மிஸ்டர், திரு, ஜனாப், ஷேக்!
தமிழ்நாட்டில் சில முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிம் நபரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உ-ம் ஜனாப் அப்துல் காதர் அவர்களே. இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.
ஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.
துவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.
மிஸ்டர் என்ற சொல்லே மாஸ்டர் என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததுதான். மிஸ்டர் என்பதையும் மாஸ்டர் என்பதையும் மாற்றிப் பயன்படுத்தத் தொடங்கியதே பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானாம்.
மாஸ்டர் என்ற சொல்லின் மூலத்தைப் பார்த்தால் அது லத்தீன் மொழியில் மாஜிஸ்டர், மாஜிஸ்ட்ரம் என்ற சொற்களின் மூலச் சொல்லான மாகுஸ் அதாவது “க்ரேட்” என்ற பொருளுடைய சொல்லிலிருந்து வந்திருக்கிறது. அதாவது “க்ரேட் மேன்” உயர்ந்த மனிதர் என்று அழைப்பதாகத்தான் மிஸ்டர் என்பது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
“சார்” என்று அழைப்பதற்குப் பதிலாகவும் இந்த மிஸ்டர் என்ற சொல் பயன்படும். ராணுவத்தில் இந்த மிஸ்டரின் பயன்பாடு வெகு அதிகம்.
ஆடவரை மரியாதையாக அழைக்கும் இந்தச் சொல்லின் வழக்கம் அப்படியே தமிழுக்குள் வந்தது. தமிழர்கள் பெயருக்கு முன் திரு என்று இட்டு மரியாதையாக எவரையும் அழைப்பார்கள். உ-ம் திரு மாலன்.
இந்தத் திரு என்ற சொல்லை மதம் சார்ந்த ஆன்மிகவாதிகள் புனிதமான, தெய்வீகமான என்ற சொற்களுக்கு இணையாகப் பார்க்கிறார்கள். திரு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. ஆனால் பொதுப் பயன்பாட்டின்படி திரு என்று பெயரின் முன் இட்டு எவரையும் அழைக்கும்போது அது மரியாதைக்குரிய என்று மட்டும்தான் பொருள்படும்.
அதாவது மிஸ்டர் என்றாலும் திரு என்றாலும் ஒரே பொருள்தான். ஒருவரைக் குறிப்பிடும்போது அல்லது அழைக்கும்போது இந்த திரு என்ற சொல் மொழி சார்ந்த சொல்லே தவிர மதம் சார்ந்த சொல் அல்ல. ஆகவே திரு என்ற சொல்லை தமிழர்கள் அனைவரும் மதம்கடந்து பயன்படுத்தலாம்.
தமிழக முஸ்லிம்கள் திரு என்ற சொல்லை ஒருவரின் பெயருக்குமுன் இட்டு பயன்படுத்தினால் ஏதேனும் பிழையாகக்கூடும் என்று நினைத்து ஜனாப் என்று பயன்படுத்தினர். ஜனாப் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்று தேடிப்பார்த்தேன். இது அரபு மொழி வழக்கமாக இருக்கும் என்றுதான் நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். நான் சவுதி அரேபியா சென்று அங்கே அவர்களோடு உரையாடியபின்தான் புரிந்துகொண்டேன் அராபியர்களுக்கு ஜனாப் என்றால் என்னவென்றே தெரியாது என்ற உண்மையை!
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவரையும் யாரும் ஜனாப் என்று அழைத்ததும் இல்லை. பிறகு எங்கிருந்து இந்தச் சொல் வந்திருக்க முடியும் என்று தேடினேன். ஃபார்சி மொழியில் ஜனாப் என்றால் உயர்வான என்று பொருள். ஃபார்சிக்காரர்கள் இச்சொல்லை பரப்பி இருக்கக் கூடும் அல்லது அவர்களிடமிருந்து தமிழ் முஸ்லிம்கள் பெற்றிருக்கக் கூடும்.
தமிழ் முஸ்லிம்கள் ஒன்று அரபிச் சொல்லைப் பயன்படுத்தலாம் அல்லது நேரே நம் தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு ஏன் ஃபார்சி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
சவுதி அரேபியாவில் ஜனாப் என்பது அல்-கசீம் என்ற மாநிலத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர். அதைப்போய் தமிழ் முஸ்லிம்களின் பெயர்களுக்கு முன் இட்டு அழைப்பது ஏற்புடையதா என்று சிந்திக்க வேண்டும்.
இதில் சிலர் பெண்களை ஜனாப் என்ற சொல்லுக்கு பெண்பாலாக ஜனாபா என்ற சொல்லைக் கொண்டு அழைத்துவிடுகிறார்கள். ஜனாபா என்றால் அசுத்த நிலை என்று பொருள். காம உணர்வின் காரணமாக அசுத்தமாகிவிடுதலையே இது குறிக்கிறது. ஜனாபாவாக இருப்பவர்கள் தொழுகைக்கு முன் குளித்துவிட வேண்டியது இஸ்லாத்தில் கடமை.
அராபியர்களின் மரியாதைக்குரிய வழக்கம்தான் என்ன? ஷேக் என்று அழைப்பதுதான் அவர்களின் வழக்கம். வயதில் மூத்தவர்களையும் கற்றறிந்தவர்களையும் உயர் பதவி வகிப்பவர்களையும் மரியாதையாக அவர்கள் ஷேக் என்றே அழைக்கிறார்கள்.
source: www.seasonsnidur.blogspot.com