ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்!
Dr.A.P. முஹம்மது அலி, I.P.S.(rd)
அல்குர்ஆன் 2:197 என்ற பகுதியில், ‘ஹஜ்ஜுக்கு தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் தலையாயது இறை அச்சமே. அறிவுடையோர் அல்லாஹ்வினை அஞ்சுங்கள்’ கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் மார்ஷல் டிட்டோவின் ஆதிக்கத்தில் இருந்த யுகோஸ்லாவிய அவர் மறைவிற்குப் பின்பு பல பகுதிகளாக உடைந்து போஸ்னியா மற்றும் செர்பியா என்ற தேசங்கள் உருவானது. செர்பியா இன மக்களின் தலைவர்கள் போஸ்னியாவில் அதிக்கம் செலுத்தி அங்குள்ள முஸ்லிம்களை மனித வேட்டையாடினர். அதனை சகிக்காத உலக மக்கள் அடக்குமுறைக்கு எதிரான குரல் எழுப்பினர். அதன் விளைவு ஐரோப்பிய கூட்டுப் படை ஐ.நா. ஒப்புதலுடன் அங்கு நுழைந்து நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, செர்பியா வெறியர்களான மிலோவிக், கராடிக் போன்றோரை சிறைப்பிடித்து உலக நாடுகளின் நீதி மன்றத்தின் முன் நிறுத்தியது.
அந்த போஸ்னியா நாட்டு முஸ்லிம் ஒருவர் இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜினை துல்ஹஜ் மாதத்தில் வித்தியாசமாக சகல வசதிகளுடன் கூடிய நவீன உலகத்தில் வித்தியாசமாக நிறைவேற்றியுள்ளார்.
வரலாறு காலத்திற்கு இடைப்பட்ட மெடிவல் காலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு அரசனை வீழ்த்தி அரசைக் கைப்பற்ற நினைக்கும் மகன் தனது தந்தையினை ஹஜ்ஜுக்கு அனுப்புவானாம். ஏனென்றால் அரசன் ஹஜ்ஜுக்கு பல மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள், பாலைவனங்கள் ஆகியவற்றினைக் கடக்கும்போது நோயிலோ அல்லது கொல்லையர்களாவோ கொல்லப்பட்டு திரும்பி வரமாட்டாராம் அப்போது மகன் அரியணை ஏறுவானாம்.
ஆனால் நவீன காலத்தில் பஸ், கார், கப்பல், விமானம் மூலம் ஹஜ் செய்ய எளிதாக முடிகிறது. ஆனால் இன்று அரசு சார்பாக ஹஜ் செல்ல வேண்டுமென்றால் ரூ 1,20,000/ தேவைப் படுகிறது. தனியார் மூலம் ஹஜ் நிறைவேற்ற வேண்டுமென்றால் ரூ 2,50,000/ தேவைப் படுகிறது. அதிலும் ஹஜ்ஜுக்கு 19.10.2012 அன்று அனுப்புகிறோம் என்று சென்னை பாலவாக்கத்தில் அல் முனைவரா ஹஜ் செர்விசெஸ் 90 பேர்களிடம் தலா ரூ 2,20,000/ வாங்கி ஏப்பம் விட்ட கதை காவல் துறை வரை சென்றுள்ளது.
ஆனால் கையில் வெறும் ரூ 14,000/ எடுத்துக் கொண்டு, 20 கிலோ எடையுள்ள உடமைகளை முதுகில் சுமந்து கொண்டு போஸ்னியா நாட்டின் 47 வயதான வாலிபர் ஈமான் என்ற தேவையினை மனதில் எடுத்துக் கொண்டு மக்கா சென்றிருக்கிறார் என்றால் அதிசயமானது தானே! சனத் ஹச்டிக் என்ற அந்த போஸ்னிய நாட்டின் வாலிபர் பொடி நடையாக 314 நாட்களில் 5,650 கிலோமீட்டர் தூரத்தினை செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான் மற்றும் சிரியா நாடுகளைக் கடந்து புனித மக்கமா நகரினை அடைந்து இறைவனின் ஹஜ் கடமையினை நிரவேற்றிருப்பது பாராட்டத்தக்கது ஒன்றல்லவா?
ஆனால் சிலருக்கு பணம் இருந்தும் ஹஜ் செல்ல மனம் வருவதில்லை. சிலருக்கு பணம் இருந்தும் உற்றாருக்கு உதவி செய்து ஹஜ்ஜுக்கு அனுப்புவதில்லை. வசதியுள்ள சிலர் வசதியில்லா தன் உடன் பிறப்புகளுக்கு உதவி ஹஜ்ஜுக்கு அனுப்பாமல் பலர் புகழ்வார்களே என்று பல தடவை உம்ரா மற்றும் ஹஜ் செல்வர். வசதி இல்லாதவர் ஹஜ்ஜுக்கு ஏங்குவதினை மறந்து அரசு மூலமாக நடத்தும் ஹஜ் சர்வீஸ் மூலம் செல்லலாம். அல்லது கப்பல் மூலம் செல்லலாம் அல்லது பஸ் மூலம் செல்லலாம் அல்லது உடல், மன வலிமை உள்ளோர் போஸ்னியா இளைஞர் போன்று பொடி நடையாக சென்று நிறைவேற்றலாம். அதற்கும் முடியாதவர் ஈமானோடு வாழ்ந்து அல்லாஹ்வின் ஜென்னத்தில் சீமானாக வாழலாமே!
source: www.mdaliips.blogspot.com