காட்டுமிராண்டி இஸ்ரேல்: 138 பாலஸ்தீனர்கள் படுகொலை!
சுதந்திரத்தை விரும்பும் பாலஸ்தீன மக்கள் கடைசி நபர் உயிரோடு இருக்கும் வரை ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து போரிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் போராடுவது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.
அமெரிக்கஆசியுடன் மத்திய கிழக்கின் ரவுடி இஸ்ரேல், காசா பகுதியின் மீது நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏழாவது நாளாக தொடர்கின்றன.
தொடரும் தாக்குதல்களில் பச்சிளம் குழந்தைகள் உட்பட பாலஸ்தீனர்கள் 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 900 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர். சந்தைக்குப் போகும் விவசாயிகள், தண்ணீர் எடுத்துக் கொண்டு போன வணிகர்கள், பள்ளிக்குப் போகும் குழந்தைகள் என பல்வேறு பிரிவினரும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களை ‘ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்தும் ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிர்வினை’ என்று நியாயப்படுத்தி மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.
காசா பகுதி 140 சதுர மைல் பரப்பளவில் 14 லட்சம் மக்கள் வாழும் திறந்த வெளி சிறைச்சாலையாக இஸ்ரேலால் சூழப்பட்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு $4 பில்லியன் (சுமார் ரூ 20,000 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை வாங்கிக் குவித்து வைத்திருக்கும் இஸ்ரேல்தான் இந்த சிறைச்சாலையின் அதிகாரி. இஸ்ரேலின் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஹமாஸ் அமைப்போ உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்து சில ஏவுகணைகளை தயாரிக்கிறது. அவற்றை தடுப்பதற்கான $200 மில்லியன் (சுமார் ரூ 1000 கோடி) மதிப்பிலான ‘இரும்புக் கூம்பு’ ஏவுகணை எதிர்ப்பு கேடயத்தை இஸ்ரேல் நிறுவியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் 138 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு, அலுவலகங்கள், காவல் நிலையங்கள், கார்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனை ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்த 3 பேரோடு ஒப்பிடும் போது இந்த கொடூர இன அழிப்பின் பரிமாணங்களை புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து சரியாக ஒரு வாரத்துக்குப் பிறகு தாக்குதல்கள் நவம்பர் 14ம் தேதி ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. ஹமாஸ் இராணுவத் தளபதி அகமது ஜபாரியை கொலை செய்ததோடு ஆரம்பித்த இந்த கொலை வெறி தாக்குதல்களுக்கு 75,000 இஸ்ரேலிய தரைப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் ‘மேகத் தூண்’ என்ற பெயரிலான இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு சக்தியாக மட்டுமின்றி கூட்டாளியாகவும் செயல்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவப் பயிற்சி அமெரிக்க இராணுவத்துடன் கூட்டாக நடத்தப்பட்டது. அந்த பயிற்சியின் போது ஈரான், ஹமாஸ், ஹெஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் இஸ்ரேலின் ஏவுகணை கேடயம் வலுவாக இருக்கிறதா என்று பரிசீலித்து பார்க்கப்பட்டது. அதிபர் தேர்தலில் ‘அமைதிப் புறா’ ஒபாமா வெற்றி பெற்றாலும் சரி, ‘போர் வெறியர்’ மிட் ரோம்னி வெற்றி பெற்றாலும் சரி, தமது பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவது என்று தெளிவாகத் திட்டமிட்டுள்ளனர்.
அக்டோபர் 18-ம் தேதி ஆரம்பித்த கூட்டு இராணுவப் பயிற்சி அமெரிக்க அதிபர் தேர்தலை தாண்டி நவம்பர் 14 வரை நடத்தப்பட்டது. அந்தப் பயிற்சி முடிந்தவுடன் காசா மீதான தாக்குதலை இசுரேல் ஆரம்பித்திருக்கிறது. இந்த இராணுவ பயிற்சி ஒத்திகையில் 3,500 அமெரிக்க படையினரும் 1,000 இஸ்ரேலிய படையினரும் பங்கேற்றனர்.
அரபு வசந்தம் என்ற பெயரில் எகிப்து, லிபியா நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பிறகு, சிரியாவில் உள்நாட்டுப் போரை தூண்டி விட்டிருக்கின்றன அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள். பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை முடக்கியிருக்கின்றன. சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் அமெரிக்க அடிமைகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் அமைதி வழி மதச்சார்பின்மை பாரம்பரியம் கொண்ட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
2008-ம் ஆண்டு பராக் ஒபாமா முதல் முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் நவம்பர் 4ம் தேதி இஸ்ரேலியப் படைகள் காசா பகுதிக்குள் நுழைந்தன. டிசம்பர் 27-ம் தேதி ஆரம்பித்து 7 நாட்கள் விமான குண்டு வீச்சும் 15 நாட்கள் தரை வழித் தாக்குதலும் நடத்தப்பட்டன. அந்தத் தாக்குதல்களில் 1,166 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். ஹமாஸின் எதிர்வினையில் மொத்தம் 10 இஸ்ரேலிய போர்வீரர்கள் உயிரிழந்தார்கள். அவர்களில் 4 பேர் சொந்தத் தரப்பு துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக கொல்லப்பட்டவர்கள்.
2010-ம் ஆண்டு மே மாதம் காசா பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பலின் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் பல துருக்கியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துருக்கியின் ஆதரவையும் இஸ்ரேல் இழந்திருக்கிறது.
இப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாரிப்பில் இருக்கும் இஸ்ரேல் அதற்கு முன்னோட்டமாக காசா பகுதியில் வன்முறைகளை அவிழ்த்து விட்டு, தரைப் படைகள் மூலம் காசாவை கைப்பற்ற முயற்சிக்கிறது.
உலக ரவுடி அமெரிக்கா அப்பாவி மக்களின் படுகொலையை முன் நின்று நடத்திக் கொண்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆதரவாளர்களுக்கு ஆறுதல் சொன்ன போது கண் கலங்கிய மனிதாபிமானி பராக் ஒபாமா, இஸ்ரேலிய அதிபர் நெதான்யாகுவை தட்டிக் கொடுத்து தாக்குதல்களை முடுக்கி விடுகிறார். எதிர்க் கட்சிகளாக இருந்தாலும் நாகரீகமாக தாக்கிக் கொள்ளும் ஜனநாயக குடியரசுக் கட்சிகள் ஒன்று சேர்ந்து இன அழிப்பை நடத்துகின்றன.
உலக அமைதிக்கான ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்காவின் கைப்பாவையாக தொடர்ந்து செயலற்று நிற்கிறது. தாக்குதல்களை நிறுத்தக் கோரி மொராக்கோ முன் வைத்த அழைப்பை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. ஈழத்தில் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வக்கில்லாத ஐநா அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கி மூன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு போயிருக்கிறார். அவரால் எதையும் பிடுங்க முடியாது என்பது முழு உலகுக்கும் தெரிந்த உண்மை.
சுதந்திரத்தை விரும்பும் பாலஸ்தீன மக்கள் கடைசி நபர் உயிரோடு இருக்கும் வரை ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து போரிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் போராடுவது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.
source: www.vinavu.com