ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும்
அல்குர்ஆன் பொருளாதார சீர்நிலை குறித்து மிகவும் வலியுறுத்தி விளக்குகிறது. ஸுரா மாஊன் மறுமை நாளை நிராகரித்தலின் ஒரு வகையாக வறுமை ஒழிப்பில் ஈடுபடாமையைக் குறிக்கிறது. ஸுரா ஹாக்காவில் நரகில் தள்ளப்படுகின்றமைக்கு இறை நிராகரிப்பிற்கு அடுத்த காரணமாக இதனைக் குறிக்கிறது.
அல்குர்ஆன் 28 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துக் கூறுகிறது. ஸஹாபாக்கள் ஸகாத்தை தரமாட்டோம் என வாதிட்டவர்களுக்கு எதிராக யுத்தமொன்றையே கொண்டு சென்றார்கள். இந்த வகையில்தான் ஸகாத்தை இஸ்லாமிய வாழ்வைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள்.
இவ்வாறு வறுமையை ஒழிக்க ஸகாத் சட்டஒழுங்கை இஸ்லாம் ஏற்படுத்தியதோடு பராமரித்தல், வாரிசுரிமை, சமூகக் கூட்டுப் பொறுப்பு போன்ற சட்டங்களையும் இஸ்லாம் இயற்றியுள்ளது. ஆன்மீக உயர்வுக்கு வழிகாண முனைபவர்கள் குறிப்பாக பொருளாதார சூழ்நிலை குறித்துக் கவனம் செலுத்தல் மிகவும் அவசியமானது. இக்கருத்தை ஷெய்க் முஹம்மத் அல் – கஸ்ஸாலி தமக்கே உரிய பாணியில் கீழ் வருமாறு மிகவும் அழகாக விளக்குகிறார்.
‘ஒரு மனிதனின் உள்ளத்தை அவனது வயிறு வெறுமையாக இருப்பின் நேர்வழியால் நிரப்புவது மிகக் கடினம்.
உடுக்க உடையில்லாதவனை தக்வா எனும் உடையால் போர்த்துவது சாத்தியமில்லை.
ஒரு மனிதனை மனிதனாக நிமிர்ந்து நிற்கச் செய்யும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னரே ஈமானிய உண்மைகள் அவனது உள்ளத்தில் நிலைபெறுவதை எதிர்பார்க்க முடியும்’.
இஸ்லாம் தருகின்ற இன்னொரு வழிகாட்டலே குடும்ப வாழ்வு பற்றிய சட்ட ஒழுங்கும், ஆபாச சமூக சூழலை ஒழித்தலும். குடும்பம் இஸ்லாமிய சமூகவாழ்வின் அடிப்படை மனிதனின் எதிர்கால வாழ்வுக்கான அடித்தளம் அங்குதான் இடப்படுகிறது. அவ்வடித்தளம் சரியாகவும் பலமாகவும் அமையுமளவிற்கு சமூக வாழ்வும் சீராகவும் பலமாகவும் அமையும். மனித ஆன்மாவை வளர்க்கும் அடிப்படைப் பொறுப்பு குடும்பத்திடமே உள்ளது.
மனிதனின் சிறுபராய ஆழ் மனப்பதிவுகள் மிகுந்த வீரியம் கொண்டவை. எனவே குடும்பம் சிறுபராயத்தில் ஆன்மீக உணர்வுகளை வழங்கும் போது அது மிகவும் பெரியதொரு ஆரம்பமாக அமைகிறது. இந்த வகையில் இஸ்லாம் குடும்பம் குறித்துத் தந்துள்ள சட்டங்களும், வழி காட்டல்களும், போதனைகளும் மிகச் சரியாக நடை முறைக்கு வரல் ஆன்மீக உயர்வின் முக்கிய அடிப்படையாகிறது. ஆபாச சமூக சூழல் ஆன்மீக உயர்வின் மிக அபாயகரமான எதிரியாகும். எனவே அது அகற்றப்படல், தூயசமூக சூழலொன்று காணப்படல் மிக அவசியமானதாகும். குடும்ப வாழ்வின் பலம் ஆபாச சூழலின் தாக்கத்தை மிகக் குறைக்கும். ஸுரா நூர் ஆபாச சூழலை அகற்றல,; அதற்கான வழிமுறை குறித்து விரிவாக மிகவும் நுணுக்கமாக விளக்கியுள்ளது.
இந்தவகையில் இஸ்லாம் ஆன்மீக உணர்வுகள் வளரச் சாதகமான சூழலொன்றை உருவாக்குவதில் மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது. அதில் மிகவும் முக்கியமான பகுதிகளை மட்டுமே இங்கு விளக்கினோம்.
இனி ஆன்மீகப் பயிற்றுவித்தலின் இரண்டாவது அடிப்படை உண்மைக்கு வருவோம். ஏற்கனவே நாம் விளக்கியது போல் ஆன்மீக வாழ்வு என்பது இறைநினைவையும் அது சார்ந்த உளஉணர்வுகளையும் இவற்றின் விளைவாக வரும் நடத்தையையும் குறிக்கிறது. இந்த வகையில் முதலாவது இது நம்பிக்கைப் பகுதியைக் குறிக்கிறது.
இந்தப் பிரபஞ்சம் தற்செயலாகத் தோன்றவில்லை. அதன் இயக்கமும் தன்முனைப்பான இயந்திரரீதியான அமைப்பன்று. இப்பிரஞ்சத்திற்கும் அதன் இயக்கத்திற்கும் பின்னால் ஒரு மிகப் பாரிய அறிவும், சக்தியும் கொண்டவன் உள்ளான். அவனது திட்டமிடலே இவ்வுலகும் அதன் இயக்கமும் இக் கருத்தையே இறை நம்பிக்கை என்கிறோம்.
மனித வாழ்வு இவ்வுலகில் அர்த்தமற்று முடிந்து விடுவதில்லை. மண்ணோடு மண்ணாகி அழிவது மனிதன் என்ற சிருஷ்டியின் வாழ்வுக்கான பொருளன்று. நிரந்தரமாக வாழப் பிறந்தவன். அவ்வாழ்வின் முதற் கட்டமாக இந்த உலக வாழ்வு பரிசோதனையாக அமைந்துள்ளது. இதுவே மறுமை நாள் நம்பிக்கை.
இவ்விரு அடிப்படை நம்பிக்கைகளை ஒட்டியே ஏனைய நம்பிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நம்பிக்கைகள் உண்மையில் இப்பிரபஞ்சம், மனித வாழ்வுக்கான விளக்கம். பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் அறிவுபூர்வமான முடிவுகள். இப் பின்னணியில் இந்த நம்பிக்கைகள் அறிவுபூர்வமாகப் புரியப்படவேண்டும். சிந்தனையின் விளைவாக இந்த அறிவு பெறப்பட வேண்டும் என அல்குர்ஆன் எதிர்பார்க்கிறது.
பிரபஞ்சம் பற்றிய ஆய்வு, சிந்தனை- அறிவு- ஈமான். இவ்வாறு ஒன்றன் விளைவாக ஒன்றை அல்குர்ஆன் காண்கிறது. கண்ணை மூடிக்கொண்டு ஈமான் கொள்ளல் என்பது அல்குர்ஆனைப் பொறுத்தவரையில்கிடையாது.
எனவே சிந்தனை விளைவாக அறிவு விளைவாக ஈமான் என்ற இந்த அடிப்படை பேணப்படல் ஆன்மீகப் பயிற்றுவித்தலின் இரண்டாவது முக்கிய அடிப்படையாகும். அல்குர்ஆன் இக்கருத்தைக் கீழ்வருமாறு தருகிறது.
‘அறிவு பெற்றோர் அது உமது இரட்சகனிடமிருந்து வந்தது என அறிந்து கொள்கிறார்கள். விளைவாக அதனை நம்பிக்கை கொள்கிறார்கள். விளைவாக அவர்களது உள்ளங்கள் பணிந்து விடுகின்றன… (ஸுரா ஹஜ் – 54)
இமாம் கஸ்ஸாலி இக்கருத்தைக் கீழ் வருமாறு விளக்குகிறார். ‘சிந்தனையின் முதன்மையான விளைவு அறிவு உள்ளத்தில் அறிவு நுழையின் அது மாற்றமுறும். உள்ளம் மாற்றமுறுமாயின் உடலின் செயல்கள் மாற்றமுறும் செயல் உளநிலையை பின்தொடரும். அறிவைப் பின்தொடரும் அறிவு சிந்தனையைப்பின் தொடரும் எனவே சிந்தனையே அனைத்து நன்மைகளினதும் திறவு கோள்’.
(1) அறிவு என்பது தகவல்களின் திரட்டு அல்ல. ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக வரும் உளப்பூர்வ முடிவுகளே அறிவாகும்.
இந்தப் பின்னணியில் மக்காவில் குர்ஆன் ‘சிந்தனை ஒழுங்கு’ பற்றி மிக விரிவாகப் பேசியது. மிகுந்த அழுத்தம் கொடுத்து மையப்படுத்திப் பேசியது. ஈமானின் உண்மைகள் மனிதனின் சுயசிந்தனையின் விளைவாக இருக்க வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்திப் பேசியது. பிரபஞ்சம் பற்றியும், பல்வேறு இயற்கை நிகழ்வுகள் பற்றியும், மனிதன் பற்றியும் நூற்றுக்கணக்கான வசனங்களில் அல் குர்ஆன் பேசுகிறது. விரிவஞ்சி அவற்றில் மிகவும் சிலவற்றை இங்கே தருகிறோம்.
‘அவர்கள் தம்மைப் பற்றி சிந்திக்கவில்லையா? வானங்களையும் பூமியையும் அவற்றிடையே இருப்பவற்றையும் சத்தியத்தின் அடிப்படையிலேயே படைத்துள்ளோம்’ (அல் குர்ஆன்: ஸுரா ரூம் – 8)
‘அவர்களுக்கு மேலால் உள்ள வானத்தை அவர்கள் நோக்கவில்லையா? அதனை நாம் எவ்வாறு நிர்மாணித்தோம்? எவ்வாறு அழகுபடுத்தினோம்? அதில் எந்த ஓட்டையும் காணப்படவில்லை?’ (அல் குர்ஆன்: ஸுரா காப் – 6)
‘ஒட்டகத்தை எவ்வாறு நாம் படைத்துள்ளோம்? வானத்தை எவ்வாறு உயர்த்தி அமைத்துள்ளோம்? என்று அவர்கள் நோக்க வில்லையா? ‘(அல் குர்ஆன்: ஸுரா அல்காஷியா 17,18)
‘அல்லாஹ் தவிர வேறெந்தக் கடவுள் நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்கு கொண்டு தரமுடியும். நீங்கள் அவதானிக்கவில்லையா?’ (அல் குர்ஆன்: ஸுரா கஸஸ் 72)
‘பூமியில் அவர்கள் பிரயாணம் செய்து அவர்களுக்கு முன்பிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்று நோக்கவில்லையா?’ (ஸுரா ரூம் – 9)
‘நாம் செவிமடுத்துக் கேட்பவர்களாக அல்லது சிந்திப்பவர்களாக இருந்திருந்தால் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்’ (அல் குர்ஆன்: ஸுரா முல்க் – 10)
விஞ்ஞானபூர்வமாக ஆராய வேண்டும் அறிவுபூர்வமாக விடயங்களை நோக்க வேண்டும் என வலியுறுத்திய அல்குர்ஆன் மௌட்டீக நம்பிக்கைகள், சிந்தனையற்ற வெறும் வாழ்வு என்பவற்றை மிகக் கடுமையாக சாடியது.
‘நரகிக்கென்று ஜின்களில், மனிதர்களில் சிலரை நாம் படைத்து விட்டுள்ளோம்.. அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கும் சிந்திக்கமாட்டார்கள். கண்களிருக்கும் பார்க்க மாட்டார்கள். காதுகளிருக்கும் கேட்கமாட்டார்கள். அவர்கள் மிருகத்தை ஒத்தவர்கள். இல்லை. அதனை விடவும் வழி தெரியாது தடுமாறுபவர்கள். அவர்கள்தான் அக்கறையற்று வாழ்பவர்கள்’ (அல் குர்ஆன்: ஸுரா அஃராப் – 79)
இந்த வகையில் ஆன்மீகப் பயிற்றுவித்தல் என்பது அல்லாஹ்வைப் புரிதல், வாழ்வு பற்றிய புரிதல் என்பவற்றின் மீதே எழும்புகிறது. நம்பிக்கைப் பகுதி பற்றிய ஆழ்ந்த புரிதலே ஆன்மீக பயிற்சியில் எடுத்து வைக்கும் முதலடியாகும்.
இப்பகுதியற்ற வெறும் வணக்க வழிபாடுகள் உயிரோட்டம் கொண்டதாக அமையமாட்டாது. கருத்துப் புரியாமல் அல்குர்ஆனை ஓதலும், சில திக்ர் அவ்ராதுகளை கருத்தில் எக்கவனமுமின்றி மனனமிட்டு ஓதலும் ஆன்மீகப் பயிற்சியளித்ததாக ஒரு போதும் ஆகமாட்டாது. இமாம் இப்னு தைமியா சொல்வது போன்று வேறேதாவது தேவையில்லாதவற்றைப் பேசிக் கொண்டிருப்பதைவிட இத்தகைய திக்ர்களை உச்சரிப்பது சிறந்ததுவே. ஆனால் அது ஆன்மீகப் பயிற்சியில் மிகச் சிறியதொரு பங்கை மட்டுமே வகிக்க முடியும்.
ஆன்மீகப் பயிற்றுவித்தலின் மேற் கூறிய இரு அடிப்படை அம்சங்களின் பின்னர் ஆன்மீக பயிற்சிக்கான சாதனங்கள் மிகவும் தெளிவானவை. அல்குர்ஆனும் சுன்னாவும் அவற்றை மிகத் தெளிவாக விளக்கியுள்ளன. கடமையான வணக்க வழிபாடுகள் உயிரோட்டமாக நிறைவேற்றப்படல், பல்வேறு சுன்னத்தான வணக்கங்கள், திக்ர்கள், துஆக்கள் நடத்தைகள் சார் ஒழுக்கங்கள் கடைபிடிக்கப்படல், சுன்னத்தான வணக்கங்களில் குறிப்பாக அல்குர்ஆனுடனான தொடர்பு, தஹஜ்ஜுத் தொழுகை, சுன்னத்தான நோன்புகள் என்பன முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
இப்போது மேற்குறிப்பிட்ட விடயங்களை சாத்தியப்படுத்துவது எவ்வாறு என நோக்குவோம். இங்கு சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பின்னணியிலிருந்தே இவற்றை நாம் விளக்குகிறோம்.
சிறுபான்மை என்ற வகையில் தேசியரீதியான மாற்றம், அதிகாரரீதியான மாற்றங்கள் பற்றி இலங்கை முஸ்லிம் சமூகம் சிந்திக்கவேண்டியதில்லை. கிராமம் கிராமமாக ஆன்மீகரீதியான செயற்பாடுகள் குறித்து சிந்திப்பதே மிகவும் பொருத்தமானது. அவ்வாறு திட்டமிடின் வேலைத் திட்டம் ஓரளவு இலகுவானது எனக் கருதமுடியும். கீழ்வரும் ஒழுங்கில் இது பற்றித் திட்டமிடல் சாத்தியமானது எனக் கருதலாம்.
கிராமத்தில் பொருளாதாரரீதியாக அடிமட்டத்தில் இருப்போரை எழுப்பிவிடலுக்கான வழிகாணல். இதனைப் பிரதானமாக இரு வழிகளில் ஒழுங்கு படுத்தலாம்.
01. ஸகாத் நிறுவன ஒழுங்கு
நவீன ஆய்வுகளின் துணை கொண்டு இதனை நடைமுறைப்படுத்தினால் வறுமை ஒழிப்பில் பெரும் பங்கை ஸகாத் நிறுவன அமைப்பு ஆற்ற முடியும்.
(அ) செலவினங்களுக்குப் பொறுப்பாதல் சம்பந்தமான சட்டப் பகுதி பற்றிய அறிவையும், தூண்டுதலையும் ஏற்படுத்தல்.
(ஆ) இவை தவிர ஸகாத்துல் பித்ர், ஸதகாக்கள், குற்றப்பரிகாரமும், பொருளாதாரரீதியாக அமையும் என்பவை அறிவூட்டல், தூண்டுதல்களைக் கொடுத்தல் என்பவையும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பங்களிக்க முடியும்.
02. பல்வேறு நிறுவனங்களுடாக நடைமுறைப்படுத்தல்
(அ) பாடசாலைகள் ஆன்மீக உயர்வுக்கு பாதகமின்றி இயங்கல். இது அவற்றிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஆகக்குறைந்த நிலையாகும். ஆன்மீக உயர்வின் முதற்கட்டம் குறிப்பாக நம்பிக்கைகள் சார் அறிவைக் கொடுத்தல் என விளக்கினோம். அப்பகுதியைக் குறிப்பாக பாடசாலைகள் இஸ்லாம் பாட நேரம், பல்வகை பாடசாலை நிகழ்ச்சிகள் ஊடாகக் கொடுக்க முயலல்.
(ஆ) பாலர் முன் பாடசாலையும், குர்ஆன் மத்ரஸாவும் இப்பகுதியில் காத்திரமான பங்களிப்பொன்றைச் செய்ய முடியும். பிஞ்சு மனதிலேயே இறை நம்பிக்கையை தம் பாடத்திட்டத்தினூடாகக் கவனமாகப் பதியச் செய்ய முடியுமாயின், அது மிகப் பெரியதொரு ஆன்மீக அடித்தளமாக அமைய முடியுமென்பதில் சந்தேகமில்லை.
(இ) பள்ளி ஆன்மீக உயர்வின் அடிப்படையான, முதன்மையான இடம். ஐந்து நேரத் தொழுகையும், ஜும்ஆ குத்பாவும் தொழுகையும், நோன்பு கால நிகழ்ச்சிகளும், இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளும் பள்ளியை ஆன்மீக ஒளிபரப்பும் மத்திய தளமாகச் செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றை உயிரோட்டமாகவும், மிகுந்த பயன் பாடுள்ளதாகவும் அமைப்பது எவ்வாறு எனத் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் மிக அடிப்படையானதாகும். பள்ளி இப் பணியைச் செய்யத் தவறினால் அந்த இடைவெளியை வேறெந்த நிறுவனமும் நிரப்புதல் மிகக் கடினம். இந்த வகையில் அடிப்படையாக இரு விடயங்கள் காணப்பட வேண்டும்.
o. தகுதி வாய்ந்த இமாம் :
தொழுவித்தல் என்பது மட்டுமல்ல இவரது பணி. ஊரின் முரப்பியாக இவர் இயங்க வேண்டும். எனவே போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு சிறந்த சம்பளமும் இவருக்குக் கொடுக்கப்படல் வேண்டும்.
o. நிகழ்ச்சிகளை நடாத்தத் தேவையான வசதிகள், சாதனங்களைப் பள்ளி கொண்டிருத்தல்
(ஈ) இஸ்லாமிய நம்பிக்கைகள், ஆன்மீக வழிகாட்டல்களோடு தொடர்புபட்ட நூல்கள் மிகப் பரவலாகக் காணப்படல். தமிழ் மொழியில் இத்தகைய நூல்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இந்த இடைவெளி நிரப்பப்படல் மிகவும் அவசியமானது.
(உ) ஆன்மீக ரீதியாகப் பயிற்றுவிக்கும் ‘முரப்பிகள்’ பரவலாக உருவாக்கப்படல், இப்பகுதியில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் அம்சமாகும். இஸ்லாமிய வரலாற்றில் ‘வாஇல்’ எனப்படும் உபதேசம் செய்வோர் அக் காலப் பிரிவில் அதிகமாகக் காணப்பட்டனர். அவர்களது பேச்சுக்களும் உபதேசங்களும் மிகுந்த தாக்கத்தை விளைவித்தன. இமாம் ஹஸன் அல் பஸரி, இப்னு அல் ஜௌஸி, முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி, இமாம் பஹ்ருத்தீன் ராஸீ போன்றவர்கள் மக்களை இறைவன் பக்கம் திருப்பும் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருந்தனர். ஷெய்க் அப்துல் ஹமீத் கிஷ்க், ஷெய்க் கத்தான், அம்ர் காலித் போன்றோர் நவீன காலப்பிரிவில் இத்தகையோருக்கு உதாரணமாவர்.
இந்த வகையில் இஸ்லாமியக் கல்வி கூடங்களான மத்ரஸாக்கள் இத்தகையோரை உருவாக்குவதனை தமது முக்கிய வேலைத் திட்டங்களில் ஒன்றாகக் கொள்ள வேண்டும். தனி நபர்களை மட்டும் இலக்காகக் கொண்டு இயங்கும் ஆன்மீகத் தர்பிய்யா பெரிய பயனெதனையும் கொடுக்காது. அது பரவலாகக் கொடுக்கப்படும் போது தான் முரண்பாடுகள் அற்ற, தடைகள் இல்லாத, ஆன்மீக உயர்வுக்கு சாதகமான சூழலொன்று உருவாக சாத்தியமாகும். இப்பின்னணியிலிருந்தே சில சிந்தனைகளை முன் வைத்தோம்.
source: www.usthazmansoor.com