அந்த உன்னதமான தாய்….?
கருவில் சுமந்தவள். கண் விழித்தவள். பெற்றெடுப்பவள். பேணி வளர்ப்பவள். உதிரப் பாலூட்டி உருவாக்கும் தாயவளுக்கு தனயன்கள் மீது தெவிட்டாத பற்றுண்டு. மூன்று குணநலப்பண்புகளையுடைய தாயினர் இருக்கின்றனர்.
தீன் கல்வி முழுமையுடனோ, முழுமையற்றோ இருப்பினும் வருத்தம் ஒன்றுமில்லை தாயினத்திற்கு. அவர்கள் மனம் பிரதானப் படுத்துவது உலகக் கல்வி. பிள்ளைகளுக்கு எவ்வகையிலேனும் அதனைப் பெற்றுத்தர வெறித்தனமுடன் பள்ளிகளை நோக்கி பயணிக்கின்றனர்.
திருக்குர்ஆன் விரிவுரைக்குத் திறக்காத இமைகள். ஏற்காத செவிகள் எல்.கே.ஜி விண்ணப்பம் பெற முதல் நாள் நடுநசியிலிருந்து மறுநாள் நடுப்பகல் வரை வரிசையில் அமர்ந்து விழிமுடாது காத்திருக்கின்றன.
சுபுஹு அதான் ஒலி அழைப்பு குறித்து கவலையுறவில்லை தாயினம். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப, அதிகாலை உணவு சமைக்க கவலை கொள்கிறது. உறக்கம் கலைகிறது.
எதிர்வீட்டு மனிதர் இலட்சங்களைச் சம்பாதிக்கிறார். அடுத்த வீட்டுப்பையன் 50 ஆயிரம் மாதம் ஈட்டுகிறான். போ… போ… அதுபோன்று பொருளீட்டிவா. வசதியாக வாழு. வாய்க்கு ருசியாக உண்ணு. எல்லோரையும் போல் கார், பங்களா வாங்கு.
தீன் குறித்து உனக்கு கவலையெதற்கு? அமல்களா? அப்படியென்றால் என்ன? நீ மற்றவர்களுடன் ஒத்து ஓடு. உலக வாழ்க்கைக்குள் மூழ்கு இது ஒரு வகைத் தாயினத்தின் போதிப்பு.
உலகத்தில் காணக்கூடிய தாய்களனைவரும் பணம், பதவி, பகட்டு, படோபடோபம், நகை, சொத்து மட்டுமே நோக்கமெனக் கொண்டு, முழுமையாக அனுபவித்து விட எண்ணி கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்த் திசையிலிருந்து சில தாய்கள் தம் மகன்களது கரம் பிடித்து ஓடி வருகின்றனர். எதற்காக ஓடி வருகின்றனர்? அந்த தாயினர் நோக்கமென்ன?
தீனுக்குப் பங்களிப்பு தனது ஒரே மகன். இளைய மகன். கடைசி மகன். மூத்த மகன் செல்ல மகன்களை தீனுக்குத் தியாகம் செய்ய ஓடிவரும் தாயினமது. சொந்த பந்தங்களுடைய வாழ்வைப் பாராதே! சினிமா, பீச் பொழுது போக்கு நினையாதே! பாங்கொலித்த பிறகும் குறட்டையில் மூழ்காதே! அறிவுறுத்தி இஸ்லாத்திற்குத் தாரை வார்த்தவர்கள் அந்த உன்னத தாயினத்தினர்.
700 மைல்கள். 500 மைல்களுக்கு அப்பால் உள்ள மதரஸாக்களில் 7 வருடம் தீன் கல்வி கற்க அனுப்பி ஆசாபாசங்களை ஒதுக்கி வைத்தவர்கள். தீனைக்கற்க கடல் கடந்தும் அனுப்பிவைத்து 8 வருடம் காணாதிருப்பவர்கள். வடநாட்டு மதரஸாக்களில் தீன்மேல் நிலைக் கல்வி பயில 2 வருடம் பொறுமை காத்தவர்கள்.
எதிர்கால வாழ்வியல் உத்தரவாதத்திற்கு பொருள் வேண்டுமெனக் கூறுவோரின் கூற்றை உடைத்து தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்தவர்கள். யகீன் குலையாது நின்றவர்கள். தீன்பணி ஒன்றே குறிக்கோளாக்கியவர்கள் அவர்களே! ”அந்த உன்னதமான தாயினம்”.
தீனை மகனது தோற்றத்தில் காணவும், சொற்களில் கேட்கவும், மூச்சில் உலாவவும், வாழ்வில் பேணவும் மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் எண்ணம் ஏற்று வாழ்வில் கடைப்பிடித்து இஸ்லாத்திற்கு மகன்களை அர்ப்பணித்த ”அந்த உன்னதமான தாயினம் போற்றுதலுக்குரியது. முன் சென்றோர் கூட்டத்தில் இணைத்துக் கொண்ட அவர்களை மற்றோரும் பின் தொடரலாம்.
-ஜெ. ஜஹாங்கீர்
முஸ்லிம் முரசு நவம்பர் 2012
source: www.jahangeer.in