ஈமானோடு வாழ்வோம் ஷரீஆவை மதிப்போம்
இப்னு மஸாஹிரா
[ “எனது பெற்றோர் முஃமின் களாக இருக்கின்றனர். எனவே நானும் முஃமினாக இருக்கிறேன்” என நமது சமூகம் ஈமானைக் கொச்சைப்படுத்துகிறது. இந்த ஈமான் மரணித்துப்போன ஈமானாகும். நாம் எதிர்பார்க்கும் ஈமான் உயிரோட்டமாக இருக்க வேண்டும். அது ஒரு சமூகத்தையே உருவாக்க வேண்டும். வெறும் வெற்று வார்த்தையாக இருக்கக்கூடாது. அது பலமான ஈமானாக இருக்க வேண்டும்.
ஷரீஆவைக்கற்ற திறமைசாலிகள் தமது துறையை விட்டும் ஒதுங்கி விடக் கூடாது. ஷரீஆவைக் கற்றவர்களிலே ஈமானியப் பலமும் அதிகரித்து இருக்க வேண்டும். இல்லையேல் கற்ற கல்வியில் பிரயோசனம் இல்லாமல் போய்விடும்.
ஈமான் என்பது நாவினால் மாத்திரம் மொழிந்தால் போதுமானது தானே என சிலர் வாதாட முடியும். ஆனால், அல்லாஹுதஆலாவின் அழைப்பைப் பாருங்கள்:
“இன்னும் மனிதர்களில் ‘நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்’ என்று கூறுவோறும் இருக்கின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள். ஆனால், அவர்கள் (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.” (அல்பகரா: 08,09)]
ஈமானோடு வாழ்வோம் ஷரீஆவை மதிப்போம்
ஈமான் என்பது ஒரு ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. ஈமான் என்பதன் மூலம் நாம் இஸ்லாத்திலுள்ள ஈமானையே கருதுகிறோம். அதன் மூலமே இம்மையிலும் மறுமையிலும் வெற்றியுள்ளது. அதற்கே அல்லாஹ் வெற்றி, கண்ணியம், உதவி என்பவற்றை வழங்குகிறான்.
“முஃமின்களுக்கு உதவி செய்வது எமது கடமையாகும்” (அர்ரூம் : 47)
“அல்லாஹ்வுக்கும் றஸூலுக்கும் முஃமின்களுக்குமே கண்ணியம் இருக்கிறது.” (அல்முனா பிகூன்: 08)
“இது ஏனெனில், அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறான். அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.” (47:11)
இந்த ஈமான்தான் வானங்களினதும் பூமியினதும் இரட்சகனோடு எம்மைப்பிணைத்து விடுகிறது. நாம் ஈமானோடு வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அம்மனிதர்களை உருவாக்க பாடு படவேண்டும். இல்லையேல் ஷைத்தானோடு வாழும் மனிதர்களின் தொகைதான் அதிகரித்திருக்கும். முஃமின்கள் இருப்பார்கள். ஆனால், ஈமான் இருக்காது. அல்லாஹ்வை நம்புவதே ஈமானின் அடிப்படை. அதிலிருந்தே ஏனைய நம்பிக்கைகள் பிறக்கின்றன.
எனது பெற்றோர் முஃமின் களாக இருக்கின்றனர். எனவே நானும் முஃமினாக இருக்கிறேன் என எமது சமூகம் ஈமானைக் கொச்சைப்படுத்துகிறது. இந்த ஈமான் மரணித்துப்போன ஈமானாகும். நாம் எதிர்பார்க்கும் ஈமான் உயிரோட்டமாக இருக்க வேண்டும். அது ஒரு சமூகத்தையே உருவாக்க வேண்டும். வெறும் வெற்று வார்த்தையாக இருக்கக்கூடாது. அது பலமான ஈமானாக இருக்க வேண்டும். அதனைத்தான் சில சகோதரர்கள் களத்திலே செய்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடியும்.
ஷரீஆவைக்கற்ற திறமைசாலிகள் தமது துறையை விட்டும் ஒதுங்கி விடக் கூடாது. ஷரீஆவைக் கற்றவர்களிலே ஈமானியப் பலமும் அதிகரித்து இருக்க வேண்டும். இல்லையேல் கற்ற கல்வியில் பிரயோசனம் இல்லாமல் போய்விடும். சிலவேளைகளில் ஷரீஆ திறமைசாலிகளை மட்டம் தட்டும் நிலையும் சமூகத்தில் காணப்படுகின்றது.
ஒரு சகோதரரின் கூற்று: “ஷரீஆவில் மட்டும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை உருவாக்குவது அவசியமில்லை தானே. வைத்தியராக இருப்பவர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்றால் அவர் இரு துறை வல்லுனராக மாறுவாரே!” இவ்வாறு ஷரீஆவில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை மட்டந் தட்டும் நிலையும் சமூகத்திலுள் ளது.
ஷரீஆவின் அங்கீகாரமின்றி எமது எந்த அமல்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே, நாம் ஷரீஆவைக்கற்க வேண்டும், அதற்காக வாழ்பவர்களை மதிக்க வேண்டும்.
ஈமான் என்பது நாவினால் மாத்திரம் மொழிந்தால் போதுமானது தானே என சிலர் வாதாட முடியும். ஆனால், அல்லாஹுதஆலாவின் அழைப்பைப் பாருங்கள்:
“இன்னும் மனிதர்களில் ‘நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்’ என்று கூறுவோறும் இருக்கின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள். ஆனால், அவர்கள் (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.” (அல்பகரா: 08,09)
எனவே, நாவினால் மாத்திரம் ஈமான் கொண்டுவிட்டோம் எனக் கூறுவது மாத்திரம் போதாது. ஈமான் என்பது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து, அதனை செயல் உறுதிப்படுத்த வேண்டும். இதனைத்தான் பின்வரும் அல்குர்ஆனிய அழைப்பு உறுதிப்படுத்துகிறது:
“உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்.
அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் அதிகரிக்கும்.
இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்.
அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள். இத்தகையவர்கள் தான் உண்மையான முஃமின்கள்” (அல் அன்ஃபால்: 02-04)
எனவே, ஒரு மனிதன் ஈமான் கொண்டு விட்டு கஞ்சனாக இருக்க முடியாது. அவன் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்யத் தயங்கக்கூடாது. எனவேதான் தபூக் யுத்தவேளை, மிகவும் கஷ்டமான நேரம், அந்நேரத்திலும் கூட ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதில் போட்டி போட்டுக் கொண்டனர். உமர் ரளியல்லாஹு அன்ஹு தனது சொத்தில் அரைவாசியைக் கொண்டு வந்தார். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தனது முழு சொத்தையுமே அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்கள். இதுவே ஈமானோடு வாழ்ந்தோரின் நிலைப்பாடு.
நன்றி: மீள்பார்வை