புறத்தோற்றம் ஏமாற்றும்! உரையாடி உணர்வீர்!
நெடிய உருவம். கனத்த சரீரம். பயமுறுத்தும் உருவத்துடனான புறத்தோற்றம் கொண்டோரிடம் நெருக்கமாகப் பழகும்போது அகத்தினுள் குழந்தைத் தனமுடையோராகவிருப்பர்.
புறப்பார்வையில் தம்மை மேதாவியாகக் காட்டுவதில் கவனம் செலுத்துவோர் உள்ளனர். நிரம்ப விஷயங்கள் தெரிந்திருக்கும். அறியலாமெனக் கருதி உரையாடினால், தோற்றத்திற்கும் வெளிப்படும் சொற்கள், சிந்தனைகளுக்கும் துளியும் பொருத்தமில்லையென அறிவு அறிவிக்கும். பெருங்காயமில்லா காலிடப்பாவென உணர்வர். வாழ்வில் காணக்கூடிய நிஜம்.
பார்ந்தலுக்குப் பங்கரையாகவிருப்பர். மிடுக்கு தோற்றமிருக்காது. குள்ள உருவம். மெல்லிய தோற்றம். மதிக்கத்தக்கவராக அல்லாத நிலை. அருகில் சென்று அளவளாவினால் கருத்துக்கள் அருவி போன்று கொட்டும். அறிவுச் சுரங்கமே உள்ளத்தினுள்ளிருக்கும். வெட்டி எடுத்து வெளிவரும் ஒவ்வொன்றும் ஏற்கத்தக்கவையாக, பயனுள்ளவையாகக் கருதவும், காது கேளவும் மனம் தூண்டும். அத்தகையோர் குறித்து ஒளவையின் பழம் பாடல் ஒன்று கூறுகிறது.
”மடல் பெரிது தாழை” தாழை மரத்தின் பூ இதழ் பெரியது ஆனாலும் மனத்திற்கு இதமான மணம் வீசக்கூடிய மலர் அல்ல.
”மகிழ் இனிது கந்தம்” மகிழம் மரம் சிறிய பூ இதழ்களைக் கொண்டது. மனத்திற்கு இதமான மணம் தரக்கூடிய சிறப்புக்குரியது மகிழம் மலர். இந்த ஒப்பீடுக்கொப்ப,
”உடல் சிறியர் என்று இருக்க வேண்டா” காண்பதற்கு சிறிய உருவமாக இருப்போரைக் குறைத்து மதிப்பிடாதீர். எள்ளி நகையாடாதீர். அவர்களில் விஷய ஞானமுள்ளோரும் இருப்பர்.
”கடல் பெரிது மண்ணீரும் ஆகாது” அள்ள அள்ளக் குறையாத வற்றாத நீரைக் கொண்டது தான் கடல். குடிப்பதற்கு ஏற்ற நீர் அல்லவே அது! ஒரு பொருளைக் கழுவுவதற்குக் கூட உதவாதே!
”அதன் அருகே சிற்றூரல் உண்ணீரும் ஆகிவிடும்” கடற்கரையில் தோண்டப்படும் குழிக்குள் ஊறிவரும் நீர் சிறிதளவு தான். குடிக்கவும், மனிதர் உயிர் வாழவும் பயன்படுகிறது.
கருத்து; சிறிய உருவம், சிறிய ஒன்று எதுவானாலும் இறைவனது படைப்பை ஏளனமாகக் கருதக்கூடாது. தனது படைப்புகளுக்குள்ளாக அளவிடமுடியாத ஆற்றலை, அற்புதத்தை இறைவன் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வோர் படைப்பும் வெளிப்படுத்தும் வலிமை. சக்தி ஆயிரங்கோடி வியப்பை ஏற்படுத்தக்கூடியவை. சிந்தனை ரீதியாக சுவைக்கணும். ஒளவை பாடல் வலியுறுத்தும் அறவுரையிது.
-ஜெ. ஜஹாங்கீர்
முஸ்லிம் முரசு நவம்பர் 2012