இந்தி எதிர்ப்பு – ஒரு வரலாற்றுப் பார்வை!
[ இந்தியை வெறுக்கிறோம் கூறி தமிழை தமிழரிடமிருந்து அன்னியப்படுத்தி, ஆங்கிலத்தை மேலேற்றி அனைத்துக்கும் துணைபோன இரண்டு திராவிடக் கட்சிகளின் ஐம்பது வருடச் சாதனை.
‘இந்தி ஒரு போதும் இல்லை; ஆங்கிலம் எப்போதும்’ முழக்கத்தை முன் வைத்தது வரலாற்றுப் பிழை. இந்தி எதிர்ப்பு தி.மு.க., அ.தி.மு.க பிழைப்பு வாதம். ஆட்சி மொழியிடத்தை இந்தி பிடித்துக் கொண்டது. ஆங்கிலம் தமிழர் வாழ்வின் அனைத்து இடத்தையும் கபளிகரம் செய்து கொண்டது.
இந்தி எதிர்ப்பு காட்டியோரின் வாரிசுகள் இன்று சிபிஎஸ் பள்ளிக்கூடங்கள். மெட்ரிக் பள்ளிகளில் படிக்கின்றனர். 12ஆம் வகுப்பு வரை தமிழ் இல்லாமல் கல்லூரி செல்கின்றனர். பிள்ளைகள் மொழியும் ஆங்கிலம், தமிழ் கேட்டு அவர்கள் பெருமை கொள்ளலாம். தமிழுக்காகவே வாழ்வது போன்று நாடகமாடும் தலைவர்களது வாரிசுகள் பெயர்கள் வடமொழியிலிருக்கின்றன.
தமிழும் முழுமையாகத் தெரியவில்லை. ஆங்கிலத்திலும் ஆளுமை இல்லை. இந்தியும் வாந்தி வருகிறது. உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்யவும் தயாரில்லை. ஆளில்லை. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. வடக்கத்தியர் உடல் உழைப்பு தர வந்து குவிகின்றனர்.]
இந்தி எதிர்ப்பு – ஒரு வரலாற்றுப் பார்வை!
இன்று பெரும்பான்மை தமிழினத்துக்கு தன்மொழி மீது தாள முடியா வெறுப்பு. கீழ்த்தரமான பார்வை. சொற்களில் வெளிப்படுவதில்லை. செயல் வடிவாக்கமாகவிருக்கிறது.
தமிழைக் காக்கிறோம். இந்தியை வெறுக்கிறோம் கூறி தமிழை தமிழரிடமிருந்து அன்னியப்படுத்தி, ஆங்கிலத்தை மேலேற்றி அனைத்துக்கும் துணைபோன இரண்டு திராவிடக் கட்சிகளின் ஐம்பது வருடச் சாதனை.
‘இந்தி ஒரு போதும் இல்லை; ஆங்கிலம் எப்போதும்’ முழக்கத்தை முன் வைத்தது வரலாற்றுப் பிழை. இந்தி எதிர்ப்பு தி.மு.க., அ.தி.மு.க பிழைப்பு வாதம். ஆட்சி மொழியிடத்தை இந்தி பிடித்துக் கொண்டது. ஆங்கிலம் தமிழர் வாழ்வின் அனைத்து இடத்தையும் கபளிகரம் செய்து கொண்டது. பதிவு செய்திருக்கிறார் சிந்தனையாளர் பா. செயப்பிரகாசம்.
500 அகவை கொண்ட இந்தியை தமிழகத்திலிருந்து விரட்ட 75 வருடம் போராடினர். சென்னை மாகாண முதல்வராகவிருந்த இராஜாஜி அவர்கள் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என்றறிவித்தார். அரசு உத்தரவு வெளியானதும் மறைமலையடிகள் மாநாடு கூட்டி தலைமை தாங்கினர். சுயமரியாதை இயக்க மாநாடு 27.08.1937-இல் துறையூரில் நடைபெற்றது அண்ணா எதிர்ப்பு தெரிவித்து பேசினார். திருச்சி மாநாட்டில் பெரியார் பேசினார். கரந்தை தமிழ்ச்சங்கத்தினர் எதிர்ப்பு உரை தந்தனர். திருவையாறு தமிழ்ச் சங்கத்தினர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.
1940-இல் அரசு உத்தரவு ரத்தானது. மீண்டும் 1948இல் இந்தி கட்டாயம் அரசாணை வெளியானதும் பாரதிதாசன் தலைமையில எதிர்ப்பு மாநாடு, சென்னை மாகாண முதல்வர் ஒமந்தூரார் மற்றும் இராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. 1965இல் இந்தி அரசு அரசு அலுவல் மொழியாக ஆகும் என்ற போது இராஜாஜி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். சுயராஜ்யம் இதழில் இராஜாஜி அது குறித்து கொடுத்திருந்த விளக்கம். ”தென்னிந்தியாவில் இந்தியைப் பிரபல்யப்படுத்த நான் முயற்சி செய்தேன். இங்கே இந்தியை திணிப்பது நியாயமானதாகவும், சாத்தியமானதாகவும் தோன்றவில்லை. எனவே நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.”
