Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எது? (1)

Posted on November 14, 2012 by admin

 

       முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எது? (1)     

கடந்த இரண்டு மாதங்களாக கண்ட கண்ட ஊடக வலையமைப்பிலெல்லாம் மலிவு விற்பனை செய்யப்பட்ட ஒரு செய்தி இருக்குமென்றால், அது நமது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொச்சைப்படுத்திய “Innocence of Muslims” எனும் குறுந்திரைப்படமும், அதையொட்டிய சர்வதேச கிளர்ச்சியுமே.அமெரிக்கா ஒழிக! இஸ்ரவேல் நாசமடைக! ஸாம் பசீல் மண்ணாய்ப் போக! என்று தொண்டை கிழியக் கத்தியதன் விளைவாக நமக்கு ஏற்பட்டிருக்கும் தொண்டைப் புண் மெல்ல மெல்ல ஆறத் தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் ஆறாத காயம் பட்டிருக்கும் நம் உள்ளங்களைத் தட்டியெழுப்பி, சிந்தனையைக் கொஞ்சம் கசக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

கேள்விகள் பலநூறு நம் கண்முன்னால் நிற்கும் பொழுது உரிய விடைகளைக் கண்டறியாமல் அடுத்த அடியை எடுத்து வைப்பது ஆபத்தான பல பின்விளைவுகளுக்கு அடித்தளம் போட்டு விடும். அறியாமையையும், தெளிவின்மையையும் ஒட்டி நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் நமது உம்மத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்ற வல்லது. ஆகவே எடுக்கப்படும் தீர்மானங்கள் பரிபூரண தெளிவுடனும், பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட வேண்டும். தெளிவுகள் பெறப்பட வேண்டுமென்றால், ஒரு சம்பவம் பல தடவைகள் மீட்டிப் பார்க்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இந்த சர்வதேச சர்ச்சையை இன்னொரு கோணத்திலிருந்து மீட்டிப் பார்ப்போம்.

நம் புரிதலின் வசதிக்காக இந்த மீள்பார்வையை மூன்று கட்டங்களாகவும், உலக மக்களை மூன்று பிரிவுகளாகவும் வகுக்க வேண்டியிருக்கிறது. இறுதியில் அனைத்துப் புள்ளிகளையும் கோடிழுத்து, ஒன்றிணைத்து, உள்ளே ஒளிந்திருக்கும் சரியான ஓவியத்தைக் கண்டுபிடிப்போம். இந்த வகைப்படுத்தல் பற்றிய விரிவான ஓர் அறிமுகம் இருந்தால் தான் இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணி தெளிவாகப் புரியும். மற்றும் இதுபோன்று உலகில் அவ்வப்போது நடக்கும் குழப்பங்களின் உண்மையான பின்னணியை அறிவதற்கும் இந்த அறிமுகம் உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

  அறிமுகம்  

முதல் கட்டம் :  சர்வதேச ஊடக வலையமைப்பின் செய்தி

இரண்டாவது கட்டம்: ஊடகங்களின் போலித்தனங்களை அம்பலப்படுத்துவதாகக் கூறி அதே விஷமிகள் மறுபுறம் பரப்பும் பொய்ச் செய்தி

மூன்றாவது கட்டம் : சரியான செய்தி

அடுத்ததாக மூன்று பிரிவு மக்கள். எந்தவொரு சமுதாய மக்களையும் அவர்களது சிந்தனையோட்டத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதல் பிரிவு – மந்தைகள் :

