மலிவாகிவிட்டதா கிராமத்தவர்களின் உயிர்?
டாக்டர் கு. கணேசன்
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 75 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்கிறார்கள். அதேநேரம், கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிவது 26 சதவீத மருத்துவர்கள் மட்டுமே!
கிராமப்புற மக்களுக்குப் பயன்படும் என்று சொல்லி, கிராமப்புறங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில், மருத்துவர்களை உருவாக்குவதற்காக, இளநிலை அறிவியல்-சமூக சுகாதாரம் (பி.எஸ்.சி.,- கம்யூனிட்டி ஹெல்த்) எனும் பெயரில் மூன்று ஆண்டு மருத்துவப்படிப்பை, வரும் கல்வியாண்டிலிருந்து தொடங்க இருப்பதாக, மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
இந்தப் படிப்பைத் தொடங்குவதற்கு உண்டான காரணங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் இவ்வாறு தெரிவித்துள்ளது: “”எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்கள் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஆர்வம் காட்டுவதில்லை; இதனால், துணைச் சுகாதார மையங்களிலும், ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலைமை உள்ளது.
இதன் விளைவால், கிராமப்புற மக்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உண்டாகிறது. இந்த நிலையில், கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கேற்ற மருத்துவர்களை உருவாக்கும் வகையில் ஒரு தனிப்படிப்பு தேவைப்படுவதால், பி.எஸ்.சி.,- “கம்யூனிட்டி ஹெல்த்’ படிப்பைப் புதிதாக வடிவமைத்து இருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் அடிப்படை மருத்துவச் சிகிச்சைகள் குறித்து கற்பிக்கப்படும், அதைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவமனைகளில் ஆறு மாதங்கள் களப்பயிற்சி தரப்பட்டு, கிராமப்புற மருத்துவமனைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கே.கே. தல்வார் கூறியுள்ளார்.
இப்படிப்பைப் படித்தவர்கள், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று கண்டறிந்து முதலுதவி அளிப்பார்கள் அல்லது முதல்படி சிகிச்சையைத் தருவார்கள். பிரசவம் பார்ப்பதற்கு உதவுவார்கள். தேசியத் தடுப்பூசித் திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். தேவைப்பட்டால், அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனைக்கும் மருத்துவச் சிகிச்சைக்கும் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பார்கள்.
சுருக்கமாகக் கூறினால், கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்தப் படிப்பைப் படித்த மருத்துவர்களின் பணி இருக்கும்” என்று தெரிவித்துள்ளது, இந்திய மருத்துவக் கவுன்சில்.
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 75 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்கிறார்கள். அதேநேரம், கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிவது 26 சதவீத மருத்துவர்கள் மட்டுமே. அதிலும், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் பலவற்றில் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கு தங்கி பணிபுரிபவர்கள் மிகவும் குறைவு.
எவ்வளவோ முயற்சி எடுத்தும் கிராமங்களில் மருத்துவர்களைப் போதிய அளவில் பணியில் அமர்த்த முடியவில்லை என்பதால் இதுபோன்ற படிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, இந்திய கிராமப்புறங்களில் “போலி’ மருத்துவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால், கிராம மக்களின் ஆரோக்கியம் கெட்டுக்கிடக்கிறது. இப்போது அரசு கொண்டுவரும் இந்தப் புதிய மருத்துவப் படிப்பால், அரசாங்கத்தின் அனுமதியோடு புதிய போலி மருத்துவர்கள் கிராமங்களில் உலா வருவார்கள் என்பது உறுதி. அரைகுறை மருத்துவ அறிவுடன் கிராம மக்களின் ஆரோக்கியத்துடன் அவர்கள் விளையாடுவார்கள் என்பதும் நாம் காணப்போகின்ற நடைமுறை. அடுத்து, முதலுதவி சிகிச்சை எனும் பெயரில் முதலுக்கே மோசம் செய்துவிடுவார்கள் என்பதும் வெளிப்படை.
ஆரோக்கியம் என்பது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஒன்றுதான். அந்த ஆரோக்கியத்தைக் காப்பதற்கு ஒரே மாதிரியான சிகிச்சைதான் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதை முறைப்படி கொடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இதையெல்லாம் மறந்து அல்லது மறைத்து, கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குச் சிகிச்சை அளிக்க மூன்றாண்டு படித்த மருத்துவர்கள் என்றும், நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு ஐந்தரை ஆண்டு படித்த மருத்துவர்கள் என்றும் அரசாங்கமே வேறுபடுத்துவது பாரபட்சமான செயல்.
