மறுமைக்காக இன்பவாழ்கையை தியாகம் செய்த ஆஸியா அலைஹிஸ்ஸலாம்
ஆஸியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொடியவனான ஃபிர்அவ்னுடைய மனைவியாக இருந்தார்கள். அரசனுடைய மனைவி அரசியாவார்.
ஆடை அணிகலன்கள் மாட மாளிகைகள் சுவையான உணவுகள் பஞ்சு மெத்தைகள் பணியாட்கள் இப்படி பலவிதமான வசதிகள் அரசிக்கு செய்து தரப்படும்.
ஃபிர்அவ்ன் யாரை கொலை செய்ய துடிக்கிறானோ அந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆஸியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈமான் கொள்கிறார்கள். இதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து இன்பங்களை ஃபிர்அவன் பரித்தான். அத்துடன் இஸ்லாத்தை ஏற்றதற்காக அவர்களை கடுமையாக தண்டிக்கவும் செய்தான்
இந்நிலையில் ஃபிர்அவ்னுடைய கொடுமைகளுக்கு பயந்து இஸ்லாத்தை ஆஸியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விட்டுவிடவில்லை. அரண்மனை இன்பங்களுக்கு மயங்கி சத்தியத்தை மறந்துவிடவில்லை. மாறாக இறைநம்பிக்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யத்துணிந்தார்கள்.
இந்த உலக வாழ்வு சிரமத்திற்குரியதாக ஆகிவிட்டாலும் மறுமையின் வாழ்வை சிறப்பிற்குரியதாக ஆக்கித்தருமாறு இறைவனிடம் வேண்டினார்கள். ஃபிர்அவ்னுடைய கொடுமையிலிருந்து பாதுகாப்பைத் தருமாறு பிரார்த்தித்தார்கள்.
”என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக!
ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக!
அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!”
என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால்
அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். (அல்குர்ஆன் 66 : 11)
இந்தப் பெண்ணிடத்தில் இருந்த உறுதி நமது சமுதாயத்தில் எத்தனை பேரிடம் இருக்கிறது. உலகின் அற்பு சுகங்களுக்காக மார்க்கத்தை ஒதுக்குபவர்கள் பலரை காண்கிறோம். இவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு ஆஸியா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று மன உறுதியை வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்கள் குறித்து ஒரு வசனத்தை நமக்கு அருளியுள்ளான். உலக மக்களுக்கு அவர்களை அழகிய முன்மாதிரியாக ஆக்கியுள்ளான்.
எனவே ஒரு முஸ்லிம் துன்பங்கள் வரும்போது மனம் தளராமல் நேரான வழியை நோக்கி செல்ல வேண்டும். அற்ப சுகங்களுக்காக மறுமைவாழ்வை அவன் இழந்து விடக்கூடாது இறைவனுடைய கட்டளையை செயல்படுத்துவதற்கு எத்துணை தியாகதையும் செய்யத்தயாராக இருக்க வேண்டும்.
-சங்கை ரிதுவான்