“மீண்டும் 18″ இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பையும் கன்னித்தன்மையையும் வியாபரப்பொருளாக்கும் விளம்பரம்!
இக்பால் செல்வன்
இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் கன்னித்தன்மையும் வியாபாரப் பொருளாகிவிட்டது !!!
இந்தியப் பெண்களே இனி கவலை வேண்டாம். பெரும்பான்மையான நீங்கள் கரும் மாநிறமாக இருக்கின்றீர்கள் என்ற ஆதங்கங்களை தூக்கி எறியுங்கள். வெள்ளை நிறமாக ஒரு முகப் பூச்சு – அடுத்து உங்களின் பிறப்புறுப்புக்களையும் வெள்ளையாக்கிக் கொள்ள இன்னொரு பூச்சு – அதுவும் போதாதா! உங்களின் பிறப்புறுப்புக்களை இறுக்கமாக்கிக் கொள்ளவும் ஒரு பூச்சு என வகைவகையாக வந்துவிட்டது. இனி உங்கள் ராஜகுமாரான் உங்களைத் தேடி வந்து உங்கள் காலடியில் கிடக்கப் போகின்றார்.
ஒரு பெண் ஆணுக்காகவே படைக்கப்பட்டாள் என்ற கருத்தியல் சமூகத்தில் ஆழ ஊன்றியுள்ளது. அவளின் அதிகப் பட்சக் கடமை ஆணோடு கன்னித் தன்மையோடு உடலுறவு கொள்வதும், அவனின் பிள்ளைகளைப் பெறுவதும், பேணுவதுமே ஆகும். கல்வி பெற்று விட்டாலும், வேலைக்கு சென்றாலும் அடிப்படைக் கடமைகள் மாறவில்லை என்பது மட்டுமே உண்மையாக இருக்கின்றது. பெண்களின் கல்வியும், வேலையும் கூட ஆண்களின் தேவைக்களுக்காகவே என்ற நிலை தான் நீள்கின்றது.
இந்திய மக்களின் பொது நிறமான கரும் நிறமும், மாநிறமும் ஒதுக்கப்பட்டதாகவே ஆக்கிவிட்டனர். காலம் காலமாக ஆரியர், கிரேக்கர், இஸ்லாமியர், ஐரோப்பியர் என அயலகத்தில் இருந்து வந்தவர்களின் வருணம் வெள்ளை என்பதால், அதிகாரத்தின் நிறம் வெள்ளை என்பது எழுதாத சட்டமாகி விட்டது.
இருபதாம் நூற்றாண்டின் கல்வியும், சமூக மாற்றங்களும் கூட நிற பேதங்களை நீக்கிவிடவில்லை. வெளிர் நிற மோகத்தை பிற்காலத்தில் வந்த சினிமா, பத்திரிக்கைகள் முதல் இன்றைய இணையம் வரை நன்கு வளர்த்துவிட்டன. அந்த ஊடகங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் பலரும் ஆதிக்கச் சாதியினர் என்பதால் அவற்றை மாற்ற ஒருவரும் முயலவில்லை.
இதை விட கேவலமாக ஒரு பெண்ணை சித்தரிக்க முடியாது
பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இனி வரும் காலத்தில் பத்திரிக்கைகளில் பெண் தேடுவோர் சாதி, மதம், கல்வி, வேலை, தோல் நிறத்தையும் தாண்டி – பெண்ணுறுப்பின் நிறமும் வெள்ளையாக இருக்க வேண்டும் அதுவும் இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற விளம்பரம் வந்தாலும் வியக்க வேண்டியதில்லை.
அட மூடர்களா! இவர்கள் உங்களின் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துகின்றார்கள். இப்போதும் மௌனமாக இருப்பீர்களானால் – நம் வீட்டுப் பெண்களை வன்புணர்வு செய்யவும் தயங்க மாட்டார்கள் இந்த சமூக வியாபாரிகள். இது ஒரு பெண்ணை உச்சக் கட்டமாக அவமானப்படுத்தும் செயலே ஆகும்.
ஒரு பெண்ணின் உடல் நிறத்தை மட்டம் தட்டிய சமூகம், ஒரு படிக்கு மேல் சென்று அவளின் பிறப்புறுப்பின் வர்ணத்தையும் மட்டம் தட்டும் வேலையில் இறங்கியது. ” பெண்ணுறுப்பினை வெண்மையாக்கும் கிரீம். இது உச்சக்கட்ட அவமானம்” என ட்விட்டரில் எழுதினார் ரூபா சுப்ரமணியம். இன்னும் பலர் இவற்றுக்கு கண்டனம் எழுப்பினார்கள்.
இதை விட கேவலமாக ஒரு பெண்ணை சித்தரிக்க முடியாது. {jcomments on}கற்பு என்பது பெண்ணுக்குறிய அணிகலனாகவும், திருமணத்தில் கொடுக்கப்படும் அதிகப்படியான சீதனமாகவும் இருந்தது.
சராசரியாக ஒரு இந்தியப் பெண் முதன்முறையாக உறவுக் கொள்ளும் வயதானது 2006-யில் 23 என்ற நிலையில் இருந்து 2011-யில் 19.8 ஆக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்திய சமூக மாற்றத்தில் ஆதாயம் காணவே இப்படியான கண்டுப்பிடிப்புக்கள் புகுத்தப்படுகின்றன.
இந்த பூச்சுக்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பர படத்தினைப் பார்ப்பீர்களானால் – ஒரு குடும்பத்த தலைவி வேலைக்கு செல்லும் கணவனிடம் தனது பிறப்புறுப்பு இறுகிவிட்டதாகவும், தான் ஒரு கன்னிப் பெண்ணைப் போல மாறிவிட்டதாகவும் துள்ளிக் குதித்து ஆடுகின்றாள். அவனும் அவளும் பெற்றோர், பிள்ளைகள் முன்னர் கட்டித் தழுவிக் கொண்டாடுகின்றார்கள். அதனை அங்குள்ள ஒரு சிறுவன் செல்பேசியில் படம் பிடிக்கின்றான். இறுதியில் அந்த வீட்டு முதியப் பெண்ணும் இந்த கிரீமினைப் பெற இணையத்தில் பெற முயற்சிக்கின்றாள்.
இந்தப் பூச்சும், அதற்கான விளம்பரமும் பெண்களை மொத்தமாக அவமானப்படுத்தும் ஒரு செயலே ஆகும்.
இந்த விளம்பரத்தை வெளியிட்ட கறி நேசன் நிறுவனத்தின் மேலாளர் நாகேஸ் பன்னஸ்வாமி கூறுகையில் இது பெண்களின் உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை வளர்க்கின்றதாம். அத்தோடு நோய் தொற்றுக்களை தடுப்பதாகவும் புளுகுத் தள்ளியுள்ளார்.
அறிவியல் ரீதியாக….
முதலில் அறிவியல் ரீதியாக நாம் சொல்ல விரும்புவது இயற்கையிலேயே ஆண் மற்றும் பெண்ணின் பிறப்புறுப்புக்களில் சுரக்கும் சுரப்பிகள் பல நோய் தொற்றுக்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. ஒழுங்காக குளித்து வந்தாலே நோய்த் தொற்றுக்கள் வர வாய்ப்பில்லை. அடுத்து இப்படியான பூச்சுக்களை தடவுவது பிறப்புறுக்களில் தேவையற்ற தொல்லைகளையும், நோய்களையும் கூட உண்டுப்பண்ண வாய்ப்புள்ளது. அதே போல ஒருவரின் இயற்கையான நிறத்தை எந்தவொரு பூச்சுக்களும் மாற்றிவிடாது, கன்னித் தன்மையையோ, இறுக்கங்களையோ வெறும் பூச்சுக்கள் கொடுத்துவிடாது.
சமூக ரீதியாக ஆராய்வோமானால் இதைப் போன்ற பூச்சுக்களால் பெண்களின் தன்னம்பிக்கை உயரப் போவதில்லை. கல்வியறிவு, வேலை வாய்ப்புக்கள் மற்றும் சமூக சம உரிமைகள் மட்டுமே பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தக் கூடியவை. இப்படியான முகத்தை, உடலை, பிறப்புறுப்பை வெள்ளையாகவோ அல்லது கன்னித் தன்மை பெற்றது போலவோ ஆக்கும் பூச்சுக்கள் வெறும் ஏமாற்று வேலை மட்டுமில்லாமல் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதோடு, ஆண்களுக்காக பலியாக்கப்படும் சரக்குப் பொருளாகவுமே பெண்களை மாற்றும்.
உங்களின் உண்மையான உடல் மற்றும் மனதை விரும்பக் கூடியவரே உண்மையான வாழ்க்கைத் துணைவர் ஆவார். அவரின் தேவைகளுக்காக உங்களின் உண்மை அடையாளங்களை மறைக்கவும், மாற்றவும் முற்படல் என்பது வேசித் தனமான ஒன்றாகும். சக மனிதனான ஆண்களும், பெண்களும் ஒருவரை மதிக்கவும், சமமாக அன்பு செலுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரின் தேவைக்களுக்காக மட்டும் இன்னொருவரின் அடையாளங்களைத் துறக்க வேண்டியதில்லை.
பெண்களுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிய ஆண்களே!
ஆண்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவெனில் மனிதன் என்பவர்களில் இவை ஒன்று மாத்திரம் உயர்வானது, மேன்மையானது என்றக் கருத்தியலை கைவிடுங்கள். உங்கள் முகங்களை முதலில் கண்ணாடிகளில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் – நீங்கள் எப்படி இருந்தாலும் ஏற்கும் மனோபாவம் பெண்களுக்கு இருப்பது போல அவள் எப்படி இருந்தாலும் ஏற்கும் மனோபாவம் உங்களுக்கு வரவேண்டும்.
பெண் என்பவள் ஆண்களின் அடிமையல்ல – உங்களுக்காக படுக்கையை பகிரவும், சம்பாதியத்தங்களை பகிரவும், உங்களின் தேவைகளையும், உங்களின் பிள்ளைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அட்சயப் பாத்திரம் இல்லை அவள். இரத்தமும், தசையும், சலமும், மலமும் கூடிய ஒரு மனிதப் பெண். அவளுக்கும் உணர்வுகள், ஆசைகள், சிந்தனைகள் இருக்கின்றன. அவள் ஒன்றும் ரோபோக்கள் இல்லையே !!!
ஊடகங்களின் வியாபார உத்திகளுக்கு பலியாகாதீர்கள்
திருமணத்தில் சக மனப் பொருத்தத்தை மட்டும் எதிர்ப்பாருங்கள் – நிறம், பணம், கல்வி போன்ற வேற்றுமைகளை தூக்கி எறியக் கற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக ஊடகங்களின் வியாபார உத்திகளுக்குள் பலியாகாதீர்கள். வெள்ளை நிறம் என்பது மானுடத்தின் ஒரு பகுதியே! நாம் அனைவரும் கலப்பினமானவர்கள் – வெள்ளை, கருப்பு, மாநிறம் என கலந்துவிட்டவர்கள்.
சினிமா, விளம்பரங்கள் காட்டும் வெள்ளை நிற மாயைகளில் சிக்கி சின்னா பின்னாமாகாதீர்கள். அழகும், இளமையும் ஒருக் காலக் கட்டம் வரைக்கும் தான். இறுதிக் காலங்களில் முதிர்ந்த வயதில் அழகும், இளமையும் இல்லாமல் போன பின்னர் வெறும் அன்பும், அரவணைப்புமே நிலையான ஒன்று என்பதை மறவாதீர்கள். இன்றைய இந்தியாவில் வெள்ளை நிற மேன்மை முகம் முதல் பிறப்புறுப்பு வரை என்பது அதிகாரத்தின் அடையாளம், அடக்குமுறையின் அடையாளம் இவற்றை தகர்த்தெறிய வேண்டியக் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றேன்.
கன்னித் தன்மை பேணும் என்று உளறும் இந்த கிரீம்களை வாங்கி ஏமாற வேண்டாம். ஏனெனில் பெண் எப்படிப் பட்டவளாக இருந்தாலும் ஏற்கும் மனோபாங்கு உடையவனே உண்மையான ஆண் மகன். ஒரு ஆண் மகனால் ஒரு போதும் ஒரு பெண் கன்னியா இல்லையா என்பதைக் கண்டுப் பிடிக்கவே முடியாது. எத்தனை எத்தனை கிரீம்கள் போட்டாலும், சர்ஜரிகள் செய்தாலும் கூட ஆணால் கண்டறியவே முடியாது. அதிகப் பட்சம் கன்னித் திரை கிழிதலையே கன்னித் தன்மையின் அளவுக் கோலாகி வைத்துள்ளனர். அதுவும் மாயையே ! ஏனெனில் கன்னித் தன்மை உடைய பெண்ணுக்கு குருதி வராமல் இருப்பதும் உண்டு – கன்னித் தன்மையற்ற பெண்ணுக்கு குருதி வருவதும் உண்டு, வர வைக்கவும் முடியும்.
ஆகவே! உடல் சார்ந்த கற்பு என்ற மாயை நிழலுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள். உடலைப் பகிர்ந்தாலும் மனதளவில் வேறு ஒருவரோடு பிணைப்புடன் இருந்தால் உடல் தரும் கற்பின் சுகம் எல்லாம் குப்பைத் தொட்டியே.
“மீண்டும் 18” (18 Again) என்ற இந்த பூச்சிற்கும், இதனை வெளியிட்ட அல்ட்ரா டெக் நிறுவனத்துக்கும் எமது கண்டனங்களை இங்கு பதிவு செய்யப்படுகின்றன.
source: www.masessaynotosexism.wordpress.com