தமக்கென்று எந்தவொரு சுய சிந்தனையும் இல்லாமல் புகட்டப்படுவதையெல்லாம் அப்படியே நம்புகிறவர்கள். பள்ளிக்கூடங்கள், பொது அரங்கங்கள், நண்பர் வலையமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவை மூலம் எவையெல்லாம் கருத்துக்களாகப் புகட்டப்படுகின்றனவோ, அவற்றையெல்லாம் எந்தக் கேள்வியும், சந்தேகமும் இல்லாமல் “அப்படியா?” என்று அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிறவர்கள். யாரையும் சந்தேகப்பவோ, எதிர்க்கேள்வி எழுப்பவோ எள்ளளவும் சக்தியற்ற நிலைக்கு தமது சிந்தனைத் திறனை முடக்கிக் கொண்டவர்கள். இவ்வாறானவர்கள் தான் எந்தவொரு சமுதாயத்திலும் 70 சதவீதத்திற்கும் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். உலக மட்டத்தில் நடக்கும் அத்தனை குழப்பங்களையும் மறைவிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் சர்வதேச விஷமிகளின் ஒன்றியம் இந்த “அப்பாவி”களுக்கு வழங்கியிருக்கும் பெயர் “மந்தைகள்”. இந்தக் கட்டுரையின் வசதிக்காக நாமும் இந்த அப்பாவிப் பிரிவினரை “மந்தைகள்” என்றே அழைப்போம்.

இரண்டாம் பிரிவு – மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் :

மந்தைகளைப் போல் இருக்காமல் மனிதர்காக இருந்து எதையும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொள்பவர்கள். தம்மைப் பற்றி சிந்தனாவாதிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால், அடிப்படையில் இவர்களும் “மந்தைகள்”. ஒரு கருத்து இவர்கள் முன் வைக்கப்பட்டால், அதை உடனே நம்பிவிட மாட்டார்கள். அதைக் கடும் எச்சரிக்கையுணர்வோடு பார்ப்பார்கள். அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் ஏதும் நிலவுகின்றனவா என்று தேடுவார்கள். எங்காவதொரு மூலையில் ஓர் எதிர்க்கருத்து தட்டுப்பட்டால், அடுத்த கனமே அதை அப்படியே கவ்விக் கொண்டு, அது தான் உண்மையென்று ஊரெல்லாம் பரப்புவார்கள். இவர்களும் அடிப்படையில் சுயமாக சிந்திக்கும் திறனற்றவர்கள். இவர்களது மொத்த சிந்தனையும் ஒரு வாய்பாட்டுக்குள் (Formula) மட்டுப்படுத்தப்பட்டது:

முதல் தரப்பினர் சொல்லும் செய்தியை எந்த விசாரனையுமின்றி அப்படியே தட்டிக்கழிப்பார்கள். அதில் உண்மை இருக்கின்றதா, இல்லையா என்று கூட தேட மாட்டார்கள்.

இரண்டாம் தரப்பினர் சொல்லும் எதிர்க்கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அதிலும் உண்மையிருகிறதா? பொய்யிருக்கிறதா? என்பதைக் கூட ஆராய மாட்டார்கள். இதனால் தான் இவர்கள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள். இவ்வாறானவர்கள் அநேகமாக சமுதாயத்தில் கிட்டத்தட்ட 20 சதவீத எண்ணிக்கையில் இருப்பார்கள்.

மூன்றாம் பிரிவு – சிந்திக்கின்ற மக்கள் :

எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதன் இரு பக்கங்களையும் தீர ஆராய்ந்து, மூன்றாவது பக்கத்திலிருந்து தனது சுய சிந்தனையைத் தட்டியெழுப்பி, அதன் வெளிச்சத்தில் உண்மையைக் கண்டுபிடிக்கப் பாடுபடுபவர்கள். எந்தவொரு சமுதாயத்திலும் மிகச் சொற்பமான தொகையினராகவே இவர்கள் இருப்பார்கள். இருந்தாலும், மொத்தச் சமுதாயத்தையும் வளைத்தெடுத்து, வழிநடத்தும் சக்தியை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கியிருப்பான். இவ்வாறு இவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் ஆற்றலை இவர்கள் எந்த வழியில் செலவிடுகிறார்கள் என்பதை வைத்தே இவர்களது மறுமை வாழ்வு தீர்மானிக்கப்படும்.

  இந்தக் கட்டுரையின் நோக்கம் : 

முதல் இரண்டு பிரிவு மக்களையும் குறிவைத்து இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. அவர்களைக் குறிவைத்து என்ன தான் எழுதினாலும், அநேகமாக அதில் எந்தப் பிரயோசனமுமில்லை. வாசிப்பதோடு அவர்களுக்கும் கட்டுரைக்கும் உள்ள உறவு முறிந்துவிடுமே தவிர அவர்கள் அதற்கு மேல் சிந்திக்கப் போவதுமில்லை.

மூன்றாவது பிரிவினரான சிந்திக்கும் மக்களுக்காகவே இந்தக் கட்டுரை. அவர்களுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை. முதல் இரண்டு பிரிவினரைப் போல் நீங்களும் இந்தக் கட்டுரையின் கருத்துக்களை அப்படியே நம்பி விழுங்கி விடக் கூடாது. நான் சொல்வதையும் முழுமையாக நம்பி விடக் கூடாது. நான் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் ஐயம் தீர ஆராய வேண்டும். ஆராய்ந்த பிறகே தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான் இதை எழுதியதன் நோக்கம் வெற்றி பெறும். ஏனெனில் வெறுமனே ஒரு சம்பவத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட மட்டும் இது எழுதப்படவில்லை. சிந்திக்க சக்தி பெற்றவர்களையெல்லாம் சிந்திக்கத் தூண்டுவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். ஏனெனில் இன்றைய சமுதாயத்தில் செல்வத்துக்குப் பஞ்சமில்லை, வீரத்துக்குப் பஞ்சமில்லை, பள்ளிப் படிப்புக்கும் பஞ்சமில்லை. சிந்தனையாளர் பஞ்சம் மட்டுமே இந்த சமூகத்தில் தலைவிரித்தாடுகிறது. சுயமாக சிந்திக்கின்ற ஒருவரை சந்திப்பதென்பது ஒரு இலட்சம் ரூபா நிலத்தில் விழுந்து கிடப்பதைக் காண்பதை விட அரிதாக இருக்கிறது. இஸ்லாம் சிந்திக்கத் தூண்டும் மார்க்கம். இந்தக் கட்டுரையின் மூலம் உங்கள் சிந்தனையை நான் எங்கெல்லாம் இழுத்துச் செல்லப் போகிறேனோ, அது தான் நான் உங்களிடத்தில் செய்யும் தஃவா.

இந்த அறிமுகம் போதும். இனி ஆய்வினுள் நுழையலாம்.

  சம்பவத்தின் சாராம்சம் : 

எம் உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொச்சைப் படுத்தி ஒரு குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டது. நடிக நடிகைகள், திரைப்படத் தயாரிப்புக் குழு என்று அனைவரையும் உள்ளடக்கிய கிட்டத்தட்ட 80 பேர் கொண்ட ஒரு குழுவினரால் இது தயாரித்து வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் 13-14 நிமிட முன்காட்சிக் (trailer) காணொளி (video) இரண்டு மாதங்களுக்கு முன்பு (ஜூலை 2012) யூடியூப் (YouTube) இணையத்தளத்தில் “முஹம்மதின் உண்மை உண்மை வாழ்க்கை” (The Real life of Muhammad), மற்றும் “முஹம்மத் திரைப்பட முன்காட்சி” (Muhammad Movie Trailer) என்ற பெயர்களில் அப்லோட் செய்யப்பட்டது.

இது ஒரு முழுத்திரைப்படத்தின் முன்காட்சி மட்டும் தானா, அல்லது உண்மையில் மொத்தத் திரைப்படமுமே இவ்வளவு தானா என்பது பற்றிய ஐயப்பாடு ஊடகங்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. இருந்த போதிலும் ஊர் பெயர் தெரியாத ஒருவரின் கூற்றுப் பிரகாரம் முழுத் திரைப்பமும் ஒரேயொரு தடவை ஹொலிவுட் வட்டாரத்தினுள் இருக்கும் வைன் தியேட்டர் எனப்படும் சினிமா கொட்டகையில் பத்துப் பேருக்கும் குறைவான அரங்கத்தினர் முன்னிலையில் ஜூன் மாதம் 30ம் திகதி காண்பிக்கப்பட்டது. அப்போது அந்தத் திரையரங்கின் வாசலில் ஒட்டியிருந்த சுவரொட்டியில் படத்திற்கு வழங்கப்பட்டிருந்த பெயர் “பின் லாதினின் அப்பாவித்தனம்” (Innocence of Bin Laden) என்பதாகும். இந்த முகம் தெரியாத மனிதரின் கூற்றை நம்புவதா? இல்லையா? என்பதை மெனக்கெட்டு விவாதித்துக் கொண்டு ஊடக வட்டாரத்துக்குள் ஒரு கூட்டம். பொய்க்கும் பொய்க்கும் போட்டி வைத்து எந்தப் பொய்யை நம்புவது என்று இந்தக் கூட்டம் போடுகிற கேளிக் கூத்து ஒருபுறமிருக்க….