தமிழினத்தை ஒருமுகப்படுத்த ”இந்தி மொழி எதிர்ப்பு” துருப்புச் சீட்டாகப் பயன்பட்டிருக்கிறது.
இராணுவம் வந்து சுட்டு 200 பேர் மரணம், அரசுப் புள்ளிவிவரம். தபால் தந்தியகங்கள் எரிக்கப்பட்டன.
18 நாள் கலவரம். இந்தி எதிர்ப்பு போராட்ட உணர்வு மாணவர்கள் தூண்டப்பட்டதே 1967 ஆட்சி மாற்றதுக்கு அடித்தளம் அமைத்தது எழுத்தாளர் மணா ”அந்தி மழை” இதழில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தி வேண்டாமெனப் போராடியவர்கள் அரசியல் அதிகாரம் பெற்றனர்.
ஆட்சியாளர்களாயினர். அரசு ஊழியர்களாக, அதிகாரிகளாக மாறினர். அவர்களில் சிலர் இறந்துவிட்டனர். பலர் வாழ்வின் இறுதியில் உள்ளனர். பொதுவாழ்விலிருந்து சிலர் விலகியும் விட்டனர்.
இந்தி எதிர்ப்பு காட்டியோரின் வாரிசுகள் இன்று சிபிஎஸ் பள்ளிக்கூடங்கள். மெட்ரிக் பள்ளிகளில் படிக்கின்றனர்.
12ஆம் வகுப்பு வரை தமிழ் இல்லாமல் கல்லூரி செல்கின்றனர். பிள்ளைகள் மொழியும் ஆங்கிலம், தமிழ் கேட்டு அவர்கள் பெருமை கொள்ளலாம்.
தமிழுக்காகவே வாழ்வது போன்று நாடகமாடும் தலைவர்களது வாரிசுகள் பெயர்கள் வடமொழியிலிருக்கின்றன.
தமிழினப் பெரும் தலைவர் தனது தொப்புள் கொடிவழி பெயரப்பிள்ளையை உயர் சாதி நடத்தும் பள்ளியில் சேர்க்கவில்லை என பொது மேடையில் பேசினார். ஆதங்கப்பட்டார். ஆங்கில, இந்தி மோகத்துக்கு ஒரு மேற்கொள்.
75 ஆண்டுகள் இந்தி எதிர்ப்புக்காக போராடியதற்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
தமது குடும்பத்துக்கொரு வழி. சமூகத்திற்கு ஒரு வழி. தலைவர்களுடைய செயலை வரலாறு மன்னிக்காது. இந்தி வேண்டாம் எனக்கூறி தமது உறவுகளுக்கு கள்ளத்தனமாகக் கற்பித்துள்ளனர். வாரிசுகள் பலர் வடநாட்டில் வலம் வருகின்றனர். கொட்டை போடுகின்றனர். தொண்டர்கள், தொடர்ந்தோடியோர் வாரிசுகள் தமிழக எல்லையைத் தாண்டவியலாது தவிக்கின்றனர். மத்திய நிறுவனங்கள். பொது நிறுவனங்கள் இந்தி மொழி கட்டாயம் தேவையென்கின்றன. ”பிரார்த்தமிக் – மத்தியமா – ராஷ்டிரபாஷா” மூன்று தேர்வுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்தி கற்பிக்க பெரு நகரத்தின் மையப்பகுதியிலேயே சரியான ஆளில்லை. கோச்சிங் சென்டர் எதுவுமில்லை. இந்தி பிரச்சார சபா மட்டுமே. கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது தமிழினம்.
தமிழும் முழுமையாகத் தெரியவில்லை. ஆங்கிலத்திலும் ஆளுமை இல்லை. இந்தியும் வாந்தி வருகிறது. உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்யவும் தயாரில்லை. ஆளில்லை. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. வடக்கத்தியர் உடல் உழைப்பு தர வந்து குவிகின்றனர்.
வேலைக்கு தமிழ் ஆட்களில்லாமல், இந்திக்காரர்களை வேலைவாங்க மொழி தெரியாமல் தமிழகத்தின் பார்பர் ஷாப்கள், ஸ்டேஷனரி கடைகள், ஸ்கூல் பேக்கு கம்பெனிகள், கட்டிடம் கட்டுவோர், கல், மண் கடைக்காரர்கள், டீ கடைக்காரர்கள், உணவு விடுதிகள் தடுமாறுகின்றனர். இவர்கள் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று செய்ய ஊமை ஜாடையில் அதிகபட்சம் ஒரு மாதம் ஓடுகிறது. கட்டிடப்பணி, ஹோட்டல்கள் தவிர மற்ற இடங்களில் இந்திக்காரர்களால் நிலையாகப் பணி செய்ய இயலவில்லை.
ஒவ்வொரு நாளும் சென்டிரல் இரயில் நிலையம் வடநாட்டவர் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. தெருமுனை, பிளாட்பாரம், பஸ், இரயில் எங்கு காணிணும் இந்திக்காரர். வந்தாரை வரவேற்கும் தமிழகம் தாயுள்ளத்தோடு ஏற்றுள்ளது. இந்தியை வெறுத்ததன் விளைவு. இறை தந்த தண்டனை.
– சோதுகுடியான், முஸ்லிம் முரசு நவம்பர் 2012