அல்லாஹ்வை நம்புவது எப்படி? (2)
பி.ஜெய்னுல் ஆபிதீன்
பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் செல்வந்தர்களிடம் நம் தேவையைக் கேட்டால் அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை யாரும் கேட்பதில்லை. அவர்கள் அந்த அளவுக்குத் தரமாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வைப் பற்றியும் நமது நிலை இப்படித்தான் இருக்கின்றது. பணக்காரன் எப்படி பெருந்தொகையை தரமாட்டானோ அதை போன்று தான் அல்லாஹ்வும் தரமாட்டான் என்று நினைக்கின்றோம்.
நமது பார்வையிலும் கணிப்பிலும் மனிதர்கள் தான் தர மாட்டார்கள். அல்லாஹ் நினைத்தால் அவன் நமக்கு உதவி செய்வது அவனுக்கு சாதாரணமானது என்று நம்புவதில்லை. நமக்கு முன்னால் இறைத்தூதர்கள் வரலாறு இதற்கு படிப்பினையாக இருக்கிறது.
அல்லாஹ்வை உண்மையாக நம்ப வேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று எப்படி உறுதியாக நம்புகின்றோமோ, அப்படி சந்தேகமில்லாமல், அல்லாஹ்வை நம்ப வேண்டும். கண் முன்னால் ஒன்றைப் பார்த்து எப்படி இது மனிதன், இது மிருகம் என்று எவ்வாறு உறுதியாகக் கூறுகின்றோமோ அப்படி நம்ப வேண்டும். நமது கண் முன்னால் நிற்கும் ஒருவரைப் பற்றி இவர் யார் என்று கேட்டால் சற்று பொறுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று யாரும் சொல்ல மாட்டோம். அப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
இரண்டு கால்களும் இரண்டு கைகளும் உடல் உறுப்புக்களும் இருப்பதை எப்படி நம்புகின்றோமோ? அதில் சந்தேகம் வராதோ அதுபோன்று அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய தூதர்கள், மலக்குகள், வேதங்கள் போன்ற மறைவானவற்றையெல்லாம் நம்பவேண்டும். உறுதியான வேர்களைக் கொண்ட ஆலமரத்தின் விழுதுகள் எப்படி ஆழமாக வேர்களை நிலத்தில் வேரூன்றி இருக்கின்றதோ அப்படி அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையும் உறுதியாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. (அல்குர்ஆன் 14:24)
மரத்தின் வேர்களைப் போன்று நமது கொள்கை ஆழமாக உள்ளதா? நூற்றுக்கு நூறு சதவீதம் நாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் மறுமையையும் வேதங்களையும் நம்புகிறோமா?.
இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் நமது வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அவனுடைய வானவர்களின் உதவியும் நிச்சயமாகக் கிடைக்கும். வாழ்க்கையில் துன்பமோ துயரமோ ஏற்படாது.
இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறிய நிகழ்ச்சி போதுமான ஆதாரமாகும்.
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நான் “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். “தங்களுக்குப் பிறகு யாரிடமும்’ அல்லது “தங்களைத் தவிர வேறு யாரிடமும்’ அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கலாகாது” என்று வினவினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “”அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம் 62)
இதில் இருந்து நாம் விளங்க வேண்டியது அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் எந்தத் தீய பழக்களிலும் நீடித்து நிலைத்து நிற்க மாட்டோம். என்பதுதான் இதில் இருந்து நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
எதற்காக நோய் ஏற்படுகிறது?
மனிதர்களாகிய நாம் நமது அன்றாட வாழ்வில் பலவிதமான நோய்களைச் சந்திக்கி றோம். இவ்வுலகில் நோய்களுக்கு ஆளாகதவர்களைக் காணவே முடியாது. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட பெரிய நபிமார்களாக இருந்தாலும் அவருக்கு நோய் வந்தே தீரும். அவர்கள் சரியே. இப்படி நோய்களுக்கு ஆளாகும் போது அதை எப்படி நாம் எதிர்கொள்வது? எப்படிப்பட்ட ஆளாக இருக்கணும்? அந்த நேரத்தில் நமது நம்பிக்கைளை எவ்வாறு அமைத்துக் கொள்வது? நமது நடவடிக்கைகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இஸ்லாம் சொல்லக் கூடிய சில வழிமுறைகளை நாம் ஆராய்வோம்.
நோய் என்பது அல்லாஹ்வால் மனிதனைப் பண்படுத்துவதற்கு கொடுக்கப்படுகின்ற ஒரு எச்சரிக்கையாகும். நோய் மட்டும் மனிதனுக்கு ஏற்படவில்லையென்றால் மிக அதிகமான மனிதர்கள் கடவுள் மறுப்பாளர்களாகவே இருப்பார்கள். நோய் மனிதனைப் படுக்கையில் கிடத்தும் போது மனிதன் அந்த நேரத்தில் தான் தன்னை விடவும் மிஞ்சிய ஒரு சக்தியுள்ளது என்று நினைக்கிறான். அப்போதுதான் கடவுள் இருக்கிறான் அவனது நிவாரணம் எனக்குத் தேவை என்று உணர்கிறான். இதற்காகத்தான் அல்லாஹ் நோயை அவனுக்கு ஒரு கருணையாகவும் அருளாகவும் ஏற்படுத்தியிருக்கிறான்.
இவ்வுலகில் எத்தனையோ பகுத்தறிவாதம் பேசியவர்கள் கூட நோய்நொடிகளுக்கு ஆளாகும் போது நிவாரணங்களை நோக்கி ஓடும் காட்சியை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.
கடவுள் நம்பிக்கை என்பது மனிதனுக்கு நோய் வரும் போது மட்டும் தான் ஏற்படுகிறது. உலகம் தான் வாழ்க்கை என்று மூழ்கிப் போய் அல்லாஹ்வை மறக்கும் போது அல்லாஹ் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஏதாவது ஒரு சோதனையைக் கொடுத்து அவனைத் திசை திருப்புகிறான்.
நீ பலவீனமானவன் உனக்கு மேல் உன்னைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். அவன் நினைத்தால் உன்னை ஒரு நொடிப்பொழுதில் மரணிக்கச் செய்து விடுவான். எனவே உன்னுடைய வாழ்க்கையை நல்லமுறையில் பயன் படுத்திக்கொள். என் இறைவன் விதித்த இந்த நோயை அவனே குணப்படுத்துவான் என்று நீ உன்னைப் படைத்த இறைவன் மீது நம்பிக்கை வை. அவன் நோயை ஏற்படுத்தியதல்லாம் அவனை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் என்று சொல்லாமல் சொல்லி மனிதனை எச்சரிக்கிறான்.
இவ்வாறு நோய் ஏற்படும் போது நோயின் மூலம் ஏராளமான நன்மைகளை அடைந்து கொள்வதற்கு அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று அவன் கவனக்குறைவாக இருந்தால் இந்த நோயே அவனை ஒரு இறைமறுப்பாள னாகவும் இணைவைப்பாளனாகவும் கூட மாற்றிவிடும். அதையும் இன்றைய உலகில் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
நோய் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.
மருத்துவம் செய்ய வேண்டும் அல்லாஹ்வை முழுமையாக நம்பியிருப்போர். நோய் நோடிகள் ஏற்படும் போது அந்த நோய்க்குரிய காரணங்களைக் கண்டு தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது. அதற்கு மாற்றமாக ஆன்மிகம் என்ற பெயரில் அல்லாஹ் இருக்கிறான். அவன் நோயைக்குணப்படுத்துவான் என்று அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டிவிட்டு, நோய்க்கு வைத்தியம் செய்யாமல் இருப்பதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. (புகாரி 5678))
மற்றொரு ஹதீஸில்
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும். (முஸ்லிம் 4432))
நோயை ஏற்படுத்திய அல்லாஹ் அதற்குரிய நிவாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளான். அந்த மருந்தை முறையாகப் பயன்படுத்தினால் நோய் நீங்கிவிடும். மனிதனுக்குப் பசி ஏற்படும் போது பசியைப் போக்குவதற்கு அல்லாஹ் வழங்கிய உணவை உண்டு பசியைப் போக்குகிறோம். பசியைப் போக்குவதற்கு அல்லாஹ் மனிதனுக்கு எந்த அளவுகோலை கற்றுக் தந்துள்ளானோ அதே அளவு கோலையே நோய்க்கும் கற்றுத் தந்துள்ளான். இயன்ற அளவுக்கு மருத்துவம் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்கு வழிகாட்டுகிறது.
இந்த உலகில் வாழும் அனைத்து மதத்தவர்களும் இனத்தவர்களும் நோய்க்கு மருத்துவம் செய்கிறார்கள். இதனை யாருக்கும் நாம் சொல்லிக் கொடுத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் ஆன்மிகத்தின் பெயரால் மருத்துவம் பார்க்கக் கூடாது என்ற தவறான கொள்கையில் உள்ள சிலர் மரணத்தைத் தழுவுகின்றனர்.
இன்னும் சிலர் தவறான சடங்கு சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை வைத்து அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கின்றனர். வைத்தியம் செய்து குணமாகவில்லையென்றால் அந்தச் சந்தர்ப்பத்தில் வைத்தியத்தின் மீதே நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.
நோயாளியின் உள்ளம் பல விதமான சந்தேகத்தில் சுழன்று கொண்டிருக்கும். இந்த நேரத்தில் இது நோய் அல்ல; இது நோய்க்கு அப்பாற்பட்ட ஒன்று; அதற்கு வேறு விதமான சிகிச்சைகள் இருக்கின்றது அதைச் செய்வதன் மூலம் தான் இதனைக் குணப்படுத்த முடியும் என்று கூறும் மூடர்களின் சொல்லைக் கேட்டு பில்லி, சூனியம், கண்ணேறு தான் காரணம் என நம்பி மருத்துவத்தைக் கைவிடுகிறான். தர்காக்களுக்குச் சென்று அங்கு பல நாட்கள் தவம் இருக்கிறான். தாயத்து தகடு பால் கிதாபு சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறான். தட்டுக்களில் எழுதி அதைக் கரைத்துக் குடிக்கிறான். இதனால் அவனுக்கு நோய் அதிகமாவதுடன் இஸ்லாத்திற்கு மாற்றமான அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கக்கூடிய நிரந்தர நரகத்திற்குரிய பாவமான காரியங்களைச் செய்தவனாகவும் ஆகி விடுகிறான்.
இது போன்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் மீது அளவற் நம்பிக்கை கொண்டு இயன்ற அளவுக்கு மருத்துவம் செய்ய வேண்டும். அதன் பிறகு இறைவா எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை நீயே குணப்படுத்துபவன், உன்னிடமே நான் ஆதரவு வைத்துள்ளேன், நான் இதில் பொறுமையைக் கைக்கொள்கிறேன், உன்னுடைய விதியை நான் பொருந்திக் கொண்டேன் என்று பொறுமையைக் மேற்கொண்டால் அதற்குரிய நன்மையை அடைந்து கொள்ள முடியும்.
இதற்கு மாற்றமாக மருத்துவத்தைத் தாண்டி மார்க்கம் காட்டித்தராத வழிமுறைகளைக் கையாளுகின்ற போது ஈமானைப் பறிகொடுக்கும் நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான்.
இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஒவ்வொருவரும் தமக்கு ஏற்படும் நோய் குணமாவதற்கு அவர்களாக ஒரு கால வரையரையை தீர்மானித்து வைத்திருப்பதுதான் அது. அந்தக் கால அளவுக்குள் குணம் ஏற்படாவிட்டால் இதற்கு மருத்துவம் செய்வதனால் பயன் கிடைக்காது; ஏதாவது வேறு வழிகளில் நோய் குணமடைவதற்கு முயற்சி செய்து பார்ப்போம் என்றெண்ணி மாந்திரீகம், தயத்து, தகடு போன்றவைகளில் எழுதி கைகளிலும் உடலின் மற்ற பாகங்களிலும் கட்டிக் கொள்வது அதைக் கரைத்துக் குடிப்பது, போன்ற செயல்களில் இறங்கி விடுகின்றனர்.
இவ்வாறு செய்வதை விடுத்து ஹோமியோபதியோ அலோபதியோ, யூனானியோ சித்த மருத்துவமோ அல்லது வேறு வகையான மருத்துவமோ செய்து கொள்ள வேண்டும்.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் மார்க்கத்துக்கு முரண் இல்லாத வகையில் மருத்துவம் செய்வதற்கு நமது மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கு மாற்றமாக மாந்தீரீக வேலைகளில் ஈடுபடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? என்று ஆராய்ந்து பார்த்தால் இதற்கு முழுமையாக அனுமதி இல்லையன்றாலும் அல்லாஹ் அனுமதித்த குறிப்பிட்ட அளவுக்கு இதில் ஈடுபட அனுமதியுள்ளது. இந்த அனுமதியைத் திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக சொல்லிக் காட்டுகிறான்.
நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு இழப்பையே அதிகப்படுத்தும். (அல்குர்ஆன் 17:82)
இந்த வசனத்தில் முஃமின்களுக்கு நோய் நிவாரணமும் இந்தக் குர்ஆனில் இறக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். குர்ஆனில் நோய்நிவாரணம் உண்டு என்பது இதில் இருந்து தெரிகிறது. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றலும் வலிமையுமுள்ளது. என்பதை இந்த வசனம் நமக்கு சொல்லிக் காட்டுகிறது.
இந்த வசனத்தில் கூறப்பட்ட நிவாரணம் என்ற சொல்லுக்கு இரண்டு விதமான விளக்கங்களை அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் கூறும் போது ஆத்மிகமான நோயைத்தான் இது குறிக்கிறது. அதற்கு மாற்றமாக மருத்துவ ரீதியான நோயைக் குணப்படுத்தாது என்கின்றனர்.
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விளக்கம் அவர்களின் வாதங்களுக்கும் விளக்கத்திற்கும் எதிரானதாக உள்ளது.
நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர்.
அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்ஸ. என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள்.
இதைப்பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக்கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 2276)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று அந்த நபித்தோழரிடம் கேட்டார்கள். இதில் இருந்து அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவதன் மூலம் குறிப்பிட்ட சில நோய்கள் நீங்கும் என்று விளங்குகிறது.
இந்த நபிமொழியின் மூலம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியுள்ளார்கள். அதன் காரணமாக நோயும் நீங்கியுமுள்ளது. என்று அறிய முடிகிறது. அது ஷைத்தானின் வேலையால் நீங்கவில்லை மாறாக அந்த அத்தியாயத்திற்கு இப்படியான ஒரு சக்தியுன்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். இதைத் தவறு என்று சொல்லவில்லை ஏன் இப்படி செய்தாய் என்றும் கேட்கவில்லை. நோய் நோடிகளுக்கு ஆளாகும் போது இந்த மாதிரி ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது. அதில் மருத்துவம் இருக்கிறதா? என்றால் இருக்கிறது. என்று கூற முடியும். ஆனால் மொத்தக் குர்ஆனையும் இதனால் ஓதிப்பார்க்கக் கூடாது. ஏனென்றால் குர்ஆனில் சில பகுதி என்றுதான் அல்லாஹ் கூறுகிறான். சில என்பதை எது என்பதை அல்லாஹ் நமக்கு விளக்கித் தரவில்லை ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கித் தந்துள்ளார்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் இன்னின்ன அத்தியாயங்கள் நோய் நிவாரணமாக அமையும் என்று கற்றுத் தந்துள்ளார்கள் அதில் ஒன்றுதான் சூரத்துல் பாத்திஹா. நோய் ஏற்பட்டுவிட்டால் ஒருவர் மருத்துவத்தையும் செய்து கொண்டு அல்ஹம்து அத்தியாயத்தையும் ஓதினால் அவரின் நோய்க்கு நிவாரணத்தை அது விரைவுபடுத்தும் என்பதை நம்பலாம்.
குறிப்பு :
(“அல்லாஹ்வை நம்புவது எப்படி?” என்ற தலைப்பில் சகோதரர் பி.ஜெ அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமே இந்த ஆக்கம். உரையை எழுத்து வடிவமாக்கியிருக்கிறார் சகோதரர் மனாஸ் அவர்கள்.)
source: www.islamicparadise