ஆலிம்களுக்கு அன்பு வேண்டுகோள்!
கண்ணியமிக்க ஆலிம்களே, இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாத்தை உறுதிபடுத்த, மக்களுக்கு மத்தியில் உண்மையை சொல்லி, ஏகத்துவத்தின் பக்கம் அழைக்க முற்பட்ட தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குறைஷி காஃபிர்களுக்கு மத்தியில் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், ஆளாகி, தனக்கு வல்ல அல்லாஹ் அளித்த திருமறைப்படி மக்களை அழைத்து, இதுதான் இஸ்லாம் – இப்படித்தான் அல்லாஹ் நம்மை நடக்கச் சொல்லி உள்ளான் என்றும், சிறு விஷயம் முதல் பெரிய விஷயம் வரையிலும் எடுத்துரைத்தார்கள்.
அன்று வாழ்ந்த மக்களில் ஒரு கூட்டம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கல்லாதவர், அவர் சொல்வதை நாம் கேட்பதா? நமது அந்தஸ்த்து என்ன? கெளரவம் என்ன? என்று வரட்டுக் கெளரவம் பாராமல் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதுதான் மார்க்கம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்-செயல்-அங்கீகாரப்படி ஒரு விஷயத்தை கூட விடாமல் பின்பற்றி நடந்தார்கள். அவர்களே நபித்தோழர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்குப் பின் அவர்கள் எதை எப்படி சொன்னார்களோ, அதை அப்படியே செய்து, எதை தடுத்தார்களோ அவற்றைத் தடுத்து வாழ்ந்தார்கள், உத்தம சஹாபாக்கள், நான்கு கலீபாக்கள், தாபியீன்கள், தபஅதாபியீன்கள், ஏன் அந்த நான்கு இமாம்கள் கூட, குர்ஆன் ஹதீஸ்படி தான் வாழ்ந்து மக்களுக்கு உண்மையான மார்க்கத்தைச் சொல்ல, தங்களின் உயிரையே பணயமாக வைத்துப் போராடினார்கள், போதித்தார்கள்.
இவர்களின் மறைவிற்குப் பிறகு தோன்றிய ஹஜ்ரத்மார்களும், ஆலிம்ஸாக்களும், அப்பாமார்களும், ஷேக்மார்களும், தம் குடும்பத்தை சரியான முறையில் நடத்த முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்ட இக்கட்டான நிலையில், தம் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வது என்ற நிலமை, சிந்தனைகள் ஏற்படும்போது சமுதாயத்தை ஏய்த்துக் பிழைக்க முற்படும் வகையில் மெளலூது என்றும், மீலாத் என்றும், கத்தம் ஃபாத்திஹா என்றும், பூரியான் ஃபாத்திஹா, பாம்பு வந்தால் அதற்கு ஃபாத்திஹா, Fபால் கிதாபு பார்த்தல், தாயத்து முடிதல், தட்டு எழுதிக் கொடுத்தல் போன்ற பித்அத்களை உருவாக்கி தம் பாக்கெட்டுக்களையும், வயிற்றையும் நிரப்பி வந்த இடைக்கால முல்லாக்களின் கொள்கைகளை, அப்படியே பின்பற்றும் இக்கால ஹஜ்ரத்மார்களும், ஆலிம்ஸாக்களும், மக்களிடம் அதையே போதித்தார்கள். இன்னும் போதித்து வருகிறார்கள்.
ஆறாவது அறிவை பயன்படுத்தாத சமுதாயத்தவர்கள், குர்ஆனையும், ஹதீஸையும் திறந்து பாராமல், ஹஜ்ரத் சொல்வதுதான் உண்மையென நம்பி, அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாகி வருகிறார்கள். இவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவர்களிடம் ஆதாரம் கேட்டால் குர்ஆனிலோ, ஹதீஸிலோ காட்ட முடியாது. முன்னோர்கள் தான் ஆதாரம்.அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
”நெருப்பில் அவர்களுடைய முகங்களை பொசுக்கும் அந்நாளில், ஆ கைசேதமே!
அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டாமா?
தூதருக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டாமா?
மாறாக எங்கள் ரப்பே! நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், (முன்னோர்களான) பெரியவர்களுக்கும் வழிபட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள், என்று கூறி அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து சபிப்பாயாக எனக் கதறுவார்கள்.” (அல்குர்ஆன் 33: 66,67,68)
முன்னோர்களை பின்பற்றுபவர்களின் அவலநிலை நாளை என்ன ஆகும் என்பதை அல்லாஹ் நமக்கு படம் பிடித்து காட்டுகிறான். இதை நம் சமுதாயம் உணராது, சிந்திக்காது செயல்படுவதால், மக்களை சுலபமான முறையில் வழி கெடுக்கிறார்கள். மேற்கண்ட அனாச்சாரங்களை நம்ப வைத்து, இதுதான் மார்க்கம் என்று, பத்வா கொடுக்கும் மத்ரஸாக்களும், 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பத்திரிகைகளும் இருக்கத் தான் செய்கின்றன.
இஸ்லாமிய பத்திரிகைகள் உலா வருவதின் நோக்கம்:
பணத்திற்காகக் கட்டுக்கதைகளையும், முன்னோர்களின் கிஸ்ஸாக்களையும், கஃபத்துல்லாஹ் நடந்து போன கதைகளையும் கூறும் நோக்கத்திலேயே வெளியிடுகிறார்கள் என்பது நாம் அறிந்த உண்மை. கேள்விகளுக்கு கூட கூடும்/கூடாது/ஹராம்/ஹலால்/மக்ரூஹ் என்று ஒரு வரியில் பதில் தருகிறார்கள். ஏன்? பெரிய மத்ரஸாக்களுக்கு நன்கொடைகள் அனுப்பி தர்ஹாவுக்கு போகலாமா? யாகுத்ப ஓதலாமா? என்று ஃபத்வா கேட்டால் குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முரணாக ஃபத்வாக்களையே பெற முடிகிறது . இதுவரை நம் நாட்டில் நடந்து வரும் அட்டூழியங்களைப் பார்த்தோம். இனி நாம் விஷயத்துக்கு வருவோம்.
இப்படிப்பட்ட, சீர்குலைந்து கிடந்த மார்க்கத்தைச் சீர்படுத்தவும், பொய்யான வழிகளில் மக்களைக் கெடுக்கும் ஆலிம்ஸாக்களின் முகத்திரையைக் கிழிக்கவும், கட்டுக்கதைகளை வெளியிடும் இஸ்லாமிய இதழ்களை அடையாளம் காட்டி விமர்சிக்கவும், உண்மை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அளிக்கவும், மார்க்க அறிஞர்கள் உண்மையை அறிந்தும், அதை மக்களிடம் சொல்லாமல் மறைப்பது மாபெரும் குற்றம் என்ற நன்னோக்குடனும், மக்களை குர்ஆன், ஹதீஸின் பக்கம் நெருங்க வைக்க வேண்டும், இதனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை பொருட்படுத்தாது, ஏன் ஜிஹாது செய்யவும், துணிந்து அல்லாஹ் ஒருவனை மட்டும் தான் வணங்க வேண்டும். அவனல்லாதவர்களிடம் உதவி தேட கூடாது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டுமே நமது இமாமாகக் கொள்ள வேண்டும். அவர்களை அல்லாஹ்வின் வர்ணனைகளைக் கொண்டு அளவுக்கு மீறி புகழக் கூடாது; பித்அத்களையும், அனாச்சாரங்களையும் ஒழிக்க வேண்டும், என்ற இலட்சிய நோக்கங்களுடன் தமிழகத்தில் பூத்த மலர்களே, அந்நஜாத் போன்ற மாத இதழ்கள்.
இஸ்லாமிய இலட்சிய இதழ்கள் தோன்றிட்ட காரணத்தை கண்ட மேற்படி இதழ்களும், பெரும் சபைத் தலைவர்களும் குதிக்கிறார்கள். வேகப்படுகிறார்கள், பொறாமையடைகிறார்கள், அதோடு மட்டும் விட்டு விடவில்லை. எப்படியாவது இப்பத்திரிகையை ஒழித்துக்கட்டி விடவும் கங்கணம் கட்டிக்கொண்டு, அவர்களுக்குள் தீர்மானம் தீட்டுகிறார்கள். எப்படி தெரியுமா? அந்த இதழைப் படிக்காதீர்கள்! அது நஜீஸ். அதைப் படித்தால் ஈமான் போய்விடும். அவர்கள்ள குழப்பவாதிகள்; அரபு நாட்டுப்பணம் அவர்களுக்கு வருகிறது என்று பத்திரிகைகளும், பல பெரும் சபை தலைவர்களும், இமாம்களும் ஓலமிட ஆரம்பித்து – விட்டார்கள், ஓலமிட்ட வண்ணமாக இருக்கிறார்கள். என்ன செய்வார்கள்? பாவம்!
அவர்களின் பத்திரிகைகளின் சந்தாக்கள் புதுப்பிக்கப்படவில்லை, முரீது விற்பனையாகவில்லை. தாயத்து முடிய யாரையும் காணவில்லை. கத்தம் பாத்திஹாவுக்கு அதிகமாக அழைப்பு வரவில்லை, மீலாது மேடைகள் குறைந்து வருகிறது. மெளலூது மார்க்கெட்டும் சரிந்து வருகிறது.
Fபால் கிதாபு பார்ப்பவர்கள் குறைந்து விட்டார்கள். இவர்களின் பாக்கெட்டு கனம் குறைகிறது. பத்திரிகைகளில் முன்பு போல் கட்டுக்கதைகளை மார்க்கமாக எழுத முடியவில்லை. நாளடைவில் பத்திரிகை தொழிலையே மூடும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் மக்களை திசை திருப்ப ஓலமிடத் துவங்கி விட்டார்கள்.ஓலமிடுபவர்களே! இனி ஒருகாலும் மக்களை ஏமாற்ற முடியாது.
நீங்கள் சொன்னதை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு, ஏற்றுக் கொண்ட காலம் மலை ஏறிவிட்டது.
நீங்கள் இப்போது எதைச் சொன்னாலும் குர்ஆனில் இருக்கிறதா? ஹதீஸில் இருக்கிறதா?
எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? அறிவிப்பாளர் யார்?
என்று கேட்கும் அளவுக்கு மக்களை நேர்வழிப்படுத்தி, ஆறாவது அறிவை பயன்படுத்திக் கேட்கும் அளவிற்கு இளைய சமுதாயத்தை, உருவாக்கி விட்டன.
மாத இதழ்கள், இனியும் நீங்கள் யாரையும் ஏய்க்க இயலாது. எத்தனை மாநாடுகள் போட்டு தீர்மானங்கள் தீட்டினாலும், அது நிலைத்து நிற்காது, பயன் தராது என்பதை உணர்ந்து, அறிந்து, மக்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணாமல், ஒன்றினைந்து குர்ஆன் – ஹதீஸைப் போதிக்க முன் வாருங்கள்.
ஏகத்துவவாதிகள் அல்லாஹ்வின் பள்ளிக்குள் வருவதைக் தடுக்கிறீர்களே, அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில், அல்லாஹ்வைத் துதிப்பதைத் தடுப்பவனை விட மகா அக்கிரமக்காரன் யார்? என்ற 2:114 வசனம் குறித்து நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டாமா?
அல்லாஹ்வின் பள்ளிக்குள் நுழைவதைத் தடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?
அரபு நாட்டு பணம் வருவதாக சொல்கிறீர்கள்! அரபு நாட்டில் பணிபுரிபவர்களின் வேலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எவ்வளவு சம்பளம் என்று தெரியுமா? இல்லை, அரபு நாட்டில் பணிபுரிபவர்கள் ஒரு மாத ஊதியத்தில் சாப்பாடு செலவு, ரூம் வாடகை, தண்ணீர், லைட்பில், இது போக மீதம் உள்ளதை தன் மனைவிக்கும், தன் தாய், தந்தையர்களுக்கும், ரூபாய் ஆயிரம் அனுப்பக்கூட திண்டாடும் நிலையில் உள்ள நாங்கள், எப்படி அனுப்புவோம் என்பதை சிந்தியுங்கள்.
சத்தியத்தை நிலைநாட்டும் ஆர்வத்தில், சிரமத்திற்கு மத்தியில் எங்களால் இயன்றதைத் தருகிறோம். நீங்கள் அரபு நாட்டில் சந்தாக்கள் வருவதை, இது அரபு நாட்டு பணம், இது ஹராம் என்று சொல்வீர்களா? இன்னும் மெளலூது, மீலாது, கத்தம், ஃபாத்திஹா, கத்னா, குடிபுகுவிழா போன்ற பித்அத்தான வைபவங்களுக்குச் செல்லும் உங்களுக்கு ஐந்தும், பத்தும், நூறும் தருகிறார்களே! இதை இது எந்த நாட்டின் பணம் என்று தான் கேட்பீர்களா?
அரபு நாட்டிலிருந்து வந்து தன் திருமணத்திற்குப் ஃபாத்திஹா ஓதியதால் தரும் பணத்தை இது அரபு நாட்டு பணம், இது வேண்டாம் என்று சொல்லத்தான் உங்களால் முடியுமா? உங்கள் பணத்தை சாப்பிடுவது நீங்கள்தான் என்பதை யாராலும் மறக்க முடியாது. பாட்டுக் கச்கேரிகளுடன் நடக்கும் மீலாது விழாக்களிலும், தியேட்டர்கள் திறப்பு விழாக்களுக்கு பாத்திஹா ஓதுவதிலும் தர்ஹாக்களில் ஃபாத்திஹா ஓதுவதிலும், பங்கு கொள்ளும், மஸ்ஜித் இமாம்களும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.
பணத்திற்காகவும், கெளரவத்திற்காகவும், மார்க்கத்தை கூறுபோடாமல் அல்லாஹ் அனுமதித்த வழிகளில் பொருள் தேட முற்படுங்கள்; கத்தம் ஃபாத்திஹா ஓத நாங்கள் வர மாட்டோம், அனாச்சாரங்களை ஒழிக்கப்பாடுபடுவோம் என்று துணிந்து சொல்லுங்கள். இப்படி சத்தியத்தைச் சொல்ல முன் வாருங்கள். உங்களுக்கு வேண்டிய ஒத்துழைப்புக்களை நாங்கள் தருகிறோம் உங்களுக்காக உயிரையே பணயம் வைத்து போராடுகிறோம். (இன்ஷா அல்லாஹ்) எங்கே? எத்தனை ஆலிம்கள் முன் வருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
– திருக்களாச்சேரி,
K.M. அப்துல் ஹமீது