ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? (3)
அ.மார்க்ஸ் பதில்
இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடுதான் என்பது போலச் சொன்னீர்கள். வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வதுதானே? இது எப்படி ஒரு பக்கச் சார்பாக இருக்க முடியும்?
வரலாறு என்பது ஒருவகையான ‘கதை சொல்லல்’தான். ஒரு சம்பவத்தைக் கண்ணால் பார்த்த இருவர் தனித்தனியே அதை விவரிக்கும் போது இருவேறு கதைகள் உருவாகிவிடுகின்றன என்பதை நாம் அனுபவத்தில் உணர்கிறோம். வரலாறும் அப்படித்தான் சம்பவங்கள் ஒன்றாக இருந்த போதிலும் சொல்பவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன. தொடக்கக் காலத்தில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் ஜேம்ஸ்மில் போன்ற வெள்ளையர்கள்தான்.
பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அவர்களின் அரசியல் கொள்கை.எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும்இதன் மூலம் பொருளாகிறது. ஆனால் நவீன வரலாற்றறிஞர்கள் இந்திய வரலாற்றை இப்படி மத அடிப்படையில் பகுப்பது தவறு என்கின்றனர்.
பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேரு கூட இப்படித்தான் பகுத்துள்ளனர்.வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்தியத் தேசியவாதிகள் வரலாறு எழுதியபோது ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் பழம் பெருமையைத் தூக்கிப் பிடித்தனர். உணர்வு ரீதியாய் இந்தியத் தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர்சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை இலட்சியமாக முன் வைத்தனர். இந்தச் செயற்பாடுதான் முஸ்லிம்கள் பற்றிய பல்வேறு விதமான வரலாற்றுப் பொய்களுக்கும் காரணமாகியுள்ளன.
பெரும்பாலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித்துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்நிலை தொடர்கிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் இப்பொய்கள் ஆழப்பதிந்துள்ளன. இருந்தபோதிலும் பல சனநாயகச் சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர். பாபர் மசூதிப் பிரச்சினையில் கூட இந்து மத வெறியர்கள் வரலாற்றைப் புரட்ட முயற்சித்த போதெல்லாம் இந்தப் புரட்டல் வேலைகளுக்கெதிரான இவர்களின் முயற்சிகள் பாராட்டும்படியாக இருந்தன.
இன்று இந்துத்துவவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று வரலாற்றைத் திருத்தியதுதான். பழைய பாடநூற்களை நீக்கிவிட்டு சி.பி.எஸ்.சி என்கிற மத்திய உயர் கல்வி நிறுவனம் இப்போது ஏழு புதிய வரலாற்றுப் பாடநூற்களை வெளியிட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பல கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிற முயற்சி இது.
கடைசியாக ஒரு கேள்வி. இந்தக் காஷ்மீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காசுமீருக்கு மட்டும் என்ன தனி உரிமை? அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்கிற கோரிக்கை நியாமானதுதானே?
காஷ்மீர்ப் பிரச்சினையையும் நீங்கள் கொஞ்சம் வரலாற்று ரீதியாய்ப் பார்க்க வேண்டும். 1846க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத் தொகையில் 77 சதம் பேர் முஸ்லிம்கள். டோக்ரா மன்னர்களின் கொடுமையான ஆட்சிக் கெதிராக 1931ல் காஷ்மீர மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக அரசியல் சீர்திருத்தத்திற்கான குழு ஒன்றை அன்றைய அரசு அமைத்தது. இந்தப் பின்னணியில் 1939ல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசிய மாநாடு’ கட்சி தொடங்கப்பட்டது. இக் கட்சியின் சார்பாகப் பல்வேறு சனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ‘புதிய காஷ்மீர்’ரு கோரிக்கை 1944ல் முன்வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1945ல் “டோக்ரா மன்னர்களே வெளியேறுங்கள்” போராட்டம் தொடங்கப்பட்டது. ராஜா அரிசிங்கின் அரசு கொடும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதற்கிடையில் 1947ஆக.15ல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.
மத அடிப்படையிலான நாட்டுப் பிரிவினையோடு இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியது. ஜோத்பூர், ஜீனாகத், அய்தராபாத், காஷ்மீர் போன்ற சமஸ்தானங்களைப் பொறுத்தமட்டில் “மக்கள் விருப்பை அறியக் கணிப்புத் தேர்தல் ஒன்று நடத்தி அதனடிப் படையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என இந்திய அரசு (அக். 5, 1947) அறிவித்தது. ராஜ அரிசிங் இணைப்பு பற்றித் திட்டவட்டமாக முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947 அக்டோபர் 26ல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாகிஸ்தான் அரசாதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்கிற நிபந்தனையோடு படைகளை அனுப்பிக் காஷ்மீரை இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டது. இணைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காஷ்மீரை விட்டே ஓடினார்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சீரானவுடன் கணிப்புத் தேர்தல் நடத்துவதாக நேரு வாக்களித்தார். ஆனால் அந்த முடிவை நிறைவேற்றும் முயற்சியை அவர் மேற்கொள்ளவேயில்லை. இந்த அடிப்படையில் இந்திய-பாக். போர் ஒன்று நிகழும் வாய்ப்பு வளர்ந்தது. இந்தப் பின்னணியில் இந்தியாவே இந்தப் பிரச்சினையை ஜன. 1, 1948 அன்று அய்.நா. அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் சென்றது. ஜன. 20, 1948 அன்று பாதுகாப்புக் குழு காஷ்மீர் பிரச்சினையை ஆராயக் குழு ஒன்றை நியமித்து. அந்த அடிப்படையில் ஆக.13, 1948 அன்று காஷ்மீர் தீர்மானத்தை அய்.நா. நிறைவேற்றியது. போர் ஓய்வு, இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் கணிப்புத் தேர்தல் நடத்துவது என்கிற மூன்று அம்சங்களை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.
