கற்போர் கையில் கல்வி (1)
[‘அறிவு மூன்று வகைப்படும். முதலாவது அல்குர்ஆன். இரண்டாவது அல் ஹதீஸ். மூன்றாவது எனக்குத் தெரியாது என்று சொல்வது’ என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.]
இன்று கற்போர் கையில் கல்வி இல்லை. ஒரு மாணவனுக்குப் பாடத்தைத் தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. நேரசூசியைத் தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. ஆசிரியரைத் தெரிவு செய்யும் சுதந்திரமில்லை. சீருடையைத் தெரிவு செய்யும் சுதந்திரமில்லை. பாடசாலையைத் தெரிவு செய்வதற்கான சுதந்திரமில்லை. மாணவ சங்கங்களை அமைப்பதற்கோ உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கோ அவனுக்குச் சுதந்திரமில்லை. குறைந்தது காலைக்கடன்களை முடிப்பதற்கான சுதந்திரமில்லை. தனது சொந்தக் கருத்தை பரிட்சையில் வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமில்லை. இப்படிக் கல்வித்துறை அதிகாரக் கட்டமைப்பை கொண்டிருக்கும் போது நல்ல சிந்தனையாளர்களை உருவாக்குவது எப்படி?
ஒரு மாணவன் உணர்ந்து கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பத்தை வசதியாகத் தவிர்த்து வருகிறோம். பள்ளிக் கூடங்களில் அதிகமும் சொல்லப்படுவது எழும்பு, கையைக் கட்டு, பொத்து வாயை என்ற குரலைத்தான் கேட்க முடிகிறது. அல்லது பயிற்சிக் கொப்பியை முகத்தில் வீசியடித்தல், வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்லுதல், பெண்பிள்ளைகளுக்கு மத்தியில் ஆண்பிள்ளைகளைக் கேலிசெய்தல், ஆசிரியர் ஓய்வறையில் ஒரு மாணவன் தனியாக அகப்படும் போது கிண்டலடிப்பது நமது மாணவ சமூகத்தை உளவியல் ரிதியாகக் கடுமையாகப் பாதித்து வருகின்றன.
இரா. நடராசன் கூறுவது போல ‘பள்ளிக் கூடங்கள் பலிகூடங்களாகிவிட்டன. எல்லாம் முன்தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள். நோட்சுகளில் அவற்றுக்கு ரெடிமேட் பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். முக்கிய கேள்விகளுக்கான விடைகளை மட்டும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் மாணவர்கள் உருமாற்றம் அடைந்துவிட்டனர். எல்லா மாணவர்களுக்கும் சுட்டெண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு வரிசை எண், பரிட்சை எண், அவை பெற்றெடுக்கும் மதிப்பெண், எங்கும் எண்களே இருக்கின்றன. எண்களே பாடசாலைகளை ஆள்கின்றன. எல்லா ஆசிரியர்களும் ஏதோ ஒரு வகையில் மாணவனின் அறிவை அவமானப்படுத்துகிறார்கள்.’ என்று கூறுகிறார்.
வகுப்பறைக்குள்ளே சென்று பார்த்தால் ஒரு வாய் பேசிக் கொண்டிருக்கும். நிறையக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும். ஆனால் காதுகள் உண்மையில் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றதா? காதுகளோடு துருதுருக்கும் கைகள், கால்கள் பல விஷயங்களைச் செய்து கொண்டிருப்பதையும் காணலாம். அருகிலிருப்பவரிடையே சீட்டுப் பரிமாற்றம், கிள்ளுதல், நோண்டுதல் என சிறுசிறு தாக்குதல்கள், நோட்ஸ் கொப்பிகளில் எதையாவது கிறுக்குதல், ஒன்றுமில்லையானால் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தல், அதுவுமில்லாமல் சில உடல்கள் மட்டும் வகுப்பிலிருக்க உள்ளங்கள் கனவுலகில் மூழ்கிக் கிடக்கும். ‘கவனத்தை ஒருமுகப்படுத்தல்’ என்ற போர்வையில் கல்வியின் அதிகாரம் ஒரு வாய் பேசிக்கொண்டிருக்க நிறையக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்கின்றது.
அப்படி என்றால் பாடம் நடத்தி என்ன பயன்? கவனித்துக் கேட்கும் சில மாணவர்களுக்கு மட்டும்தான் பாடமா? இது தெரிந்தும் பாடம் நடத்த ஆசிரியரை உந்துவது எது? பரிட்சை வரும்போது மாணவர்கள் கவனம் தானாக ஈர்க்கப்படும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது வகுப்பு எப்படி நடந்தாலும் சரி. பரிட்சைக்குக் கவனமாகப் படித்தால் போதும் என்ற மனப்பான்மையா? ஒரு வகுப்பறையில் நடப்பதை யார் கண்ணிலும் படாமல் ஒலிப்பதிவு செய்து கேட்டுப்பார்த்தால் அதில் எத்தனை கேள்விகள் பதிவாகியிருக்கும். மாணவர் கேட்கும் கேள்விகள் அதிகமாக இருக்குமா? ஆசிரியர் கேட்கும் கேள்விகள் அதிகமா? என்றால் நிச்சயமாக ஆசிரியர்களின் கேள்விகளே அதிகம் என்ற பதில் வரும்.
விஞ்ஞானமற்ற முறையில்தான் நாம் மாணவர்களுக்கு விஞ்ஞானம் போதிக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட விசயத்தை உணர்ந்து கேள்வி கேட்பதற்கு அவகாசம் கொடுப்பதில்லை. மாணவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே முன்தயாரிக்கப்பட்ட கேள்விகளால் ஆசிரியர்கள் அவர்களை மூழ்கடித்து விடுகின்றனர். அதாவது ஆசிரியருக்குத் தெரிந்த விடை மாணவர்களுக்குத் தெரியுமா என்று சோதிப்பதற்காகவே கேள்விகள் கேட்கப்படுகின்றன. நல்ல மாணவன் யார்? எனக் கேட்டால் கேட்ட கேள்விக்கு ‘டக் என்று பதில் சொல்லும் மாணவன்’ என்று எல்லா ஆசிரியர்களும் கூறுவர்.
வகுப்பில் கேள்விகள் கேட்டு பாடத்தைக் குழப்பும் மாணவர்களை எந்த ஆசிரியர்கள்தான் விரும்புவார்கள். அருகிலிருக்கும் மாணவன் எழுந்து நிற்கும் மாணவனுக்குப் பதில் சொல்லி மாட்டிக் கொள்வதுமுண்டு. தெரியாதவர் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வதற்காக வினா எழுப்புவதுதான் இயற்கையானது. தெரிந்தவர் மற்றவருக்கும் தெரியுமா என்று தொடர்ந்து கேட்பது அதிகாரமாகும். மற்றவருக்குத் தெரியாதென்று உணர்ந்த பின்னும் துருவித் துருவிக் கேட்பது கொடூரமாகும். அப்போது இந்த வார்த்தைகளை வகுப்பறையில் நாம் கேட்கலாம். ‘டேய் எழும்புடா! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்!’ கேட்கும்பேதே அவனுக்குத் தெரியாது என்ற உண்மை இருசாராருக்கும் தெரிந்திருக்கும்.
