இளமையும் நேரமும்!
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம், 2. ஓய்வு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
இளமை மற்றும் நேரத்தின் முக்கியத்துவத்தை இந்த நபிமொழி எடுத்தியம்புகிறது
இளமை பருவம் என்பது மிகவும் ஒரு துடிப்பான உற்சாகமான பருவம். எதையும் சாதித்துக்காட்ட வேண்டும் என்று சாதனைகளை சாதிக்கின்ற பருவம்.
இவ்வாறு உள்ள இளமை பருவத்தில் மனிதன் நல் அமல்களை செய்யாமல் தான் மிகவும் அறிவுடன் நடப்பதாக தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான்.
இப்படி இளமையின் இனிமையான நேரத்தை இழந்து விடுகிறான். இந்தப் பருவத்தை ஊர் சுற்றுவதற்க்கும், அரட்டை அடிப்பதற்குறிய ஜாலியான பருவமே தவிர தொழுவதற்க்கும், மற்ற அமல்கள் செய்வதற்க்கும் உரிய பருவம் அல்ல என்று நினைக்கிறார்கள்.
ஆனால் அமல்களை செய்வதற்க்கென்று ஒரு பருவத்தை ஒதுக்கி வைத்துள்ளார்கள். அதுதான் முதுமைப் பருவம். முதுமை அடையும் வரை நாம் வாழ்வோம் என்று அல்லாஹ் உத்திரவாதம் தந்துள்ளானா?
பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படி செய்கிறோம். அன்றியும் (இதண்டையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்-22:5)
மானத்தை எதிர்நோக்கியுள்ள நாம் ஆரோக்கியமான நேரத்தில் வெற்றிக்காக பாடுபடாமல் அலட்சியமாக இருக்கலாமா?
இதே போல் ஆரோக்கியமான நேரத்தில் சம்பாதித்ததை ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு அதன் மூலம் மறுமையின் இலாபத்தைத் தேடாமல் இருந்தால் அந்த செல்வத்தினால் என்ன பயன்?
இளமையின் வீரத்தை அல்லாஹ்விற்கும், அவனது மார்க்கத்தை உயர்த்துவதற்கும் தியாகம் செய்ய வேண்டியவர்கள் தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு சினிமா நடிகர், நடிகைகளுக்கு மன்றங்கள் அமைத்து வளர்த்துக் கொண்டும், அரசியல் கட்சி என்று அதற்காக உழைத்துக் கொண்டும், பதவிக்காக அவர்களின் காலில் விழுந்து ஈமானை இழந்து கொண்டும் இருக்கிறார்கள். இவ்வாறு இளமைக் காலத்தை வீணடித்து விட்டு இறுதி காலத்தில் பள்ளிவாசலின் பக்கம் ஒதுங்குவதா?
அன்றைய காலத்தில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நபித்தோழர்கள் தன் இளமையையும் நேரத்தையும் இறை வழியில் செலவழித்து இறை மார்க்கத்தை நிலை நாட்டினார்கள். அவர்களுக்கு மட்டும் தான் மார்க்கத்தை நிலை நாட்டுவது கடமையா? நம்மீது இல்லையா? இந்த கடமையை நிறைவேற்ற நாம் முன்வர வேண்டும்.
இளமையின் ஆரோக்கியத்தையும், நேரத்தையும், னீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இவைகள் திரும்பப் பெற முடியாத பொக்கிஷங்களாக இருக்கின்றன..
நேரத்தை மனிதன், ஒரு கஞ்சன் எவ்வாறு தன்னிடம் உள்ள பணத்தை ஆயிரம் முறை கூர்ந்து கவனித்து செலவு செய்வானோ அது போன்று செலவு செய்திட வேண்டும்.
ஆனால் மனிதனோ வாழ்ந்து முடிந்த கடைசி காலத்தில் தான் தான் அலட்சியப்படுத்திய காலத்திற்காக வருந்துகிறான்.
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது. குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்.
‘‘நீங்கள் பத்து (நாட்களு) க்கு மேல் (பூமியில்) தங்கியதில்லை’’ என்று அவர்கள் தங்களுக்கிடையில் இரகசியம் பேசிக்கொள்வார்கள்.
‘‘ஒரு நாளேயன்றி (அதிகமாக) நீங்கள் தங்கவில்லை’’ என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம். (அல்குர்ஆன்-20:102-104)
இவ்வுலகத்தில் இழந்து விட்ட நேரத்தை மனிதன் மறுமையில் தான் உணருகிறான்.
மேலும் மனிதன் மறுமையில் தன்னுடைய வாழ்க்கையை எந்தச் செயல்களில் செலவிட்டான்? தன்னுடைய இளமையை எவ்வாறு செலவிட்டான்? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது நபிமொழி (திர்மிதீ)
எனவே மனிதன் காலத்தில் மகிமையை உணர்ந்து தனது இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் காலத்தோடு நம்முடைய ஓட்டத்திற்கு மனிதன் தன்னை தயார் படுத்திக்கொண்டால் வெற்றியடைவான்.
ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்ற ஒருவன் வேகமாக ரயில் செல்லும் போது மரம், செடி, கொடி மற்றும் இயற்க்கைக் காட்சிகளை ஓடுவது போல் காண்கிறான். இதை வைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்யும் ஒருவன் தான் பயணம் செய்யவில்லை. ஓடவில்லை. வெளியே உள்ள மரம், செடி, கொடி தான் ஓடுகிறது என்றால் அவன் தன்னை தானே ஏமாற்றிக் கொள்கிறான் என்று அர்த்தம். எனவே நாம் ஏமாறாமல் இருக்க காலத்தோடு சேர்ந்து நாமும் கடந்து செல்ல வேண்டும்.
நேரத்தை காப்பாற்றிட இஸ்லாம் எந்த் வேலையைச் செய்தாலும் முடியும் வரை தொடர்ந்து செய்திட வேண்டும் என்று கூறுகிறது. எந்த வேலையைச் செய்தாலும் அதன் தொடர்பு அறுந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.குறிப்பிட்ட காலத்தில் அது பெருஞ்செயலாக மாறி அதை செய்த நாமே இவ்வளவு பெரிய செயலையா செய்தோம் என்று மலைத்திடுவோம்.மேலும் ஒரு செயலில் ஆருவம் இருக்கும் போதே அதை முடித்து விட வேண்டும்.ஏனெனில் ஆரம்பத்தில் அலை மோதும் ஆர்வமும்,வேகமும் அதிக நாள் நீடிப்பது இல்லை பின்பு அந்த வேலை எப்போதும் தொடரபடாமல் அப்படியே நின்று போகும்.
மேலும் இந்த உலக வாழ்க்கையை மறுவுலக வாழ்க்கையின் நன்மைகளை அறுவடை செய்யும் விலை நிலமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த் உலக வாழ்க்கை என்பது அல்லாஹ் நமக்கு தந்த அருளாகும். இதனை எப்படிப் பயன்படுத்திட வேண்டும் என்பதை
இன்றும் அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும், பகலையும் உண்டாக்கினான். (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அருளை தேடும் பொருட்டும் (உண்டாக்கினான். இதற்க்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (28:73)
எனவே ஆரோக்கியம் மற்றும் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு இருவுலகிலும் வெற்றி பெற இன்றே முயற்சி செய்வோமாக!!
-S.ஷாஹிது ஒலி
source: www.unmaygal.blogspot.com