மனைவிமார்களினால் ஏற்படும் பிரச்சனைகள்:
படிப்பு
இன்று பொதுவாக சமுதாயத்தில் பெண்கள் படிப்பில் ஆர்வம் காட்டி நன்றாக படித்து பட்டம்கள் பெற்று வெளிவருகிறார்கள். என்னதான் படித்தாலும் அடுப்படியில் அடுப்பூத வேண்டியவள்தான் என்ற நிலைமாறி அவர்களும் குடும்ப சூழ்நிலைகளை கவனித்து வெளியில் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்கள். மார்க்கம் அனுமதித்த முறையில் பெண்கள் வேலைக்குச் செல்வதை பெற்றோர்களும் கணவன்மார்களும் அனுமதிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இளைஞர்கள் பலர் அதிகபட்சமாக பத்தாவது அல்லது பனிரெண்டாவது படித்து தேறுவதே கஷ்டமாக உள்ளது. குறைந்த சதவீத சமுதாய மாணவர்களே மேற்படிப்பை முடிக்கின்றனர். படிப்பை விட வியாபாரம் செய்யவேண்டும் என்ற சிந்தனைதான் இன்று இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகின்றது. கல்வி நிலையங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக சதவீதம் படித்து வெளியேறி வருகிறார்கள் என்பதை இக்காலங்களில் காணமுடிகிறது.
இதனால் படிப்பிற்கேற்ற படித்த மாப்பிள்ளை அமைவது சிரமாக இருக்கிறது. அப்படி அமைந்து விட்டாலும் அல்லது அமையாத பட்ஷத்தில் சமபடிப்பை படித்தவனுக்கோ அல்லது படிப்பு குறைந்தவனுக்கோ கல்யாணம் செய்து வைக்கப்படும்பொழுது நானும் கணவனுக்கு நிகராக படித்தவள் அல்லது என் கணவனை விட நான் அதிகம் படித்தவள் என்ற EGO-ஈகோ பிரச்சனை பல பெண்களிடம் இயற்கையாகவே ஏற்பட்டுவிடுகிறது. எல்லா பெண்களும் இப்படி அல்ல என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவும். இந்த ஒருவகையான ஈகோ-EGO கர்வத்தாலும் குடும்பங்களில் பிரச்சனைகள் உருவகுவதற்கு காரணமாக அமைகிறது. ஆனால் பெரும்பாலான ஆண்களிடம் இந்த படிப்பு சம்பந்தமான தன்னைவிட மனைவி படிக்காதவள் என்ற ஈகோ பிரச்சனை ஏற்படுவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
வசதியான வீடு
மனைவி கணவனின் வீட்டரைக் காட்டிலும் வசதியுள்ளவளாய் வந்துவிட்டால் போதும், சொல்வதற்கொல்லாம் கோயில்மாடு போல் தலையாட்டிவிட்டால் பிரச்சனையில்லை கணவன் திருப்பி ஏதாவது கேட்டுவிட்டால் போதும், (உங்கல இத்தன லட்சம் கொடுத்து எங்க அத்தா அம்மா வாங்கி தந்திருக்காங்க என மனதில் நினைத்துக்கொண்டு) போயி ஒங்க வேலய பாருங்க எல்லாங் எங்களுக்கு தெரியும் என வாயடைக்க வைத்து விடுவார்கள். அவர்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கிச் செல்வதை பல வீடுகளில் காணுகின்றோம்.
வீம்பு-பிடிவாதம்
வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்ற பழமொழி வழக்கில் உள்ளதுபோல், பெண்களுக்கே உண்டான சில குணங்களில் பிடிவாத குணமும் ஒன்று அவர்கள் ஒரு விசயத்தை கூறிவிட்டால் அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அந்த விசயத்தை செய்துமுடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதை விட்டு பின்வாங்க மாட்டார்கள். இந்த பிடிவாத குணத்தால் வீடுகளில் பல பிரச்சனைகள் தோன்ற காரணமாக அமைந்து விடுகின்றன. டிவி சீரியல் பார்ப்பது முதற்கொண்டு நோய்க்கு மருந்து சாப்பிடுவது போன்ற பல விசயங்களில் அவர்களின் பிடிவாதம் பிடிவாதமாகவே இருக்கிறது.
இதுபோல பல செயல்களால் பெண்களின் மூலமாக குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆக இருபாலரிடத்திலும் இதுபோன்ற பல பிரச்சனைகள் குடும்ப சூழல்களில் ஏற்படுகின்றன.
தீர்வுதான் என்ன?
திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலம் தீர்வு
(கணவன், மனைவியாகிய) இருவருக்கிடையில் பிளவு உண்டாவதை நீங்கள் அஞ்சினீர்களானால், அவனுடைய குடும்பத்தாரிலிருந்து நீதியாள(ரான மத்தியஸதர் ஒருவ)ரையும், அவளுடைய குடும்பத்தாரிலிருந்து நீதியாள(ரான மத்தியஸ்தர் ஒருவரை)யும் (அவ்விருவரிடமும்) அனுப்புங்கள்; (நீதியாளர்களாகிய) அவ்விருவரும் (முயன்று, கணவன் மனைவிக்கிடையே) சமாதானத்தை (உண்டாக்க) நாடினால், அல்லாஹ் அவ்விருவருக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி விடுவான் – நிச்சயமாக அல்லாஹ் முற்றும் அறிந்தவனாகவும், நன்கு உணர்ந்தவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் – (ஸூரத்துன்னிஸா:35)
குடும்பத்தில் இடியப்ப சிக்கலாய் ஆகிவிட்ட பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு இதுபோன்ற திருக்குர்ஆனின் பல ஆயத்துக்களும் ஹதீஸ்களும் நமக்கு தீர்வை தருகின்றன. வல்ல அல்லாஹ் ஏவிய முறையில் நாம் நடந்துகொண்டால் நிச்சயமாக அதில் அழகிய தீர்வு நமக்கு கிடைத்துவிடும்.
அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்- (4:19)
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (2:187)
கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு (2:228)
”உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்” என்பது நபிமொழி.
“நீங்கள் நிறைவேற்ற மிகவும் கடமைப்பட்ட நிபந்தனைகள் திருமணத்தின் மூலம் நீங்கள் சுமந்துகொண்ட பொறுப்புக்கள்தான்” (அறிவிப்பவர்: உக்பா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி)
திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் திருமண பந்தம் முதல் வாழ்க்கையின் இறுதிநாட்கள் வரை கணவன் மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பல விளக்கங்களில் காணமுடிகின்றது. குடும்பத்தில் பிரச்சனைகள் வரும்பொழுது திருக்குர்ஆன் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி நடந்து கொண்டேமேயானால் குடும்பவாழ்க்கை இனிமையாக கழியும்.
ஏற்றத்தாழ்வு
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும். அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் என்பது போல், ஒரு குடும்பத்தை நல்லமுறையில் நடத்திச் செல்ல கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள்ள ஏற்றத் தாழ்வுகளை களைந்து சீராக குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
அன்பு செலுத்துதல்
எப்பொழுது திருமண பந்தம் ஆரம்பித்தோ அதிலிருந்து இந்த அன்பு செலுத்துதல் ஆரம்பித்து விடுகிறது. கணவன் மனைவிக்குள் நெருக்கமான அன்பு இருந்தால் அவர்களுக்குள் பிரச்சனைகள் தலைதூக்காது. இந்த அன்பு திருமணம் ஆன புதிதில் இயல்பாகவே இருவரிடமும் அதிகம் காணப்படும். நாட்கள் செல்லச் செல்ல இந்த அன்பு குறைய ஆரம்பித்துவிடுகிறது. வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவிக்குள்ள அன்பை குறையாமல் தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும்.
ஸலாம் சொல்லிப் பழக வேண்டும்
கணவன் மனைவிக்குள் ஸலாத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போதும் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்பொழுதும் சொந்தவீடாக இருந்தாலும் ஸலாத்தை செல்லிக் கொள்ளவேண்டும். இப்படி சொல்வதால் வீட்டில்உள்ளவர்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் அதிகம் அதிகம் உண்டாகுகின்றது. ஆனால் நாம் நமதுவீடுதானே என்று வீட்டில் நுழையும்போது அல்லது வீட்டைவிட்டு கிளம்புபோது ஸலாம் கூறிச் செல்லவதில்லை. இந்த நடைமுறையை மாற்றி வீட்டாருக்கு ஸலாம் சொல்லிப் பழகவேண்டும். மேலும் கணவன்மார்கள் வீட்டினுள் நுழையும் போது இஞ்சி தின்ட குரங்கைபோல் முகத்தை வைத்துக்கொண்டு நுழையாமல் சிரித்தமுகத்துடன் ஸலாம் சொல்லி நுழைய வேண்டும். வீட்டில் உள்ள மனைவிமார்கள் இராஜச்சி போல முகத்தை வைத்துக்கொள்ளாமல் இன்முகத்துடன் புன்முறுவல் பூத்து ஸலாத்திற்கு பதில் சொல்லவேண்டும்.
அதுபோல் வெளியிலிருந்து ஏதாவது தேவையைக்காக மனைவியிடத்தில் போனில் பேசும்பொழுது நாம் முதலில் ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிப்பது இல்லை. எந்த தேவையோ அதை சொல்லிவிடுகின்றோம். போனில் யார் பேசினாலும் முதலில் ஸலாத்தைக் கொண்டு ஆரம்பித்து பிறகு விசயங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும். இதனால் நமது உள்ளங்களிலுள்ள சில கசடுகள் விலகிவிடுவதை நாம் அனுபவத்தில் காணலாம்.
பொதுவாக தமிழ்பேசும் முஸ்லிம் மக்களிடத்தில் ஸலாம் சொல்லும் வழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இது களையப்பட வேண்டும். ஸலாத்தை பரப்ப வேண்டும்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
கணவன் மனைவிக்குள் இந்த விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வந்துவிட்டால், குடும்பத்தில் பிரச்சனை என்பதே வராது. முதலில் யாரு இந்த மனப்பான்மைக்கு வருவது என்பதில் தான் சிக்கல். சாப்பாட்டில் உப்பு கூடிவிட்டது என்றால், ரகளை செய்யாமல் தினமும் நல்ல சுவையாகத்தானே சமைத்துத் தருகிறாள் இன்றைக்கு உடம்புக்கு என்ன பிரச்சனையோ என அமைதியான முறையில் மனைவியிடம் நலம் விசாரிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ஆமாம் உனக்கு இதே வேளயா போச்சு, டீவி சிரியலே கவனமா இருந்தா இப்படித்தான் ஒன்னுக்கு இரண்டுதடவை உப்பப்போடுவே என கடிக்கக்கூடாது. அதுபோல் ஆமா தெனமும் நல்லாத்தானே வயித்துல கொட்டிகிறீங்க ஒருநாளைக்கு உப்பு கூடிடிச்சுன்னா பொருத்துக்க மாட்டியலாக்கும் என்றேல்லாம் பேசாமல் ஆமாங்க புள்ளைக்கு சாப்பாடு ரெடிபண்ணனுங்கிற நினைப்பேல இருந்தவ உப்ப கூடபோட்டுட்டேன் போல மன்னிச்சுக்கங்க.. என சொல்லிவிட்டால் பிரச்சனை தீர்ந்தது. இதுபோல் அனைத்து விசயங்களிலும் கணவன்மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உலகத்தில் மேஜிக் வார்த்தைகள் என்று கூறப்படுகின்ற மூன்று வார்த்தைகளை நம்முடைய வாழ்க்கையில் அது வீடாக இருந்தாலும் வெளிவேலையாக இருந்தாலும் உபயோகிக்க பழகிக்கொண்டால் பல பிரச்சனைகள் வீரியமாக தலைதூக்குவது தடைபட்டுப்போகும்.
PLEASE-தயவுசெய்து, SORRY-மன்னித்துக்கொள்ளுங்கள், THANK YOU-மிக்க நன்றி. ஆனால் இந்த வார்த்தைகளை நாம் உபயோகிப்பதற்கு மனம்தான் ஒருவகையான ஈகோ பிரச்சனையால் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது.
நேரம் ஒதுக்குதல்
குறைந்தபட்ஷம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடும்ப விசயங்களை பகிர்ந்துகொள்வதற்கு கணவன் மனைவியும் தனிமையில் அரைமணி நேரமாவது ஒதுக்கி பேசவேண்டும். இந்த முறை பல வீடுகளில் நடைமுறையில் இல்லை. வெளிவேளைகளை முடித்துவிட்டு களைப்பாக வீட்டிற்கு வரும் கணவன் சாப்பிடுகின்றான், படுக்கைக்கு சென்று, தேவையை நிறைவேற்றிவிட்டு தூங்கிவிடுகின்றான். இது குடும்ப வாழ்க்கைக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. பிள்ளைகள் என்ன செய்தார்கள், அவர்களுடைய படிப்பு விசயம் என்ன அன்றைய தினம் எப்படி கழிந்தது மற்றும் உடல்நலம் சம்பந்தமான விசயங்களை பகிர்ந்துகொள்வதற்கு கணவன் மனைவியும் தனிமையில் பேசி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்வது மிகச் சிறந்ததாகும்.
சிறுவயது விதவைகள்
கணவனின் இறப்பு அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் சிறுவயதில் விதவையானவர்கள் அல்லது விவாகரத்து பெற்றவர்கள் தாமதிக்காமல் இத்தா முடிந்துடன் மறுமணம் செய்து கொள்வது இக்காலத்தின் கட்டாயமாகும். நான் அவருடன் வாழ்ந்த வாழ்க்கை போதும் என பலர் பிடிவாதம் பிடித்து மறுமணத்தை தள்ளிப்போடுகிறார்கள் அல்லது மறுமணம் செய்துகொள்வதில்லை. மேலும் சமுதாயம் தன்னை தப்பாக நினைக்கும் என்ற சிந்தனையும் அவர்களை மறுமணம் செய்ய தடுக்கிறது.. இந்த நிலை சமுதாயத்தில் மாற வேண்டும். அவர்களும் மறுமணம் செய்துகொண்டு உலகில் நல்வாழ்க்கை வாழ வேண்டும்.
தாம்பத்திய உறவு
”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.” 2:187)
குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் சீரான தாம்பத்திய உறவு மிகவும் முக்கியமானதாகும். மாறிவரும் இயந்திரவாழ்க்கையில் தாம்பத்திய உறவு சரிவர நிறைவேறுவதில்லை என்பதே பல ஆய்வரிக்கைகளின் நிலை. அதிநவீன உலக வாழ்க்கை சாதனங்களால் ஆண்களில் அதிகமான நபர்கள் ஆண்மையில் குறைவுள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்கிறது பல புதிய ஆய்வுகள். பெண்களுக்கு டைராயிடு போன்ற நோய்களால் குழந்தை பிறப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது
நவீன உலகில் ஆண்மை குறையை நீக்குவதற்கும், பெண்களுக்குண்டான நோய்களை சரிசெய்வதற்கும் அதிகமான மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. பிரச்சனை என்னவென்றால், ஆண்மகனுக்கு ஆண்மைகுறைவு இருக்கிறது என்றால் அதனை அவர் வெளிகாட்டிக்கொள்வதில்லை அவனும் அவன் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அதனை மறைக்கவே விரும்புகின்றனர். மருத்துவ சிகிச்சை செய்வதற்கு இலேசாக இணங்குவதில்லை. இது முற்றிலும் தவறாகும். பல வீடுகளில் விவாகரத்துகள் இதன்காரணமாகவும் ஏற்படுகின்றன. இதுபோன்ற கணவன் மனைவிக்குள் மருத்துவ சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் கூச்சப்படாமல் இருவரும் சேர்ந்து மருத்துவ ஆலோசனை-
MEDICAL COUNSELLING செய்து கொண்டு அவர்கள் தரும் ஆலோசனைப்படி செயல்படுவது கட்டாயமாகும். இப்படிச் செய்தால் கணவன் மனைவிக்குள் நிலவும் தாம்பத்திய பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் குழந்தைச் செல்வங்கள் அல்லாஹ்வின் உதவிகொண்டு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இல்லறவாழ்க்கை சம்பந்தமாக பல இஸ்லாமிய புத்தகங்களும் உள்ளன. அவைகளை படித்தும் கணவன் மனைவிக்குள் நடந்து கொள்ளவேண்டியங்களை தெரிந்துகொள்ளலாம்.
முடிவுரை
எனக்கு தெரிந்த கருத்துக்களை வைத்து இக்கட்டுரையை நிறைவுசெய்துள்ளேன்.
கணவன் மனைவிக்குள் குடும்ப வாழ்க்கை சீராக அமைந்துவிட்டால், உலகில் நமது வீடே நமக்கு சொர்க்கமாக இருக்கும். நமது மனைவியே நமக்கு உலக அழகியாய் இருப்பாள் என்பது திண்ணம். குடும்பத்தாருக்காக திருக்குர்ஆனில் கூறப்பட்ட துஆக்களை அதிகம் அதிகம் ஓதி வல்ல அல்லாஹ்விடம் குடும்பநலனுக்காக பிராத்திக்கவேண்டும். வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்
என் இரட்சகா என்னையும் என் சந்ததியினர்களையும் தொழுகையை நிலைநாட்டுபவர்களாக நீ ஆக்கி விடுவாயாக. எங்கள் இரட்கனே எங்களின் பிராத்தனையை ஏற்றுக்கொள்வாயாக எங்கள் இரட்சகனே விசாரணை நாளன்று என்னையும் என் பொற்றோர்களையும் ஈமான் கொண்டவர்களையும் மன்னித்து விடுவாயாக. ஆமீன்
என் இரட்சகனே இளமையில் என்னைப் போற்றி அன்பு பாரட்டி என் பெற்றோர்கள் வளர்த்தது போல் அவர்கள் மீதும் நீ அருள்புரிவாயாக. ஆமீன்
எங்கள் இரட்சகா எங்கள் மனைவி மக்களை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக்கித் தந்தருள்வாயாக மேலும் இறையச்சமுள்ளோருக்கு எங்களை வழிகாட்டியாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன்
இவண்
க. சே. செய்யது அஹமது கனி
சவுதி அரேபியா
source: www.ilayangudi.org