இளநிலை அறிவியல் – சமூக சுகாதாரம் படிப்பைப் படித்த மருத்துவர்கள் கிராமங்களில் தங்கிப் பணிபுரிவார்கள் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். சரி, இந்தப் படிப்பைப் படித்து முடித்த மருத்துவர்கள் கிராமப்புறங்களில்தான் தங்கிப் பணிபுரிவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவர்கள் கிராமப்புற அரசாங்க வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, நகர்ப்புறங்களில் சொந்தமாக கிளினிக் வைத்துத் தொழில் செய்தால், அதைத் தடுக்க சட்டவழிமுறைகள் உள்ளனவா? அப்படிச் சட்டத்தில் வழி இல்லையென்றால், இவர்கள் எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்களுக்குத் தொழில்ரீதியில் போட்டியாகத்தானே கருதப்படுவார்கள்? இதன் விளைவால் இந்தப் படிப்பு மருத்துவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் என்பதும் கவலை தரும் விஷயமல்லவா?
இப்படிப்பை முடித்தவர்கள், தங்கள் பெயருக்கு முன்னால், “டாக்டர்’ என்று போட்டுக்கொள்ளக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், அவ்வாறு போட்டுக்கொண்டால் யார் தடுக்கப் போகிறார்கள்?
உதாரணமாக, நம் நாட்டில் “பிசியோதெரபிஸ்டுகள்’ தங்கள் பெயருக்கு முன்னால் “டாக்டர்’ என்று போட்டுக்கொள்ளக் கூடாது என்று விதி இருந்தும், அவர்கள் எல்லோரும் போட்டுக் கொள்கிறார்கள். எந்த அரசாங்கம் இதைத் தடுத்தது?
இப்போது இளநிலை அறிவியல் – சமூக சுகாதாரம் தொடங்கினால் அடுத்து சில ஆண்டுகளில், மேல்நிலை அறிவியல் – சமூக சுகாதாரம் (எம்.எஸ்.சி. – கம்யூனிட்டி ஹெல்த்) என்று மேற்படிப்பு தொடங்கப்படுமா? அப்படித் தொடங்கினால், அவர்கள் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைப் பணிகளில் அமர்த்தப்படுவார்களா?
கிராமப்புற மருத்துவமனைகள் அனைத்திலும் இவர்களுக்கான பணி இடங்கள் நிரப்பப்பட்ட பின்பு இந்தப் படிப்பை நிறுத்திவிடுவார்களா அல்லது நகர அரசு மருத்துவமனைகளில் பணியில் அமர்த்தப்படுவார்களா?
கிராமப்புற மக்களுக்குத்தான் நோய்கள் அதிகம். அவற்றை ஆரம்பத்திலேயே சரியாகக் கணித்து, முறையான சிகிச்சை தர வேண்டியது முக்கியம். அப்போதுதான் மற்றவர்களுக்கு அந்த நோய்கள் பரவாமல் தடுக்க முடியும்.
அதேநேரத்தில், கிராமத்தில் பரவும் நோய்களைச் சரியாகக் கண்டுபிடித்து தடுப்பது என்பது ஐந்தரை ஆண்டுகள் படித்த மருத்துவர்களுக்கே பெரிய சவாலாக இருக்கும்போது, (சமீபத்திய உதாரணம் – டெங்கு காய்ச்சல்) மூன்றாண்டுகள் படித்த மருத்துவர்களால் இதைக் கண்டிப்பாகச் செய்ய முடியாது. ஆகவே, இப்படிப்பு படித்தவர்களை ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்துவது என்பது கிராமப்புற மக்களுக்குப் பாதகமாகவே அமையும்.
ஒன்றைச் சிந்திக்க வேண்டும். கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியாற்றத் தயங்குவதற்கு முக்கிய காரணம், அங்கு சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதுதான். நிறைய ஆரம்பச் சுகாதார நிலையங்களில், “வெயில் அடித்தால் காய வேண்டும், மழை பெய்தால் நனைய வேண்டும்’ என்பது போலவே கட்டடங்கள் இருக்கும். கழிப்பறை இருக்காது. அப்படியே இருந்தாலும் சுத்தமாக இருக்காது. சுகாதாரம் இருக்காது. போதிய தண்ணீர் வசதி இருக்காது. மருத்துவருக்கான ஓய்விடமும் தங்குமிடமும் பாதுகாப்பாக இருக்காது.
விரும்பிவரும் மருத்துவர்களைக்கூட எளிதில் சோர்வடையச் செய்யும் விதமாக, நிறைய ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருந்து இருப்பதில்லை. மருந்து இருந்தால், அதை விநியோகிக்க ஊழியர் இருப்பதில்லை. அறுவைச் சிகிச்சைக் கருவிகளும் நோய்க்கணிப்புக்கான விலை உயர்ந்த கருவிகளும் இருக்கும். ஆனால், அவை இயங்கும் நிலையில் இருக்காது அல்லது அவற்றை இயக்குவதற்குரிய நிபுணர்களும் உதவியாளர்களும் போதிய அளவில் இருக்கமாட்டார்கள். இச்சூழ்நிலையில் பணியாற்ற மருத்துவர்கள் என்ன, எந்த ஒரு பணியாளரும் தயங்குவது நியாயம்தானே?
எனவே, கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்கள் விரும்பிப் பணி செய்ய வேண்டுமானால், மத்திய மற்றும் மாநிலச் சுகாதாரத்துறையினர் கிராமப்புற மருத்துவப்பணிக்கான அடிப்படைக் கட்டமைப்பை முதலில் சரி செய்ய வேண்டும். அங்கு மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் போன்றோர் சரியான எண்ணிக்கையில் பணி அமர்த்தப்பட வேண்டும். மருத்துவர்கள் தங்குமிடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாகன வசதி, ஆம்புலன்ஸ் வசதி, மின்சாரம் இல்லாதபோது ஜெனரேட்டர் வசதி எல்லாம் செய்துதர வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இதற்கேற்ப சரியான திட்டங்களை வகுத்து, போதுமான நிதியை ஒதுக்கி, அது சரியானமுறையில் செலவிடப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
இன்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் நகர்ப்புற மாணவர்களாக இருக்கிறார்கள். இலவசமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைவிட பல லட்சம் நன்கொடை கொடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகமாகி வருகிறார்கள். இந்த இளம் மருத்துவர்கள் கிராமப்புற மக்களின் சமூகப் பொருளாதார நிலைகளை அவ்வளவாகத் தெரிந்து வைத்திருப்பதில்லை.
கிராமப்புற மக்கள் தங்கள் நோய்களுக்குரிய சிகிச்சைகளைத் தகுந்த நேரத்தில், தேவையான அளவுக்குப் பெறமுடியாமல் அவதிப்படும் அவலத்தையும், அவர்கள் ஆரோக்கியம் முதல் நிலையிலேயே காக்கப்படுவதற்கு உதவுகின்ற கிராமப்புற மருத்துவச் சேவையின் அவசியத்தையும், மருத்துவம் பயிலும் காலத்திலேயே இளம் மருத்துவர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக, இளநிலை மருத்துவக் கல்வியில், கிராமப்புற மருத்துவச் சேவை குறித்து ஒரு தனிப்பாடத்தைத் துணைப்பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ். படித்து முடித்த கையோடு, குறைந்தது இரண்டு ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்க வேண்டும். அப்போது, பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வுபெற்ற மருத்துவர்களையும் அங்கு பணியில் அமர்த்தி, அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்றச் செய்யலாம். இந்த ஏற்பாட்டின் மூலம், இளம் மருத்துவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் என்பதால், அவர்களாகவே விரும்பி கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வருவார்கள்.
அடுத்து, இன்றைக்கு மருத்துவர்களின் ஆரம்ப மாத ஊதியம் பதினைந்தாயிரம் ரூபாய்தான். இது இக்காலகட்டத்தில் மிகவும் குறைவு என்பதை அரசு உணர்ந்து, அதிகப்படியான ஊதியத்தைப் பணி ஊக்கத்தொகையாக அளிக்க முன்வர வேண்டும். கிராமப்புறங்களில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்களுக்குக் கூடுதலாக 50 சதவீதம் ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்தது, வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலைப்பட்டப் படிப்பில் 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்து தருவது, பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது, மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் குறிப்பட்ட ஆண்டுகளுக்குக் கிராமங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று விதிமுறைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களைத் தத்தெடுத்து, ஆண்டு முழுவதும் மருத்துவ மாணவர்களைப் பயிற்சிக் காலத்திலேயே கிராமப்புறங்களில் சேவை செய்யப் பழக்கலாம். இதன் மூலம் கிராம மக்களுக்குத் தொடர்ந்து மருத்துவச் சேவை கிடைக்கின்ற வாய்ப்பு பெருகும்.
இவ்வாறு கிராமங்களில் மருத்துவர்களே விரும்பிப் பணி செய்வதற்குரிய வசதி வாய்ப்புகளைப் பெருக்கி, நகர்ப்புற மக்களுக்குக் கிடைப்பதைப் போலவே தரமான மருத்துவச் சிகிச்சை கிராமப்புற மக்களுக்கும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
அதைவிடுத்து, மூன்றாண்டு மருத்துவப் படிப்பு, கிராமப்புறத்திற்கான மருத்துவர்கள் என்றெல்லாம் சிந்திப்பது ஆபத்துக்கு வழிகோலும். கிராமப்புறத்தில் வளரும் மக்களின் உயிர் அவ்வளவு மலிவாகிவிட்டதா என்ன?
நன்றி: தினமணி