Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? (1)

Posted on November 24, 2012 by admin

ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? (1)

  அ.மார்க்ஸ் பதில்   

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து கோவில்களை சிதைத்தார்களா?

இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி? மத மாற்றம்?

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சி காரணம்?

போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், பேராசிரியர் அ.மார்க்ஸ்.

கேள்வி – பதில் தொகுப்பு:

இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படை எடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள்.

ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? “ஆரியர் வருகை” எனச் சொல்லும் நம் பாட நூல்கள் “இஸ்லாமியர் படை எடுப்பு” எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.

இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது சனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இஸ்லாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள் என்பதற்குத்தான் ஆதாரங்கள் இருக்கிறதே?

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோயிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோயிலைச்சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளைடியப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான். இந்த அடிப்படையில்தான் கஜினி முகமது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும் எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவும்தான் கோயில்கள் மீது படையெடுக்கப்பட்டன.

எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோயில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும் இடிக்கப்பட்டன. மற்றபடி முழுமையான மதச் சுதந்திரம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்குச் சென்று முப்பதாண்டுகள் சமயப் பொழிவுகள் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.

இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோயில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண/புத்த கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவைதானே. இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த ஊர்களுக்கு ‘ஜனநாத மங்கலம்’ என்னு தன்னுடைய பெரையச் சூட்டவில்லையா? சுபதாவர்மன் (கி.பி. 1193-1120) என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா? காசுமீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்மூலம் செய்கிற அதிகாரி’ (தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணில் குறிப்பிடப்பட்டுள்ளதே!

பவுத்த சமணக் கோவில்களை இடித்துத்தான் தஞ்சைப் பெரிய கோவில், காஞ்சி காமாட்சி கோவில் போன்றவையெல்லாம் கட்டப்பட்டன என சுரேஷ்பிள்ளை, மயிலை சீனிவேங்கடசாமி முதலியோர் நிறுவியுள்ளனர். திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய வேண்டும் எனக் காரணம் சொல்லி அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டது குறித்துப் பெரியபுராணத்திலேயே சான்றுகள் உள்ளன. எனவே கோயில் இடிப்பு என்பதை எந்தஒரு குறிப்பிட்டமதத்தைப் பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.

ஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே? இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே?

மறுபடியும் பாடநூல்களா, சரி. மன்னர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களின் எதிரிகள்தான். ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களைக் கொள்ளையடித்தவர்கள்தான். முஸ்லிம் மன்னர்கள் இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ வரிசுமத்தியது உண்மைதான். ஆனால் இந்த வரி இந்துக கோயில்களைப் பராமரிக்க என்று சொல்லப்பட்டது. இஸ்லாமிய மக்கள் மீது வரி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ‘சக்காத்’ என்ற பெயரில் அவர்களிடமும் வரி வசூலிக்கப் பட்டது. ‘ஜிஸியா’ வரியும் கூடப் பெண்கள், குழந்தைகள், பார்ப்பனர்களிடம் வசூலிக்கப்பட்டதில்லை. இந்து மன்னர்கள் யூதக் குடிகளிடமிருந்து ‘ஜிஸியா’ வசூலித்தனர் என்று பதினான்காம் நூற்றாண்டுப் பயணி ஒருவர் குறிப்பிடுகிறார்.

ஜிஸியாவுக்காகப் பயந்து கொண்டு இந்துக்கள் மதம் மாறினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை. இதன் பொருள் மதமாற்றங்ளே இல்லை என்பதல்ல; இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன. ஒன்று: “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் இஸ்லாமிற்கு மாறினர். இரண்டு: அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியர்களும் மதம் மாறியுள்ளனர். ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சில சமயங்களில் சந்தேகத்திற்கிடமான சில சமீன்தார்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.

அலாவுதீன் கல்ஜி இந்து ஜமீன்தார்களை ஒடுக்கினானே?

அவர் இந்துவல்லாத இஸ்லாமிய ‘இக்தாதார்’களையும் கூடத்தான் ஒடுக்கினார். மதவெறியன் என நீங்கள் அவரைத் தூற்றுகிறீர்கள். ஆனால் அவர் காலத்திய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜியாபரனி என்ன சொல்கிறார் தெரியுமா? இஸ்லாம் மதத்திற்காகக் கல்ஜி ஒரு அரசன் என்ற முறையிலோ, தனி வாழ்விலோ எதுவும் செய்ததில்லை எனத் தூற்றினார். திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். அரசியல் காரணங்களுக்காகச் சில தனிநபர்களை இஸ்லாமாக்க அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் செய்த சில முயற்சிகளை, பெரும் மக்கள் திரள்களைக் கட்டாயமாக மதம்மாற்றினார்கள் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. அரசியல் நோக்கத்திற்காகக் குறுநில மன்னர்களோடு கட்டாயமான மண உறவுகளை இந்து மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டது பற்றி வரலாற்றிலும், சங்கப் பாடல்களிலும் படிக்கிறோமில்லையா அப்படித்தான் இதுவும். இதெல்லாம் சரி அல்லது தவறு என நான் சொல்ல வரவில்லை. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்புமேற்கொள்ளப்பட்ட அதிகார வெறி பிடித்த மன்னர்களின் நடவடிக்ககளை அவற்றிற்குரிய சூழலிலிருந்து விலக்கிப் பூதாகரப்படுத்தி இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது இரத்த வெறி கொண்ட பகைமையை ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடாது.

இந்து மன்னர்கள் எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கலாம். ஆனால் ஓரிருவரைக் கூடக் கட்டாயமாய் மதம் மாற்றியதில்லையே?

நாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் போன்றவை பரப்புதற்குரிய மதங்கள். இந்து மதம் அப்படிப்பட்டதல்ல. முற்பிறவியில் ஒருவர் செய்த கருமவினைகளுக்கேற்ப இப்பிறவியில் அவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்து இழிவுகள் அல்லது பெருமைகளை அடைகிறார் என்கிறது இந்துமதம். எனவே ஒருவரை வேற்று மதத்திலிருநது இந்து மதத்திற்கு மாற்றினால் அவரை எந்தச் சாதியில் வைப்பது என்பது இந்து மதத்திற்கு ஒரு பிரச்சனை. அடுத்து இங்கேயுள்ள வைதிக, சனாதன, வருணாசிரமதத்திற்கு இந்து மதம் என்ற பெயர் சமீபத்தில் ஏற்பட்டதுதான் என்பதை சங்கராச்சாரி, விவேகானந்தர், பாரதி உட்படச் சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

வரலாறு முழுமையும் பல்வேறு சுதந்திரமான இனக்குழு மக்களை அவர்களுக்கொரு சாதிப் பெயர் கொடுத்துத் தனது ஆட்சிக்குள்ளும் சாதிய ஏற்றுத் தாழ்வுகளுக்குள்ளும் இந்து மன்னர்கள் பார்ப்பனரின் துணையோடு கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் அந்தச் சுதந்திர மக்கள் மீது பொருளாதாரச் சுரண்டல்களும் சாதியக் கடமைகளும் திணிக்கப்பட்டு அவர்கள் என்றென்றும் அடிமைகளாக்கப் பட்டனர். மூன்றாவதாக மதம் மாற்றியதில்லையே தவிர, மாற்று மதஙகளை இழிவு செய்வதிலும் அரசதிகாரத்தின் துணையோடு மாற்று மதத்தவரை இரக்கமேயில்லாமல் கொன்று குவித்ததிலும் இந்து மதம் வேறெந்த மதத்திற்கும் சளைத்ததில்லை. இந்து சமயாச்சாரியார்களின் துணையோடு பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களை ஆசன வாயில் கூரிய இரும்பைச் செருகிக் கொன்றதை நமது பக்தி இலக்கியங்கள் பாராட்டியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

‘பாசிப்பல் மாசிமெய்யர்’, ‘ஊத்தைவாயர்’, ‘மந்திபோல் திரியும் அந்தகர்கள்’ என்றெல்லாம் திருநாவுக்கரசர் சமணர்களைத் திட்டியுள்ளதைத் தேவாரத்தில் காணலாம். சமணர்களையும் சாக்கியர்களையும் “கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கட்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் வேண்டினார். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலச் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டுமெனச் சம்பந்தர் பாடினார். பாடியது மட்டுமல்ல சோழ, பாண்டிய அரசுகளின் துணையோடு இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதற்கு வரலாற்றில் சான்றுகளுள்ளன.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 86 = 87

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb