முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எது? (2)
இரண்டாவது கட்டம் :
மனிதத் தோல் போர்த்திய மந்தைகளைக் குறிவைத்து, ஊடகங்களின் போலித்தனங்களை அம்பலப்படுத்தி, உண்மையை வெளிக்கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு அதே விஷமிகள் மறுபுறம் பரப்பும் போலிக் கருத்துக்கள்:
கருத்து 1:
வலதுசாரித் தீவிரவாதக் கும்பலொன்று ஹ{ஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிறகு எகிப்திலும், முஅம்மர் கதாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு லிபியாவிலும் துளிர்விட்டிருக்கும் ஜனநாயகத்தை வேரறுப்பதற்காகவும், ஜனநாயகத்தை உலகெங்கும் பரப்புவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் நல்ல அரசியல்வாதிகளைக் கவிழ்ப்பதற்காகவும் திட்டமிட்டு ஏற்பாடு செய்த சதி இது. அவர்களது அந்த சதித்திட்டத்தில் அவர்கள் வெற்றி கண்டும் விட்டார்கள். – இவ்வாறு இங்கிலாந்தின் கார்டியன் (Guardian) பத்திரிகை கடந்த 13.09.2012 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை கார்டியன் பத்திரிகையின் இணையத்தளமானwww.guardian.co.ukஇன் 03.09.2012ம் திகதிக்கான பதிவுகளில் பார்க்கலாம்.
இதன் மூலம் விஷமிகள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் மனதில் பதிய வைக்க விரும்புவது :
எகிப்திலும், லிபியாவிலும் இதற்கு முன் காட்டுமிராண்டித் தனமான அரசர்களே ஆண்டு வந்தார்கள். அந்தக் கொடுங்கோல் அரசர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் நாட்டு மக்களே கொந்தளித்து, அவர்களை வீழ்த்தினார்கள். இந்த மக்கள் புரட்சியின் மூலம் ஜனநாயகம் எனப்படும் மகத்தான ஆட்சி முறை அங்கு துளிர்விட்டிருக்கிறது. உலகிலேய ஜனநாயகம் ஒன்று தான் மனிதநேயம் மிக்க ஆட்சி முறை. ஆகவே, அந்த நாடுகளில் வாழும் மக்கள் மீது கொண்ட அளவு கடந்த அக்கறையின் காரணமாக இந்த ஜனநாயகத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளும் அந்தப் புரட்சிக் கார மக்களுக்கு உதவினர். சாராம்சம்: மேலைநாடுகளின் ஜனநாயத்தினால் தான் இந்த நாடுகளில் சுபீட்சம் தொடங்கியிருக்கிறது. இது சில தீவிரவாதிகளுக்குப் பிடிக்காததனால் இந்த திரைப்படத்தைக் காரணம் காட்டி, அவ்விரு நாடுகளினதும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.
கருத்து 2 :
நவம்பர் மாதம் 6ம் திகதி நடைபெற இருக்கின்ற அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் முறையும் போட்டியிரும் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியாவதைத் தடுப்பதற்காக ஒருசில தீவிரவாதிகள் பின்னும் சதி வலை இது. – பார்க்க: 15.09.2012 அன்று பிரசுரிக்கப்பட்ட இங்கிலாந்தின் இன்டிபெண்டன்ட் (The Independent) பத்திரிகை. இணையதளம் : www.independent.co.uk
இதன் மூலம் விஷமிகள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் மனதில் பதிய வைக்க விரும்புவது :
ஒபாமாவின் ஆட்சியின் பிறகு தான் அரபுலகில் மறுமலர்ச்சி தோன்றியிருக்கிறது. இரண்டாவது தடவையும் அவரைத் தொடர்ந்தும் பதவியில் இருக்க வைத்தால், அவர் மொத்த அரபுலகத்தையுமே அமைதிப் பூங்காவாக மாற்றி விடுவார். அரபு நாடுகள் அமைதியாக இருப்பதை ஒருசில தீவிரவாத சக்திகள் விரும்பவில்லை. அதனால் தான் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்கள்.
கருத்து 3 :
தீவிரவாதிகளுக்கு லிபியாவின் அமெரிக்கத் தூதுவரான கிரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ்ஸை கொல்ல வேண்டிய தேவை ஏற்கனவே இருந்தது. ஏனென்றார் ஸ்டீவன்ஸ் மிகவும் நல்லெண்ணம் படைத்த ஒரு அரசியல் ராஜதந்திரி. லிபியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு அச்சாணியாக இருந்தவர்களுள் இவர் பிரதானமானவர். – பார்க்க: 13.09.2012 அன்று பிரசுரிக்கப்பட்ட இங்கிலாந்தின் டெய்லிமெய்ல் (DailyMail) பத்திரிகை. இணையதளம் www.dailymail.co.uk
இதன் மூலம் விஷமிகள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் மனதில் பதிய வைக்க விரும்புவது :
க்ரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் போன்ற நல்லெண்ணம் படைத்த அரசியல் ராஜதந்திரிகளே தற்போது அரபுநாடுகளுக்குத் தேவை. இவ்வாறான ராஜதந்திரிகள் மூலமாகத் தான் அரபுலகத்தில் அமைதியை ஏற்படுத்தலாம். இது தெரிந்து தான் தீவிரவாதிகள் இவ்வாறான நல்ல அரசியல்வாதிகளைத் தேடித்தேடி கொலைசெய்து வருகின்றனர். இதன் மூலம் அரபுலகத்தின் அமைதியைக் கெடுக்கப் பாடுபடுகின்றனர்.
கருத்து 4 :
செப்டெம்பர் 11 இல் அமெரிக்க உலக வர்த்தக மையத்தின் மீது நடாத்தப்பட்ட விமானக் குண்டுவெடிப்புத் தாக்குதலின் 11வது வருட பூர்த்தியைக் கொண்டாடும் விதமாகவும், மற்றும் அண்மையில் அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மூலம் கொல்லப்பட்ட பாக்கிஸ்தான் அல்காயிதாவின் உப தலைவராயிருந்த அபூ யஹ்யா அல்-லிபி யின் மரணத்திற்குப் பழி தீர்ப்பதற்காகவும் அல்காயிதா அமைப்பு தான் அமெரிக்க தூதுவரை லிபியாவில் கொலை செய்தது. – பார்க்க: 13.09.2012 பிரசுரிக்கப்பட்ட இங்கிலாந்தின் கார்டியன் (Guardian) பத்திரிகை. இணையதளம் www.guardian.co.uk
இதன் மூலம் விஷமிகள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் மனதில் பதிய வைக்க விரும்புவது :
அல்காயிதா என்பது உலகளாவிய ரீதியில் வியாபித்திருக்கும் ஒரு மாபெரும் பயங்கரவாத அமைப்பு. இவர்கள் தான் செப்டெம்பர் 11, 2012இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தை விமானக் குண்டுவெடிப்பின் மூலம் தகர்த்தவர்கள். இந்த சம்பவத்தின் நினைவாக அல்காயிதா ஒவ்வொரு வருடமும் ஏதாவது அசம்பாவிதம் செய்து வருகிறது. அந்தத் தொடரில் தான் இவ்வருடம் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
மேற்கூறப்பட்ட நான்கு கருத்துக்களையும் “மறைந்திருக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிற சத்தியவான் ஊடகங்கள்” என்று தம்மைப் பற்றி விளம்பரப்படுத்தி வைத்திருக்கும்.
