குடும்பம்என்ற நிறுவனமும், பெண்வகிக்கும் பாத்திரமும் (3)
ஆணின் உடல் தேவையை நிறைவு செய்தல்
காம உணர்வு மனிதனின் வீரியமிக்க அடிப்படை உணர்வுகளில் ஒன்று. அது மிக அடிப்படையானதொரு பௌதீகத் தேவை. திருமணத்தின் மூலம் அதற்கு சரியானதொரு வடிகாலமைக்கப்படுகிறது. ஆண், பெண்ணின் இத்தேவையை நிறைவு செய்தலும், பெண், ஆணின் இத்தேவையைப் பூர்த்தி செய்தலும் மிகவும் அடிப்படையானதாகும்.
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணின் இத்தேவையைப் பூர்த்தி செய்தலை மிகவும் வலியுறுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக கீழே இரண்டொரு ஹதீஸ்களைத் தருகிறோம்.
“ஒரு பெண் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது போகாதிருக்கிறாள். அவள் மீது கோபத்துடன் கணவன் இரவைக் கழிக்கிறான் இந்நிலையில் காலையாகும் வரை மலாயிக்கத்துகள் அவளுக்கு சாபமிடுகிறார்கள்” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: ஸஹீஹ் அல் புஹாரி, முஸ்லிம்)
“காலம் தாழ்த்தும் பெண்களுக்கு அல்லாஹ் சாபமிடுகிறான்: அதாவது அவள் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அவனோ தூக்கம் மிகைத்து விடத் தூங்கிப் போகிறான்” (நூல்கள்: அல்-தபரானி- அல்-அவ்ஸத், அல்-கபீர்)
காம உணர்வைப் பொறுத்தவரையில் ஆண் பெண்ணைவிடப் பலவீனமானவன். இன்னொருபக்கத்தால் சமூகத்தில் உலாவுபவன். பல்வேறு பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு மிக அதிகம். எனவே தனது மனைவியிடம் தன் காம உணர்வுத்தேவையை அவனால் நிறைவு செய்துகொள்ள முடியாது போனால் அவன் இப் பகுதியில் நெறிபிறழ மிகவும் சந்தர்ப்பமுள்ளது. சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தில் வாழும் ஆண் இன்னும் அபாயத்துக் குள்ளாகிறான். அத்தோடு நாம் வாழும் இக்காலப்பிரிவு ஆபாசம் மிகவும் கூடிவிட்ட காலப்பிரிவு, இவ்வாறு காம உணர்வுத் தூண்டுதலுக்கான மிக அதிகமான சந்தர்ப்பங்களைக் கொண்டுள்ள இக் காலப்பிரிவில் பெண் மிக முக்கிய கவனத்தை இப்பகுதியில் செலுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
இப்பகுதியில் பெண் இரு விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
1. தனது உடலை கவர்ச்சியாகவும், இயன்றளவு கட்டுக் குலையாமலும் வைத்துக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தல் வேண்டும். இப்பகுதியில் இறைதூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் கீழ் வரும் ஹதீஸ் அவதானிக்கத்தக்கது.
“பெண்ணின் சிறந்தவள் அவளை நீ பார்த்தால் அவள் உனக்கு சந்தோஷத்தைத் தருவாள்…” (நூல்: ஸூனன் நஸாயி)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் பக்ரா பின்த உக்பா என்ற பெண் வந்தார். மருதோண்டி பற்றிக் கேட்டார். அது மிகச் சிறந்த மரம், மிகத் தூய்மையான நீர் என ஆயிஷா அப்போது கூறினார். முடிகளை நீக்குவது பற்றி அப்போது அப்பெண் கேட்டார். உனக்கு கணவன் இருந்தால் உன் கண்களிரண்டை பிடுங்கி விட்டு அவ்விடங்களில் அதனை விட அழகான கண்களை வைக்க முடியுமானாலும் செய் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்.
2. உடலுறவோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றிய அறிவு பெற்றி ருத்தல். இது ஒரு அருவருப்பான விடயமோ, ஹராமானதோ அல்ல. உடலுறவை அசிங்கமாகக் கருதுவதும், அவ்விடயத்தில் பொடுபோக்காக இருப்பதுமே கணவனை ஹராமான வழிகளுக்கு இட்டுச்செல்லும்.
ஏற்கனவே நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட உங்களிலிருந்து உங்கள் சோடிகளை அதனிடம் அமைதிகாண படைத்தான் என்ற இறை வசனம் இக்கருத்தையும் உணர்த்துகிறது. அதாவது அமைதி காணுவதில் காம உணர்வு முறையாக தீர்க்கப்படலும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது என்பது உணரப்பட வேண்டும்.
எமது சமூக அமைப்பில் காணப்படும் பெரும் பிரச்சினை என்ன வெனில் குறிப்பாக திருமணம் முடித்ததன் பின்னர் பெண்கள் தமது அழகு, உடற்கட்டு என்பவற்றில் கவனம் செலுத்துவதில்லை.
வீட்டில் இருக்கும் போது அவர்கள் தம்மை அலங்கரித்து கவர்ச்சியாக வைத்துக் கொள்வதில்லை. ஓரிரு பிள்ளைகளோடு அவர்களது உடற்கட்டு உடைந்து போகும். வீட்டில் இருக்கும் போது அலங்கோலமாகவே அவர்களிருப்பர். அத்தோடு உடலுறவும் அதனோடு சம்பந்தப்பட்ட அறிவும் எமது பெண்களைப் பொறுத்த வரையில் மிகக் குறைவு. ஒரு கணவன் முன்னால் தன்னை அலங் கரித்துக் கொள்ளாமை பாவம். கணவனின் வழிபிறழ்வுக்கு அது காரணமாகும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
பொருளாதாரப் பகுதி
செலவழிப்பதற்குப் பொறுப்பாக இருப்பவன் கணவன். என்றாலும் மனைவிதான் வீட்டுச் செலவினங்களை நெறிப்படுத்துகிறாள். அந்த வகையில் வீட்டின் செலவினங்களை கணவனின் வருமானத் திற்கேற்ப நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துவது மனைவியரின் பொறுப் பாகிறது. செல்வ நிலையாயின் ஆடம்பர மோகமின்றி கவனமாகப் பணத்தைக் கையாளும் போக்கும் வறுமை நிலையாயின் பொறுமை யுடனும், சகிப்புத்தன்மையுடனும் வாழும் திறனும் மனைவிக்கு இருக்க வேண்டும். இவ்வாறு கணவனின் செல்வத்தை மிகவும் கவனமாக பாதுகாக்கும் திறன் அவளுக்கு இருக்க வேண்டும்.
அத்தோடு கணவன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் செலவழிக்க கடமைப்படுகிறானே தவிர அவனது சொத்து விவகாரங்களில் தலையிடவோ, அவனது உறவினர்களுக்காக செலவிடுவதில் தலையிடவோ மனைவிக்கு உரிமை இல்லை. என்பதை அவள் உணர்ந்து கொள்ள வேண்டும். மனைவியின் சொத்தில் கணவனுக்கு தலையிட எந்தவிதமான உரிமையுமில்லை என்பதும் இங்கு கவனிக் கத்தக்கது.
கணவனின் சொத்தைப் பாதுகாப்பதும் ஒரு மனைவியின் பொறுப்பு என்பதையும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
“நான்கு விடயங்கள் யாருக்குக் கிடைக்கப்பெறுகிறதோ அவர் உலக, மறுமையின் நன்மையைப் பெற்றவராகின்றார்.
நன்றி செலுத்தும் உள்ளம்,
இறை நினைவு கூறும் நாவு,
சோதனைகளின் போது பொறுமையாக உள்ள உடம்பு,
தன்னிலோ, கணவனின் சொத்திலோ பாவகாரியங்களை நாடாத மனைவி. (தபரானி – அல்கபீர், அல்-அவ்ஸத்)
மூன்றுவிடயங்கள் மனிதனின் சந்தோஷ வாழ்வுக்கு காரணமாகும் எனக் கூறிய இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற்றில் முதலாவதைக் கீழ்வறு மாறு கூறினார்கள்.
“நீ பார்த்தால் உன்னைக் கவரக் கூடிய, நீ இல்லாத போது தன்னையும், தனது செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய மனைவி. (அல்-ஹாகிம் – முஸ்தத்ரக்)
உறவாடலில் ஏற்படும் தவறுகள், காம உணர்வை தீர்த்துக் கொள்வதில் வரும் குழப்ப நிலைகள், பண, செலவு விவகாரங்களில் ஏற்படும் முரண்பாடுகள் என்ற நாம் விளக்கிய இம் மூன்று விடயங்களுமே விவாகரத்திற்கான முதன்மையான காரணிகளாகின்றன. விவாகரத்தில் போய் முடியாவிட்டாலும் நிறைய குடும்பங்களில் காணப்படும் முரண்பாடுகள், ஸ்திரமற்ற நிலைமை, பிரச்சினை களுக்கு இம்மூன்றுமே முதன்மையான காரணங்களாகின்றன.
பிள்ளை வளர்ப்பு
பெண்ணின் மென்மையும் உணர்ச்சிபூர்வமான மனநிலையும் பலவீனமிக்க குழந்தைக்கு அமைதியையும், அருளையும், ஏனைய மனத் தேவைகளையும் கொடுக்கும். முதல் ஐந்து வருடங்களில் பிள்ளை தாயுடனேயே மிக நெருக்கமாக இருக்கும். அவளின் மடியிலேயே ஒன்றி வாழும். மிக ஆரம்ப முதல் இரண்டு வருடங்களில் தாய்தான் பிள்ளையின் உலகம். இக்காலப் பிரிவில் வளர்த்தலில் தந்தையின் பங்களிப்பு குறைவானது. இப்பின்னணியில்தான் ஏதாவதொரு காரணத்தால் கணவனை இழக்க வேண்டி ஏற்பட்டால் வளர்க்கும் பொறுப்பு பெண்ணிடம் விடப்பட வேண்டு மென இஸ்லாமிய சட்டம் கூறுகின்றது.
மனோ தத்துவியல் அறிஞர்கள் பிள்ளையின் முதல் ஐந்து வருடங்களே அதிமுக்கியப் பருவம் என்கிறார்கள். இப்பின்னணியில் பிள்ளை வளர்ப்பு என்ற மிக முக்கியமான பணி பெண்ணிடம் விடப்படுகிறது. இன்றைய எமது சமூக வாழ்வில் ஆண்களின் வேலைப்பளுவையும், உழைப்பையும், வீட்டைவிட்டுத் தூரமாகி பல மணித்தியாலங்கள், நாட்கள், வருடங்கள் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது பெண்ணின் பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது. அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
பிள்ளை வளர்ப்பு என்பதன் பொருள் அடுத்த சந்ததியினரை உருவாக்கல் என்பதாகும். அதாவது ஒரு சமூகத்தின் எதிர்காலமே குடும்பம் என்ற கட்டமைப்பிடம் கொடுக்கப்படுகிறது. அதில் மிகப் பிரதான பங்கை வகிப்பவர் பெண்களாகிறார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் போராட்ட வரலாற்றில் யூதர்கள் பலஸ்தீனுக்குப் போராட வருவதை அவர்களது கோழைத்தனத்தாலும், அடிமை மனப்பாங்காலும் மறுத்தபோது அல்லாஹ் 40 வருடகாலம் சினாய்ப் பாலைவனத்தில் வாழவிட்டுவிட்டான்.
அதாவது புதியதொரு சந்ததியை உருவாக்கலே அங்கு தீர்வாக முன் வைக்கப்பட்டது.
இது குடும்பம் எவ்வாறு காத்திரமான பணியை செய்ய முடியும் என்ற உண்மையை எடுத்து உணர்த்துகிறது.
ஒரு மனிதனை உள்ளம், உடல், ஆன்மா என்பவற்றின் ஊடாக வளர்த்தெடுப்பதென்பது மிகவும் பாரிய பணி. ஒரு தாய் அப்பணியையே செய்கிறாள் அல்லது செய்ய வேண்டும் இந்த வகையில் பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. ஜாஹிலிய்யத் சூழலில் அதுவும் சிறுபான்மை சூழலில் அது ஒரு மிகப் பொறுப்பான பணியாகிறது.
அறிவும் ஆன்மீக நடத்தையும், பிள்ளை வளர்ப்பு பற்றிய மனோ தத்ததுவ அறிவும், பிள்ளை வளர்ப்புக்கான உத்திகள் பற்றிய தெளிவும் உள்ள ஒரு பெண்னே இதனை சாதிக்க முடியும்.
ஏற்கனவே விளக்கப்பட்டுள்ள கணவனோடுள்ள தொடர்புகள் சீராக இருக்கும் போது தான் ஒரு நல்ல தாயை நாம் பெற முடியும் என்ற உண்மையை இங்கு மறந்து விடக் கூடாது.
எவ்வாறிருந்த போதும் குடும்பம் என்ற நிறுவனத்தின் இலக்கு எதிர்கால சந்ததியை உருவாக்கலேயாகும். எனவே அப்பெரும் பணியை செய்யும் தகுதி படைத்தவர்களாகப் பெண் பயிற்று விக்கப்படல் மிகவும் அத்தியவசியமாகும்.
குடும்ப உறவுகள்
சமூக வாழ்வை குடும்பம் என்ற அலகுகளை இணைத்துக் கட்டியெழுப்பும் இஸ்லாம், குடும்ப உறவுகள் மீது கூடுதல் கரிசனை காட்டுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை மிகவும் வலியுறுத்தி விளக்கியுள்ளார்கள். உதாரணத்திற்கு சில ஹதீஸ்களை நோக்குவோம்.
அம்ரிப்னு அபஸா அறிவிக்கும் நீண்ட ஹதீஸில் ஒரு பகுதி வருமாறு நான் நுபுவ்வத்தின் ஆரம்பகாலத்தில் மக்காவில் வைத்து இறைதூதரிடம் சென்றேன். இறை தூதரிடம் வினவினேன்:
நீங்கள் யார்?
இறைதூதர்: நான் நபி.
அம்ர் இப்னு அபஸா: நபி என்றால் யார்?
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : அல்லாஹ் என்னை அனுப்பி வைத்தான்.
அம்ர் இப்னு அபஸா : என்ன போதனைகளுடன் அனுப்பி வைத்தான்?
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : இரத்த உறவைப் பேணல், சிலைகளை உடைத்தெறிதல், அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காது அவன் ஏகன் என்பதனை ஏற்றல். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
இங்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரத்த உறவு பேணலை முதன் மைப்படுத்திக் கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது. மார்க்கத்தில் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள உயர்ந்த அந்தஸ்த்தே இதற்கான காரணமாகும்.
“இரத்தஉறவைத் துண்டித்தவருள்ள ஒரு கூட்டத்தார் மீது அருள் இறங்க மாட்டாது. (இமாம் புகாரி, நூல்: அதப் அல் முப்ரத்)
இறையருளே இல்லாது போவது இரத்த உறவைத் துண்டிப்பவருக்கு மட்டுமல்ல அவர் சேர்ந்திருக்கும் கூட்டத்தாருக்குமே இறையருள் கிடைக்காது எனின் இரத்த உறவை துண்டித்து வாழ்தல் எவ்வளவு பாரதூரமான பாவம் என்பதை
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கே உணர்த்துகிறார்கள்.
இரத்த உறவு பேணுவதில் பெண்ணின் பாகம் முதன்மையானது என்பது விளக்கத்தேவையில்லாதது. ஒரு பெண்ணே தாய், மனைவி, மாமி, மருமகள் போன்ற பல பாத்திரங்களையும் ஏற்கிறாள். இந்த உறவுகள் திருமண உறவிலிருந்து பிறப்பவை. அந்த ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்று திறன்பட நடாத்தும், நடக்கும் சாதுரியமும், பொறுப்புணர்ச்சியும் அவளுக்குத் தேவை.
