சுவனத்தைப் பெற்றுத்தரும் முன் பின் சுன்னத்துக்கள்
அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் தன்னை வணங்க வேண்டும். தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே. மனிதனுடைய அனைத்து செயல்பாடுகளையும் இஸ்லாம் காட்டிய அடிப்படையில் அமைத்துக் கொள்ளாவிட்டால், அதற்குறிய தண்டனையையும் இறைவன் நாளை மறுமையில் குறைவில்லாமல் தருவான்.
“ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56)
தன்னால் படைக்கப்பட்ட மனிதன் தன்னை வணங்க வேண்டும் என்று கட்டளையிட்ட இறைவன் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள் என்றும் செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமாக கருதப்படாத கடமைகள் என்றும் இறைவன் இரு வகையான கடமைகளை மனிதர்கள் மீது சுமத்தியிருக்கிறான்.
உதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதே நேரம் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன் சுன்னத்தான தொழுகைகள் என்று இறைவன் சில தொழுகைகளை ஏற்படுத்தியுள்ளான். இவை கட்டாயக் கடமையாக இல்லையென்றாலும், இவற்றை செய்யும் போது மிகச் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
பொதுவாக இறைவனுக்காக நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் சில சில தவறுகள் நடக்கும் இந்தத் தவறுகளை அவ்வப்போது நாம் செய்யும் சுன்னத்தான காரியங்கள் ஈடு செய்துவிடும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரைப் பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும்.
எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி)
உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (அறிவிப்பவர் : தமீமுத் தாரி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : தாரமீ 1321)
கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன என்பதை மேற்கண்ட செய்தி தெளிவுபடுத்துகின்றது.
யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன். (அறிவிப்பவர் : உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம் 1198)
கடமையான தொழுகையல்லாத உபரியான தொழுகைகளை நாம் தொழுவதினால் இவ்வளவு பாக்கியமிக்க நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆகவே நாம் உபரியான தொழுகைகளை சரியாகப் பேணிக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் ஐங்காலத் தொழுகைகளுக்கு முன்னாலும், பின்னாலும் தொழ வேண்டிய சுன்னத்தான தொழுகைகள் பற்றி இந்த ஆக்கத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
பாக்கியம் பெற்றுத் தரும் பஜ்ருடைய முன் சுன்னத் :
ஐந்து நேரத் தொழுகையில் சுப்ஹுக்கு முன் உள்ள சுன்னத்தான தொழுகைக்கு நபியவர்கள் முக்கியத்துவம் கொடுத்ததைப் போல் வேறு எந்தத் தொழுகைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரீ 1163), முஸ்லிம் 1191)
யாருக்காவது சுப்ஹுடைய முன் சுன்னத் தவறிவிட்டால் அவர் அதனை சுப்ஹுத் தொழுகைக்குப் பின் தொழுது கொள்ள முடியும். அந்த அளவுக்கு பஜ்ருடைய முன் சுன்னத்துக்கள் முக்கியத்துவமிக்கவையாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. (அறிவிப்பவர் : கைஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுஹிப்பான் 2471)
ஆர்வமூட்டப்பட்ட முக்கியமான சுன்னத் :
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரீ 1182), நஸயீ 1736, அபூதாவூத் 1062, அஹ்மத் 23204)
சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சுன்னத் தொழுகைகள் எதுவும் இல்லை. சுப்ஹுத் தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகைகளையும் தொழக் கூடாது.
சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 581), முஸ்லிம் 1367)
லுஹருடைய முன் பின் சுன்னத்துக்கள் :
லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் சுன்னத்துத் தொழுகை தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் சுன்னத்துத் தொழுவதற்கு அனுமதியுள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரீ 937), முஸ்லிம் 1200)
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரீ 1182), நஸயீ 1736), அபூதாவூத் 1062), அஹ்மத் 23204)
சுப்ஹுடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்துக்கள் போலவே லுஹருடைய முன் சுன்னத்துக்கள் நான்கு ரக்அத்துக்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை மேலுள்ள செய்தி தெளிவுபடுத்துகின்றது.
அஸருடைய முன் சுன்னத்கள் :
அஸர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்துக்கள் சுன்னத் தொழுது கொள்ளலாம். நபியவர்கள் அவற்றைத் தொழும் போது இரண்டிரண்டாகப் பிரித்துத் தொழுவார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள். (அறிவிப்பவர் : அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ 394)
மஃரிபுடைய முன் பின் சுன்னத் :
மஃரிபுக்கு முன் சுன்னத்துக்கள் இரண்டும், பின் சுன்னத்துக்கள் இரண்டும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மஃரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதற்கு இடமளிப்பதில்லை இது மார்க்கத்தை மறுக்கும் ஈனச் செயலாகும்.
மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை விரும்பியவர் தொழட்டும் என்றார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 1183), அபூதாவூத் 1089),அஹ்மத் 19643)
அபூதாவுதின் (1089) அறிவிப்பில் மஃரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள் என்று இடம் பெற்றுள்ளது.
“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.” (ஹதீஸின் சுருக்கம்) (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 937)
இஷாவுடைய முன் பின் சுன்னத்கள் :
இஷாத் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் ஆகும். இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ 624), முஸ்லிம் 1384)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று கூறியுள்ளார்கள். ஆனால் எத்தனை ரக்அத்கள் என்று தெளிவுபடுத்தவில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டும், நான்கும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் அடிப்படையில் நாம் இஷாவுடைய சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம்.
“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.” (ஹதீஸின் சுருக்கம்) (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 937)
இவ்வளவு பாக்கியங்களைப் பெற்றுத் தரும் சுன்னத்தான தொழுகைகளை தவறாது தொழுது நாளை மறுமையில் சுவனத்தை அடைவோமாக!
source: www.rasminmisc.com