அருகிலிருப்பவன் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க முயன்றால் ‘என்னடா! கண் எங்க போகுது. இங்க பாருடா!’ என்ற அதட்டல். தெரியாதவர் தெரிந்தவரின் உதவியை நாடுவது மாபெரும் தவறா? எது இலகுவானது? கேள்வி கேட்பதா, கேட்ட கேள்விக்குப் பதில் தருவதா? தெரிந்திருந்தால் விடைதரலாம். தெரியாவிட்டால் தெரியாதென்று ஒத்துக் கொள்வதுதான் நேர்மையானது. தெரியாது என்று கூறுவது ஸலபுகளின் கருத்துப் படி மூன்றாவது வகை அறிவாகும். ‘அறிவு மூன்று வகைப்படும். முதலாவது அல்குர்ஆன். இரண்டாவது அல் ஹதீஸ். மூன்றாவது எனக்குத் தெரியாது என்று சொல்வது’ என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
டிசிப்ளின் என்ற பெயரில் முன்பள்ளிப் பாடசாலைகளில் ஒரு கையைக் கட்டி, மறுகையால் வாய்பொத்தி, சுட்டும் விரல்களால் உதடுகளை இறுக்கி மூடி ‘அதிகாரி வருகிறார் யாரும் பேசக்கூடாது. வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும். இல்லையேல் தோலை உரித்துவிடுவேன்.’ என்று ஹிட்லர் பாணியில் அதட்டுவதையும் நாம் கேட்கமுடியும். பிள்ளைகளின் சின்னஞ்சிறிய கால்களை முடக்கி வைப்பதோடல்லாமல் உள்ளத்தையும் முடமாக்கி விடுகின்றன என்ற செய்தி ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் தெரியாதா? ‘மம்மி-டடி’ என்று பெற்றோரைக் கூப்பிடவதற்காக ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டிள் ஸ்டார்’ என்று பாடுவதற்காகத்தான் குழந்தைகளை அனுப்புகிறோமா?
கேள்வி கேட்பதுதான் குழந்தைகளின் வேலை. ஆனால் பாடசாலைக்குள் நுழைந்ததுமே கேள்வி கேட்கும் ஆற்றலை முற்றிலும் தகர்த்தெறியக்கூடிய கல்வி முறையைத்தான் நாம் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றோம். வகுப்பறைக்குள் நுழைந்ததுமே ஆசிரியர்கள் சொல்வதெல்லாம் எழும்பு கையைக் கட்டு, பொத்து வாயை என்பதுதான் வாயைப்பொத்திக்கொண்டு கவனிக்கவேண்டும் என்பதே மிகப்பெரிய வன்முறையாகும்.
பாடசாலை விட்டு குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் பெற்றோர் ஹோம் வேக் எழுத உட்கார்ந்து விடுகிறார்கள். அப்போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே நடக்கின்ற கொடுமையை சொல்ல முடியாது நமது கல்விச் சூழலில் ஆசிரியரும் முரடு பெற்றோரும் முரடர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஆக்கினைகளால் இந்த பிஞ்சுக்குழந்தைகள் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாய் உருமாற்றப் படுகின்றனர்.
இந்த கல்விச் சூழலை கேள்விக்குட்படுத்தும் காலம் வந்து விட்டது.
E=MC2 என்னும் சமன்பாட்டை கண்டு பிடித்தவர் யார் என்றுதான் வினாத்தாளில் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். E=MC2 என்பதை நீர் ஏற்றுக்கொள்கிறாயா அல்லது இதற்கு மாற்று சூத்திரம் ஒன்றை உன்னால் கண்டு பிடிக்க முடியுமா என்று எப்போது கேள்வி கேட்க தொடங்குகின்றோமோ அன்றுதான் நம் குழந்தைகளின் அறிவை மதிக்கின்றோம் என்று அர்த்தம்.தேசியப் பரிட்சைகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிட்சைக்குத் தோற்றுகின்றனர். அதில் மிஞ்சிப் போனால் நாற்பதாயிரம் பேர் சித்தியடைகின்றனர். இது நம் கல்வித் திட்டத்தின் வெற்றியாகக் கொள்ளலாமா? வெற்றி பெற்றவன் அந்தக் கல்வித்திட்டம் தகவமைக்கும் தன்மைக்கேற்பவனாக மாற்றப்படுகின்றான். தொழில்கொடுக்கும் அரசுக்கு சார்பாக நிற்கின்றான். அல்லது அரசின் தொழிலை எதிர்பார்த்து அரசியல்வாதிகளுக்குப் பின்னால் பைல்களோடு அலைவதையும் பார்க்கின்றோம். பரிட்சையில் தோற்றுப் போனவர்களும் சித்தியடைந்தவர்களைப் போல தாழ்வு மனப்பான்மையிலேயே உழல்கின்றனர். பரிட்சையில் தோற்றுப் போனதால் எந்தத் தொழிலையும் தாம் செய்வதற்குத் தயாராகிவிடுகின்றனர்.
மொழி கற்பித்தலிலும் பெரும் அதிகாரம் இங்கே தொழிற்படுகின்றது. ‘அம்மா வந்துவிட்டோம். சாப்பிட வந்துவிட்டோம். நாங்கள் கைகழுவிக் கொண்டு வருகிறோம். தண்ணீர் எங்கே அம்மா இருக்கிறது?’
‘நீங்கள் மூன்று பேரும் அங்கே போங்கள். தண்ணீர் அங்கே இருக்கிறது. கை கால் கழுவிக் கொண்டு வாருங்கள். நான் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன்.’ (தமிழ் 1, ஏழாம் பதிப்பு, பக்கம் 79)
‘என்ன பாலா வரம்பிலே சறுக்கி விழுந்துவிட்டாயா?’
‘ஆம் அப்பா!’
‘இவை உயரமான வரம்புகள். அவதானமாக நடந்துவா.’
‘ஏன் அப்பா இப்படி உயரமாக வரம்புகளைக் கட்டியிருக்கிறார்கள்? உயரம் இல்லாமல் அகலமாக வரம்புகளைக் கட்டினால் என்ன? அகலமாய் இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஓடிப் போகலாம் அல்லவா.’ (தமிழ் 3, பக்கம் 4)
இப்படி ஒரு குழந்தை தன்தாயிடமோ தந்தையிடமோ அன்றாட வாழ்வில் பேசுவதை நாம் கேட்டிருக்கின்றோமா? அப்படிப் பேசினால் பெற்றோர் என்ன நினைப்பார்கள். சந்தோசப்படுவார்களா? நிச்சயமாக இல்லை. ஆனால் நமது குழந்தைகள் படிக்கும் பாடநூல்களில் இவை போன்ற இலக்கிய வழக்குகள் நிறைந்து கிடக்கின்றன. எந்தக் குழந்தையாவது வரம்பிலே சறுக்கிவிழுந்தவுடன் இப்படி உரையாடுமா?
பேச்சு மொழி தரமற்றது. கொச்சையானது. இலக்கணமற்றது. இழிசனர் வழக்கு போன்ற கருத்தாக்கங்கள், மனோபாவங்கள் மொழித் தூய்மைவாதிகளிடம் இன்னும் இருந்தே வருகின்றன. நியம மொழி என்று ஒன்று இருக்கின்றதா? அதைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்குண்டு? ஒரு பிரதேசத்தில் பேசுகின்ற மொழியை மற்றொரு பிரதேசத்திற்கும் திணிப்பது நியாயமானதா? வீட்டில் ஐந்தாண்டுகள் ஒரு மொழிக்குப் பழக்கப்பட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தையிடம் இத்தகைய பாடவரிகளைத் திணிக்கும் போது திணறல் ஏற்படாதா? தான் இதுவரை பேசிய மொழி தூய்மையற்றது என்ற குற்ற உணர்வை ஏற்படுத்திவிடாதா?
பேச்சுத்தமிழை இழிவழக்கு என்று ஒதுக்குவது பாரம்பரிய உயர்வர்க்க மரபுணர்சியின் அதிகாரமே என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கற்றறிந்தோரே உயர் குலத்தோர் என்றும் அவர்களது வழக்கே உயர் வழக்கு என்றும் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. அதே நேரம் எழுத்துத் தமிழை கற்பிக்கும் ஆசிரியர் கூட வீட்டில், வெளியில் உரையாடுவது ஒரு வினோத நிகழ்ச்சியாகவே கருதப்படுகின்றது. நாடகத்தில் வேண்டுமானால் அப்படிப் பேசமுடியும்.
அவ்வாறே ஆசிரியர்களிலும் பலவகை மாதிரிகள் உள்ளனர். அதில் ஒரு வகை மாதிரி இப்படி இருக்கிறார்கள்.
அலட்டல் இல்லாதவர், வகுப்பறைக்குள் நுழைந்தால் அங்குமிங்கும் பார்க்கமாட்டார்.
மாணவர்கள் எழுந்தார்களா உட்கார்ந்தார்களா? என்று கூடப் பார்க்கமாட்டார்.
நேராகக் கரும்பலகைக்குப் போவார். கணிதப்பாடத்தை எழுதுவார்.
இந்தக் கணக்கைச் செய்யுங்கள் என்பார், இங்கும் அங்கும் நடப்பார்.
கணக்கைச் செய்து முடித்தவர் யார்? செய்யாதவர் யார் என்று பரிசோதிக்க மாட்டார்.
ஒவ்வொருவராய் உற்றுப் பார்ப்பதும் கிடையாது.
இருபது நிமிடம் கழித்து அவரே விடைகள் முழுவதையும் எழுதிவிடுவார்.
எழுதும் போது பேசுவதுண்டு. ஆனால் குறைவாக இருக்கும்.
மறுபடி இன்னொரு கணக்கு. ‘இதைச் செய்யுங்கள்’ என்பார்.
பரிட்சைத்தாளைக் கொடுக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டார்.
சைபரைத் திருத்தமாட்டார். ஒரு சலனமும் இல்லாமல் கொடுப்பார்.
குடும்பம் சமூகம் என்று எதிலிருந்தாவது உபதேசத்தைத் தொடங்கமாட்டார்.
அநாவசியத்தலையீடு அவரிடமில்லை.
அநாவசியத்தலையீடு இல்லாவிட்டால் வாழ்க்கை வகுப்பறை எல்லாம் சுகமாகத்தான் இருக்கின்றன.
ஆசிரியர் நினைப்பதுபோல் இருப்பதற்கு வகுப்பறை என்பது ஆசிரியர் முதல்போட்டு நடத்துகிற பெட்டிக்கடையா?
ஆசிரியர் போகிற வழியிலேயே மாணவர்களும் கண்ணை மூடிக்கொண்டு போகவேண்டுமா?
பின்னர் மாணவர்கள் சிரிப்பதையும் பரிகசிப்பதையும் தமக்கு எதிரான விசயமாக ஏன் நினைக்கிறார்கள்.
மாணவரைத் தண்டிப்பதாய் நினைத்து தம்மைத் தாமே தண்டித்துக் கொள்கிறார்கள்.
கேட்டால் ஒழுக்கம் என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
Desepline என்பது மொத்த அவமதிப்புகளின் கூட்டுத் தொகுப்பாகும். வகுப்பறை என்பது ஒரு கூட்டுமுயற்சி. கூட்டுமுயற்சி என்பதை ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான ஒழுக்கமாகும்.
மனிதன் சமூகமாக வாழவே படைக்கப்பட்டுள்ளான். மற்றவர்களுடனும் உலகத்துடனும் உறவினை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வது என்பது மனிதனுக்குரிய பண்பல்ல. மிருகங்கள் வேண்டுமானால் அப்படி வாழ்ந்துவிட்டுப் போகலாம். மனிதன் உலகோடு, மற்றவர்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவு விமர்சன பூர்வமானது. மிருகங்கள் இயங்குகின்ற, தொழிற்படுகின்ற முறைக்கும் மனிதன் தொழிற்படுகின்ற இயங்குகின்ற முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கின்றது. மனிதனின் தன்னிலைக்கும் Subjectivity க்கும் புறநிலைக்கும் Objective அதாவது உலகுக்குமிடையேயான இயங்கியல் உறவில்தான் மனித அறிவு தோற்றம் பெறுகின்றது. “உங்கள் தாய்மாரின் வயிற்றிலிருந்து நீங்கள் எதுவும் அறியாதவர்களாகவே உருவாகின்றீர்கள். பின் உங்களுக்கு கேள்வியை, பார்வையை, சிந்திக்கும் உள்ளத்தை நாமே வழங்குகின்றோம்” என்ற குர்ஆனின் கருத்து இதுதான்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்