மேற்கூறப்பட்ட பிரித்தானிய பத்திரிகைகள் மூலம் விஷமிகள் விதைப்பதன் நோக்கம் :
“மந்தைகளுக்கும்” மனிதத் தோல் போர்த்திய மந்தைகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை விஷமிகள் நன்றாகவே விளங்கி வைத்திருக்கிறார்கள். எதைப் புகட்டினாலும், அதை அப்படியே விழுங்கி விட்டுப் போகிற “மந்தைகளை”ப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களை ஏமாற்ற தொலைக்காட்சி அலைவரிசை நங்கூரங்களில் அமர்ந்து கொண்டு அவிழ்த்துப் போட்ட தலைமுடியுடன் கவர்ச்சி மொழியில் செய்தி வாசிக்கும் அழகிகள் சொல்லும் பொய்களே போதும். ஆனால் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் அப்படியல்ல. உண்மையில் சுயமாக சிந்திக்கத் தவறினாலும், சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இரண்டாம் தரப்பினரிடம் இருக்கிறதென்பது விஷமிகளுக்குத் தெரியும். எந்தவொரு கருத்து சர்வதேச ஊடகங்களால் முன்வைக்கப்பட்டாலும், அதன் எதிர்க் கருத்து எங்கேயிருக்கின்றது என்று தான் இந்த இரண்டாம் தரப்பினர் முதலில் தேட ஆரம்பிப்பார்கள். ஏதாவதோர் எதிர்க் கருத்து கண்ணுக்குத் தட்டுப்படும்வரை தேடிக்கொண்டேயிருப்பார்கள்.
தேடல்களை அதிக நேரம் நீடிக்க விடுவது உண்மையை மறைக்க விரும்புபவனுக்கு ஆபத்து. ஏனெனில், சில சமயங்களில் எதிர்பாராத விதமாக அவர்கள் கண்களில் உண்மை தட்டுப்பட்டு விடவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பையும் அறவே இல்லாமலாக்க வேண்டுமென்றால், இவ்வாறு தேடித் திரிபவர்கள் கண்களில் இலகுவாகத் தட்டுப்படும் வகையில் ஆங்காங்கே உண்மைத் தோல் போர்த்திய பொய்களை நிறுத்தி வைத்தால் அந்தப் பொய்களில் ஏதாவதொன்றை “இது தான் உண்மை” என்று நம்பி இந்த இரண்டாம் தரப்பினர் ஏற்றுக் கொண்டு விடுவார்கள். அத்தோடு அவர்களின் தேடலும் முற்றுப்பெற்று விடும். உண்மையும் என்றென்றும் மறைக்கப்பட்டே இருக்கும்.
இனி….
மூன்றாவது கட்டம் :
உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அனைத்துத் தரப்பு வாதங்களையும் முன்னால் எடுத்து வைத்துக் கொண்டு அவை ஒவ்வொன்றையும் தமது சிந்தனையின் வெளிச்சத்தில் ஆராய்பவர்கள் கண்களில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தட்டுப்படும் யதார்த்தங்கள்:
யதார்த்தம் 1 :
இந்தக் குறுந்திரைப்படத்தின் அடிப்படை நோக்கம்: திட்டமிட்டு செய்யப்பட்ட அமெரிக்க தூதரின் கொலைக்கான உண்மைக் காரணத்தை மறைத்து, இந்தப் படத்தைக் காரணமாகக் கற்பிப்பதும், மற்றும் இதை அடிப்படையாக வைத்து ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் மத்தியகிழக்கிற்கு இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, தீயை இன்னும் வளர்ப்பதுமே. சம்பவத்திற்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. திரைப்படம் மத்தியகிழக்கில் அறிமுகப்படுத்தப் படுவதற்கு பல தினங்களுக்கு முன்பே தூதரகம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டு விட்டது என்பதை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான லூயி கோமெர்ட் (Louie Gohmert), Breitbart News இற்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் “Embassy attacks appear coordinated; not linked to the film” என்று பகிரங்கமாகக் குறிப்பிடுகிறார்.
யதார்த்தம் 2 :
அனுபவமற்ற, சிறுபிள்ளைத்தனமான பாணியில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதன் நோக்கம்: திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர்களின் தடயங்களை மறைப்பதும், படம் வெளியிடப்பட்ட உண்மையான நோக்கத்தைக் கண்டுபிடித்து விடாமல் மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதுமே.
யதார்த்தம் 3 :
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஸிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது முழு வீச்சுத் தாக்குதல் தொடுக்கப் போவதாக சர்வதேச அரசியல் அவதானிகள் மட்டத்தில் வலுவான கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில் இந்தத் திரைப்படச் சம்பவம் இடம்பெற்றிருப்பது இன்னுமொரு கோணத்திலும் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
யதார்த்தம் 4 :
100 யூதர்களின் நிதியுதவியோடு இந்தப் படம் தயாரிக்கப்பட்டது என்ற ஒரு செய்தியை திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மர்ம ஆசாமி ஊடகங்கள் மூலம் பரப்பி வருவதும் இன்னொரு பக்கம் சிந்தனையைக் கொண்டு செல்கிறது. தானாக ஒருவனை வலிய சென்று அடிப்பவன் கெட்டவன். தன்னை அடிக்க வருபவனைத் தற்காப்புக்காகத் திருப்பி அடிப்பவன் நல்லவன், வீரன். இந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்துத் தான் இஸ்ரேல் எனும் நாடே பலஸ்தீன மண்ணில் உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் துவக்கத்திலிருந்து வரலாறு நெடுகிலும் காலத்துக்குக் காலம் இஸ்ரேல், அதனை வளைத்திருக்கும் பாலஸ்தீன மக்களை அவ்வப்போது சீண்டுவதும், சீண்டப்பட்டவுடன் பாலஸ்தீன முஸ்லிம்கள் கொதித்தெழுந்து நான்கு யூதர்களைக் கொல்வதும், அந்தக் கொலைகளைக் காரணம் காட்டி இஸ்ரேல் “தற்காப்பு யுத்தம்” செய்து சுற்றியிருக்கும் பாலஸ்தீனக் குடிமக்களைக் கொன்று குவிப்பதும், எஞ்சுபவர்களை அங்கிருந்து துரத்தியடிப்பதும், அனைவரும் ஓடிய பிறகு காலியாயிருக்கும் அந்த நிலத்தையும் இஸ்ரேல் நாட்டின் வரைபடத்துக்குள் இணைத்துக் கொள்வதும், கொஞ்சம் நாள் கழித்து மீண்டும் இன்னொரு பகுதி மக்களை சீண்டுவதும், அவர்களும் இதே சதிவலையில் கண்மூடித்தனமாக வீழ்வதும், பிறகு அந்தப் பகுதியும் இஸ்ரேல் நாட்டு எல்லைக்குள் விழுங்கப்படுவதும்ஸ என்ற முடிவில்லாத இந்தத் தொடர்கதை வளைகுடா முழுவதையும், மற்றும் அரேபிய தீபகற்பத்தின் மேல் பாதியையும் இஸ்ரேலின் எல்லைக்குள் கொண்டு வரும் நாள் வரை தொடரும்.
இந்தத் தொடர்கதையின் அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பம் தான் இந்தச் சம்பவமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இந்தச் சம்பவத்தால் அதிகம் சீண்டப்பட்ட நாடுகளில் ஒன்றாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனான் மீடியாக்களில் பரவலாகக் காட்டப்படுவதும் சிந்திக்கத்தக்க விடயம். இதுவரை சர்வதேச மட்டத்தில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் 14.09.2012 அன்று லெபனானில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் நொறுக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் வத்திகான் போப்பாண்டவரும் ஏக காலத்தில் லெபனானுக்கு விஜயம் செய்திருந்ததும், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் போப்பாண்வரை வம்புக்கிழுத்ததும் பல கேள்விகளை எழுப்புகின்றன. அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல் பல வருடங்கள் திரை மறைவிலிருந்தே இயங்கி வந்த ஹிஸ்புல்லாஹ் என்ற ஷீயா இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ் ஆர்ப்பாட்டத்தின் போது பகிரங்கமாக வெளிவந்து கோபம் கொப்பளிக்கக் கருத்து வெளியிட்டதும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் போருக்குத் தயாராகுமாறு எச்சரிக்கை விடுத்ததும் கொஞ்சம் அதிகமாகவே நம்மை சித்திக்கத் தூண்டுகிறது. இதற்கு மேலும், லெபனான் ஷீயா தீவிரவாதிகளான இந்த ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தை பாலூட்டி, சீராட்டிப் பராமரித்துக் கொண்டிருப்பது ஈரானும், ஸிரியாவும் தான் என்ற உண்மை இன்னும் கொஞ்சம் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறது.
இறுதியாக….
இந்த மூன்று தரப்பு செய்திகளையும் ஒருங்கிணைத்து, அனைத்தையும் ஒவ்வொன்றாக சிந்தனையில் எடைபோட்டு நம்மால் எடுக்க முடிகின்ற தெளிவான முடிவுகள்:
அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கடந்த ஒருசில மாதங்களாக மத்தியகிழக்கில் செய்து முடித்திருக்கும் தில்லுமுல்லுகள் சர்வதேச அரங்கில் அம்பலப்படுவதற்கு முன் அவற்றின் தடயங்களைத் துப்பரவு செய்து கொள்வதற்காகவே இந்த மொத்த நாடகமும் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. எப்படியென்றால்….
உலக அரங்கில் பிரகடனப்படுத்தப் பட்டிருக்கும் அமெரிக்க அரசின் கொள்கை :
பயங்கரவாதத்தை இந்தப் பூமியிலிருந்து துடைத்தெறிவது (War on Terror). இதன் அர்த்தம் உலகில் எங்கெல்லாம் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் இயங்குகின்றார்களோ, அங்கெல்லாம் அமெரிக்கா நுழைந்து அவர்களை அடியோடு அழித்து, அந்த இடத்தில் அமைதியை நிலைநாட்டும். பயங்கரவாதிகளோடு அமெரிக்காவுக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. பயங்கரவாதிகளோடு அமெரிக்காவுக்கு எந்த ஒட்டு உறவும் கிடையாது. கண்ட இடத்தில் பயங்கரவாதிகளைக் கொன்று அழிப்பதே அமெரிக்காவின் ஒரே கொள்கை. இந்தக் கொள்கையிலிருந்து அமெரிக்கா என்றைக்கும் தடம்புரளாது.இதில் வேடிக்கை என்னவென்றால், எகிப்தில் முபாரக்கையும், லிபியாவில் கதாபியையும் வீழ்த்தி விட்டு, அங்கு “ஜனநாயகத்தை” உருவாக்கும் அரும்பணியை அமெரிக்கா நேரடியாக செய்யவில்லை. எந்தப் பயங்கரவாதிகளை தனது பரம எதிரியென்று உலகெங்கும் தம்பட்டமடித்துக் கொள்கிறதோ, அதே பயங்கரவாதிகளான அல்காயிதா, இஹ்வான் போன்ற இயக்கங்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு, அவர்களை களத்தில் முன்னுக்கு அனுப்பிப் பின்னாலிருந்து அவர்களை அமெரிக்கா இயக்கியது. முபாரக்கும் கதாபியும் முழுமையாக வீழ்த்தப்படும் வரை இந்தப் பயங்கரவாதிகளுடனான அமெரிக்காவின் நட்பும், கூட்டணியும் நீடித்தது.
– பார்க்க: 12.09.2012 அன்று prisonplanet.com எனும் இணையத்தளத்தில் பிரசுரமான கட்டுரை, மற்றும் 6.09.2012 அன்று ரஷ்ய பிரதமர் வ்லாடிமிர் புட்டின் ரொயிட்டருக்கு வழங்கிய செய்தியில் இதை அவர் பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்.இப்பொழுது எகிப்து, லிபியா ஆகிய இந்த இரண்டு நாடுகளிலும் அமெரிக்காவுக்குத் தேவையான ஆட்சி மாற்றங்கள் நடந்து முடிந்து விட்டன. இந்த ஆட்சி மாற்றம் செய்வதற்கான அருமையான சதித்திட்டங்களையெல்லாம் அமெரிக்கா சார்பாகக் களத்தில் முன்நின்று பயங்கரவாதிகளின் உதவியோடு வெற்றிகரமாக நடத்தி முடித்த ராஜதந்திரி தான் லிபியாவில் கொல்லப்பட்ட அமெரிக்க தூதுவர் க்ரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ். – பார்க்க 13.09.2012 பிரசுரமான இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகை. இணையதளம் :
guardian.co.ukசிந்திக்கும் மக்களுக்கு இப்போது புள்ளிகளுக்குள் மறைந்திருக்கும் ஓவியம் புலப்பட ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆம், காரியம் நடந்து முடிந்தபின் கறிவேப்பிலைக்குக் கறிச்சட்டிக்குள் என்ன வேலை? காரியம் நடக்கும் வரை நட்பு பாராட்டிக் கொண்டிருந்த பயங்கரவாத இயக்கங்களைப் பழையபடி பகைத்துக் கொள்ள ஒரு காரணம் வேண்டும். காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தைக் கச்சிதமாக நடத்தித் தந்த ராஜதந்திரியின் கைவசம் விஷமிகளின் வண்டவாளங்கள் பல ஆதாரங்களாக சிக்கியிருப்பதும் விஷமிகளின் எதிர்காலத் திட்டங்களுக்கு நல்லதல்ல. கூட்டுச் சேர்ந்து களவு செய்தபின், கூட்டாளி உயிரோடு இருக்கும் காலம் முழுவதும் களவெடுத்தவனுக்கு நிம்மதி இருக்காது.
எந்த நிமிடமும் கூட்டாளி தன்னைக் காட்டிக் கொடுத்து விடலாம் என்ற திகிலோடு தான் அவன் ஒவ்வொரு நிமிடத்தையும் நிம்மதியின்றிக் கழிப்பான். இவ்வாறு கஷ்டப்படுவதைவிட அந்தக் கூட்டாளியைக் கொன்று விட்டால் ஒரேயடியாகத் தீர்ந்தது தொல்லை. தடயங்களும், ஆதாரங்களும் நிரந்தரமாகவே அழிந்து விடும். இந்தத் திட்டத்தை இலகுவாக செயல்படுத்துவதற்கு விஷமிகளுக்குத் தேவைப்பட்டதெல்லாம் முஸ்லிம்களைச் சீண்டும் விதமாக 13 நிமிடத்தில் ஒரு குறுந்திரைப்படம். படத்தைக் காட்டிக் குட்டையைக் குழப்பி, குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிப்பது போல் பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க தூதுவரையும் அவரது துணைவர்களையும் கொன்று மொத்தத் தடயங்களையும் அடியோடு அழித்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் பழியை அப்படியே எடுத்து அவர்களது தீவிரவாத நண்பர்களான அல்காயிதா மீது போட்டு, அவர்களது உறவையும் அத்தோடு முறித்துக் கொண்ட இந்தத் தந்திரோபாயம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துப் போட்டது இந்த விஷமிகள் எப்பேர்ப்பட்ட குள்ளநரிகள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் விஷமிகள் நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் இறுதி நோக்கம் :
சர்வதேச முஸ்லிம்களின் உணர்ச்சிகளைக் கிளறி, வன்முறையைத் தூண்டிவிட்டு, அதையே ஒரு காரணமாக உலகுக்குக் காட்டி, முஸ்லிம் நாடுகள் பட்டியலில் அவர்களின் அடுத்த இலக்கைத் தாக்குவது.
சிந்திக்கும் மக்களிடம் இறுதியாக ஒரு கேள்வி. பல நாட்களாகத் தீட்டப்பட்டு வந்த விஷமிகளின் இந்த சதித்திட்டம் ஏன் 2012ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதிலேயே அரங்கேற்றப்பட வேண்டும்? செப்டம்பர் 11 என்னும் இந்தத் திகதிக்கு ஏன் வரலாற்றில் அடிக்கடி முக்கியத்துவம் கொடுக்கப்படுட்டு வருகிறது? இதற்கான பதில் மிகவும் நீண்டது. இன்னுமொரு தொடரில் இன்ஷா அல்லாஹ் இதை ஆராயலாம். அதுவரை காத்திராமல் சுயமாக சிந்தித்து, ஆய்வு செய்து நீங்கள் ஒவ்வொருவரும் இதற்கான விடையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எனது அவா. அவ்வாறு ஆய்வு செய்யக் கூடிய மக்களாக நம்மில் ஒவ்வொருவரும் என்று மாறுகிறார்களோ, அன்று தான் இந்தக் கட்டுரையை எழுதியதன் அடிப்படை நோக்கம் முழுமையாக நிறைவேறும்.
நன்றி : அழைப்பு