Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஃபேமிலி இங்கயா? ஊர்லயா? (2)

Posted on November 21, 2012 by admin

 வெளிநாடுகளில் வீட்டு வாடகை, செலவினங்கள் அதிகம் என்பது சிலருக்குக் குடும்பத்தை அழைத்துவர ஒரு முட்டுக்கட்டை. ஆனால், நானறிந்த ஒருவருக்கு இலவசமாகத் தங்கும் இடம் கிடைத்தபோதும் மனைவி குழந்தைகளை அழைத்து வரமுடியவில்லை. காரணம்? அவரின் சகோதரிக்கு சொந்த வீடு இல்லாததால், ஒரு வீடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பின் அவர் இஷ்டப்படி நடந்துகொள்ள வேண்டுமாம், தாயின் ஆணை!

 நகை, வரதட்சணை, சீர் கொடுத்து திருமணம் முடித்து, பின்னரும் பலப்பல சீர்கள் செய்து, தங்கை கணவரின் தொழில் ஆதாரத்துக்கும் முடிந்த உதவி செய்த அவரால் முடிந்தால் வீடென்ன, பங்களாவே வாங்கிக் கொடுத்திருப்பார். அவரும் மிகச் சொற்ப சம்பளத்தில் இருப்பவரே. 40 வயது தாண்டி, பெண் குழந்தைகள் வைத்திருக்கும் மகனை எப்படித்தான் இப்படிப் பிழிய மனம் வருகிறதோ பெற்ற தாய்க்கு?

மனைவியை இங்கு அழைத்து வந்து வைத்திருப்பவர்களில் ஒரு சிலர், ஏதோ அவர்கள் மனமிரங்கி மனைவிக்குக் கருணைப்பார்வை காட்டியதால்தான் இந்த அரபு நாட்டு வாசம் மனைவிக்குக் கிட்டியதென்பதாக அக்கணவர்களின் நடவடிக்கைகள் இருக்கும்.

இன்னும் மிகச்சிலர், ”நான் நினைச்சா இப்பவே உன்னை ஊருக்கு அனுப்பிவிட முடியும்” என்று ”நாடுகடத்தலை” சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளின்போது கூட மனைவிக்கு ஞாபகப்’படுத்து’வார்கள். கீழ்க்காணும் இறைவாக்கையும், ஹதீஸையும் அறிந்திராத அவர்களின் வெளிநாட்டு வாழ்வே, கம்பெனி முதலாளியின் தயவுதான் என்பது மறந்துவிடும். வெளிநாடுகளில் யாருடைய வேலையும் நிரந்தரமில்லை. ஏன், பூலோக வாழ்வே யாருக்கும் நிரந்தரமில்லை!!

“…கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு;” [2:228]

“நீங்கள் நிறைவேற்ற மிகவும் கடமைப்பட்ட நிபந்தனைகள் திருமணத்தின் மூலம் நீங்கள் சுமந்துகொண்ட பொறுப்புக்கள்தான்” (அறிவிப்பவர்: உக்பா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி)

இன்னும் சில பெற்றோர்கள் இருக்கின்றார்கள். எல்லாக் கடமையும் முடிந்திருக்கும். இனியாவது மகனும் மருமகளும் சேர்ந்து இருக்கட்டுமே என்றிருக்கலாம்தான். ஆனால், காற்றுள்ளபோதே தூற்றவேண்டுமே. தங்களுக்காகச் சொத்து வாங்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும். மகன், தன் குடும்பத்தை அங்கு வைத்திருந்தால் அதற்கெல்லாம் பணம் சேர்க்க முடியாது, ஆகையால் குடும்பத்தை அனுப்பிவிட்டு, தனியாக இரு போதும் என்று சொல்லி, அவ்வப்போது அமைதியாக இருக்கும் மகனின் மனதைச் சலனப்படுத்துவார்கள். தொடர்ச்சியாக, மகன் குடும்பத்தில் சூறாவளிச் சுழலும். பெரியவர்களே, மகனின் மனநிம்மதியைவிடவா பணமும், சொத்தும் முக்கியம்?

கணவரின் வேலை நிமித்தம், வெளிநாடுகளில் வாழும் பெண்கள் அங்கு சுகபோக வாழ்வு அனுபவிக்கவில்லை. கணவரோடு இருக்கிறோம் என்ற நிம்மதி மட்டுமே அவர்களுக்கு. புறாக்கூண்டு போன்ற வீடுகளில்தான் பெரும்பாலோனோர் இங்கு வாழ்கின்றனர். ஏற்கனவே சொன்னதுபோல, இங்கு விலைவாசி அதிகம் என்பதோடு, இந்தியாவில் கணவர் குடும்பத்தினரையும் தன் கணவர் ஆதரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தன் தேவைகள், ஆசைகள், விருப்பங்கள், ஏன் சில அத்தியாவசியங்களைக் கூடக் குறுக்கிக் கொண்டுதான் இங்கிருக்கிறார்கள்.

சில பெண்களின் மாமியார், மாமனார்கள் மகனோடு தங்கியிருக்கலாம் என்று மூன்று மாத விஸிட் விஸாவில் அரபு நாடுகளுக்கு வருவதுண்டு. அவர்களால் ஒரு மாதத்திற்குமேல் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது. ஒரே அறையில் வாழ்க்கை, அக்கம்பக்கம் பேசிப்பழக ஆட்கள் இல்லை, வெளியே போகவர சிரமம், காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை, உறவினர்கள் திருமணம், புதுவீடுபுகுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று பல காரணங்களை அடுக்குவார்கள். யோசியுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில்தானே அந்தப் பெண்ணும் இங்கே இருக்கிறாள்? காலை போனால் முன்னிரவு வீடு திரும்பும் கணவன். யாருமே இல்லாத வீடு. இந்தியாவிலோ எல்லாவேலைக்கும் வேலைக்காரர்கள் உண்டு. இங்கே விலைவாசி காரணத்தால் எல்லா வேலைகளையும்கூட அவர்களே செய்துகொள்ள வேண்டும். மேலும் நெருங்கிய உறவுகளின் விசேஷங்கள், வருத்தங்கள் எதிலும் நினைத்தபடி கலந்துகொள்ள முடியாத ஏக்கங்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, கணவனோடு, குழந்தைகள் சூழ இருப்பதே போதும் என்று இருக்கிறார்களே?!

பெரியவர்களே! உங்கள் மருமகள் இங்கு இருப்பதால், அதிக வசதி உங்கள் மகனுக்குத்தான், மருமகளுக்கல்ல. தனியே பேச்சிலர்களாக இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் புரியும். மனைவி உடன் இருப்பதால், சுத்தமான ஆரோக்கியமான உணவு. உடல்நலப் பாதுகாப்பு. பெற்ற குழந்தைகளின் குறும்புகளைப் பார்த்து ரசிக்கும் பாக்கியம், மனதுக்கும் மகிழ்ச்சி. வேற்று நாட்டில், தகிக்கும் வெப்பத்தில் வேலை செய்து வீடு திரும்பும் உங்கள் மகனுக்கு மனைவி-மக்களின் கையால் ஒரு கோப்பை குளிர்ந்த நீர் குடிக்கக் கிடைப்பதென்பது எத்தனை ஆறுதல்? வீட்டுச்சூழல் திருப்தியாக இருக்கும்போது, வேலைசெய்யும் நிறுவனம் தரும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் கூடும். இவையெல்லாம் இல்லாமல், தனிமைச் சிறையில் இருப்பதுபோல இந்தப் பாலைவனத்தில் உங்கள் மகன் தவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இன்று பரவிவரும் இஸ்லாமிய அறிவாலும், மகன்களின் தூண்டுதலாலும், திருமணத்தின்போது வரதட்சணையைத் தவிர்த்து விடுகின்றனர். வரதட்சணையை வேண்டாமென்று சொல்லுமளவு பெருந்தன்மை உடையவர்கள், மகனின் சுகத்தை, நிம்மதியைக் குலைத்து, அவர்களிடம் பணம் பணம் என்று பிழிந்து எடுக்க நினைப்பது ஏன்? மருமகள்தான் அதற்குத் தடையாக இருப்பதாக அவதூறு சொல்வதும், மகனிடமிருந்து அவளைப் பிரித்துவிட நினைப்பதும் ஏன்?

இந்தத் தூண்டிலில் சில மகன்களும் விழுந்து விடுகின்றனர் என்பதுதான் வேதனையான உண்மை. பெற்றவர்களை மதிக்க வேண்டும், அவர்களின் பராமரிப்பு பிள்ளையின் பொறுப்பு என்பதில் மறுகருத்து இல்லவே இல்லை. ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் – தவறாகவே இருந்தாலும்- வேதவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நம்மீது கடமையில்லை. மனிதர்களான அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே என்பதை உணர்ந்து, தவறுகளை எடுத்துரைக்க வேண்டும். இதோ தவறுகளுக்கு உடந்தையாகக்கூடாது என்பதைத் திடமாக உரைக்கும் இறைவாக்கு பாருங்கள்!

“அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரியே!” [58:22]

மனைவியிடமே ஆறுதலும், அமைதியும் கிடைப்பதாகச் சொல்லும் பின்வரும் இறைவசனங்கள் ஒருவருக்குப் பெற்றோர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மனைவியும் முக்கியம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இருதரப்பிற்கும் உரிய கடமைகளைத் தவறாது செய்து, ‘பேலன்ஸ்’ செய்வதற்காகத்தான் ஒரு ஆணிற்கு ‘அதிகப் பொறுப்பு’ கொடுத்து, ‘மேன்மையானவர்’ ஆக்கப்பட்டுள்ளது.

“அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.” [2:187]

“கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு;” [2:228]

“…இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும், அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.” [4:19]

“இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.” [30:21]

மேற்கண்ட இறைவசனங்கள் மனிதனுக்கு மனைவியின் அவசியத்தையும், அவளை நல்லமுறையில் நடத்த வேண்டியதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

“உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்” என்பது நபிமொழி. இதைச் சற்றே கூர்ந்து பார்த்தால், இதன் அருமையான அர்த்தமும், அதன் தாக்கமும் புரியும். ஒருவர் உலகவாழ்வில் எப்பேர்ப்பட்ட பெரிய மனிதராகவோ, செல்வந்தராகவோ, பெரும்புகழ் பெற்றவராகவோ, அதிக நண்பர்கள் அமைந்தவராகவோ இருக்கலாம். அவரை மக்கள் போற்றலாம், புகழலாம், பின்பற்றலாம். ஆனால், அவர் தனது வீட்டினுள், தம் குடும்பத்தாருக்கு – அதாவது மனைவிக்கு – நல்லவராக இருக்கிறாரா என்பதுதான் முக்கியம். ஏனெனில், வீட்டில்தான் அவரது முழு குணம் வெளிப்படும். தாய், தந்தை, சகோதர-சகோதரிகள், பெற்ற பிள்ளைகள் ஆகியோர் இவரிடம் கோபம் இருந்தாலும், அது ரத்த பாசத்தினால் மறக்கப்பட்டு மன்னிக்கப்படலாம். அதேபோல, இவருக்கும் தொப்புள்கொடி உறவுகளிடத்தில் கோபம், வருத்தம் ஏதேனும் இருந்தாலும், ‘தான் ஆடாவிட்டாலும், தன் சதை சதை ஆடும்’ என்பதாகத் தன் கடமைகளை விடாது செய்துவிடுவார்.

‘மனைவி’ என்ற உறவுக்கு ரத்தபந்தம் இல்லை. ஆனால், அந்த உறவுதான் இரத்த உறவுகளையும்விட ஒரு மனிதனுக்கு உணர்வளவில், உடலளவில் நெருக்கமானது. அதேசமயம் அந்த உறவுதான் பலசமயங்களில் “taken for granted” ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவேதான், எந்த ரத்தத் தொடர்பும் இல்லாத உறவான மனைவியிடம், உங்கள் அகம்-புறம் முழுமையாக அறிந்த – உங்களின் ‘மறுபக்கத்தை’, ‘நிஜமுகத்தை’ அறிந்த அந்த உறவிடம், நீங்கள் ‘சிறந்தவர்’ என்று பேர் எடுக்கவேண்டுமென்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, மனைவியை நீங்கள் எவ்வளவு கவனமாக, சிரத்தையோடு பேணி கண்ணியப்படுத்த வேண்டும் என்பது புரியும்.

இஸ்லாம் பெண்களுக்கு அதிக உரிமைகள் கொடுத்துள்ளது. அதைப் பெருமையுடன் பறைசாற்றவும் செய்கின்றோம். ஆனால், “உடையவன் கொடுத்தாலும் இடையவன் விடமாட்டான்” என்ற கதையாக, ஒரு சில பெண்களுக்குத் தம் கணவனுடன் சேர்ந்து வாழும் அடிப்படை உரிமைகூட கணவன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களின் தயவில் இருக்கும்படி உள்ளது. இந்தத் தவறைச் செய்யும் சகோதரர்கள் மொத்த இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்றாலும் அதன் பாதிப்பு பெரிது என்பதால் இத்தவறைத் திருத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

“அவனே, உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும் அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக!” [7:189]

– ஹுஸைனம்மா

source: www.islamiyapenmani.com

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

41 − = 40

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb