சிரியாவின் அரசியல் எதிர்காலம்
ரஊஃப் ஸெய்ன்
சர்வதேச சமூகம் சிரிய விவகாரத்தில் காட்டி வரும் மௌனம் மிகவும் குரூரமானது.
சிரியாவின் தற்போதைய சிவில் யுத்தத்தின் போக்குகளை ஆழ்ந்து நோக்கும்போது மத்திய கிழக்கில் புதியதோர் சோமாலியா உருவாக்கப்படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது என சமீபத்தில் AFP இற்கு செவ்வி யளித்துள்ள ஜோஸ் ரமோஸ் ஹோட்டா தெரிவித்துள்ளார்.1996 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற இவர், இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு தீமோரை பிரித்துத் தனி நாடாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். எவ்வாறாயினும், ஹோட்டாவின் இக்கருத்து ஊன்றிக் கவனிக்க வேண்டியது.
சிரியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வான்வழித் தாக்குதல்கள் பல பத்தாயிரம் பேர்களின் உயிர்களைப் பலியெடுத்துள்ளது. இரத்தக் களரியாக மாறியுள்ள சிரியாவில், வன் முறைகளை நிறுத்துவதில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டா கூறுகிறார்.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அரச தரப்புக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையில் தற்காலிகமாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் ஒக்டோபர் 29 இல் வெடித்துச் சிதறியது. டமஸ்கஸ் மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகள் அரச தரப்பின் கடும் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியதில் அன்றைய தினமே 117 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் சிவில் யுத்தம் அந்நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய முழு அளவிலான போராக உருமாறி விட்டது. லெபனான், ஈரான், ஈராக் ஆகியன ஒரு புறமாகவும் மத்திய கிழக்கின் அறபு நாடுகள் உள்ளிட்டு துருக்கி என்பன இன்னொரு புறமாகவும் சிரிய நெருக்கடியில் பல அணிகள் உருவாகிவிட்டன. அதற்கப்பால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஓர் அணியிலும் சீனா, ரஷ்யா மற்றொரு அணியுமாக எதிர்-எதிர் முனைகள் உருவாகி விட்டன.
1980 முதல் 1988 வரை எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற ஈரான்-ஈராக் யுத்தம் போன்று சிரிய சிவில் யுத்தமும் பல்லாண்டுகள் நீடிக்கலாம் என்ற அறிகுறிகளே தென்படுகின்றன. இதற்குரிய உடனடிக் காரணம்; பல்வேறு அணிகளும் பல்வேறு நலன்களும் இந்த யுத்தத்தின் அடிப்படைகளாக உள்ளன என்பது மட்டுமல்ல. ஆக்கபூர்வமான சர்வதேச சக்திகளின் தலையீடு மிகவும் மந்தமாக உள்ளது என்பதே.
ஈரான்-ஈராக் யுத்தத்தில் 10 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பல நூறு பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தையும் மக்களையும் மீள உயிர்ப்பிப்பதற்கு பல கோடி டொலர்கள் தேவைப்பட்டன.
நீடித்த சிவில் யுத்தத்திற்கு நம் முன்னாலுள்ள மற்றொரு உதாரணம்தான் சோமாலியா. கடந்த இரு தசாப்தங்களாக, அதாவது 1990 களிலிருந்து அந்நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் விழுந்துள்ளது. ஊனமுற்ற மக்களை வாழ வைப்பதற்கே பல மில்லியன் டொலர்கள் அவசியமாகியுள்ளன.
அதுபோன்ற உறைநிலை கொண்ட ஒரு சிவில் யுத்தமாக சிரியாவின் நிலமைகள் மாறிவிடுமானால், அதற்குக் கொடுக்கப்படும் விலை மிகப் பாரியதாக இருக்கும். அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் கையாளும் வழிமுறைகள் ஜனநாயகத் தன்மையற்றது. ஆயுதங்களிலும் வன்முறைகளிலும் முழு அளவில் நம்பிக்கை வைக்கும் எவரும் இறுதியில் தோற்றுத்தான் போயுள்ளனர். வரலாறு நெடுகிலும் இதற்கான உதாரணங்களைக் குவிக்கலாம்.
இன்று அஸதின் கையிலுள்ள மிகப் பெரும் பலம் எது என்பது தான் சிரிய சிவில் யுத்தத்தில் எழுப்பப்படும் பெரிய கேள்வியாகும். ஈரானின் தயாரிப்பிலான போர் விமானங்களும் கணிசமான விமானப் படையும்தான் அஸதின் பலமாகக் கொள்ளப் படுகின்றது. ஆனால், இந்தப் பலங்கள் நீடித்து நிற்பதில்லை.
லிபியாவின் தலைவர் கடாபி கொல்லப்பட்ட முறைமையும், எகிப்தின் முபாரக் பதவி கவிழ்க்கப்பட்ட விதமும் தனக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அஸத் மிகவும் கண்ணும் கருத்துமாக உள்ளார். எனவேதான் அவரது அடக்குமுறையின் குரூரமான வழிமுறைகள் பல்வேறு கருவிகளினூடே வெளிப்படுகின்றது என்கிறார் ஹோட்டா.
சிரியாவின் அரசியல் செயற்பாட்டாளர் ஹிஷாம் நாஜிம், அஸத் தீவிரப்படுத்தியுள்ள வான் வழித் தாக்குதல்களை வேறு விதமாகப் பார்க்கிறார். கண்மூடித்தனமான அஸதின் வான் தாக்குதல்கள் மக்களை பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாடின்றி கொன்றொழிப்பதற்குப் பிரயோகிக்கப்படுவதை ஹிஷாம், “அஸத் எதிர்கொண்டுள்ள இராணுவத் தோல்விகளின் வெளிப்பாடு” என்கிறார்.
“தற்போது வடக்கு நகரான கான் ஷைகூன், அலப்போ, இத்லிப் போன்றவற்றின் மீது கடும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காரணம், ஏற்கனவே புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள இப் பகுதிகளை மீளக் கைப்பற்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன. அதனை ஈடுகட்டவே இராணுவம் இந்த குரூரமான வழிமுறையிடம் தஞ்சம் கோரியுள்ளது” என்கிறார் ஹிஷாம்.
எஸோசியேடட் பிரஸ், டமஸ்கஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான யப்ரூத், ஜர்மானா, ஹஸ்ஸா, ஹரஸ்தா, ஹஜருல் அஸ்வத் ஆகிய பிரதேசங்களின் வான் பரப்பு புகை மூட்டத்தால் கருப்பாகக் காட்சி தருகின்றது. இடிபாடுகளின் கீழே புதையுண்டு போயுள்ள குழந்தைகளின் சடலங்களை மீட்பதில் அழுது புலம்பும் தாய்மார்கள் ஈடுபட் டுள்ளனர்.
மற்றொரு தாய் உயிரிழந்த தனது இரு குழந்தைகளை தரையில் சாய்ப்பதை காணொளியாக வெளியிட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்காட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் மனச்சாட்சியை உலுப்பியுள்ளதோடு, மயிர்க் கூச்செறியவும் செய்துள்ளன.
வடக்கு நகரான மீறத் அல் நுமான் வான் தாக்குதலால் முற்றாகவே சின்னாபின்னமாகியுள்ளது. 19 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய சிரிய சிவில் யுத்தத்தில் இதுவரை 35,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானும், ஈராக்கும் லெபனானும் அஸதின் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு இவ்வளவு பெரும் மனித விலையை கொடுத்துள்ளது.
சர்வதேச சமூகம் சிரிய விவகாரத்தில் காட்டி வரும் மௌனம் மிகவும் குரூரமானது. மாபெரும் அழிவொன்றை எதிர்நோக்கியுள்ள அஸத் சாத்தியமான அத்தனை வழிமுறைகளையும் கையாண்டு அந்த அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கிறார். ஆயினும், தப்பிக்க முயல்வது ஒருபோதும் நெருக்கடிக்கான தீர்வாக அமைவதில்லை என்ற பாடத்தை அவர் கற்றுத்தான் ஆக வேண்டும்.
ஆயிரக்கணக்கான சிரிய அகதிகள் ஸ்தான்பூலில் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு துருக்கி அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்குகின்றபோதும், பல்வேறு இடர்பாடுகளை அவர் எதிர்நோக்குகின்றனர். உம்மு முஹம்மத் எனப்படும் சிரியப் பெண்மணி, ஸ்தான்பூலில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி இது.
* நீங்கள் இங்கே எப்படி வாழ்கிறீர்கள்? செலவுக்கு என்ன செய்கிறீர்கள்?
சேமித்து வைத்தவர்கள் செலவு செய்கின்றனர். அல்லாஹ்வே ஏனையோருக்கு உதவி செய்கின்றான்.
* வருமானமோ தொழிலோ இல்லாத இந்நாட்களில், பணமில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
இங்கு அகதிகளாக வந்துள்ள சிரியர்கள் தமக்குள் பரஸ்பரம் உதவிக் கொள்கிறார்கள்.
* காயப்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கான சிகிச்சை கிடைக்கின்றதா?
ஆம், ஆனால், போதிய வசதிகள் இங்கு வழங்கப்படவில்லை. எனது சகோதரியின் மகன் 19 வயதான இளைஞன். ஹும்ஸ் நகரில் 10 துப்பாக்கிக் குண்டுகள் அவனது உடம்பில் பாய்ந்தன. அவனது உடம்பிலிருந்து குண்டுகள் அகற்றப்பட்டுள்ள போதும் காயங்கள் இதுவரை ஆற்றப்படவில்லை.
* சிலர் இதனை ஒரு குழுவாத வன்முறை என்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
இல்லை, இது நூறு வீதம் அரசுக்கு எதிரான சிவில் சமூகத்தின் எழுச்சியாகும். வறுமை, பொருளாதார நெருக்கடி, அரசியல் அநீதி, அடக்குமுறை அனைத்து மக்கள் மீதும் திணிக்கப்பட்டது. அதன் விளைவே இப்புரட்சி. அஸதின் இராணுவ ஆட்சியினால் பாதிக்கப்படாத எவருமே சிரியாவில் இல்லை.
* நீங்கள் எப்படித் தப்பி வந்தீர்கள்?
அது மிகவும் கடினமான பயணம். எனினும், அரசாங்கப் படையினரின் கண்களிலிருந்து அல்லாஹ்வே எங்களை மறைத்தான். அஸாஸ் நகரைக் கடந்து வந்தபோது சுதந்திர புரட்சியாளர் படை எங்களுக்கு உதவியது. அவர்களே எமக்கு துருக்கிக்கான பாதையைக் காட்டினர். துருக்கியின் எல்லைப் புற இராணுவமும் எங்களுக்கு இட மளித்தது.
source: www.meelparvai.blogspot.com