கணவனின் தாய், சகோதர சகோதரிகளோடு தனது கணவனுக்குள்ள இரத்த உறவு பாதிக்கப்பட ஒருபோதும் மனைவி காரணமாக இருந்துவிடக் கூடாது. அப்படி நடந்தால் அது இரத்த உறவு துண்டிக்கப்படல் என்ற பெறும் பாவத்திற்குக் காரணமாக இருத்தல் என்பதாக அமைந்து விடும்.
முஸ்லிம் சமூகத்தில் இரத்த உறவுகளில் விரிசல் மிக அதிகமான குடும்பங்களில் அவதானிக்கத்தக்க ஒன்று. இதற்கு பெண்கள் முக்கியமான காரணமாக இருப்பதையும் அவதானிக்கலாம். அதிகமான குடும்பங்களில் ஓர் ஆண் திருமணம் முடித்ததும் மனைவி வீட்டிலேயே மிகவும் உறவு பாராட்டப்படுபவனாகவும் மிக நெருங் கிய உறவு கொண்டவனாகவும் மாறிப்போகிறான்.
தனது தாய், தந்தை, சகோதரன், சகோதரி என்ற இரத்த உறவு களைவிட்டு அவன் தூரமாகிறான். இது இஸ்லாம் வலியுறுத்தும் போக்குக்கு நேர்முரணாகி அமைந்ததாகும். இதன் பொருள் மனைவியின் குடும்பத்தோடு நெருங்கிய உறவுகொள்வது தவறு என்பதல்ல. தனது பழைய குடும்ப உறவை அறுத்துக் கொள்ளல் அல்லது தூரமாதல் என்ற பிழையான போக்கையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மேலே விளக்கப்பட்ட விடயங்கள் ஊடாகக் குடும்ப வாழ்வில் பெண் வகிக்கும் பாத்திரம் முதன்மையானது என்பது தெளிவாகிறது. இந்த வகையில் குடும்ப வாழ்வில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலில் பெண்ணின் நிலையை சீர்படுத்தல் முதன்மையானது என்பது சந்தேகத்திற்கிடமற்றது. அதாவது பெண் குடும்ப வாழ்வில் ஏற்கும் பாத்திரங்களை உரியமுறையில் மிகச் சரியாகக் கொண்டு செல்ல அவள் பயிற்றுவிக்கப்பபட வேண்டும். அதற்கான அறிவு அவளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இங்கு நாம் ஆணின் நிலை குறித்து விளக்கவில்லை. அவனது நிலையும் இதில் பிரதானமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பெண்ணின் பங்கு அதனை விடவும் பாரியது என்பதாலேயே அதற்கு மட்டும் அழுத்தம் கொடுத்து விளக்கினோம்.
ஆன்மீகரீதியான முஸ்லிம் சமூகத்தின் பலவீனம் கண்டு அதனை சீர்படுத்தல் சம்பந்தமாக தொழுகைக்கு அழுத்தம் கொடுத்து தனி இயக்கமே துவங்கப்பட்டது. இன்றுவரை அந்த அழுத்தம் காணப்படுகிறது. பொருளாதாரப் பகுதியில் ஸகாத் பற்றிய பேச்சுக்களும் கலந்துரையாடல்களும், பல இடங்களில் ஸகாத் நிறுவனங்களை தோற்றுவித்தன. ஆனால் குடும்ப நிறுவனம் என்ற இப்பகுதி சமூகத்தில் பாரிய கவனயீர்ப்பைப் பெறவில்லை. முதலில் இப்பகுதி யின் பக்கம் சமூகத்தின் கவனயீர்ப்பைப் பெறச் செய்வதற்கான அழுத்தமான பிரச்சாரமொன்று கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கு கீழ்வரும் ஒழுங்குகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
1. குடும்பத்தின் சீர்குழைவு பற்றி துள்ளியமான கணிப்பீடொன்று கிராமம் கிராமமாகப் பெறப்பட்டு சமூகத்தில் முன்வைக்கப்பட வேண்டும். இதில் விவாகரத்தின் அதிகரிப்பு, முஸ்லிம் அல்லாதவர்களைத் திருமணம் முடித்தல், நீண்டகாலம் குடும்பத்தை விட்டு மனைவியோ, கணவனோ பிரிந்திருப்பதால் வரும் பாதிப்புகள். மனைவி தொழில் செய்வதால் எற்படும் பாதிப்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட வேண்டும்.
