரஹீம். ஜமாஅத் நிர்வாகக் கமிட்டி கூடிப் பிரச்சினையை விவாதித்தது. விவாதத்தில் முக்கியப் பங்காற்றிய ரஹீம் முன்வைத்த தீர்வு அனைவராலும் ஏற்கப்பட்டு, சுமுகமாகப் பிரச்சினை முடித்துவைக்கப்பட்டது.

மறுநாள் ஜமாஅத் தலைவர் தேர்தல் இருப்பதாகவும் அதிலும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்த ரஹீம் ஊரிலேயே தங்கிவிட்டார். அடுத்த நாள் பள்ளிவாசலில் மக்கள் திரண்டனர். ஜமாஅத்தார்களில் சிலர் முத்தவல்லி பதவிக்கு ரஹீமின் பெயரை முன்மொழிந்தனர்.

இந்தப் பிரேரணையைப் பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்தனர். காரசாரமான வாக்குவாதம் பள்ளிவாசலில் எதிரொலித்தது. சாலையில் செல்வோர் வேடிக்கை பார்த்தனர். ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பும் நடந்தது.

திடீரென ஒலித்த கணீர் குரலொன்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆரவாரம் அடங்கி நிசப்தம் நிலவியது. கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் ஊரிலேயே பெரும் தனவந்தர். திடீர் பணக்காரர். அரசியல் செல்வாக்கு மிக்கவர். அடியாட்கள் நிறைந்தவர். இப்ராஹீம் ராவுத்தர்.

அவர் பேசினார்: ரஹீம் என்னதான் படித்துப் பட்டம் பெற்று, கார் – பங்களா என வசதியோடு வாழ்ந்தாலும் ஆலிம்சா பிள்ளைதானே! பள்ளிவாசல் பெயரைச் சொல்லி வசூல்செய்து, பொய்க் கணக்கு காட்டி சுருட்டமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

ஊரே மௌனமானது. ரஹீம் சென்னை திரும்பினார். மகன் சலீமுக்காகப் பூர்த்தி செய்துவைத்திருந்த மதரசாவின் விண்ணப்பப் படிவத்தைக் கிழித்துப் போட்டார்.

நன்றி: அல்ஹிந்த்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb