முஸ்லிம் பெண்களின் எழுத்துச் செயற்பாடு
[ பெண் எழுத்து என்பது பெண்ணால் எழுதப்படுவதும் பெண் தன்னை பெண்ணாக அறிந்து கொள்வதும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களை அறிந்து கொள்வதும் அவர்களின் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் அறிந்து எழுதும் எழுத்து என்று பொதுவாக நாம் அடையாளப்படுத்த முடியும்.
இவர்களின் எழுத்துக்களில் ஒரு தீவிரத் தன்மை காணப்படுவதையும் பூசிமெழுகும் பாங்கு இல்லாதிருப்பதையும் காண முடிகிறது.
பெண் எழுத்தாளர்களின் அரசியல் எது என்ற கேள்வியை எழுப்பி நாம் சிந்திக்கின்ற போது உடலரசியலையே அவர்கள் முதன்மைப்படுத்தியும் வருகின்றனர். உடல் அவர்களுக்கானது என்ற அரசியலே அவர்களின் எழுத்துக்களில் முன்னிறுத்தப்படுகின்றது.
பெண்ணை மனுஷியாகப் பார்க்க மறுத்து அவளை உடல் உறுப்புக்களின் வழியாக நுகர்வுக்கான ஒரு பொருளாக பார்க்கும் ஆணாதிக்க எழுத்துக்கு மாற்றாகவும் எதிராகவும் இப்பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களும் அமைந்திருக்கின்றன.
பெண் எழுத்துக்களை ஆண்களின் உலகம் அதிர்ச்சியோடுதான் எதிர் கொண்டும் வருகிறது. இதற்கு முதல் ஆண் மாத்திரமே நுகர்வோனாக கட்டமைக்கப்பட்டு பெண் நுகர் பொருளாக ஆக்கப்பட்டிருந்த நிலை மாறி பெண்ணும் நுகர்வோனின் இடத்தை எடுத்துக் கொள்கிற நிலையிலிருந்தே இந்த விமர்சனங்கள் உருவாவதை அவதானிக்கலாம்.]
முஸ்லிம் பெண்களின் எழுத்துச் செயற்பாடு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பிரிவில் மற்ற இரு சமூகங்களின் கல்வி எழுச்சி, சமூக மறுமலர்ச்சி போன்ற புதிய யுகத்திற்கான தயார் நிலையிலிருந்து சற்று பிந்தியதாகவே முஸ்லிம் கல்வியும் மறுமலர்ச்சியும் அதிலும் குறிப்பாக பெண்களின் கல்வி மறுமலர்ச்சி அதற்கும் பிந்தியதாகவே தோற்றம் பெறுகின்றது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில்தான் முஸ்லிம் பெண்கள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறுகின்றனர். அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையே காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில்தான் முஸ்லிம் பெண் கல்வி சற்று முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கான நவீனத்துவ கல்வித் தரத்திற்கேற்ப மணப்பெண்ணை தயார் படுத்தவேண்டிய நிலையிலிருந்தே ஆரம்ப கால முஸ்லிம் பெண் கல்வி பற்றிய எழுச்சி ஏற்படுவதாக சமூகவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இல்லாவிட்டால் முஸ்லிம் ஆண்கள் ஆங்கிலக் கல்வி மூலம் பண்பாட்டுக்கு வெளியே சென்றுவிடலாம் என்ற உள்ளச்சமும் முஸ்லிம் பெண் கல்விக்கான தூண்டுதலை வழங்கியுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அறபு இஸ்லாமிய உலகில் முஸ்லிம் பெண் கல்வியின் நிலையும் அவ்வாறே இருந்தது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம் பெண் கல்விக்கான பெண்ணிலைவாத நோக்கில் ஒரு கருத்தியல் இயக்கமாக வளரக்கூடிய அளவுக்கு அவற்றின செயல்வாதங்கள் இருந்ததை அவதானிக்க முடிகிறது. ஆனால் அதே அளவான பெண் கல்வியை பெண்களாலேயே தனியாக முன்னெடுக்கக்கூடிய நிலை இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம் கல்விக்காக மிகப்பெரும் பங்களிப்பைச் செய்த சர். செய்யித் அஹ்மத் கான் போன்றோரின் உழைப்புக்குப் பின்னரே நவீனத்துவ முஸ்லிம் பெண் கல்வியின் வளர்ச்சியை அவதானிக்க முடிகிறது.
அறுபதுகளுக்குப் பின்னரே முஸ்லிம் பெண் கல்விக்கான ஆரம்பகாலத்தில் இடப்பட்ட கல்விச் சிந்தனையிலிருந்து அதற்கான அறுவடைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கின்றது. இக்காலப்பிரிவிலிருந்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் எழுத்துச் செயல்பாடுகளையும் அடையாங்காணக்கூடியதாக உள்ளது. இது தொண்ணூறுகளுக்குப் பின் முனைப்புப் பெறுவதை அவதானிக்கலாம்.
இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின் இன்றைய ஒட்டுமொத்த இலங்கையின் தமிழ் மொழிச் சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம் பெண்களின் எழுத்து செயல்பாடு குறிப்பாக முஸ்லிம் பெண் கவிதாயினிகளின் கவிதா வெளிப்பாடு பெரும் கவன ஈர்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளதை பரவலாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இவர்களின் ஃபஹீமாஜஹான், பெண்ணியா, அனார், சுல்பிகா, லறினா, சர்மிளா சையித் போன்ற சிலரின் பெயர்கள் பரவலாக இலக்கியத் திறனாய்வாளர்களால் முக்கியப்படுத்தப்படுகின்றன. பொதுவாக இவர்களினதும் இவர்களுக்கு முந்திய முஸ்லிம் பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களிலும் இழையோடும் பொதுவான போக்குகளை அடையாளப்படுத்தலாம் என விரும்புகின்றேன்.
பெண் எழுத்து என்பது பெண்ணால் எழுதப்படுவதும் பெண் தன்னை பெண்ணாக அறிந்து கொள்வதும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களை அறிந்து கொள்வதும் அவர்களின் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் அறிந்து எழுதும் எழுத்து என்று பொதுவாக நாம் அடையாளப்படுத்த முடியும் என நினைக்கின்றேன். இவர்களின் எழுத்துக்களில் ஒரு தீவிரத் தன்மை காணப்படுவதையும் பூசிமெழுகும் பாங்கு இல்லாதிருப்பதையும் காண முடிகிறது.
ஆரம்பத்தில் எழுத்து என்பது ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலமை சற்று மாறியுள்ளது. பொதுவான எழுத்தில் நம்பிக்கையில்லாத ஒரு நிலையே வாசக மற்றும் திறனாய்வுத் தளத்தில் நிலவுவதைக் காணலாம். ஏனெனில் தலித் எழுத்து, தலித் பிரச்சினைகளை தனியாகப் பேசுகிறது. குழந்தைகளுக்கான எழுத்து செயல்பாடுகள் குழந்தைகளுக்கான ஒரு மொழியைக் கோரிநிற்கின்றது. இந்த வகையில் அண்மைக்கால இப் பெண் எழுத்தாளர்களின் எழுத்து தமக்கான ஒரு தனித்துவ குரலாகவும் தன்னாற்றலின் வெளிப்பாடுகளாகவும் அமைந்திருப்பதை பொதுவாக அவதானிக்கலாம்.
இப்பெண் எழுத்தாளர்களின் அரசியல் எது என்ற கேள்வியை எழுப்பி நாம் சிந்திக்கின்ற போது உடலரசியலையே அவர்கள் முதன்மைப்படுத்தியும் வருகின்றனர். உடல் அவர்களுக்கானது என்ற அரசியலே அவர்களின் எழுத்துக்களில் முன்னிறுத்தப்படுகின்றது. பெண்ணை மனுஷியாகப் பார்க்க மறுத்து அவளை உடல் உறுப்புக்களின் வழியாக நுகர்வுக்கான ஒரு பொருளாக பார்க்கும் ஆணாதிக்க எழுத்துக்கு மாற்றாகவும் எதிராகவும் இப்பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களும் அமைந்திருக்கின்றன.
