குடும்பம் என்ற நிறுவனமும், பெண்வகிக்கும் பாத்திரமும் (1)
இஸ்லாமிய வாழ்வில் குடும்பமே அடித்தளமாகும். அதன் பலம், சமூகத்தின் பலம். அதன் பலவீனமே சமூகத்தின் பலவீனம்.
இஸ்லாம் குடும்பத்தை எதிர்கால சந்ததியை உருவாக்கும் அடிப்படைத் நிறுவனமாகப் பார்க்கிறது. இந்தவகையில் அதனை சட்டங்களாலும், உபதேசங்களாலும், பல்வகை போதனைகளாலும் பலப்படுத்திக் கட்டமைக்கிறது. இந்த வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் இப்பகுதியில் ஆழ்ந்து கவனம் செலுத்தல் அவனது கடமையும், பொறுப்புமாகும். அதற்கான ஓரளவு விரிந்த விளக்கத்தைத் தருவதே நோக்கமாகும்.
அல்குர்ஆன் குடும்ப வாழ்வுக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. அக்கருத்தை கீழ்வருமாறு விளக்கலாம்.
1. குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள் அல்குர்ஆனில் மிக விரிவாக நன்கு தெளிவுபடுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் திருமணம் முடித்தல், விவாகரத்து, வாரிசுரிமை போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட சட்டங்களனைத்தும் விபர மாக தரப்பட்டுள்ளன.
கால, சமூக நிலைமைகளுக்கேற்ப மாறக்கூடிய பகுதிகளைப் பொறுத்தவரையில் அல்குர்ஆனில் விபரமாகவும், விளக்கமாகவும் தரமாட்டாது. சுருக்கமாகவும் கொள்கைகளாகவும், விதிகளாகவுமே அவற்றைத் தரும். பணக்கொடுக்கல் வாங்கல், ஆட்சி ஒழுங்குகள் பற்றிய சட்டங்கள் இதற்கு உதாரணங்களாகும்.
கால, இட, சமூக நிலைமைகளுக்கேற்ப மாறாத சட்டங்களைப் பொறுத்தவரை அல்குர்ஆன் அவற்றை விபரமாகவும், விரிவாகவும், மிகத் தெளிவாகவுமே தரும். நம்பிக்கையோடு சார்ந்த பகுதிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
குடும்ப வாழ்வுக்கான சட்ட திட்டங்களில் அல்குர்ஆன் எவ்வளவு ஆழ்ந்து கவனம் செலுத்துகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. குடும்ப வாழ்வோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள் மாறாது நிலைத்து நிற்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் கருத்து என்பதனை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.
2. குடும்ப சட்டங்களை நம்பிக்கை பகுதிகளோடு இணைத்து அல்குர்ஆன் பேசுவதை அவதானிக்க முடியும். இது குடும்ப சட்டங்களின் உயர்வையும், புனிதத்தன்மையையும் காட்டு வதோடு அது மிகப் பெரும் கடமை என்பதையும் உணர்த்துகிறது.
உதாரணம்: “ஆனால் நன்மை என்னவெனில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், மலக்குகளையும், வேதத்தையும், நபிமார்களையும், ஒருவர் ஈமான் கொண்டு செல்வத்தை அதன்மீது பற்றிருந்த போதும் உறவினருக்கும், அநாதைகளுக்கும் கொடுப்பதாகும். (அல்குர்ஆன்- ஸூறா அல் பகரா 177)
“மறுமை நாளைப் பொய்ப்படுத்துபவரை நீர் அவதானித்தீரா? அவன்தான் அநாதையைக் கொடுமைப்படுத்துகிறான்.” (அல்குர்ஆன்- ஸூரா மாஊன்)
“உமது இரட்சகன் அவைனையன்றி யாரையும் வணங்கக் கூடாதென்றும் பெற்றோர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமெனவும் விதியாக்கினான்.” (அல்குர்ஆன்- இஸ்ரா-23)
3. அல்குர்ஆன் குடும்பத்தை அல்லாஹ்வின் அத்தாட்சி என வர்ணிக்கிறது. “நீங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காக உங்களிலிருந்து உங்களது சோடியைப் படைத்துள்ளமை அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும்.” (அல்குர்ஆன்- ஸூரா ரூம்-21)
அல்குர்ஆன் குடும்ப வாழ்வுக்கு இவ்வளவு பாரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனின் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும்போது அதன் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது. ஏனெனில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் சிந்தனை மற்றும் கலாச்சார பாதிப்புக்கு உட்படுவர். அத்தோடு இஸ்லாமிய வாழ் வமைப்பும், இஸ்லாமிய சிந்தனையை ஆழ்ந்து படிப்பதற்கான வாய்ப்பும், வசதிகளும் இந்நிலையில் மிகக் குறைவாகவே இருக்கும். இத்தகைய சூழலில் முஸ்லிம்களை ஆளுமை சிதைவடையாது காக்கும் முதன்மையான முதல் நிறுவனம் குடும்பம் என்பதில் சந்தேகமில்லை.
இப்பின்னணியில் முஸ்லிம்கள் குடும்ப அமைப்பையும், அதன் கட்டமைப்பையும் வளர்ப்பதிலும்,காப்பதிலும் அவர்கள் சிறு பான்மையாக வாழும் நிலையில் அதிகூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் நிறுவன ஒழுங்குகள் அவர்களிடம் பலம் பெற்றுக் காணப்படுவது அவசியம். சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் ஓரளவு முழுமை யான முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் உள்ளது இந்தக் குடும்ப அமைப்பு மட்டுமே என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய தொரு விடயமாகும்.
எமது சமூக வாழ்வில் குடும்பம் :
உண்மை மேலே விவரித்த வகையில் இருந்தாலும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் குடும்ப வாழ்வு என்பது படிப்படியாகச் சிதைவுற்று செல்வதனை அதவதானிக்க முடிகிறது. அதைப்பற்றிய துல்லியமான முறையான கணிப்பீடுகள் எதுவும் காணப்படா விட்டாலும் முஸ்லிம் சமூகத்தின் பேசு பொருளாக அது மாறியுள்ளது உண்மை. காழி நீதிமன்றங்களை அணுகி விசாரிக்கும் போதும் சமூக உழைப்புக்கான தனி மனிதர்கள், அமைப்புக்கள், இயக்கங் களை அணுகி விசாரிக்கும் போதும் இந்நிலைமை மிகத் தெளிவாக தெரிகிறது, உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு சிதைவுற்று வரும் அமைப்பை கீழ்வருமாறு பிரித்து விளக்கலாம்.
1. விவாகரத்து மிக அதிகரித்துள்ளமை :
நகரம், கிராமம் எனப்பாராது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் இது அதிகரித்துள்ளமை அவதானிக்கப்படுகிறது. விவாகரத்தில போய் முடியாத குடும்பங்களில் கூட சுமுகமான உறவின்மை மிகப் பரவலாக அவதானிக்கப்படும் உண்மை.
2. பிற சமூகத்தவரைத் திருமணம் முடித்தல் :
குறிப்பாக மாற்று மதத்தவரை திருமணம் முடித்தல் படிப்படியாக கூடி வருகிறது. பல கிராமங்கள், பிரதேசங்களில் இது பிரச்சினையாகப் போய் அது பற்றிய கலந்துரையாடல்களும், கூட்டங்களும் நடந்துள்ளன. ஆயினும் இன்னும் பல பகுதிகளில் இப் பிரச்சினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதோடு இதற்கான சரியான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாகும்.
3. இரத்தஉறவு முறையாகப் பேணப்படாமை :
மிக நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலேயே கடும் பிரச்சினைகள் காணப்படு வதையும் உறவுகள் முழுமையாக முறிந்து போயுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. உறவு முறிவோ கோபதாபமோ இல்லாத போதும் நெருங்கிய உறவுகளற்று தொடர்பற்று வாழும் நிலை மையை பரவலாக அவதானிக்க முடியும்.
இப்பகுதியில் மாமி-மருமகள், மைனி-மைனி ஒட்டுறவாட முடி யாமையும் அதனால் கணவன் மனைவி தொடர்பிலோ அல்லது இரத்த உறவு தொடர்பிலோ கடும் விரிசல் உருவாவதும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மிகவும் பரவலாக அவதானிக் கப்படும் விடயமாகும்.
4. பிள்ளை வளர்ப்பு
முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்தியில் காணப்படும் குற்றச் செயல்கள், அறிவு தேடும் ஆர்வமின்மை, இஸ்லாமிய வாழ்வி லிருந்து தூரமாக இருத்தல் என்பதற்கான முதன்மையான காரணம் பிள்ளை வளர்ப்பு முறையாக இன்மையே எனின் அது மிகையாகக் கூறியதாகாது.
5. திருமணம் முடித்தலில் காணப்படும் தவறுகள்
கணவன், மனைவி தெரிவில் பெரும்பாலும் பணமும் அந்தஸ்துமே மிக முதன்மையான இடத்தைப் பெறுகிறது. உடலியல் ஒருமைப்பாடு, மன, அறிவுத்தர பொருத்தப்பாடு என்பன இங்கு இரண்டாம் இடத்தையே பெறுகிறது. மார்க்க அறிவு, பக்குவமான நடத்தை என்பனவும் இங்கு முதன்மையான இடத்தைப் பெறுவதில்லை. இன்னொரு பக்கத்தால் திருமணம் முடித்தல் என்பது மிகக் கடினமான ஒரு விடயமாக மாறிப் போகியுள்ளது. சீதனம் என்ற பெயரில் பெண்ணிடமிருந்து பெறப்படும் கைக்கூலி, திருமணத்திற்கான செலவினம் என இலட்சக்கணக்கில் செலவிடல் என்பன வயது போயும் திரு மணம் முடிக்காத பல பெண்களை உருவாக்கியுள்ளது. இது பல வகைத் தீமைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதில் சந்தேக மில்லை.
இவையே இலங்கை முஸ்லிம்களின் குடும்பவாழ்வில் காணப்படும் அடிப்படையான பிரச்சினைகள். இவையே குடும்ப வாழ்வை அரித்து வரும் நோயாக மாறிப்போயுள்ளது. சரியானதொரு கணக்கெடுப்பு இப்பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுமானால் பிரச்சினையின் பாரதூரத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எனினும் இப்பிரச்சினைகள் காணப் படுவது உண்மை. அவை பாரதூரமாக காணப்படுகிறது என்பதுவும் யதார்த்தம். எனவே இப்பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகாண முடியும் என சிந்திப்பது மிக அடிப்படையானது. அது பற்றிய சில அபிப்பிராயங்களையே அடுத்து விளக்க முயல்கிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்து நாம் இங்கே விளக்கவில்லை. சில பொதுவான தீர்வுகளையே இங்கு நாம் முன்வைத்திருக்கிறோம். அது எமது புத்திஜீவிகளின் கவனயீர்ப்பை பெற வேண்டுமென பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
குடும்பம் சீரமைவதற்கான தீர்வுகள் :
குடும்பவாழ்வின் சீர்குலைவை சீர்படுத்தவும், குடும்பத்தைப் பலப்படுத்தவும் இங்கு சில தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை ஓரளவு விளக்கமாகச் சொல்ல இங்கு முயற்ச்சிக் கப்படுகின்றது.
இஸ்லாம் முழுமையாக இயங்கல் :
இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத்திட்டம். அது பூரணமாக நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் உரிய பயனைக் கொடுக் கும். முஸ்லிம் அல்லாத சமூகத்தில் ஒரு பகுதியை மட்டும் நடைமுறைப்படுத்தும் போது அது போதிய உரிய பயனைக் கொடுக் காது. அதாவது இஸ்லாத்தின் எல்லாப் பகுதிகளும் சேர்ந்தியங்க வேண்டும். ஒன்றோ இரண்டோ இயங்க ஏனைய பகுதிகள் அறுந்து காணப்பட்டால் இஸ்லாம் பயன் கொடுப்பது சாத்தியமில்லை.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தால் இஸ்லாத்தை மிகப் பூரணமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பது உண்மையே. எனினும் இஸ்லாத்தின் பெரும்பகுதியொன்றை எம்மால் நடைமுறைப்படுத்த முடியும். தனியார் சட்டப்பகுதியை முழுமை யாக எம்மால் நடைமுறைப்படுத்த முடியும். ஓரளவு அதிகாரம் கொண்ட நீதிமன்றம் இப்போது காணப்படுகின்றது. அதனை அரசியல்ரீதியான செயற்பாடுகள் ஊடாக ஓரளவு முழுமைப் படுத்திக் கொள்வது சாத்தியம்.
பொருளாதாரப் பகுதியில் 3 பகுதிகளை முழுமையாக நடைமுறைப் படுத்த முடியும். ஒவ்வொரு ஆண் மீதும் செலவழித்தல் கடமை யாகும் பகுதி, இரண்டாவது ஸகாத் நிறுவன அமைப்பு, மூன்றாவது வாரிசுரிமைச் சட்டப் பகுதி. இவற்றோடு இணைந்து பலவகையான தான தர்மங்கள் ஊக்குவிக்கப்படும் போது பொருளாதாரப் பகுதி பலம் பெற்றமையும் அவற்றில் குறிப்பாக ‘வக்பு’ என்ற ஸதகா ஒழுங்கு உயிர் பெறல் மிகப் பெரிய பயனைக் கொடுக்கும். திருமணத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையே நெருங்கிய உறவுண்டு. பொருளாதாரரீதியாக குடும்பம் பலம் பெறும் போது அது திருமணத்தின் முன்னே எழும் பொருளாதாரத் தடைகளை நீக்கும். திருமணம் முடித்து வாழ்வைக் கொண்டு செல்ல முடியாதோருக்கு சீதனம் வாங்கும் நிலையை ஏற்படுத்தாது. வேறு வகையான பொருளாதார உதவிகளைப் பெரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் சீதனப் பழக்கத்தை ஓரளவு மட்டுப் படுத்த இது உதவும்.
சட்டங்கள் நடைமுறையாவதில் அதிகாரத்திற்கு ஒரு பங்குள்ளது என்பதில் சந்தேகமில்லை. இங்கு அது காழி நீதி மன்றங்கள் எனக் குறிப்பிட்டோம். அவை பூரண அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களாக மாறும்போது குடும்பத்தைக் காப்பதில் ஒரு நல்ல பங்களிப்பை அதனால் செய்ய முடியும். அத்தோடு கட்டுக்கோப்பான கிராமிய சமூகக்கட்டமைப்பைக் கொண்டமையும் பொதுசன அபிப்பிராயம் என்ற அதிகாரமும் ஒரு சிறந்த பங்களிப்பைக் கொடுக்க முடியும்.
முஸ்லிம் சமூகத்தின் மிக முக்கியமான அடிப்படையும், இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையாவதில் பெரும் பங்களிப்பு செய்வதும் ஆன்மீக அடிப்படையாகும். இறைதிருப்தி, இறைபயம், இறை யன்பு என்பன உள்ளங்களில் நன்கு திட்டமிட்டு வளர்க்கப்படும் போது இஸ்லாமிய சட்டங்கள் இலகுவாக நடைமுறையாகும். இப்பின்னணியிற்தான் அல்குர்ஆனின் சட்டவசனங்களோடு இறை பயம் பற்றி வலியுறுத்தும் வசனங்களை நிறையவே காண்கிறோம். குறிப்பாக குடும்பவாழ்வோடு சம்பந்தப்படும் சட்டவசனங்கள் வரும் போதும் இதனை அவதானிக்க முடிகிறது. உதராணத்திற்கு கீழ் வரும் வசனங்கள் தரப்படுகின்றன.
இணைவைப்பவர்களான பெண்களையோ, ஆண்களையோ திருமணம் முடிக்க வேண்டாமென கூற வரும் வசனங்கள் கீழ் வருமாறு அமைகின்றன.
“இறை நம்பிக்கை கொண்டவர்களாக ஆகும் வரை இணைவைப் பாளர்களான பெண்களை மணக்காதீர்கள். உங்களுக்குத் கவர்ச்சியாக தெரிந்தாலும் இணைவைப்பில் ஈடுபடும் பெண்னை விட நிச்சயமாக ஒரு முஃமினான அடிமைப் பெண் சிறந்தவள்.”
“இணைவைப்பாளனான ஆணுக்கு அவன் இறை நம்பிக்கையாள னாக ஆகும் வரை மணமுடித்துக் கொடுக்காதீர்கள். உங்களுக்கு கவர்ச்சியாக தெரிந்தாலும் இணைவைப்பாளனை விட நிச்சயமாக ஒரு முஃமினான அடிமை சிறந்தவன். அவர்கள் நரகின் பக்கம் அழைக்கிறார்கள் அல்லாஹ்வோ தன் உத்தரவின் மூலம் சுவர்க்கம் நோக்கியும் பாவமன்னிப்பு நோக்கியும் அழைக்கிறான்.” (அல்குர்ஆன்- ஸூரா அல்-பகரா 221)
பகராவின் 225 வசனம் முதல் விவாக முறிவு சமபந்தமாக விளக்கி வந்துவிட்டு 230 ஆம் வசனத்தை முடிக்கும் அல்குர்ஆன் கீழ்வரு மாறு கூறுகிறது.
“அவை அல்லாஹ்வின் வரையறைகள் அறிவுள்ளோருக்காக அவற்றை அல்லாஹ் விளக்கியிருக்கிறான்.”
அதற்கடுத்த 231வது வசனத்தில் விவாகரத்து செய்துவிட்டு அதனூ டாக மனைவிக்கு தீங்கேற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறிவிட்டுக் கீழ் வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“யார் அவ்வாறு செய்கிறாரோ அவர் தனக்குத்தானே அநியாயம் செய்துகொள்கிறார். அல்லாஹ்வின் வசனங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருளை யும், இறக்கிவைத்துள்ள வேதத்தையும், ஞானத்தையும் நினைவு கூறுங்கள். இதனை அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ் வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.”
குடும்ப உறவோடு சம்பந்தப்பட்ட பல சட்டங்களை ஸூரா நிஸா சொல்கிறது. அதனை ஆரம்பித்து வைக்கும் முதலாவது வசனத்தின் இறுதிப்பகுதி கீழ்வருமாறு:
“நீங்கள் எந்த அல்லாஹ்வை வைத்து உங்கள் விவகாரங்களைப் பேசுகின்றீர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்த உறவுகளையும் பயந்து கொள்ளுங்கள்.”
இங்கு இறை பயத்தையும், இரத்த உறவினர் விடயத்தில் பயந்து நடந்துகொள்ளலையும் ஒன்றாகச் சொல்லும் அல்குர்ஆனின் பிரயோகம் அவதானிக்கத்தக்கது.
இதே ஸூராவின் 11,12ம் வசனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் பற்றி விளக்கமாகச் சொல்கிறது. 13, 14ம் வசனங்கள் அவை அல்லாஹ் வின் வரையரைகள் என ஆரம்பித்து அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படல் சுவர்க்கம் செல்லக் காரணமாகும் எனக் கூறிவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யார் மாறு செய்து அவனது வரையறைகளையும் மீறுகிறாரோ அவர் நிரந்தரமாக நரகில் நுழையச் செய்யப்படுவார் என விளக்குகிறது.
இவ்வாறு அல்குர்ஆன் முழுவதிலும் குடும்ப வாழ்வின் சட்ட திட்டங்களை விளக்கும்போது இப்போக்கை அவதானிக்க முடியும். ஸூரா தலாக்கில் திரும்பத் திரும்ப ஒவ்வொரு சட்டத்தைச் சொன்னதன் பின்னரும், இறைபயம் பற்றியும் அல்லாஹ் தரும் கூலி பற்றியும் விளக்குவதை அவதானிக்கலாம். 12 நீண்ட வசனங்களைக் கொண்ட அந்த ஸூராவில் விவாகரத்தோடு சம்பந்தப்படும் 5 வசனங்கள் மட்டுமே உள்ளன. அந்த சட்டங்களை விட உபதேசங் கள் அங்கு அதிகம்.
இதனூடாக அல்குர்ஆன் ஆன்மீகரீதியாக பக்குவப்படலை மிக வலியுறுத்துகிறது என்ற கருத்து பெறப்படுகின்றது. இஸ்லாத்தில் நம்பிக்கைப் பகுதியும் வணக்கவழிபாடுகள் பகுதியும் பற்றிய நல்ல அறிவுத் தெளிவோடு மக்கள் அப்பகுதியில் மிகவும் கவனமாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அத்தோடு இஸ்லாம் வணக்க வழிபாட்டோடு நின்றுவிடும் மார்க்க மல்ல வாழ்வின் எல்லாப்பகுதிக்கும் அது வழிகாட்டுகிறது. ஈமான் என்பது வாழ்வின் எல்லாப் பகுதியிலும் ஊடுருவி நிற்கிறது என்ற உண்மையும் மிக நன்றாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான பயிற்சிக்கான பாடத்திட்டம், நிறுவன ஒழுங்குகள் முஸ்லிம் சமூகத்தில் மிகச் சரியாக உருவாக்கப்படுவதன் அவசியத் தையும், இருக்கும் நிறுவனங்களில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி பலப்படுத்துவதன் அவசியத்தையும் இது வேண்டி நிற்கிறது.
தெரிவின் போது மார்க்க உணர்வு, நடத்தையை விட ஏனைய வற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்தல், சீதனப் பிரச்சினை, பெரும் செலவோடு திருமண வைபவத்தை நடாத்தல் போன்ற திருமணத் தில் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளுக்கு முதல் தீர்வு இதுவே.
சீதனப் பிரச்சினைக்கு பொருளாதார வசதியின்மை மட்டும் காரண மல்ல. டாக்டர், வழக்கறிஞர், பெரும் பணக்காரன் போன்ற வசதியுள்ளவனே சீதனத்தையும அதிகமாகக் கேட்கிறான். எனவே தீர்வு திருமணம் முடிப்பவர்களுக்கான பொருளாதார உதவி செய்வது மட்டுமல்ல, அத்தோடு சீதனம் ஹறாம் என்பதுவும் பரவலாகத் தெரிந்திருக்கிறது. இங்குள்ள அடிப்படைக் குறைபாடு இறைபயம் இன்மை, மறுமை நாள் பற்றிய அச்சமின்மையே. தெரிவின் போது ஏற்படும் தவறு, ஆடம்பரக் கல்யாணம் என்ற பிழைகளும் இதே வகையானதுதான். அந்நிய சமுதாயத்தினரைத் திருமணம் முடிப்பதற்கான தீர்வும் இதுவே. இறைபயமும் மறுமையைப் பற்றி நம்பிக்கையும் உறுதியாக இருக்கும் யாரும் இறை நிராகரிப்போடு உறவாடச் செல்ல மாட்டான். ஒரே கட்டிலில் எவ்வாறு ஈமானும் குப்ரும் இணைந்திருக்க முடியும். எனவே இங்குள்ள முதல் பிரச்சினை ஈமானியப் பலவீனமே.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.