Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கற்போர் கையில் கல்வி (2)

Posted on November 16, 2012 by admin

   கற்போர் கையில் கல்வி (2)  

விமர்சன பூர்வமான பார்வையின் விளைவாக, மனிதன், எல்லாவற்றையும் நேற்று, இன்று, நாளை என்கிற முப்பரிமாணக் காலத்தில் வைத்துப் பார்க்கிறான். மிருகங்களுக்கு இத்தகைய வரலாற்றுணர்வு கிடையாது. அவற்றுக்கு எல்லாமே இன்றுதான். மனிதன் தன்னை முப்பரிமாணக் காலத்தில் வைத்து சிந்திப்பதால் ஒற்றைப் பரிமாண இன்றில் அவன் சிறைப்படுவதில்லை. மனிதன் உலகோடு கொள்ளும் உறவுகள் அனைத்தும் பின்விளைவுகளைக் குறிக்கோளாகக் கொண்டே அமைகின்றன.

மிருகங்களுக்கு குறிக்கோள்கள் கிடையாது. மிருகங்கள் யதார்த்தத்தை மாற்றியமைப்பதில்லை. மிருகங்கள் யதார்த்தத்திற்கு இசைவாக்கம் அடைந்துவிடுகின்றன. மனிதனுக்கு இப்படி அட்ஜஸ் பண்ணிப் போகமுடியாது. அவன் விமர்சன பூர்வமான அணுகலுடன் தேர்வுகளை, தெரிவுகளை மேற்கொள்கிறான். எதார்த்தத்தில் தலையீடு செய்து மாற்றுகிறான். இன்றைய நிலையில் திருப்தியடையாத மனிதன் மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொள்கிறான்.

மனிதனின் முழுமையான வளர்ச்சி என்பது உயிரியலுக்கு அப்பால் இல்லை. அவனது அறிவு வளர்ச்சி என்றுமே முழுமையடைவதில்லை. மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொள்வதே மனிதனின் அறிவுத்துறையின் திறனாகும். ‘இறைவா எனது அறிவை விருத்தி செய்வாயாக!’ ‘நீங்கள் சொற்பமாக அன்றி அறிவூட்டப்படவில்லை’ என குர்ஆன் கூறுகிறது.

மனிதனும் பேசுகின்றான். மிருகங்களும் ஒலிக்குறிப்புக்களைப் பயன்படுத்திப் பேசுகின்றன. ஆனால் மனிதப் பேச்சு உலகை மாற்றியமைக்கின்றது. மாற்றத்தை ஏற்படுத்துகின்ற பேச்சுத்தான் உண்மையான பேச்சாக இருக்க முடியும். ‘அவன் மனிதனுக்குத் தெளிவாகப் பேசுவதற்குக் கற்றுக் கொடுத்தான்.’ (55:2) என்று கூறும் அல்குர்ஆன் மற்றோர் இடத்தில் ‘விசுவாசிகளே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கிறீர்கள்.’ (61:2) என்று கேட்கிறது. எனவே உண்மையான பேச்சுக்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன.

1. எதிரொலிப்பு (கிதாப்)

2. செயல் (அமல்)

இவ்விரண்டின் இயங்கியல் இணைவையே நாம் செயல் என்கிறோம். நடவடிக்கையுடன்/அமலுடன் இணையாத சொல் வெறும் சொல்லாக மாறிவிடுகின்றது. எனவே மனித இருப்பு என்பது மௌனமாக இருக்க முடியாதது. செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத சொற்களால் பேசுவதும் மௌனம்தான்.

மனிதனாக இருப்பது என்பது உலகுக்கு பெயரிடுவது ‘அனைத்துப் பெயர்களையும் ஆதமுக்கு அல்லாஹ் கற்பித்தான்.’ (2:31) மனிதனாக இருப்பது என்பது உலகை மாற்றியமைப்பது. ஒரு முறை பெயரிடப்பட்டவுடன் உலகானது மேலும் தன்னைப் பிரச்சினையாக்கிப் பெயரிடுபவர்கள் முன்னிறுத்திக் கொள்கிறது. எனவே புதிய பெயரிடும் நடவடிக்கைகளை மனிதன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது உண்மையான சொல்லைப் பேசுவது அல்லது உலகை மாற்றியமைப்பதென்பது ஒரு சில மனிதர்களின் தனியுரிமையல்ல. ஒட்டுமொத்த சமூக உரிமையாகும். 

‘ஒரு சமூகத்திலுள்ளோர் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ்வும் அந்தச் சமூகத்தை மாற்றி விடுவதில்லை.’ (13:11) ஒருவருக்கான சொல்லை இன்னொருவர் பேசுவதென்பதோ பெயரிடுவதென்பதோ சாத்தியமில்லை. மனிதர் களுக்கிடையிலான பேச்சு என்பது monoloque – ஒரு வழி உரையாடல் அல்ல. அது இரு வழி உரையாடல். உலகுக்குப் பெயரிடுவதற்காக மனிதன் உரையாடுகின்றான். பெயரிட விரும்புபவர்களுக்கும் பெயரிட அனுமதிக்காதவர்களுக்கும் இடையில் உரையாடல் சாத்தியமில்லை. எனவே, பெயரிடுகின்ற, பேசுகின்ற உரிமையை இழந்த மனிதர்கள் இத்தகைய உரிமை மறுப்புக்கெதிராக தமது பேச்சுரிமையைப் பெறவேண்டியிருக்கிறது. நபிகளார் தனது கல்வி முறையில் மாணவர்களுக்கு இந்தப் பேச்சுரிமையை வழங்கி உரையாடலுக்கு வழிவகுத்திருக்கின்றார்கள்.

மாணவர்கள் பற்றிய தங்கள் மதிப்பீடுகள் பொய்யாகிப் போவதை உணராத ஆசிரியர் எவருமே இருக்கமுடியாது. தங்கள் கையில் இருக்கும் தரவுகளால்தான் ஆசிரியர்கள் மாணவர்களை இடைபோடுகின்றனர். ஒவ்வொருவரை மதிப்பிடவும் தனித்தனி அளவுகோல்கள் தேவை என்ற உண்மையும் மறந்து அல்லது புறக்கணித்து சமூகம் உருவாக்கிய பொதுத்தராசுகளால் மதிப்பிடுகின்றனர்.

வெற்றி பெறும் வரை மாணவர்கள் மீது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தீராத சந்தேகம் இருக்கும். வெற்றி பெற்றபின் நான் நினைக்கவே இல்லை, இவன் இப்படித் திறமைசாலியாய் இருப்பான் என்று மூக்கின் மேல் விரலை வைப்பார்கள். இவ்வாறு தங்களால் புரிந்து கொள்ளாமல் போன மாணவர்களின் இயல்புகளைப்பற்றி கூறாத ஆசிரியர்களே இல்லை எனலாம். இவ்வாறு வீட்டினதும் வகுப்பறையினதும் இளைய தலைமுறை பற்றிய தவறான மதிப்பீடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆசிரியருக்கு எல்லா மாணவர்களின் அறிவுத்தரத்தையும் ஒரேயடியாக மட்டிட்டு விட முடியாது. இறைத்தூதரின் உரையாடல் வழிக் கல்வியைப் பற்றி அபூ மூஸா அல் அஷ்அரி கூறும்போது ‘நபிகளார் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றியதும் நாம் அவர்களிடம் செல்வோம். எங்களில் சிலர் அவரிடம் அல்குர்ஆனைப் பற்றிக் கேட்பார்கள். வேறுசிலர் வாரிசுரிமைச் சட்டம் பற்றிக் கேட்பார்கள். இன்னும் சிலர் தமது கனவுகளைப் பற்றி வினவுவார்கள். (ஆதாரம்: தபராணி, முஸ்லிம்)

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உரையாடல் சாத்தியமாய் இருப்பதில்லை. ஒடுக்கும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்திற்குமிடையில் உரையாடல் நிகழ்வதில்லை. ஒடுக்கும் வர்க்கம் ஒடுக்கப்படும் மக்களை மௌனிகளாக மாற்றுகின்றனர். அவர்கள் வாய்பேசாப் பிராணிகளாக மாறுகின்றனர். இதனை முழுமையாகச் சாதிப்பதற்கு கல்வித்துறையையும் ஊடகத்துறையையும் ஒடுக்கும் வர்க்கம் கையாள்கின்றது. தமக்கு வசதியான கோணத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களை எதுவும் செய்ய முடியாதவர்களாக கட்டிப் போட்டு செயலூக்கமற்றவர்களாய் மாற்றிவிடுகின்றனர். இதனால் ஒடுக்கப்படும் மக்களுக்கு விமர்சனப்பார்வை இல்லாமல் போகின்றது.

ஒடுக்குவோர்களின் புனைவுப் பார்வைகளையே அவர்களும் தமது பார்வைகளாக ஆக்கிக் கொள்கின்றார்கள். இதனால் ஆக்கிரமிக்கப்படும் ஒடுக்கப்படும் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கலாசாரப் பண்பாட்டு அடிமைகளாக மாறுகின்றனர். அவர்களைப் போல உடுப்பது, அவர்களைப் போல நடப்பது, அவர்களைப் போல பேசுவது போன்ற நிலை இம்மக்களிடம் ஏற்பட்டு விடுகின்றது. ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் தங்களைத் தாழ்ந்தவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் கேவலமானவர்களாகவும் பேசுவதற்குச் சொல்லற்றவர்களாகவும் கருதி மௌனமாகிவிடுகின்றனர்.

மௌனப் பண்பாட்டிற்கு இலக்கான இந்த மக்கள் தங்கள் அகத்தையும் புறத்தையும் இயங்கியல் ரிதியாக இணைத்து அறிவை உற்பத்தி செய்து கொள்ள முடியாமல், அதிகாரத்தை எதிர்க்க முடியாமல் திணறுகின்றனர். கரும்பலகையையும் வெண்கட்டியையும் ஒழிக்காத வரையில் இந்நிலையை மாற்ற முடியாது. சொற்பொழிவு ஒரு நோயாக மாறிவிட்டது. கற்பிப்பதற்கான முழுமுதற் சாதனமாகக் கையாளப்பட்டு வருகின்றது. சொற்பொழிவால் கல்வி உயிரற்றதாய்ப் போய்விட்டது. ஆசிரியர்கள் அண்டாப் பாத்திரமாகவும் மாணவர்கள் வெற்றுக் கோப்பைகளாவும் மாறிவிட்டனர். அண்டாக்களில் இருக்கின்ற அறிவு வெற்றுக் கோப்பைகளில் நிரப்பப்படுகின்றது. நன்றாக நிரப்புபவர் நல்ல ஆசிரியர். உடனடியாக அதை எடுத்து நிரப்பிக் கொள்பவர் நல்ல மாணவர். இவ்வாறு கல்வி Deposit ஆக மாறிவிட்டது.

இன்று கல்வியில் ஒரு வங்கிக் கண்ணோட்டமே நிலவுகின்றது. வைப்புக்களை ஏற்று நிரப்பிக் கொள்வது. தேக்கிவைப்பது. மூன்று மணித்தியாலத்தில் வாந்தி எடுப்பது. வாந்தி எடுப்பதற்கு ஐந்தி நிமிடத்திற்கு முன்னர் மறந்துவிட்டால் அவன் பரிட்சையில் தோற்றுவிடுகிறான். வாந்தி எடுத்த பின் ஐந்து நிமிடத்தில் மறந்துவிடுவதால் அவன் சித்தயடைந்தவனாகக் கருதப்படுகின்றான். ஐந்து நிமிடத்திற்கு முன்னர் மறப்பது, பின்னர் மறப்பது என்ற வித்தியாசத்தில்தான் இன்றைய கல்வியின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகின்றது. மொத்தத்தில் இன்றைய கல்வி முறை மாணவர் சமூகத்தை அவமதிக்கின்றது.

ஆனால் இறைத்தூதரின் கருத்துப்படி அறிவு ஒரு பொதுப்பொருளாகும். அது ஆசிரியரின் நோட்ஸ் ஆகவோ தேசியக் கல்வி நிறுவகத்தின் சொத்தாகவோ குறுக்கப்பட்டுவிடக் கூடாது. பொதுப் பொருளான அறிவை ஆசிரியரும் மாணவரும் தேடவேண்டும். ஒரு வகுப்பறையிலிருக்கும் நாற்பது மாணவர்களில் ஆசிரியரும் நாற்பத்தியோராவது மாணவராக மாறித் தேடவேண்டும்.

‘அறிவைத் தேடுவது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்.’ (ஆதாரம்: இப்னு மாஜா, முஸ்லிம்) அரபு மொழியில் தலப என்றால் தேடுதல் என்று பொருளாகும். தாலிப் என்றால் தேடுபவன் என்று பொருள். மாணவனைக் குறிப்பதற்கு இச்சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. மற்றொரு ஹதீஸில் ‘அறிவு காணமல் போன முஃமினின் சொத்தாகும்.’ (ஆதாரம்: முஸ்லிம்) காணாமல் போன பொருளை கண்டுபிடிக்க வேண்டுமாயின் தேடுவது அவசியமாகும்.

ஆங்கிலத்தில் ஆய்வைக் குறிக்கின்ற Research என்ற பதமும் திரும்பத்திரும்பத் தேடுதல் என்பதையே சுட்டுகின்றது. ஆனால் ஆசிரியர் மாணவர்களை வெற்றுப் பாத்திரம் என்றே நினைக்கின்றார். அது பொய்யாகும். மாணவர்களிடமிருந்து ஆசிரியர் எதனையும் கற்றுக் கொண்டதாக ஒருபோதும் ஒத்துக் கொண்டதில்லை. ஆனால் உலகில் மிகப் பெரும் ஆசிரியர் அதனை ஒத்துக் கொண்டுள்ளார். அவர் தனது மாணவர்கள் விவசாய நடவடிக்கையில் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டதைத் தடைசெய்தார். அடுத்த முறை விளைச்சல் குறைந்தது. காரணத்தைக் கேட்டார். தான் தடைசெய்ததுதான் காரணமென மாணவர்கள் கூறினர். அப்போது அவர் மாணவர்களைப் பார்த்து உங்களுடைய தொழில்நுட்பம், விவசாயம் போன்ற உலகியல் நடவடிக்கைகளில் நீங்களே மிகவும் அறிந்தவர்கள் என்று கூறினார். அவர்தான் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்லாஹ்வின் தூதரே தனது தோழர்களிடம் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருக்கும் போது நமது ஆசிரியர்கள் நபிகளாரைவிட மேம்பட்டவர்கள் என நினைக்கிறார்களா?

கல்வியை ஆசிரியர் படிப்பிக்கின்றார். மாணவர்கள் படிக்கின்றார்கள். ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். தெரியாதது எதுவுமே இல்லை. ஆனால் மாணவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆசிரியர்கள் சிந்திக்கின்றனர். மாணவர்கள் சிந்திக்கப்படுகின்றனர். ஆசிரியர் பேசுகின்றார். மாணவர்கள் கவனிக்கின்றனர். ஆசிரியர் ஒழுங்குபடுத்துகின்றார். மாணவர்கள் ஒழுங்குபடுத்தப் படுகின்றனர். ஆசிரியர் செயல்படுகின்றார். மாணவர்களுக்கு எந்த வேலையும் கிடையாது. ஆசிரியர் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்கின்றார். மாணவர்கள் அதைப் பொருந்திக் கொள்கின்றனர். மாணவர்கள் கஷ்டப்பட்டு பாடக்குறிப்புக்களை பைகாட் பண்ணி நிரப்பிக் கொட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு விமர்சனப் பார்வை கிடையாது. உலகை மாற்றியமைக்கும் நோக்குக் கிடையாது. புனைவுகளால் போர்த்தப்பட்ட சிதைந்த யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை பற்றிச் சிந்திக்காதவர்களாக மாறிவிடுகின்றனர்.

மொத்தத்தில் ஜனநாயகமற்ற பாடத்திட்டம். சூழலுக்கு அந்நியமான பாடங்கள். எள்ளளவும் ஜனநாயகமற்ற ஆசிரியர்-மாணவர் உறவு. மாணவரின் சிந்தனைக் கிளர்வுக்கு இடம் கொடாத சொற்பொழிவுக் கல்வி முறை. ஆசிரியரைக் கண்டவுடன் எட்டுக்கு மடிந்து நிற்றல். பட்டமளிப்பு விழா போன்ற குறியீட்டு வன்முறைகள் மூலம் அதிகார மையங்களுக்குக் கீழ்ப்படிய வைத்தல் எனப் பலவழிகளில் மாணவர் காயடிக்கப்படுகின்றனர்.

பூட்டிய வாய்களும் உறைந்போன மௌனமுமே வகுப்பறையின் வரைவிலக்கணமாய் உள்ளன. அர்த்தமுள்ள உரையாடலுக்குப் பதிலாக ஆசிரியரின் ஒற்றைக்குரலே வகுப்பறையின் சங்கீதமாக உள்ளது. வகுப்பறை என்பது சமூகத்தைப் பிரதிபலிக்கும் பிம்பமாக இருக்கிறது. சமூகம் உரத்துப் பேசுகிறவன் பேச்சுக்குத் தலையாட்டும் அல்லது மௌனம் சாதிக்கும். மௌனத்தைக் கலைக்க உரையாடலை, முறையான விவாதத்தைத் தொடங்கினால் ஆளுக்கால் பேசுவார்கள். ஒருவரைப் பார்த்து இன்னொருவருக்கு தைரியம் வருகிறது. சிலபோது விதன்டாவாதங்களும் வரலாம். வகுப்பறை சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது. இதனால் விவாதப் பண்பாடே இல்லாதவர்கள் என்று உரையாடலின் வாயிலை அடைத்துவிடக்கூடாது. கட்டளை பிறப்பித்துக் கொண்டே இருந்தால் வகுப்பறை இறுகிவிடும். நூற்றாண்டுகளாய் இறுகிப்போய் கிடக்கும் நமது வகுப்பறைகளின் மௌனத்தை உடைக்கும் வகையிலேயே நபிகளாரின் கல்விக் கொள்கை இருக்கின்றது. அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வந்தார். ஆசிரியர் என்பவர் கேள்விகேட்கப் பிறந்தவர் என்ற நிலையை மாற்றி ஆசிரிய சமூகத்தை நோக்கி ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று நபிகளார் போதிக்கின்றார்.

வகுப்பறை யாருக்குச் சொந்தமானது? வகுப்பறை யாருக்குச் சொந்தமானது என்று பெரும்பாலான மாணவர்கள் உணர்கிறார்கள். பொதுவாக மாணவர்கள் வகுப்பறையை ஆசிரியரின் வகுப்பறையாகத்தான் பார்க்கிறார்கள். தங்கள் வகுப்பறையாகப் பார்ப்பதில்லை. ஜனநாயகப்படி வகுப்பறையானது அங்கிருக்கும் நாற்பது பேருக்குச் சொந்தமானதா? அல்லது நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஒறுமுறை வந்துவிட்டுப் போகும் ஒருவருக்குச் சொந்தமானதா?

வகுப்பறையைத் திட்டமிடவும் ஆசிரியரின் பணியில் கருத்துத் தெரிவிக்கவும் பரஸ்பர ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கவும் மாணவருக்கு உரிமை இல்லாத பட்சத்தில் அவன் இந்த வகுப்பறையை தன்வகுப்பறையாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்த ஒற்றயாட்சித் தன்மையிலிருந்து பிரிந்து செல்லவே முயற்சிப்பான். ஆசிரியர் நடத்தும் வகுப்பறையைவிட மாணவர்கள் நடத்தும் வகுப்பறை சுவாரஷ்யமாக இருக்கின்றது. அங்கே மாணவர்கள் உன்னிப்பாய்க் கவனிக்கார்கள். அப்பாவி மாணவனுக்கும் அது உந்துதலைக் கொடுக்கின்றது. அங்கே ஒற்றைக் குரல் இருக்காது. ஒற்றைச் சிந்தனை இருக்காது. மொத்தத்தில் ஒற்றை ஆட்சி இருக்காது.

வகுப்பறையில் ஆசிரியருக்கென்று முன்னால் ஒரு மேசை இருக்கும். பெரும்பாலானோர் அதன் பின்னால் இருந்து பேசுவார்கள். சிலர் முன்னால் இருந்து பேசுவார்கள். புத்தகம் வைத்துக் கொள்ள, கையை ஊன்றிக் கொள்ள, நின்றுகொண்டிருக்கும் போது லேசாகச் சாய்ந்து கொள்ள என்று அந்த மேசைக்கு சில நிரந்தரமான பணிகள் உண்டு. சிலர் நடப்பார்கள், ஆனால் மேசையைத் தாண்டி அதிக தூரம் போகமாட்டார்கள். கண்ணுக் தெரியாத கயிறு ஒன்று அவர்களை மேசையோடு கட்டிப்போட்டு வைத்திருப்பதைப் போல தோன்றும். எவ்வளவு காலத்திற்கு ஆசிரியர் மட்டும் வகுப்பறையை ஆக்கிரமித்து நிற்பது அறுபது வயது ஆனபின்பும் கதாநாயகன் அந்தஸ்த்தை விட்டுக் கொடுக்காத தமிழ் சினிமா கதாநாயகர் போல நமது ஆசிரியர்களும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். இளம் கதாநாயகர்களின் கைகளுக்கு வகுப்பறை போகவேண்டும்.

கற்போர் கையில் கல்வியை எடுக்க வேண்டுமானால் இந்த மௌனப் பண்பாட்டை உடைத்துக் கொண்டு விமர்சன உணர்வும் செயலூக்கமும் உலகை மாற்றியமைக்கும் குறிக்கோளுடனும் அக்கல்வி உருவாக வேண்டும். அறிவு உற்பத்தி, அறிவுப் பரிமாற்றம் ஆகிய இரண்டையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அறிவு உற்பத்தி ஆசிரியர் மாணவர் உறவில் உள்ள இயங்கியல் தன்மையிலேயே உற்பத்தியாக வேண்டும். பரிமாற்றம் இருதரப்பிலும் நிகழவேண்டும். இதைச் செய்ய ஆசிரிய மாணவ முரண்பாட்டை முதலில் ஒழிக்கவேண்டும். இருவருக்குமிடையில் ஜனநாயக பூர்வமான உரையாடல் நிகழவேண்டும். உரையாடல் மூலம் ஆசிரியரின் அதிகாரம் தகர்த்தெறியப்பட வேண்டும். இப்போது ஆசிரியர் சொல்லிக் கொடுப்பவர் அல்ல. மாணவருடனான உரையாடலில் அவரும் கற்றுக் கொள்கிறார். மாணவர்கள் கற்கின்ற அதே நேரம் ஆசிரியருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். எனவே யாரும் யாருக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதேபோல் யாரும் சுயமாகக் கற்பதுமில்லை. இங்கு கல்வி அறிதல் செயற்பாடாக இருக்கின்றது. ஆசிரியரும் மாணவரும் அச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். அறியப்படும் பொருளே அவர்களை இணைக்கின்றது.

அறிவு ஆசிரியரின் சொத்தாக மாறினால் அறிதல் நடவடிக்கையில் மாணவர் பங்குபெற முடியாது. மாணவன் செயலூக்கமற்ற பார்வையாளனாக இல்லாமல் ஆசிரியரிடம் உரையாடல் மேற்கொண்டு விமர்சன பூர்வமாக, சகஆய்வாளனாக மாறுகின்ற போதே கற்போர் கையில் கல்வி வந்து சேரும்.

என்ன படிக்கிறோம்? என்ன எழுதப்பட்டுள்ளது? ஏன் எழுதப்பட்டுள்ளது? என்பதை விமர்சன பூர்வமாகக் கேட்டுக் கொண்டே கற்கத் தொடங்கவேண்டும். பாடத்தை அது எழுதப்பட்ட சூழலில் மட்டுமல்ல வாசிக்கும் சூழலிலும் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது பாடத்தைத் திருப்பி எழுதுகின்ற பணியாகும். வாசிப்பவர் பாடத்திற்கு முன்னால் அடிபணிந்து கிடந்தால் அறிவு உற்பத்தி நடைபெற மாட்டாது. மாறாக பாடத்தைக் கேள்விக்குள்ளாக வேண்டும். அப்போதுதான் கற்போருக்கு கல்வி கிட்டும்.

உண்மையான கற்றல் என்பது கருத்தமைவுகளைத் தெரிந்து கொள்வதோடு திருப்திப்பட்டுக் கொள்வதல்ல. கருத்தமைவுகள் வெறும் குறிகள் (Signs) மட்டுமே. மாறாக உண்மையான கற்றல் விசயங்களை அவற்றுக்கே உரிய தனித்துவமிக்க உண்மையில் கண்டுணர்வதாக இருக்க வேண்டும்.

ஆதாரக் குறிப்புகள்:

1. 1992 களில் நிறப்பிரிகை மாற்றுக் கல்வி தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டது. அதில் வெளிவந்த அ. மார்க்ஸின் கட்டுரையிலிருந்து பெருமளவான கருத்துக்கள், பந்திகள் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுக் கல்வி தொடர்பான மதச்சார்பற்ற சிந்தனையை எவ்வாறு இஸ்லாமிய மயப்படுத்தலாம் என்பதற்கான முயற்சியே இதுவாகும்.

2. எம். ஏ. நுஃமான், ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் ஒரு மொழியியல் அணுகுமுறை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், முதற் பதிப்பு 2002.

3. அ. ஜோன் லூயி, கற்கத்தவறிய பாடங்கள், சுபமங்களா மலர் 7, இதழ் 5, 1994

4. கல்வி, இந்திய மாணவர் சங்கம், சவுத் விஷன், முதற்பதிப்பு 2000.

5. சுந்தர ராமசாமி, தமிழகத்தில் கல்வி – வே. வசந்தி தேவியுடன் உரையாடல், காலச்சுவடு பதிப்பகம், 2002

6. ச. மாடசாமி, எனக்குரிய இடம் எங்கே, அருவி முதற்பதிப்பு டிசெம்பார் 2003, மதுரை.

source: www.idrees.ik

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

42 − 38 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb