பெண்களை வேட்டையாடுதல்: சிரிய இராணுவத்தின் இறுதி ஆயுதம்!
கூர்மையடைந்து வரும் சிரியாவின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது மனித உரிமை நிறுவனங்களிடையே பாரிய விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
சிரிய அரசாங்கம் தனது சொந்த மக்கள் மீது மேற்கொண்டு வரும் அடக்கு முறைகளும் படுகொலைகளும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 32,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசுக்கு எதிராக தன்னியல்பாக எழுந்த மக்களின் ஜனநாயகப் போராட்டத்தை ஆயுதம் கொண்டு நசுக்கும் வெறித் தனம் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. பொதுமக்களுக்குச் செல்லும் குடிநீர், மின்சாரம், தொலைபேசி வசதிகளைத் துண்டித்து வந்த அஸதின் படையினர், தற்போது எல்லைப் புற அகதி முகாம்களில் தஞ்சம் கோரியுள்ள பெண்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
ஹும்ஸ், தர்ஆ ஆகிய நகரங்களில் வீடுகள் சுற்றிவளைக்கப் பட்டு பெண்கள் வெளியே இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் பல ஊடகவியலாளர்களின் கெமராக்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறு இழுத்துச் செல்லப்படுகின்றவர்கள் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது உடல்கள் வீதிகளில் தூக்கி வீசப்படுகின்றன.
துருக்கி, ஜோர்தான், லெபனான் எல்லைப் புறங்களில் பெண்களை அடக்குவதற்கான ஆயுதமாக பாலியல் வல்லுறவை அஸதின் படையினர் கையில் எடுத்துள்ளனர். முஜ்தமஃ எனும் சஞ்சிகை இது குறித்து மயிர்க் கூச்செறியும் பல தகவல்களைப் பதிவுசெய்துள்ளது.
கைக்குழந்தைகளுடன் கால் நடையாக வெளியேறிச் செல்லும் பெண்கள், படும் கஷ்டங்கள் சொல்லில் மாழாதவை. சிவில் சமூகத்தில் பெண்களின் எழுச்சியைக் காயடிப்பதற்கு அஸதின் அரச படையினர் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு செயலும் திடுக்கிடச் செய்கின்றது. தம்மையும் முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்கின்ற ஷீஆக்களே சகோதர முஸ்லிம்களைப் படுகொலை செய்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றனர்.
ஆகாய வழியாக குண்டுகள் வீசப்படுவதனால், மக்கள் அகதிகளாகவேனும் வெளியேறிச் செல்ல முடியாத அவலம் பல இடங்களில் தொடர்கின்றது. உணவோ, குடிநீரோ இன்றி வீடுகளில் முடக்கப்பட்டுள்ள பெண்கள் மீது ஊடுருவும் அரச வல்லூறுகள், அவர்களை வேட்டையாடி விட்டு சடலங்களை வீதி யோரங்களில் வீசி எறிகின்றனர்.
1990 களில் பொஸ்னியாவிலும் 1980 களில் காஷ்மீரிலும் நடந்த சம்பவங்கள் இப்போது சிரியாவில் நடக்கின்றது. ஆனால், இத்தனையும் நடந்து கொண்டிருக்கும்போது 450 மில்லியன் அறேபியர்கள் கைகட்டி, வாய் பொத்தி நிற்பதை என்னவென்று வர்ணிப்பது?
தடுப்புக் காவல் நிலையங்களில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் சேட்டைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உம்மு ஷைமா எனும் பெண்மணி, ஹும்ஸ் நகரிலுள்ள தனது வீட்டில் நடந்த குரூரமான சம்பவத்தை கண்ணீர் மல்கிய கண்களோடு நினைவுகூர்வது நமது உள்ளத்தை உருக்குகின்றது.
உம்மு ஷைமாவின் மூன்று பெண் பிள்ளைகளை சிரியப் படையினர் ஒருவர் பின் ஒருவராக வேட்டையாடிய கொடூர சம்பவத்தை தன்னால் பார்க்க மட்டுமே முடிந்தது. அதைத் தடுத்து நிறுத்த தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தன் ஆற்றாமையைச் சொல்லி அழுது கொண்டிருக்கிறாள் அத்தாய்.
பின்னர், அம்மூன்று பிள்ளைகளும் நிர்வாணமாக வீதியில் வீசப்பட்டிருந்ததை தான் கண்டதாக அமெரிக்காவின் ஊடகவியலாளர் ஒருவர் ரொய்டருக்குத் தெரிவித்தார்.
ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடக்குவதற்கு அஸதின் படையினர் மிருகங்களாகவே மாறிவிட்டுள்ளதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ஹும்ஸ் நகரத்தைச் சேர்ந்த மற்றொரு பெண், தனது பெண் பிள்ளைகளை இழுத்துச் செல்ல இராணுவம் முற்பட்டபோது, தன்னை அழைத்துச் செல்லுமாறும் தனது பிள்ளைகளை விட்டு விடுமாறும் அழுது மன்றாடினாள். கெஞ்சிக் கேட்டாள். ஆனால், அவளது கண்ணீரும் அழுகையும் பயனளிக்கவில்லை. பிள்ளைகளை அவர்கள் வேட்டையாடினர்.
ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றங்களை பச்சை பச்சையாக மேற்கொண்டு வரும் அஸதின் படையினர், இவ்வளவு கொடூரங்களை ம் இழைத்து விட்டு, அவற்றைப் புரட்சியாளர்களின் தலையில் போடுவதுதான் மிகவும் ஆச்சரியமளிக்கின்றது.
உயிரைக் கையில் வைத்துக் கொண்டு கொலைக் களத்திலிருந்து தப்பியோடும் பெண்கள் கூட குறைந்தபட்சம் மனிதர்களாக மதிக்கப்படாத நாடாக சிரியா மாற்றப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக அதிகாரத்தில் நீடித்திருக்கும் இந்தக் கொலை வெறியர்களுக்கு ஈரானின் நஜாதியும் ஈராக்கின் நூரி மாலிக்கியும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வும் விழுந்தடித்துக் கொண்டு ஆதரவளிப்பதை என்னவென்று சொல்வது?
வெறுமனே அலவி ஷீஆ அரசாங்கத்தைப் பாதுகாத்தல் என்ற ஒரே நோக்கத்திற்காக இவ்வளவு தொகை மக்களை கொன்றொழித்து, அராஜகங்களைக் கட்டவிழ்த்து வரும் அஸதின் அரசாங்கத்திற்கு ஈரான் முண்டுகொடுப்பது எந்த வகையில் தார்மீகமாகும்?
அஸதின் தந்தை ஹாபிஸ், தனது ஆட்சியின்போது தொடர்ந்தும் இலக்கு வைத்த ஹும்ஸ் நகரமும் அலப்போவுமே இப்போது மகனின் மிருக வேட்டைக்குப் பலியாகியுள்ளன. ஹாபிஸ் சுமார் 30,000 மக்களை படுகொலை செய்திருக்கின்றான். கொலை வெறியில் தந்தையை மிஞ்சி நிற்கும் அஸத், தற்போது பாலியல் வல்லுறவையும் போர் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளான். ஆனால், இவர்களின் எதிர் காலம் எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
40 ஆண்டு காலம் லிபியாவில் அதிகாரத்திலிருந்த கடாபி, பள்ளிக்கூட மாணவிகளைக் கடத்தி, வேட்டையாடிய பல சம்பவங்கள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. பிரான்ஸின் சார்கோஸியோடும், இத்தாலியின் பெரலஸ்கோனியோடும் கடாபி வைத்திருந்த கள்ளத் தொடர்புகள் அம்பலமாகிவிடும் என்பதற்காகவே கடாபி விசாரணைகளுக்கு வருவதற்கு முன்பாகவே சார்கோஸியின் ஏஜென்டினால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியும் உலகத்தின் பார்வைக்கு வந்துவிட்டது.
அதிகாரத்தில் நீடிக்க எத்தனை ஆயிரம் பேரையும் கொன்று குவிக்கலாம், எத்தனை பெண்களையும் வேட்டையாடலாம் என்ற கடாபியின் சூத்திரத்தை தான் இப்போது பஷ்ஷார் அல் அஸத் எனும் கோழைச் சிங்கம் சிரியாவில் கையாள்கின்றான்.
ஆனால், ஜனநாயகம், மனித உரிமைகள், மனித கண்ணியம் குறித்து வாய் கிழியப் பேசும் இந்த யுகத்தில் அப்பட்டமாக நடைபெறும் இந்த அநியாயங்களை ஐ.நா. உள்ளிட்டு அனைத்து அறபு நாடுகளும் மௌனமாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பதுதான் மிகவும் வெட்கக் கேடானது.
சிரியாவுக்கான ஐ.நா.வின் விஷேட தூதுவரும் அல்ஜீரியா வின் முன்னாள் பாதுகாப்பு அமை ச்சருமான லக்தர் பராஹிமி, பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி பஷ்ஷார் அல் அஸத் கைதுசெய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், மனித இனத்திற்கு எதிரான அனைத்து வகைப் போர்க் குற்றங்களும் சிரியாவில் சர்வ சாதாரணமாக நடந்து வருவதை அவரது அறிக்கை தெளிவு படுத்தியிருந்தது.
ஆனால், ஜனநாயகத்தில் இரட்டை விளையாட்டில் ஈடுபட்டுள்ள மேற்கு நாடுகள், சிரிய விவகாரத்தை வேண்டுமென்றே இழுத்தடித்து வருகின்றன. கட்டார் அமீர் மாத்திரமே சிரியாவை அறபு நாடுகள் ஆக்கிரமிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
ஈரான் தனக்கு வாய்ப்பாக சிரிய நெருக்கடியை ஷீஆக்களுக்கும் சுன்னிகளுக்கும் இடையில் நடைபெறும் மோதலாகக் காட்டி வருகின்றது.
சகிப்பின்மையின் எல்லைக்கு வந்துவிட்ட பின்னர், கொலை வெறியர்களை இன்னும் பாதுகாப்பதற்குக் களத்தில் குதித்துள்ள ஈரானும், ஈராக்கும் லெபனானும் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
நான்கு தசாப்தங்களாக ஆட்டம் போட்ட கடாபியின் கதை முடிந்து விட்டது. இன்று சிரியாவில் கடாபியின் வாரிசாக வந்து திக்கின்ற சிங்கம் அஸத் மூட்டிய தீ அதன் இறுதித் தறுவாயில் எரிந்து கொண்டிருக்கிறது. அது நிச்சயம் அணையும். அணைந்தே தீரும்.
source: www.meelparvai.net