அறிவியல் உண்மையை சரியாகப் புரிந்துகொண்டால் பேய்கள் பற்றிய பயம் நம்மை விட்டு ஓடிவிடும்!
பல வருடங்களுக்குப் பின், கல்லூரி நண்பனை எதேச்சையாக வழியில் சந்திக்கிறீர்கள். இழந்த இளமை சற்றே எட்டிப் பார்க்க ஆனந்தமாக அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று உரையாடுகிறீர்கள். பல விசயங்கள் பேச்சினிடையே வந்து போகின்றன. கல்லூரி நாட்களில் மிகவும் நியாயமானவனும், நேர்மையானவனும் என்று மதிக்கப்பட்ட நண்பன் அவன். திடீரெனப் பேச்சு வேறு ஒரு திசைக்கு மாறுகிறது. நண்பன் உங்களிடம் கேட்கிறார்:
“டே மச்சான், பேய் இருக்குன்னு நம்புறியா?”
“என்ன மச்சி! திடீர்ன்னு இப்படிக் கேட்கிற? பேய்கள், ஆவிகள் எதையும் நான் நம்புவதில்லைடா.”
“எனக்குத் தெரியும்டா மச்சான், நீ நம்பமாட்டன்னு. ஆனால் பேய் இருக்குடா. நான் அதைப் பார்த்தேன்.”
“என்னடா சொல்ற? பார்த்தியா? யார், நீயா, எப்படா? என்ன விளையாடுறியா?”
“இல்லை உண்மையாத்தான் சொல்கிறேன் மச்சி. பல வாட்டி, பல உருவங்களில் பேயைப் பார்த்திருக்கிறேன்.”
“என்னடா சொல்ற? நம்புற மாதிரியா இருக்கு? நிஜமாவா?”
“உண்மையாதான்டா. அதுமட்டுமில்லை, சில தடவை அது எங்கிட்ட பேசுது. அதை நான் தெளிவாகக் கேட்டிருக்கிறேன்டா.”
“என்னடா நீ! இப்பிடிச் சொல்ற? எனக்கு இப்பவே ஒரு மாதிரி இருக்கு….”
“என் காதுல அது பேசுறது கேக்கும் மச்சி. அப்பப்போ அந்த நேரத்துல மல்லிகைப் பூ வாசனையும் சேர்ந்து வருது. அப்படின்னா ஆவிகள், பேய்கள் இருக்குன்னுதானே அர்த்தம்!”
“லூசு மாதிரி உளராதே! நீ சீரியஸாக சொல்றியோ என்று நானும் பயந்துட்டேன்.”
“இல்லடா நான் சீரியஸாகத்தான் சொல்றேன். என்னைப் பார்த்தால் பொய் சொல்றவன் மாதிரியா உனக்குத் தெரியுது?”
”அதைத்தானே நானும் யோசிச்சு குழம்பிப் போயிட் டேன். வேறு யாராவது இப்படிப் பேசினால், போடா வென்று… சொல்லிட்டுப் போயிருப்பேனே. நீ பேச்சுக்குக் கூடப் பொய் சொல்பவனில்லையே!”
உங்களுக்கும், நண்பருக்குமிடையே நடந்த இந்த உரையாடல்களில் இருந்து நீங்கள் புரிந்துகொள்வது என்ன? பேய், ஆவி போன்றவை இருக்கிறது என்று நம்புபவர்கள் இந்த உரையாடலை நிச்சயம் நம்புவார்கள். பேயை நம்பாத சிலர் உங்கள் நண்பருக்குப் பைத்தியம் என்னும் அதிகபட்ச முடிவுக்கு வந்துவிடுவார்கள். உங்கள் நண்பர் பொய் சொல்கிறார் என்றும் சிலர் நினைக்கலாம். இந்தச் சம்பவத்தில் உங்கள் நிலை என்ன? என்ன விதமான முடிவை எடுக்கப் போகிறீர்கள்? அந்த உரையாடலைச் சரியாகக் கவனித்துப் பாருங்கள். அதில் பேய் பற்றிச் சொன்ன உங்கள் நண்பர் ஒரு நம்பிக்கையானவர் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்டவர் பொய் சொல்வாரா? அப்படிப் பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு ஏன் வரப்போகிறது?
அப்படியென்றால் என்னதான் நடந்தது? உங்கள் நண்பர் பொய் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு உருவங்கள் தெரிந்ததும், காதில் குரல் கேட்டதும், மல்லிகைப்பூ வாசனை வந்தது அனைத்துமே உண்மைதான். அப்படியென்றால் பேய்கள், ஆவிகள் உள்ளன என்பதுதான் முடிவா? இல்லை! அதுவும் இல்லை. பேய் என்பது இல்லவே இல்லை! ரொம்பத் தெளிவாகக் குழப்புகிறேன் அல்லவா? இதை விளக்கமாகப் பார்ப்போமா..!
உங்களுக்கு முன்னால் ஒரு ரோஜாப்பூவும், ஒரு மல்லிகைப்பூவும் வைக்கப்படுகிறது. அதில் நீங்கள் ரோஜாப்பூவை அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறீர்கள். ஆனால் மல்லிகைப்பூவை ஏற்கனவே பல முறை பார்த்து இருக்கிறீர்கள். அதை மல்லிகைப் பூவென்று தெரிந்தும் வைத்திருக்கிறீர்கள். மல்லிகைப் பூவைப் பார்த்ததும் அதை, ‘மல்லிகைப்பூ’ என்று உடனே சொல்லி விடுகிறீர்கள். ஆனால் ரோஜாப் பூவை, ரோஜாவென்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். காரணம், ரோஜாப்பூவைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் அதுவரை உங்களிடம் இல்லை. ஆனால் அதுவும் ஒரு பூவென்று தெரிகிறது. காரணம், வேறு பூக்களைப் பார்த்த அனுபவங்கள் உங்களுக்கு நிறையவே இருப்பதால், இதை ஒரு பூவென்று அனுமானிக்கிறீர்கள். ரோஜாப் பூவென்றுதான் சொல்லத் தெரியவில்லை.
முன்பு ஒரு தடவையோ, பல தடவைகளோ ஒரு பூவைக் காட்டி, இதுதான் மல்லிகைப்பூ என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மல்லிகையின் வடிவம், நிறம், மணம், அழகு, மென்மை என்ற அனைத்தும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருக்கிறது. அதனால்தான் அந்தப் பூவைப் பார்த்ததும், உங்கள் மூளை தன்னிடம் ஏற்கனவே பதிந்திருக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டு, மல்லிகைப் பூவென்று உங்களுக்கு உணர்த்துகிறது. இந்தச் சாத்தியம் ரோஜாவுக்கு இருக்கவில்லை. மல்லிகையைப் போல, நீங்கள் நேரிலோ, படமாகவோ பார்த்த அனைத்துப் பூக்களையும், உங்கள் மூளை தன்னில் பதிந்து வைத்திருக்கிறது.
உங்கள் முன் மல்லிகைப்பூ இருக்கின்றதோ இல்லையோ, உங்கள் மூளையில் மல்லிகையின் உருவம் முதல் அதன் அனைத்துக் குணங்களும் பதிந்தபடியே இருக்கின்றன. எப்போதெல்லாம் நீங்கள் மல்லிகைப்பூவைப் பற்றிப் பேசுகிறீர்களோ அல்லது அது பற்றிக் கேட்கிறீர்களோ அல்லது அது பற்றிச் சிந்திக்கிறீர்களோ அல்லது அதன் மணத்தை நுகர்கிறீர்களோ அப்போதெல்லாம் அந்த மல்லிகைப் பூவின் உருவம் உங்கள் நினைவுக்கு வரும். அதாவது மல்லிகைப்பூ வெளியே எங்கும் இல்லை. அது உங்களுடனேயே இருக்கிறது. மல்லிகைப்பூ என்றில்லை. உலகில் நீங்கள் அறிந்து வைத்திருக்கும் எந்தப் பொருளும் வெளியே இருப்பதாகத்தான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படியல்ல. அவையெல்லாம் உங்கள் மூளைக்குள், உங்களுடன்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. மல்லிகை என்னும் செய்தி உங்கள் மூளையில் ஏதோ ஒரு காரணத்திற்காக நிரடப்படும்போது, அதன் வடிவம் மூளையில் இருந்து மீட்டெடுக்கப்படுவது போல, நீங்கள் உலகில் பார்த்த அனைத்துப் பொருள்களும், அவை சார்ந்த அனைத்துச் சம்பவங்களும் செய்திகளாக உங்கள் மூளையில் பதிந்திருப்பதால், தேவையான சமயங்களில் அவை வெளியே கொண்டுவரப்படும்.
நமது மூளை இது போலப் பதிந்து வைத்திருக்கும் செய்திகள் எவை தெரியுமா? நீங்கள் முகர்ந்த நல்ல வாசனையோ, கெட்ட வாசனையோ, அவை அனைத்தும் மூளையில் பதிவாகி உள்ளது. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு எத்தனையோ வாசனைகளை உங்கள் மூளை தரம் பிரித்து வித்தியாசம் காணுகிறது. அம்மா என்றோ செய்த சாம்பார் வாசம், மனைவியின் வாசம், ஆபீஸின் அருகே இருக்கும் குச்சு ஒழுங்கையின் மூத்திர வாசம் என அனைத்தும் அதில் அடங்கும். உங்களுக்கு எத்தனை விதமான வாசனைகள் தெரியும் என்று நீங்கள் யோசித்தது உண்டா? அப்படி யோசித்தீர்களானால் பிரமித்துப் போகும் அளவுக்குப் பலதரப்பட்ட வாசனைகளை நீங்கள் அறிவீர்கள்.
வாசனை போல நீங்கள் கேட்ட குரல்களில் மைக்கேல் ஜாக்சன் குரல், TMS-ன் குரல், அப்பாவின் குரல், கடன் கொடுத்தவன் குரல் என ஆயிரம் ஆயிரம் குரல்களை நீங்கள் உடன் கண்டுபிடிக்கும் விதத்தில் உங்கள் மூளை பதிந்து வைத்திருக்கிறது. அடுத்தது நீங்கள் பார்த்த முகங்கள். முகங்கள் என்றால் எத்தனை முகங்கள். சிறுவயதில் இருந்து பெரியவனானது வரை கண்ட அனைத்து முக்கிய முகங்களும். MGR யார்? விஜய் யார்? அஜித் யார்? யார் என்பதை உடன் சொல்லும் உங்கள் மூளை. முகங்கள் போலவே பார்த்த படங்கள், பொருட்கள், சினிமாக்கள் என எல்லாம் பதிந்து வைத்திருக்கிறது மூளை.
நமது மூளையில், ‘செரிபெல்லம்’ (Cerebellum) என்று சொல்லப்படும் சிறுமூளை, ‘செரிப்ரல்’ (Cerebral) என்று சொல்லப்படும் பெருமூளை என இருபகுதிகள் உண்டு. இதில் சிறுமூளையானது தற்காலிக உணர்ச்சியால் தூண்டப்படும் அனைத்துச் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும். நெருப்புச் சுட்டதும் கையை உதறுவது, நுளம்பு கடித்தால் அடிப்பது போன்ற செயல்களை அது கட்டுப்படுத்துகிறது. ஆனால் நமக்கு நிரந்தரமாகத் தேவையான அனைத்துச் செய்திகளையும் பதிந்து வைத்திருப்பது பெருமூளைதான். பெருமூளையின் புறப்பகுதியான செரிப்ரல் கார்டெக்ஸ் (cerebral cortex) என்னும் பகுதியில்தான் இவையெல்லாம் பதியப்படுகின்றன. பெருமூளையான செரிப்ரம், சிறுமூளை செரிபெல்லம் இரண்டையும் மிக மெல்லிய சவ்வு போன்ற பகுதி மூடியுள்ளது. இதுவே செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படுகிறது.
சிந்தனை, மொழி, நினைவுகள், உணர்ச்சிகள் என அனைத்தும் இந்த கார்டெக்ஸ் பகுதியில்தான் பதியப்படுகின்றன. பல மடிப்புகளுடன் இது காணப்படும்.எப்போதும் தொழிற்பாட்டில் இருக்கும் நமது மூளை, தான் பதிந்து வைத்திருக்கும் கோடான கோடி செய்திகளை அமைதியான சூழ்நிலைகளில் அவ்வப்போது அது இரை மீட்கும். இரவில் நித்திரையின்போது, அது செய்யும் இந்த இரைமீட்டலைத்தான் கனவு என்கிறோம். சொல்லப் போனால் அந்த இரைமீட்டல் மூளைக்குத் தேவையானதும் கூட.
கனவுகள் மூலம் மூளை தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். இன்று காலை ஒரு கார் விபத்தை நீங்கள் பார்த்திருந்தால், அன்று இரவு நித்திரையின்போது, உங்களுக்கு எப்போதோ நடந்த ஒரு சைக்கிள் விபத்தை அந்தக் கார் விபத்துடன் இணைத்துக் கனவாக மீட்டுத் தரும். மூளை பதிந்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான செய்திகளில், அவை சார்ந்த சாயலுடன் ஏதோ ஒன்று நடைபெறும் போது, அந்தச் செய்தியுடன் இணைந்த அனைத்தும் நிரடப்படும். அந்த நிரடலின்போது, அவற்றை ஒழுங்கமைக்க முடியாமல், குழப்பமான வடிவில் வெளிக்கொண்டு வந்து கனவுக் காட்சிகளாகத் தருகிறது. ஆனால் விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் இரவில் காணும் கனவுக் காட்சிகள் போல, விழிப்பு நிலையில் இருக்கும்போதே அவை நிரடப்படுகின்றன. அந்த நேரங்களில் அவர்கள் விழிப்பு நிலையிலும் தமக்கு முன்னால் நடப்பது போலக் காட்சிகளைக் காண்பார்கள்.
இப்போது மீண்டும் நாம் மேலே உங்கள் நண்பன் சொன்ன பேய்க்கதைக்கு வருவோம்..
வெகுசில மனிதர்களுக்கு, அவர்கள் இருக்கும் சூழ்நிலை, குறிப்பிட்ட காலநிலை, நேரம் ஆகியவை சார்ந்து, மூளை ஒரு அமானுஷ்ய நிலையை அடைகிறது. இருட்டு, தனிமை போன்ற நேரங்களில், நாம் கேள்விப்பட்ட பேய்களின் செய்திகள், எமது மூளையில் விழித்திருக்கும் ஒரு திட்டமிடப்படாத நிலையில் நிரடப்படுகிறது. அந்த நிரடலின் காரணமாக மூளை சில உருவங்களைக் காட்சிகளாக வெளிக்கொண்டுவருகிறது. அதாவது நாம் பார்த்த உருவங்கள், படித்த கதைகள், பார்த்த படங்கள் ஆகியவை சார்ந்து தானே உருவாக்கிய குழப்பமான ஒரு உருவத்தைக் காட்டுகிறது. சிலருக்கு அவ்வுருவம், அவருக்குத் தெரிந்த இறந்த ஒருவருடையதாகவோ அல்லது கருமையான உருவமாகவோ தெரிகிறது. இறந்தவர்களின் உருவங்கள் தெரியும்போது, அவர்கள் இறந்த சமயத்தில் தெளிக்கப்பட்ட வாசனை திரவியங்களின் வாசனைகளும், ஊதுபத்தி வாசனைகளும் கூட சேர்ந்து வரலாம். அவர்களின் குரல்களும் கூடக் கேட்கலாம். இவை எல்லாம் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ உணரப்படலாம்.
இதை மனோவியல், ஹலூசினேசன் (Hallucination) என்கிறது. ஹலூசினேசன் என்பது பலவகைகளில் மனிதனுக்கு ஏற்படலாம். Visual Hallucination, Auditory Hallucination, Olfactory Hallucination, என்பவை சில. பலருக்கு விசேஷமாக மண்டைக்குள் குரல் கேட்கிறது என்னும் பிரச்சினை அதிகமுண்டு. காதில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாக நமக்கு சில இரைச்சல் ஒலிகள் கேட்பது சகஜம். கன்னத்தில் அறைந்தால் கேட்குமே ஒரு விசில் சத்தம், அது போல. வயதாகும்போது இந்தக் குறைபாடு வருவது சகஜமாக இருக்கும். ஆனால் இதுவே கொஞ்சம் அதிகமாகி, இந்த ஒலிகள் நமது மூளைக்குள் பதிந்திருக்கும் சில குரல்களின் ஞாபகத்தைத் தூண்டிவிடுகின்றன. அது மூளையில் இருந்து வெளிக்கொண்டு வரப்பட்டு, யாரோ காதுக்குள் எதுவோ சொல்வது போலவும், கட்டளையிடுவது போலவும் கேட்கத் தொடங்கும்.
சிலர் இப்படிக் குரல், தன்னைத் தற்கொலை செய்யச் சொல்லி தினமும் தூண்டியதாகச் சொல்லிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவங்களும் உலகில் உண்டு. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இருட்டில் மரங்களுக்குக் கீழாகப் போனால், மல்லிகை மணக்கும். அங்கு மல்லிகை மரம் இல்லாவிட்டாலும் கூட.இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், ஒரு உருவத்தைப் பார்ப்பவர்களோ அல்லது குரலைக் கேட்பவர்களோ அப்படிப் பார்த்ததாகப் பொய் சொல்வதில்லை. அவர்கள் உண்மையாகவே உருவத்தைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அத்துடன் அவர்கள் பாரதூரமான வகையில் உள்ள அளவுக்கு மனநோயாளியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இவையெல்லாம் ஒரு அளவுக்கு மேலே சென்றால் மனவியல் மருத்துவரை அணுகுவதே நல்லது. ஆனாலும் மனநோய் என்பதையும் தாண்டி, ஒருவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor), ஒற்றைத் தலைவலி (Migraine), அல்ஸ்ஹைமர் (Aizheimer) ஆகிய நோய்கள் இருக்கும்போதும் இப்படியான ஹலூசினேசன் வர வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள். எனவே இந்தக் காட்சிகளைக் காண்பவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் காண்பதும், கேட்பதும், நுகர்வதும் நிஜம். அவர்களுக்குத் தேவை நமது உதவிதான். “பேய்கள் என்பது வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளேதான் இருக்கிறது.” இது சம்பந்தமான அறிவியல் உண்மையை நாம் சரியாகப் புரிந்துகொண்டால் போதும். அப்போது பேய்கள் பற்றிய பயம் நம்மை விட்டு ஓடியே போய்விடும்.
From: Jamal Mohamed