இப்பெண் எழுத்துக்களை ஆண்களின் உலகம் அதிர்ச்சியோடுதான் எதிர் கொண்டும் வருகிறது. இதற்கு முதல் ஆண் மாத்திரமே நுகர்வோனாக கட்டமைக்கப்பட்டு பெண் நுகர் பொருளாக ஆக்கப்பட்டிருந்த நிலை மாறி பெண்ணும் நுகர்வோனின் இடத்தை எடுத்துக் கொள்கிற நிலையிலிருந்தே இந்த விமர்சனங்கள் உருவாவதை அவதானிக்கலாம். இந்த வகையில் இவர்களின் பெண் எழுத்துக்கள் தனக்கான ஒரு பங்கேற்பு ஜனநாயகத்தை கோரிநிற்பதையும் காண முடியும்.
இப்பெண்களின் வெளியும் இயங்கு தளமும் அகலிக்கப்பட்டு வருவதையும் இவர்களின் எழுத்து செயல்பாடுகளின் ஊடாக புரியக்கூடியதாக உள்ளது. வீட்டுக்கு வெளியே முஸ்லிம் பெண்கள் கல்விக்காவும் தொழிலுக்காகவும் வெளியேறிய ஒரு சூழலிலிருந்து அவர்கள் புலங்கிய வீடு என்ற சுருங்கிய வெளியிலிருந்து இன்னொரு பரந்த வெளியை நோக்கிச் செல்வதை இவர்களின் கவிதைகளில் காண முடிகிறது.
அவ்வெளியிலும்கூட போதாமைகளும் சங்கடங்களும் நிலவுவதையும் இவர்களது எழுத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனாதிக்கத்தின் காரணமாக பெண்களின் வெளி சுருக்கப்பட்டிருந்த ஒரு நிலையிலிருந்து அதைத் தாண்டிய ஒரு புதிய வெளியை உருவாக்குவதற்கான முயற்சியாகவும் இவர்களின் இலக்கிய செயல்பாடுகளை அவதானிக்க முடியும்.
இப்பெண்கள் தொன்மங்களையும் முஸ்லிம் பண்பாட்டில் நீண்டகாலமாக புழங்கி வருகின்ற சமூகக் குறியீடுகளையும் தமது கவிதைகளில் கையாண்டு வருகின்றனர். பொதுவாகத் தொன்மங்கள் சமயச் சார்புடையவையாக இருக்கின்றன. காரண காரியவாதங்களுக்கு அப்பாற்பட்டவையாகவும் இயற்கை கடந்த நிலையாகவும் காணப்படுகின்றன. ஆதி சமூகத்தின் ரகசியங்களையும் புனிதர்களையும் சார்ந்ததாக தொன்மங்கள் நம்பப்படுகின்றன. உண்மையில் தொன்மங்கள் இலக்கியக் காலத்திற்கு முற்பட்டது. வாய்மொழி சமூகத்தோடு தொடர்புடையது.
தொன்மங்கள் தனிநபரால் தோற்றுவிக்கப்படுவதில்லை. சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களால் வழிமொழியப்பட்டு நிண்டகாலமாக உறுதிப்பட்டு வருவது. இதனால் தொன்மங்களுக்கு அழிவு கிடையாது. ஆனால் தொன்மங்களில் மாறுபட்ட, முரண்பட்ட விடயங்கள் காலத்தில் மீட்டுருவாக்கம் பெறுவதையும் காணலாம். இந்த வகையில் இவர்களின் கவிதைகளில் ஆதித்தாய் ஹவ்வா, விலா எலும்பு, யூசுபைக் காதலிக்கும் சுலைஹா, லூத் நபியின் மனைவி போன்ற பல்வேறு முஸ்லிம் பண்பாட்டிலிருக்கும் தொன்மங்கள் பெண்ணிய நோக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருவதையும் இவர்களின் எழுத்துக்களை கூர்ந்து படிக்கின்ற போது அவதானிக்க முடியும்.
source: www.idrees.lk