நடிக நடிகைகள் உட்பட திரைப்படத் தயாரிப்புக் குழுவின் அனைவரும் ஒருமித்து, “இந்த சதித்திட்டங்களுக்கும் எங்களுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. இந்தப் படம் தயாரிக்கப்படும் பொழுது இது இஸ்லாத்தை எதிர்க்கும் படமாகத் தயாரிக்கப்படவில்லை. மாறாக 2000 வருடங்களுக்கு முன்பு எகிப்தில் வாழ்ந்த நாகரிகமற்றோர்களின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவைச் சித்திரமே இது. படத்தின் பெயர் கூட பாலைவனப் போர்வீரர்கள் (Desert Warriors) என்று தான் இருந்தது. முஹம்மத், இஸ்லாம் போன்ற எந்த வார்த்தையும் நாம் நடிக்கும் போது படத்தில் இருக்கவில்லை.

படத்தின் கதாநாயகனின் பெயர் கூட மாஸ்டர் ஜோர்ஜ் என்று தான் இருந்தது. எல்லாம் முடிந்த பிறகு தயாரிப்பாளர் இரகசியமாக படத்தில் நாம் பேசிய வார்த்தைகளையெல்லாம் டப்பிங் செய்து மாற்றியமைத்து, மொத்தப் படத்தையுமே தலைகீழாக மாற்றிவிட்டார். நாம் அறியாமலேயே ஓர் அநியாயதில் தயாரிப்பாளர் நம்மையும் பங்காளியாக்கி, நம்மை ஏமாற்றி விட்டார். இதற்காக நாம் மனதார வருந்துகிறோம்” என்று புலம்பிக் கொண்டிருப்பது இன்னொரு புறம். இவர்களின் புலம்பல் உண்மை தானா? அல்லது அதுவும் இன்னுமொரு நாடகமா என்று நமக்குள் எழும்பும் கேள்வி தொக்கி நிற்கும் அதே வேளை, படத்தில் நடிகர்களின் வாயசைப்பையும், வெளிவரும் சொற்களையும் ஒப்பிட்டு நோக்குகையில் அவர்கள் கூறுவது போல் கனிசமான அளவு திரை வசனங்கள் மாற்றப்பட்டு டப்பிங் செய்யப்பட்டிருப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

படத்தின் தயாரிப்பாளர் தன்னை ஆரம்பத்தில் கலிபோர்னியவில் வசித்து வரும் இஸ்ரவேல் நாட்டுப் பிரஜை ஸாம் பசீல் (Sam Bacile) என்று உலக அரங்கில் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தான் இஸ்லாத்தை மனதார வெறுப்பதாகவும், மற்றும் இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக 100 யூதத் தனவந்தர்கள் முன்வந்து ஐம்பது லட்சம் அமெரிக்க டொலர் பணத்தொகையைத் திரட்டித் தந்ததாகவும் ஊடகங்களுக்கு அறிவித்தான். பிறகு அஸோசியேட்டட் ப்ரெஸ் (Associated Press) ஊடகம் நடத்திய “உண்மை தேடும் (???) படலத்தின்” விளைவாக கிடைக்கப்பெற்ற,

தயாரிப்பாளரது உண்மையான விவரம்(?) :

பெயர்: நகோலா பஸிலி நகோலா (Nakoula Basseley Nakoula) இஸ்ரேலிய குடிமகன் அல்ல, மாறாக எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கொப்டிக் கிறித்தவன். கலிபோர்னியாவில் வசித்து வரும் இவன் கடந்த காலத்தில் பண மோசடிக்காக சிறைத் தண்டனை அனுபவித்தவன்.

மேலும், இந்தக் குறுந்திரைப்பட முன்காட்சியை செப்டம்பர் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் அரபி மொழியில் மொழிமாற்றம் செய்து, எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கிறித்தவ சட்டத்தரணி மொரிஸ் ஸாதிக் (Morris Sadek) என்பவன் அரபு உலகத்திற்கு “தேசிய அமெரிக்க கொப்டிக் சபை” (National American Coptic Assembly) யின் இணையத்தளம் மூலம் அறிமுகப்படுத்தினான்.

செப்டம்பர் மாதம் 9ம் திகதி இந்த முன்காட்சியின் ஒரு பகுதி அல் நாஸ் (Al-Nas) எனும் எகிப்திய தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர்; 11 2012 அன்று லிபியா, பெங்காஸியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகமும், மற்றும் எகிப்து, கய்ரோவிலுள்ள அமெரிக்க தூதரகமும் ஏக காலத்தில் முஸ்லிம்களால் தாக்கப்பட்டன. தாக்குதலின் விளைவாக லிபியாவின் அமெரிக்க தூதர் ஜே. கிரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் (J. Christopher Stevens) மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் மூவர் உட்பட மொத்தம் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார். இங்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த வன்முறை கொஞ்சம் கொஞ்சமாகப் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.இது சம்பவம். இனி இது பற்றிய கண்ணோட்டங்களைப் பார்ப்போம்.

  மீள்பார்வையின் முதலாவது கட்டம் : 

  “மந்தைகள்” பிரிவைக் குறிவைத்து சர்வதேச ஊடக வலையமைப்பு விதைக்கும் கருத்துக்கள் : 

கருத்து 1 :

ஸாம் பசீல் என்னும் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு முன்னாள் சிறைக் கைதி. பண மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டவன். மத வெறி பிடித்த ஒரு கிறுக்கன்.

இதன் மூலம் மீடியா சொல்லாமல் சொல்வதும், “மந்தைகள்” மனதில் பதிய வைக்க விரும்புவதும் :

எவனோ ஒரு கிறுக்கன் பைத்தியகாரத் தனமாக ஏதாவதொன்றைச் செய்து விட்டால், அதற்காக உலகின் முதல் தர ஜனநாயக நாட்டையும், அதன் நேச நாடுகளையும் குற்றம் பிடிப்பது நியாயமில்லை.

கருத்து 2 :

ஸாம் பசீல் என்பவன் தனக்கு இஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பை வெளிக்காட்டவே இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறான்.

இதன் மூலம் மீடியா சொல்லாமல் சொல்வதும், “மந்தைகள்” மனதில் பதிய வைக்க விரும்புவதும் :

ஜனநாயக நாடு என்றாலே அங்கு வாழும் யாருக்கும் யாரைப் பற்றியும் எதுவும் சொல்லும் உரிமை இருக்கிறது. அது கருத்துச் சுதந்திரம். அதனால், அரசாங்கம் அந்தக் கிறுக்கனைத் தண்டிப்பதற்கும் சட்;டத்தில் இடமில்லை. தண்டிக்கச் சொல்லி குரல் கொடுப்பதும் நீதியல்ல.

கருத்து 3 :

அமெரிக்க அரசாங்கமோ, அல்லது இஸ்ரேல் அரசாங்கமோ இதற்கு சம்பந்தமில்லை. இது ஒரு தனிமனித செயல்.

இதன் மூலம் மீடியா சொல்லாமல் சொல்வதும், “மந்தைகள்” மனதில் பதிய வைக்க விரும்புவதும் :

என் பிள்ளை வெளியில் எவனையாவது அநியாயமாக அடித்து விட்டு வந்தால், அதற்கு தந்தையாகிய நான் பொறுப்பல்ல. அது அவன் சுதந்திரம். அதனால் அவனைத் தண்டிக்க மாட்டேன். அதுமட்டுமல்லாமல், அவன் என் பிள்ளையாக இருப்பதனால் அவனை நான் இனியும் பாதுகாத்துப் பராமரிக்கவும் செய்வேன். அடி வாங்கியவர்கள் அடியை வாங்கிக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமே தவிர வீணாகக் கூச்சல் போடக் கூடாது.

கருத்து 4 :

உலகெங்கும் முஸ்லிம்கள் கொந்தலித்துப் போய் லிபியாவில் அநியாயயமாக அமெரிக்க தூதரையும், உதவியாளர்களையும் கொலை செய்து விட்டார்கள்.

இதன் மூலம் மீடியா சொல்லாமல் சொல்வதும், “மந்தைகள்” மனதில் பதிய வைக்க விரும்புவதும் :

என்று இஸ்லாத்திற்குள் வஹாபிக் கொள்கை (தவ்ஹீத்) மீண்டும் துளிர்த்து விட்டதோ, அன்றிலிருந்து சாந்தத்தை மட்டுமே போதித்து வந்த இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டித் தனமான முரட்டு மார்க்கமாக மாறி விட்டது. உலகெங்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் பெருகி விட்டார்கள். அலட்டிக் கொள்ளத் தேவையில்லாத சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் கொலை செய்கின்ற அளவுக்கு முஸ்லிம்கள் இன்று தீவிரமடைந்து விட்டார்கள். இவர்களை இப்படியே விட்டால், நாளடைவில் மற்ற மதத்தவர்களை இந்த முஸ்லிம்கள் பூமியில் உயிர்வாழ விட மாட்டார்கள். ஒருவகையில் இந்தப் படத்தைத் தயாரித்த ஸாம் பசீல் இஸ்லாத்தை வெறுப்பதிலும் குற்றமிருப்பதாகத் தெரியவில்லை.

  மேற்கூறப்பட்ட நான்கு கருத்துக்களையும் மீடியா முலம் விஷமிகள் விதைப்பதன் நோக்கம் : 

“ஒரு பொய்யை உரத்தும், உறுதியாகவும், திரும்பத்திரும்பவும் மக்கள் மத்தியில் முன்வைத்து வரும்போது, நாளடைவில் மக்களில் அநேகர் அதை உண்மை என்றே நம்பத் தொடங்கி விடுவார்கள்” எனும் ஜேர்மன் நாட்டு ராஜதந்திரி ஜோஸப் கெபெல்ஸ் (Joseph Goebbels) இன் தத்துவத்துக்கமைய முஸ்லிம்கள் பற்றிய இந்தப் பொய்ப் பிரச்சாரங்களைத் திரும்பத் திரும்ப சர்வதேச ஊடக வலையமைப்பின் மூலம் பரப்புவதால், உலக சனத்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிக அளவினரான சிந்தனைத் திறன் மட்டுப்படுத்தப்பட்ட “மந்தைகள்” பிரிவினரை இதன் மூலம் மூளைச்சலவை செய்து, “வஹாபிகள் என்றாலே பிரச்சினைக் காரர்கள்” என்ற கருத்தை அவர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டால், எந்த நிலையிலும் இந்தப் பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் உலகின் எந்த மூலையில் முஸ்லிம்களுக்கு என்ன அநியாயம் நடந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொள்வார்கள். “இவர்களுக்கு வேறு வேலையே இல்லை.

இதே பிழைப்பாகப் போய்விட்டது” என்று சலித்துக் கொள்வதோடு அவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். எந்த அநியாயத்தையும் ஏனென்று கேட்கக் கூட முன்வர மாட்டார்கள். விஷமிகள் அண்மைக்காலமாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இந்தத் தந்திரோபாயத்தின் மூலம் அவர்களது நோக்கம் ஏற்கனவே பெரும்பாலும் நிறைவேறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இன்றைய உலக நடப்பைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரிகிறது.

இனி…..

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

65 − = 56

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb