மார்க்க அறிஞர்களே! இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன? (1)
எம்.ஏ.முஹம்மது அலீ B.A.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
மதரஸாக்களில் படிக்கின்ற காலத்தில் மார்க்கக்கல்வி மட்டுமின்றி மார்க்கத்திற்கு புறம்பான ஷிர்க், பித்அத் போன்ற விஷயங்களையும் கற்றுக்கொண்டு வெளிவரும் ஆலிம்களே இன்று அதிகம். இவர்கள் தங்களது ஆசிரியர்கள் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு சமுதாயப் பணிக்கு வருவதால் தாங்கள் கெட்டுப்போவது மல்லாமல் சமுதாயத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு விஷயத்தை மேலோட்டமாக சிந்தித்தாலே விளங்கிவிடும். சமீப காலமாக சில ஆலிம்கள்… அதிலும் குறிப்பாக முதுநிலை ஆலிம்கள் மக்களிடம் செல்லும்போது “மார்க்க விஷயத்தை எங்களிடம் விட்டுவிடுங்கள், ஒரு டாக்டருக்குத்தான் நோயாளிக்கு சரியான முறையில் ட்ரீட்மெண்ட் கொடுக்கத் தெரியும், ஒரு வக்கீலுக்குத்தான் வழக்கை நடத்தத்தெரியும் அதுபோல ஆலிம்களுக்குத்தான் மார்க்க விஷயங்களை சரியாக புரிந்து அதனை மக்களிடம் போதிக்க முடியும், எனவே மக்கள் மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் சொல்வதையே கேளுங்கள்” என்று எடுத்துரைப்பது வழக்கமாக உள்ளது. இந்த வாதம் மேலோட்டமாகப் பார்த்தால் சரியானதாவே தோன்றும் சிந்திக்காதவர்களுக்கு!
பொதுவாக இன்று “குர்ஆனையும் நபிவழியையும்தான் பின்பற்றுவேன்” என்று ஒருவர் சொன்னாலே அவரை தீண்டத்தகாதவன் போல் பார்க்கும் இவ்வறிஞர்கள் ஷைத்தானால் எந்த அளவு வழிகெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை நேர்மையான கண்ணோட்டத்தோடு சிந்தித்தால் புரியும்.
இன்று முஸ்லிம் மஹல்லாக்கள் மார்க்கத்தை சரிவர பேணாமல் -இருப்பதற்கும் “சமுதாயங்களிலேயே மிகச்சிறந்த சமுதாயம்” என்று ஏக இறைவனால் புகழ்த்துரைக்கப்பட்ட இந்த இஸ்லாமிய சமுதாயம் பிளவுபட்டு, கேவலப்பட்டு நிற்பதற்கு இவ்வாலிம்களே முக்கிய காரணமாக உள்ளனர் என்பது உண்மையிலும் உண்மை. மக்களின் உள்ளங்களில் “ஈமானை” வலுப்படுத்த வேண்டிய இவர்களின் ஈமானே பலமிழந்து கிடக்கும்போது இவர்களால் சமுதாயத்தை எவ்வாறு நேர்வழிப்படுத்த இயலும்?
சிறுவயது முதலே ஆலிம்களிடம் நெருக்கமாக பழகிவரும் காரணத்தால் அவர்கள் உள்ளத்தால் எவ்வளவு பலகீனமானவர்கள் என்பதை எம்மால் எடுத்துரைக்க முடியும். மிகச் சிலதை மட்டும் சமுதாய நன்னோக்கோடு இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
இன்று சமுதாயத்தில் பெரும் ஆலிம்கள் என்று வலம் வரும் பலரும் அல்லாஹ்வுக்கு “ஷிர்க்” வைப்பதில் கொஞ்சமும் தயக்கம் காட்டுவதே இல்லை. அல்லாஹ்விடம் உண்மையான முழுமையான உறுதியான நம்பிக்கையற்ற இவர்கள் அல்லாஹ்வின் படைப்பான “அவ்லியாக்களிடம்” வைத்திருக்கும் நம்பிக்கை மலைக்க வைக்கிறது.
இது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது அவர்களுக்குள்ள அவநம்பிக்கையே படம்பிடித்துக் காட்டுகிறது! திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தன்னை முழுமையாக நம்பும்படி சத்தியமிட்டு சொல்வதுகூட இவர்கள் உள்ளங்களில் பதியவில்லை. வேறுமனே சொற்பொழிவாற்றுவதற்கும் பத்திரிகைகளில் கட்டுரையாக வரைவதற்கு மட்டுமே அல்லாஹ்வின் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
“தீனுல் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்து விடுமாறு” அகிலத்தின் அதிபதி அல்லாஹ் தனது திருமறையில் விடுக்கும் அழைப்பை அலட்சியம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே! மார்க்கம் தெரியாத பாமரனைவிட இவர்களே இறைவனுக்கு மாறுசெய்வதில் முன்னணியில் இருக்கிறார்கள்.
எமக்கு பழக்கமான ஒரு ஆலிம். ஒரு மதரஸாவின் பெரும் பொறுப்பில் உள்ளவர், பலமுறை (அனேகமாக 5 க்கும் மேற்பட்ட) ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டு வந்தவர். மாதத்தில் சிலமுறையாவது வெளியூரிலுள்ள தர்ஹாவுக்குப்போய் வரவில்லையென்றால் அவருக்கு இருப்புக்கொள்ளாது.
ஹஜ்ஜுக்குப் போவதற்கு முன்னால் தர்ஹாவிற்கு சென்று பாதுகாப்பு கேட்கும் இவரைப்போன்றவர்கள் ஒரு ஹஜ்ஜு என்ன ஓராயிரம் ஹஜ்ஜு செய்தாலும் அதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது?. அடிக்கடி ஹஜ்ஜுக்குச்செல்லும் இவரைப் பார்க்கும்போது “அல்லாஹ் இவரது ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தான் திரும்பவும் திரும்பவும் இவரை ஹஜ்ஜு செய்ய வைக்கிறானோ என்னவோ!” என்று நாம் நினைப்பதுண்டு.
போவதோ அல்லாஹ்வின் இல்லமாம் கஃபாவிற்கு! ஆனால் நம்பிக்கையோ அவ்லியாவிடம்! ஏன் அவ்வளவு அவநம்பிக்கை அல்லாஹ்விடம்?! அல்லாஹ் அள்ளித்தெளித்திருக்கும் அழுத்தமான வாக்குறுதிகள் எதுவும் இவர்களின் உள்ளத்தில் பதியாமல் போனது விந்தையிலும் விந்தை.
இந்த அழகில் மார்க்க விஷயத்தை இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற புலம்பல் வேறு! ஸுப்ஹானல்லாஹ். புலம்பலுக்கு காரணம் மக்கள் கூட்டம் கூட்டமாக விழிப்புணர்வு பெற்று வருவதே! இவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இவர்களே தொலைத்துவிட்டதுதான் காரணம் என்பதை இன்னும் அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. முதலில் இவர்கள் மக்கள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு தங்களிடம் உள்ள குறைகளை சரிபடுத்திக்கொள்ளட்டும்.
அல்லாஹ்விடம் உறுதியான, உண்மையான, அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்க வேண்டிய இவர்கள் அதற்கு நேர் எதிராகவே உள்ளனர். இவர்களைப் போன்றவர்கள் தங்களது தோற்றத்தாலும், எழுத்தாற்றலாலும், சொற்பொழிவுகளாலும் மக்கள் முன் அறிஞர்களாக காட்சியளித்து தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொண்டு சமுதாயத்தையும் ஏமாற்றி வாழ்வதைவிட அல்லாஹ்விற்கு முன் உண்மையான நம்பிக்கையாளராக மாறவேண்டும் என்பதே நமது அவா, கோரிக்கை.
இப்படிப்பட்ட ஆலிம்களால் போதிக்கப்பட்டு “மூலை சலவை” செய்யப்பட்டு வெளிவரும் மாணவர்களால் சமுதாயம் எவ்வளவு பயங்கரமான ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது என்பதை கற்றறிந்த முஸ்லிம்கள் எண்ணிப்பார்த்து இதற்கான சரியான தீர்வை கொண்டுவராமல் இருப்பார்களேயானால் அல்லாஹ்விடம் முழுமையான நம்பிக்கையற்ற பலகீனமான ஈமானுடன் வெறும் சடங்காக மட்டுமே வணக்க வழிபாடுகளில் காலத்தை வீண்விரயம் செய்யும் கூட்டமாகவே எதிர்கால முஸ்லிம் சமுதாயம் தொடரும் என்பதை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தில் சிலதை மட்டுமே பின்பற்றி முக்கியமான சுன்னத்துகளைக்கூட அலட்சியம் செய்வது என்று சொல்வதைவிட அதை குழிதோண்டி புதைப்பதில்கூட இவ்வாலிம்கள் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள் என்று சொல்லலாம். காரணம் மக்களின் அறியாமை என்று சொல்வதைவிட ஆலிம்கள் என்றாலே மார்க்கத்தின் வழிகாட்டிகள் என்று அப்பாவித்தனமாக மக்கள் உள்ளத்தில் பதிந்துவிட்ட எண்ணம்தான்.
இவ்வாறு மக்களை ஜாஹிலிய்யாக்களாக வைத்திருப்பதற்கு அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் எது தெரியுமா? இறைவனின் மகத்துவம் வாய்ந்த அல்குர்ஆன்! ரமளான் மாதத்தில் சென்னையிலுள்ள ஒரு பள்ளியில் ஜும்ஆ தொழும் வாய்ப்பு கிடைத்தது. ஜும்ஆ பயான் செய்த ஓர் இளம் ஆலிம் தனது பயான் முழுக்க “குர்ஆன் மக்களுக்கு விளங்காது” என்பதையே தனது பேச்சின் முக்கிய கருவாக எடுத்துக்கொண்டு தனது மார்க்க அறிவு சூனியத்தை பகிரங்கப்படுத்தினார்.
அதுவும் எப்படிப்பட்ட காலத்தில், எப்படிப்பட்ட நேரத்தில்ல்ல்…?! ஏக இறைவனால் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட அந்த புனிதமிக்க ரமளான் மாதத்தில் போய் ஒருவர் “திருக்குர்ஆன் மக்களுக்கு விளங்காது” என்று பேசுவதைவிட கொடுமையான செயல் ஒன்று இருக்க முடியுமா சொல்லுங்கள்!
மக்களுக்கு எளிதாக விளங்கும் விதத்தில் இதனை அருளியுள்ளதாக அல்லாஹ் அதே திருமறையில் எடுத்துரைக்கும்போது இவரோ மக்களுக்கு விளங்காது என்கிறார். அதுவும் ரமளான் மாதத்தில் – ஜும்ஆ நேரத்தில்! எவ்வளவு பெரிய வரம்புமீறுதல்! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
இப்படி மக்களுக்கு புரியாது, விளங்காது என்று சொல்லிச்சொல்லியே மக்களை திருக்குர்ஆனை விட்டு தூரமாக்கி அதனை ஒரு சார்பாக மக்களிடம் போதிப்பதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள் இவ்வாலிம்கள். வெறுமனே அதை ஓதுவதற்கு மட்டுமே வற்புறுத்தி அதன் விளக்கத்தை தங்களிடம் மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துவதும் சரிதானா?
திருகுர்ஆன் கடல் போன்றது என்று சொல்வதைவிட அதனினினும் பன்மடங்கு கருத்துக்கருவூலங்களைக் கொண்டது. இதனை அந்த இறைவேதமே எடுத்துச்சொல்கிறது.
“(நபியே!) நீர் கூறுவீராக “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (18:109)
திருக்குர்ஆனிலுள்ள மருத்துவத்தைப்பற்றிய விஷயங்களை மதரஸாவிலிருந்து படித்து வெளிவரும் ஆலிம்கள் முழுமையாக என்று என்றுகூட அல்ல சிறிதளவுக்குக்கூட எடுத்துச் சொல்ல இயலாதவர்களாகவே உள்ளனர். காரணம் அதற்கான பாடதிட்டமே அங்கு இல்லை. எமது நண்பரொருவர் “திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்” மற்றும் “திருக்குர்ஆன் பாலியல் மருத்துவம்” போன்ற நூல்களை எழுதி அதனை சில பெரும் ஆலிம்களிடம் காண்பித்தபோது அவர்கள் வியந்துபோய் “எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது! இவரால் எப்படி இவ்வளவு அருமையாக திருக்குர்ஆன் வசனங்களுக்கு மருத்துவ ரீதியாக விளக்கமளிக்க முடிகிறது?” என்று எம்மிடமே சிலாகித்துக்கூறியதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். அந்த நண்பர் எந்த மதரஸாவிலும் கல்வி கற்றவரல்ல. கல்லூரியில் படித்தவர்.
அதுபோலவே விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விஷங்கள்! விஞ்ஞானம் குறித்து ஏராளமான விஷயங்களை ஆராய்ந்து அறிவதற்கு திருக்குர்ஆனில் இறைவசனங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இன்று இவற்றை ஆராய்ந்து வெளிக்கொண்டுவரும் சில எழுத்தாளர்களெல்லாம் மதரஸாவில் படித்தவர்கள் அல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ரஹ்மத் ராஜகுமாரன் எனும் பெயரில், சகோதரர் அப்துல் காதர் திருக்குர்ஆன் வசனங்களுக்கு கொடுக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்கும் எவரும் ஆச்சரியத்தின் விளிம்புக்கே செல்லாமல் இருக்க முடியாது. இவரும் எந்த மதரஸாவிலும் படித்தவரல்ல. இவர் ஒரு B.E. பட்டதாரி. விதிவிலக்காக திருக்குர்ஆனிலுள்ள விஞ்ஞானக் கருதுக்களை ஆராய்ச்சி செய்து கட்டுரை வரையக்கூடிய சில ஆலிம் பெருமக்களும் இருக்கவே செய்கின்றனர். உதாரணமாக மவ்லவி, கான் பாகவி அவர்கள், மவ்லவி, ஜஃப்ருல்லாஹ் நத்வி M.A. போன்றவர்களைக் குறிப்பிடலாம். இதில் மவ்லவி கான் பாகவி அவர்கள் மதரஸாவின் பாடத்திட்டங்களில் மாற்றம் தேவை என்பதை குறித்து வலியுறுத்தி வருபவர்கள் என்பதையும் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.