அய்.நா. (U.N.O.) இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் போதே காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய அவை ஒன்றை இந்தியா அமைத்தது. “அரசியல் சட்ட உருவாக்கத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களும் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி அந்த மக்கள் பிரிந்து போக விரும்பினால் அந்த விருப்பம் நிச்சயமாய் நிறைவேற்றப்படும். இந்த அரசியல் நிர்ணய சபை அதற்குத் தடையாக இராது” என இந்திய அரசு (நவ. 21, 1949) வாக்களித்தது. 370வது பிரிவு ஒன்றை உருவாக்கிக் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு தவிர பிற அம்சங்களில் சுயாட்சி உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டன.
370வது பிரிவு பற்றி என்.கோபாலசாமி அய்யங்கார் அரசியல் நிர்ணய அவையில் கூறியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர் கூறினார்: ‘காஷ்மீரில் இன்னும் போர் நீடிக்கிறது. சில பகுதிகள் எதிரிகள் வசம் உள்ளன. அய்.நா.அவையும் இதில் தலையிட்டுள்ளது. காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசு சில உறுதிகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் 370வது பிரிவின் மூலம் சில சிறப்புரிமைகளை காஷ்மீர மக்களுக்குத் தருவது தவிர்க்க இயலாது”.
இதுதான் 370வது பிரிவு உருவான கதை. கணிப்புத் தேர்தலை இந்திய அரசு வஞ்சகமாக முறியடித்ததுதான் தவறேயொழிய 370வது பிரிவைச் சேர்த்ததை எப்படித் தவறாகச் சொல்ல முடியும்? சொல்லப் போனால் காஷ்மீர மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட உரிமைகள் இந்திய யூனியனில் அடங்கியுள்ள சகல தேசிய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாமும் கோருவதுதான் நமது சனநாயக உயர்வுக்கு அடையாளமாக இருக்க முடியும்.
காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?
இல்லவே இல்லை. முழுமையாகக் காஷ்மீர மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
நவ.5, 1951: அரசியல் நிர்ணய அவைகூட்டப்பட்டது.
நவ. 15, 1952: அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆக.9,1953: காஷ்மீர இணைப்பைச் சட்டப் பேரவையைக் கூட்டி நிறைவேற்றாமல் பிரிவினை முயற்சியில் இறங்கினார் எனக் குற்றம்சாட்டப்பட்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 22 ஆண்டுக்காலம் அவர் சிறையிடப்பட்டார்.
பிப்ரவரி 1954: பலரும்கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு இணைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 27, 1957: கணிப்புத் தேர்தல் நடத்த முடியாது என நேரு அறிவித்தார்.
இருந்தாலும் 370ஆவது பிரிவு இன்னும் நீடிக்கிறதே?
பெயருக்குத்தான் நீடிக்கிறது. அந்தப் பிரிவின் கீழான அத்தனை உரிமையும் இன்று பறிக்கப்பட்டுள்ளன அல்லது குறுக்கப்பட்டுள்ளன. 1954ல் தொடங்கி இது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தனது கூட்டாட்சி அதிகாரத்தை மைய அரசு காஷ்மீர் மீது பரப்பத் தொடங்கியது. 1965ல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு காஷ்மீர் முதல்வராவதற்கு ஒருவர் 25 ஆண்டுக் காலம் காஷ்மீரில் வசித்திருக்கவேண்டும் என்கிற நிபந்தனை நீக்கப்பட்டது. 1984ல் 248வது பிரிவு திருத்தப்பட்டது. இதன்படி காஷ்மீர் தொடர்பான போராட்ட எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றும் உரிமையை இந்தியப் பாராளுமன்றம் எடுத்துக் கொண்டது. ‘ஜம்மு-காஷ்மீர் கலவரப் பகுதிச் சட்டம்’ (ஜூலை 1990), 1991ம் ஆண்டுப் ‘போராட்டத் தூண்டல் சட்டத் திருத்தம்’ ஆகியவற்றின் மூலம் கொடும் அடக்குமுறைக்கான உரிமைகளைக் காஷ்மீர மக்கள் மீது இந்திய அரசு எடுத்துக் கொண்டது. ‘பயங்கரவாதிகளை’ அடக்குதல் என்கிற பெயரில் காஷ்மீர மக்கள் ஊரடங்கு வாழ்வுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீர முஸ்லிம்கள் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். ஆனால் இந்தியர் யாரும் காஷ்மீருக்குள் நிலம் வாங்க முடியாதது என்ன நியாயம் என ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பினர் வாதிடுகிறார்களே?
இது காஷ்மீர முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும், இந்துக்களுக்கும் பொருந்தும் சட்டம்தான். இந்தச் சட்டத்தை உருவாக்கியது இந்து டோக்ரா மன்னர்கள்தான். தமிழ்ச் சூழலைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இதனை யோசித்துப பாருங்கள். தமிழக மக்களைச் சுரண்டிச் சேகரித்த நிதியைக் கொண்டு வடநாட்டுப் பார்சி-பனியா சேட்டுகள் தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரங்களில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர். இது எப்படி நியாயமாக இருக்க முடியும்? எனவே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொத்துக்கள் வாங்கலாம் என்கிற உரிமை வெளிநாட்டு, வடநாட்டு இந்து ஆதிக்கச் சக்திகளுக்குச் சாதகமான கோரிக்கைதான். மாறாக ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மக்கள் மட்டுமே சொத்துக்கள் வாங்க முடியும் என்கிற நிலையைப் பரவலாக்குவதுதான் சரியான கோரிக்கையாக இருக்க முடியும்.
source: www.maruppu.in