2. குடும்பத்தில் ஸ்திர நிலை இன்மையால் வரும் ஆன்மீக ரீதியான பாதிப்புக்கள் மன, கல்விரீதியான பாதிப்புகள், மன ஆரோக்கிய மின்மையால் இளைஞர்கள் தீமைகளின் பக்கம் இழுபடும் நிலை போன்ற விடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு முன்வைக்கப் படல்.
3. அதிகாரமற்று சிறுபான்மையாக அதுவும் சிதறிய சிறுபான் மையாக வாழும் பின்னணியிலிருந்து பார்க்கும் போது குடும்ப நிறுவனத்தின் முக்கியத்துவம் எவ்வாறு மிகைத்துக் காணப் படுகிறது என்பதை ஆய்வு செய்து முஸ்லிம் சமூகத்தை அறிவூட்டல்.
இவ்வாறு குடும்பவாழ்வுப் பிரச்சினைகளையும், குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தையும், நுல்களையும் பரப்புவதோடு கீழ்வரும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
1. கிராமம் கிராமமாக குடும்ப சமரச சபை என்ற பெயரில் குடும்பங் களின் உள்ளே உருவாகும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒழுங்கொன்று உருவாக்கப்படல். ஷஹீத் அஹ்மத் யாஸின் ஆரம்ப காலத்திலிருந்து இறுதிவரை இவ்வாறான சபைகளை உருவாக்கி பலஸ்தீனியக் குடும்பங்கள் சிதைவுறாது பாதுகாத்தார் என்பது எமது கால வரலாற்று உண்மை.
2. ‘குழந்தை நல அபிவிருத்தி சபை’, ‘குடும்ப நல அமைப்பு’ என்ற பெயர்களில் சமூகத்தில் பரவலாக பிள்ளை வளர்ப்பு பற்றிய அறிவையும், குடும்ப வாழ்வுக்குத் தகுதியானவர்களாக ஆண்களையும், பெண்களையும் மாற்றும் வகையிலான அறிவையும் கொடுக்கும் ஸ்தாபன அமைப்புகள் தோன்ற வேண்டும். இதனை நவீன இஸ்லாமிய அறிவோடு தொடர்பானவர்கள். மனோதத்துவவியல் துறை சார்ந்தவர்கள், டாக்டர்கள் போன்றோர் இணைந்து நடாத்திச் செல்ல வேண்டும்.
3. குடும்ப வாழ்வு சார்ந்த இலக்கியங்கள் தோன்றல் அதாவது இது சார்ந்த புத்தகங்களும், சஞ்சிகைகளும், கையேடுகளும் பரவலாக முஸ்லிம் சமூகத்தில் விநியோகமாக வேண்டும்.
இவ்வாறு குடும்ப வாழ்வு விவகாரங்கள் சம்பந்தமான ஆய்வுகள் வழிகாட்டல்களுக்கென்றே தனியானதொரு பிரிவு இயங்குதல் நாம் வாழும் காலகட்டத்தில் மிகவும் அவசியமானது. குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பெண்களினுள்ளே இத்தகைய அமைப்புகள் தோன்றுவது மிகுந்த பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிநிலையை நீக்கி அவர்களை முன்னேற்றமான நிலைக்கு கொண்டுசெல்வதில் இத்தகைய குடும்ப சீர்திருத்தத்திற்கு பெரிய தொரு பங்குள்ளது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தாரை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல புதியதொரு சந்ததியை உருவாக்கலையே அல்லாஹ் தீர்வாக முன்வைத்தான் என்று ஏற்கனவே நாம் குறிப்பிட்ட உண்மையை மீண்டுமொரு முறை வலியுறுத்திக் கூறுகிறோம்.
source: www.usthazmansoor.com