பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே பலர் தந்தைகளாக உள்ளனர்!
அண்மையில் ஒரு சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப் பகிர்ந்துகொள்ளவே இக்கட்டுரையை வரைகிறேன். பராஅத் என்றால் பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் என்று பொருள். அந்த நாளில் ஒருத்தி, தாய் மார்க்கமாம் இஸ்லாத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டாள். ஆம், இஸ்லாத்தைத் துறந்துவிட்டாள். விடுதலை பெற்றுவிட்டாள் என்று சொல்வதைவிட குஃப்ர் என்று நரகச் சிறைக்குள் விழுந்துவிடத் துணிந்துவிட்டாள் என்றுதான் கூறவேண்டும்.
அவளுடைய தந்தை ஒரு பள்ளிவாசலின் செயலாளர் என்பது மிகவும் வியப்புக்குரியது. ஆம், அவளுடைய தந்தைக்கு அவளுடன் சேர்த்து நான்கு பெண்பிள்ளைகள். அவள் மூன்றாமவள்.
அவளுடைய தந்தை, வீட்டில் தம் பிள்ளைகளையோ, மனைவியையோ தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை.
தம் பெண் பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கவில்லை. இஸ்லாத்தைப் போதிக்கவில்லை.
மாறாக, அவர் கண்டித்ததெல்லாம், பள்ளிவாசலில் அமைதியாக மார்க்கப் பணியாற்றும் ஆலிம்களைத்தான்.
அப்பள்ளியில் அவரால் பாதிக்கப்பட்ட மார்க்க அறிஞர்கள் பலர் உள்ளனர்.
ஒவ்வொருவரும் தம் மனம் வேதனைப்பட்டுத்தான் அந்தப் பள்ளிவாசலில் இருந்து வெளியேறினர். வெளியேற்றப்பட்டனர்.
அந்தப் பள்ளிவாசலில் மார்க்கப் பணியாற்றிய ஆலிம்கள் பலர், அவர்கள் பணியாற்றிய காலத்தில் அற்ப காரணங்களுக்காக அவ்வப்போது அவரால் கண்டிக்கப்பட்டனர், எச்சரிக்கப்பட்டனர். அந்தப் பள்ளியில் பணியாற்றும் முஅத்தின்கள்தாம் அவர் வீட்டின் பணியாளர்கள்.
பள்ளிவாசலின் பணத்தைத் தம் சொந்தப் பணமாகக் கருதித் தாராளமாகப் பயன்படுத்துவார்.
வெள்ளிக்கிழமை தவிர பள்ளிக்குத் தொழ வரமாட்டார். அப்படியே வந்தாலும் அங்குள்ளவர்களைக் கண்டிக்காமல் செல்லமாட்டார்.
அப்படிப்பட்ட ஒரு பள்ளிவாசல் செயலாளரின் மகள்தான் இன்று இஸ்லாத்தையே தூக்கியெறிந்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
பள்ளிவாசல் நிர்வாகம்
பள்ளிவாசல் நிர்வாகம் யார் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: யார் அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்கிவருவதுடன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அஞ்சவில்லையோ அவர்கள்தாம் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பராமரிப்பார்கள். அவர்களே நல்வழி பெற்றவர்களுள் அடங்குவர். (09: 18)
இன்று இத்தகையோர்தாம் பள்ளிவாசலை நிர்வாகம் செய்கின்றார்களா? சரி, அத்தகைய தகுதிகளைக் கொண்டிராவிட்டாலும், மார்க்கப் பணியாற்றுகின்ற மார்க்க அறிஞர்களையாவது சீண்டாமல் இருக்க வேண்டுமல்லவா? அவ்வப்போது சீண்டுவதையும், அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதையுமே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர் பலர். அவர்களும் மனிதர்கள்தாமே? சின்னச் சின்ன சறுகுதல்களும், பிழைகளும் இருக்கத்தான் செய்யும். அதற்காக, அதையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?
ஒரு தந்தை தம் பெண் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே பலர் தந்தைகளாக உள்ளனர். தொடக்கத்திலேயே இஸ்லாமிய மார்க்கப் போதனைகளை ஊட்டி வளர்க்க வேண்டும். பணிவு என்னும் நற்பழக்கத்தைப் போதிக்க வேண்டும். பருவ வயதை அடைந்தவுடன் அந்நிய ஆண்களின் முகம் பாராமல் இருக்கவும், தேவையில்லாமல் அந்நிய ஆடவருடன் பேசாமல் இருக்கவும் போதிக்க வேண்டும். பர்தா எனும் பாதுகாப்புக் கவசத்தைக் கட்டாயமாக அணியப் பழக்க வேண்டும். இப்படிப் பற்பல ஒழுக்கங்களையும் நன்னடத்தைகளையும் போதிக்க வேண்டும்.
அதன்பின் அவர்களுக்குப் பருவ வயது வந்ததும் தாமதிக்காமல், தகுந்த மணாளனைப் பார்த்து மணமுடித்துக்கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான், அப்பெண் நாளை மறுமையில் பெற்றோருக்கு நரகத்தைவிட்டுக் காக்கும் திரையாக ஆவாள் என்பதை நினைவில் கொள்க.
பொதுச் சொத்தை அபகரித்தல்
பொதுவாக, பொருட்செல்வத்துக்கு அடிமையாகாமல் ஒருவர் தம்மைக் காத்துக்கொள்வது மிகவும் சிரமம். அதற்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது அதனினும் கடினம். அதனால்தான் பொருளைக் கையாள்கின்ற பொறுப்புக்கு இறையச்சமுடையோர் முன்வருவதில்லை. ஏனெனில் அது நல்லவனையும் கெட்டவனாக்கிவிடும் என்பது நியதி. பிறர் பொருளை அபகரித்தல் மிகப்பெரும் குற்றம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.
அதேநேரத்தில் பொதுச்சொத்தை அபகரித்தல், அதை முறைகேடாகப் பயன்படுத்துதல் அதைவிடப் பெருங்குற்றம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்கு எத்தகைய தண்டனையைக் கொடுப்பான் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது. இதுதான் அதற்குரிய தண்டனை என்பதை நாம் கணிக்கவும் முடியாது. எனவே இது விசயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் நலன் பயக்கும்.
படிப்பினைகள்
1. இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சி வலை நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது என்பதை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். அவர்களுடைய சூழ்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று. அதை முறியடிக்க நாம் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
2. ஒரு தந்தை தம் பெண்பிள்ளைகளை இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாடுகளோடு வளர்த்து உரிய பருவத்தில் அவர்களுக்கு மணமுடித்துக்கொடுக்க வேண்டும். இப்பொறுப்பை முதுகுக்குப் பின்னால் தூக்கியெறிந்ததன் விளைவே இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கக் காரணம்.
3. நம்முடைய பெண்பிள்ளைகளை அந்நிய ஆடவர்களோடு பேசவோ பழகவோ கூடாது என்று எச்சரிக்கை செய்யத் தயங்குகின்றோம். அதன் விளைவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம்.
4. பொதுச்சொத்தைக் கையாளும்போது மிகுந்த கவனம் வேண்டும். அதில் சிறிதளவும் நம்முடைய பொருளோடு கலந்துவிடாமல் பேணிக்கொள்ள வேண்டும். அதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
5. மார்க்க அறிஞர்களை (ஆலிம்களை)க் குறைகூறுவதை அறவே விட்டொழிக்க வேண்டும். அவர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை எடுத்துரைக்க ஆதரவு நல்க வேண்டும்.
நடந்துவிட்ட இந்த நிகழ்வு பலரின் உள்ளத்தில் சோக வடுக்களை உண்டாக்கியிருந்தாலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வுகூட நடக்காமல் நம் சமுதாயத்தைக் காப்பதே நம் தலையாய பணியாகக் கொள்ள வேண்டும். நம் சமுதாயத்தைக் காக்க நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து, எதிரிகளின் சூழ்ச்சியை வெல்ல வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
-நூ. அப்துல் ஹாதி பாகவி source: