ஏழை எங்களுக்கே முதலிடம்…!
பாத்திமா நளீரா
ஹஜ்ஜுப் பெருநாள்
சிரிக்கிறது
ஹஜ்ஜாஜிகள் கூட்டம்
செழிக்கிறது.
சந்தோஷத்தைக் கொண்டாட
காசுக்குத்தான்
‘கல்பு” (மனம்) இல்லாமல்
காய்ந்து போயுள்ளது.
வருடந்தோறும்
ஹஜ் பட்டம்பெறும்
வசதி வர்க்கத்தினரே
சற்று நின்று…
பட்டினிக்குப்
பட்டியலிடும்
உங்கள் முஸ்லிம்
சமுதாயத்தையும்
திரும்பிப் பாருங்கள்..
படைத்தவனிடம்
பாவ மன்னிப்புக்
கேட்டுக் கொண்டே
தூக்கத்திலும்
சொத்துக்கு – காவல்
வைக்கிறீர்கள்..
நாங்களோ..
வருடம் ஒருமுறை – வீசும்
வசந்தப் பெருநாளுக்கு
முன்னால்
ஏழ்மை – என்ற
கேள்விக்குறியில்
தொங்கலாட்டம் ஆடுகிறோம்..
எங்களின்
எஜமான் வறுமைதான்..
வட்டிக் கடைக்கும்
வட்டி கொடுப்பவனுக்கும்
வண்டி
இழுத்துக் கொண்டிருக்கிறது.
என்ன செய்ய….?
படைத்தவன் சோதிக்கிறான்..
மனைவி மக்களோ..
புதிய உடைக்கும்
புரியாணி சாப்பாட்டுக்கும்
மனப்பால் குடிக்கிறார்கள்..
தொழுகையில்..
தோளோடு நின்று
ஏற்றம் காணவரும்
தனவான்களே!
ஏழையின் – வீட்டின்
வேதனம் – என்ன
வேதம் பேசுகிறது – என்று
கேட்டுப் பாருங்கள்..
ஆடம்பரத்துக்கும்
அரசியலுக்கும் – உலக
மாயைகளுக்கும்
பணத்தைப் பஞ்சாகப்
பறக்க விடுகிறீர்களே!
எரிகிறது – எங்கள்
வீட்டு அடுப்பல்ல…
வயிறு!
மறை வேதத்தை -மறந்து…
மரண வாயிலுக்கு
பணம் என்ற
காவலரண்
வைத்திருக்கிறீர்கள்..
என்றாலும்
ஏழை – எங்களுக்கே
இறைவனிடம்
முதலிடம்!
பெருநாள்
உள்ளக் குமுறல்
உட்பொருளாய்
வந்தது – என்றாலும்
“ஈத் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்”
உங்கள் சிந்தனைக்கு
சீர்சேர்க்கட்டும்!
நன்றி: நவமணி
source: www.fathimanaleera.blogspot.com