Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொப்பி ஓர் ஆய்வு (3)

Posted on November 1, 2012 by admin

    தொப்பி ஓர் ஆய்வு (3)     

முதலில் “புர்னுஸ்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதைப் பார்க்கலாம்.

1. தலையை மறைத்து உடல் முழுவதும் போர்த்திக் கொள்ளும் ஆடை 2. நீண்ட தொப்பி. இதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஹஜ் செய்பவர்கள் அணிந்திருந்தனர். (நூல்: லிஸானுல் அரப், பாகம்: 6, பக்கம்: 26)

அரபி மொழி அகராதி நூலாகக் கருதப்படும் லிஸானுல் அரப் என்ற நூலில் இந்த இரண்டு பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

புகாரியில் இடம் பெறும் புர்னுஸ் என்ற வார்த்தைக்கு நீண்ட தொப்பி என்று பொருள் கொண்டாலும் இவர்கள் அணியும் இந்தத் தொப்பியை அது குறிக்காது. ஏனெனில் தற்போது அணியும் தொப்பி நீண்ட வகை தொப்பி கிடையாது. மிக மிகச் சிறிய வகை தொப்பியையே தொப்பி எனக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் அன்றைய காலத்தில் இருந்த தொப்பி (புர்னுஸ்)யை வைத்து மற்றவர்களைத் தாக்க முடியும். அவ்வளவு பெரியது, கனமானது. இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இடம் உள்ளது.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் புகாரியில் விரிவாக இடம் பெற்றுள்ளது.

அதில் …உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கத்தியால் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை (தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்கு முன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் “சீராக நில்லுங்கள்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்குக்கிடையே சீர்குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் யூசுஃப் அத்தியாயம் அல்லது நஹ்ல் அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை மக்கள் தொழுகைக்காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது தான் தக்பீர் கூறியிருப்பார்கள். “என்னை நாய் கொன்று விட்டது… அல்லது தின்றுவிட்டது” என்று கூறினார்கள். (அப்போது அபூலுஃலுஆ ஃபைரோஸ் என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்) உடனே இந்த இல்ஜ் (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறை மறுப்பாளன்) தனது பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தனது வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக பதிமூன்று ஆண்களை அவன் குத்தி விட்டிருந்தான். அதில் ஏழு பேர் இறந்து விட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (புர்னுஸ்) (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறை மறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணிய போது தன்னைத் தானே அறுத்துக் (கொண்டு தற்கொலை செய்து) கொண்டான். (நூல்: புகாரி 3700)

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் அறிவிப்பில் அவனைப் பிடிப்பதற்காக நீண்ட தொப்பியை எறிந்தார் என்று இடம் பெற்றுள்ளது.

ஒருவரைத் தாக்கிப் பிடிக்கும் அளவுக்கு அந்தத் தொப்பி நீளமானதாகவும், கனமானதாகவும் இருந்துள்ளது. நம்மிடம் இருக்கும் நூல் தொப்பி குறிப்பிட்ட இடத்துக்குக் கூட போய் சேராது. கனமில்லாததால் இடையிலேயே விழுந்து விடும். எனவே ஹதீஸில் குறிப்பிடப்படும் புர்னுஸ் எனும் தொப்பியும் நமது காலத்தில் நடைமுறையில் இருக்கும் தொப்பியும் ஒன்றல்ல என்பதை இதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். புர்னுஸ் என்ற வார்த்தை இடம் பெறும் இந்தச் செய்தியை தொப்பி அணிய ஆதாரமாகக் காட்டுவோர் ஹதீஸில் கூறப்படுவது போன்ற இரும்புத் தொப்பியை அணியுமாறு தான் கூற வேண்டும். னவே நடைமுறையில் அறியப்பட்டுள்ள தொப்பிக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

தொப்பி என்பதற்கு இப்போது நமது காலத்தில் வழக்கத்தில் உள்ள தொப்பி என்பது தான் பொருள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் இந்த ஹதீஸ் வாசகத்தில் இருந்து தொப்பி அணியலாம் என்ற கருத்து தான் கிடைக்கும் அவசியம் என்ற கருத்தோ சிறந்தது என்ற கருத்தோ கிடைக்காது.

குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் மற்ற சந்தர்ப்பங்களில் அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற சந்தர்ப்பங்களில் அதைச் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நோன்பாளிகள் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றால் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்று தான் பொருள் வரும். இரவில் கண்டிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.

ஜும்மாவுக்குப் பாங்கு சொன்ன உடன் கடையைத் திறந்திருக்கக் கூடாது என்றால் இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஜும்மா முடிந்தவுடன் விரும்பினால் கடையைத் திறக்கலாம். திறக்காமலும் இருக்கலாம் என்று தான் புரிந்து கொள்வோம். அது போல் தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டியிருக்கும் போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.

தொப்பி அணிவது அனுமதிக்கப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது கட்டாயம் இல்லை என்பது தான் நமது நிலைப்பாடு. அந்த நிலைபாட்டுக்கு ஆதாரமாகத் தான் இந்த் ஹதீஸ் அமைந்துள்ளது.

தொப்பி அணிவது அவசியம் என்ற கருத்தைத் தான் இந்த ஹதீஸ் தருகிறது யாராவது பிடிவாதம் பிடித்தால் இந்த ஹதீஸில் கூறப்பட்ட அனைத்து ஆடைகளைப் பற்றியும் அவ்வாறு தான் அவர்கள் கருத்து கொள்ள வேண்டும்.

அதாவது இஹ்ராம் அணிந்தவர் தொப்பி அணியக் கூடாது என்பதை மட்டும் இந்த ஹதீஸ் கூறவில்லை. அத்துடன் சட்டை, பேன்ட், காலுறை ஆகியவற்றையும் இஹ்ராமின் போது அணியக் கூடாது எனக் கூறப்படுகிறது. இஹ்ராம் அல்லாத நேரத்தில் இம்மூன்றையும் அணிவது கட்டாயக் கடமை என்று இவர்கள் கூறுவார்களா?

மேலும் புகாரியின் இந்த ஹதீஸை வைத்து தொப்பி அணிவது சுன்னத் என்று சொன்னால் அந்த ஹதீஸில் உள்ள மற்றவைகளை அணிவதும் சுன்னத் என்று சொல்ல வேண்டும். சட்டை, முழுக்கால் சட்டை (பேண்ட்) செருப்பு, காலுறை (சாக்ஸ்) இவற்றையெல்லாம் அணிவது சுன்னத் என்று சொல்வார்களா?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1846, 3044, 4286, 5808)

இந்த ஹதீஸை தொப்பி போடுவதற்கு ஆதாரம் காட்டுவோர் ராணுவ வீரர் போல் இரும்புத் தொப்பி போடுவது தான் சுன்னத் என்று கூற வேண்டும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை நோக்கி இணை வைப்பாளர்களிடம் போர் புரியச் சென்றார்கள். அதனால் அவர்கள் தலையில் இரும்பு கவசத் தொப்பி இருந்தது. போர்க் களங்கள் தவிர வேறு நேரங்களில் அவர்கள் இரும்புத் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் இல்லை.

இரும்புத் தொப்பியை எல்லாம் தொப்பிக்கு ஆதாரமாக இவர்கள் காட்டுவதில் இருந்து உருப்படியான ஆதாரம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)

“இந்த வசனம் பள்ளிவாசலுக்கு அலங்காரத்துடன் வருமாறு கட்டளையிடுகிறது;. எனவே தொப்பி என்பதும் ஒரு அலங்காரம். ஆகவே தொப்பி அணிந்து வர வேண்டும்” என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதம் முற்றிலும் பலவீனமானதாகும். தொப்பி ஒரு அலங்காரப் பொருளாக நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் மார்க்கக் கடமை என்று தவறான கருத்தை விதைத்ததாலும் நிர்பந்தப்படுத்துவதாலும் தொப்பி அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். தொழுது முடித்தவுடன் அதை மடித்து சட்டைப் பைக்குள் வைப்பவர்களே அதிகம். இதிலிருந்து இதை ஒரு அலங்காரப் பொருளாக இவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதையும் அலங்காரத்துக்கு எதிரானதாக தொப்பியைக் கருதுகிறார்கள் என்பதையும் விளங்கலாம்.

மேலும் உண்மையில் அலங்காரமாக அழகாக இருக்கும் பல பொருட்களை இவர்கள் அணிந்து வருமாறு கட்டளையிடுவதில்லை. கண்ணாடி, கோட், சூட், டை போன்ற பொருட்கள் அலங்காரப் பொருட்களாக இன்று பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் அணிந்து வருவது சுன்னத் என்று சொல்வார்களா?.

இறைவனை வணங்க வரும் போது நல்ல ஆடைகளை அணிந்து தூய்மையாக வர வேண்டும் என்பதையும், அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்த நிர்வாணமாக தவாஃப் செய்வது போன்ற காரியத்தை செய்யக் கூடாது என்பதையும் தான் இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் கூறுவது போன்று தொப்பி அணிந்து பள்ளிவாசலுக்கு வருமாறு இந்த வசனம் கூறவில்லை.

இவை தான் தொப்பி போடுவது சுன்னத் என்று சொல்பவர்களின் ஆதாரம். இந்த ஆதாரங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சம்மந்தப்பட்ட செய்திகளில் தொழுகையில் தொப்பி போட்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை.

அடுத்து இவர்கள் காட்டிய ஆதாரங்களில், தொப்பி என்று அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் அரபிச் சொல்லுக்கு நீண்ட தொப்பி என்றே பொருள் கொள்ள வேண்டும். மேலும் அவை அடுத்தவர்களைத் தாக்கும் அளவுக்குக் கனமானதாகவும் இருந்துள்ளது. இதற்கும் இப்போது தொப்பி எனக் கூறப்படுவதற்கும் சம்மந்தம் இல்லை.

தொப்பியைப் பற்றி இவர்கள் எடுத்துக் காட்டிய எந்தச் செய்தியிலும் தொப்பி அணிய வேண்டும் என்ற கட்டளையோ ஆர்வமூட்டுதலோ இல்லை.

மேலும் இவர்கள் தமிழில் வெளியிட்ட தொழுகை ஷாஃபீ, தொழுகை ஹனஃபீ ஆகிய நூல்களில் தொழுகையின் பர்லுகள், வாஜிபுகள், சுன்னத்துகள் என்று சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் தொப்பி அணிவது பர்லு என்றோ வாஜிபு என்றோ அல்லது சுன்னத் என்றோ குறிப்பிடவில்லை. இதிலிருந்து தொப்பி போடுவது சுன்னத் இல்லை என்பதை அவர்கள் நூலில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

மேலும் தொப்பி போடாமல் தொழுதால் தொழுகை கூடாது என்றோ, அல்லது தொப்பி போடாமல் தொழுபவர்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்றோ எந்த மத்ஹப் நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

சுன்னத் என்பதன் இலக்கணம்

ஒரு பேச்சுக்கு இவர்கள் கூறுவது போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் அதை சுன்னத் என்று கூற முடியாது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடவடிக்கைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒன்று வணக்கவழிபாடுகள். மற்றொன்று உலகம் சம்மந்தப்பட்ட காரியங்கள். வணக்கவழிபாடுளைப் பொருத்தவரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தால் அவை மார்க்கச் சட்டமாகி விடும். ஆனால் உலகக் காரியங்களைப் பொருத்தவரை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும் அவை மார்க்கச் சட்டமாகாது. தாம் செய்ததுடன் அவர்கள் வாயால் கட்டளை இட்டால் மட்டுமே அவை மார்க்கச் சட்டமாக ஆகும்.

ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போன்ற காரியங்களை இரண்டாம் வகைக்கு நாம் உதாரணமாக நாம் குறிப்பிடலாம். மேற்கண்ட காரியங்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அவற்றை நாம் செய்வது சுன்னத் என்று ஆகாது. இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தலைமுடி வளர்ப்பதையும், தாடி வைப்பதையும் உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாடியும் வைத்துள்ளனர். தலைமுடியும் வளர்த்துள்ளனர். ஆனாலும் தாடி வைப்பதை சுன்னத் என்கிறோம். தலைமுடி வளர்ப்பதை சுன்னத் என்று யாரும் கூறுவதில்லை. தாடியும், தலைமுடியும் வணக்க வழிபாடுகளில் உள்ளவை அல்ல. எல்லா மனிதர்களும் செய்யக் கூடிய காரியங்களே. ஆனாலும் தாடி வைத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் தாடி வளர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அது குறித்து கட்டளை இட்டதால் அது சுன்னத் ஆகிறது. ஆனால் தலைமுடி வளர்த்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலை முடி வளர்க்குமாறு மற்றவர்களுக்கு கட்டளை இடாததால் அது சுன்னத் ஆக ஆகவில்லை. மற்றொரு உதாரணத்தின் மூலமும் இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொண்டனர். இதனால் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொள்வது சுன்னத் என்று யாரும் கூற மாட்டோம். ஆனால் நோன்பு துறக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறந்ததுடன் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறங்கள் என்று அவர்கள் ஆர்வமூட்டியதால் அது சுன்னத்தாக ஆகி விடுகிறது.

எனவே மார்க்க விஷயங்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதும் மார்க்கமாகும். அவர்கள் செய்ததும் மார்க்கமாகும். அவர்கள் அங்கீகரித்ததும் மார்க்கமாகும்.

உலக விஷயங்களைப் பொருத்த வரை அவர்கள் கட்டளையிட்ட அனைத்தும் மார்க்கமாக ஆகும். ஆனால் அவர்கள் செய்தவை அனைத்தும் மார்க்கமாகாது. அது போல் அவர்கள் அங்கீகரித்தவை அனைத்தும் மார்க்கமாகாது. மாறாக அவர்கள் செய்ததுடன் மற்றவர்களுக்கும் அது குறித்து கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கமாக ஆகும்.

தொப்பி என்பது ஒரு ஆடையாகும் இது வணக்க வழிபாடுகளில் ஒன்று அல்ல. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நேரங்களில் தொப்பி அணிந்து இருந்தாலும் அவர்கள் தொப்பி அணியுமாறு கட்டளையிடவில்லை. ஆர்வமும் ஊட்டவில்லை. எனவே தொப்பி அணிவது சுன்னத் ஆக ஆகாது.

தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தொப்பி அணிய விரும்பினால் அணியலாம்; விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.

வரலாற்றுப் பின்னணியில்

இந்திய முஸ்லிம்களிடம் தொப்பி மிகுந்த முக்கியத்தைப் பெற்றதற்கு வரலாற்று ரீதியான காரணமும் உள்ளது.

உலக இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நாடு தலைமை வகித்து வந்தது. கிலாஃபத் என்று சொல்லப்பட்ட இந்த தலைமைத்துவம் கடைசியாக துருக்கி வசம் வந்தது. துருக்கி தான் இஸ்லாமிய உலகின் தலைமையாக கருதப்பட்ட நேரத்தில் இந்தியாவைப் போல் துருக்கியும் அடிமைப்படுத்தப்பட்டது. எனவே இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட அதே நேரத்தில் துருக்கியின் கிலாஃபத்தை மீட்பதற்கும் பாடுபட்டனர். இதற்காக கிலாஃபத் இயக்கத்தையும் இங்கே உருவாக்கினார்கள்.

இந்திய முஸ்லிம்கள் துருக்கியின் விடுதலைக்காக பாடுபட்டதால் இந்திய முஸ்லிம்களை இங்குள்ள விஷமிகள் துருக்கர் எனக் குறிப்பிடலாயினர். இது தான் பேசு வழக்கில் துலுக்கர் என ஆயிற்று.

கவி பாரதி கூட தனது கவிதையில் முஸ்லிம்களைப் பற்றி கூறும் போது

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி

பெண்ணின் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல்

எனப் பாடினான்.

அது போல் திக்கை வணங்கும் துருக்கர் எனவும் முஸ்லிம்களைப் பற்றி கூறியுள்ளான்.

இஸ்லாமிய உலகின் தலைமையாக கடைசி காலத்தில் கருதப்பட்ட துருக்கி மக்கள் அனைவரும் தொப்பி போடுவதை தங்களின் தேசிய அடையாளமாகக் கருதினார்கள்.

அவர்கள் இஸ்லாத்தைப் பேணுகிறார்களோ இல்லையோ தொப்பியைப் பேணுவதில் தவற மாட்டார்கள்.

போர்க்களத்தில் கூட தொப்பி அணிந்து வாளைப் பிடிப்பதை விட தொப்பி கீழே விழாமல் காப்பாற்ற முயன்றதால் தான் எதிரிகளிடம் துருக்கியர் தோற்றுப் போனார்கள் என்று வரலாறு கூறுகிறது. அந்த அளவுக்கு தொப்பி அவர்களின் வாழ்வோடு ஒன்றி இருந்தது.

நமக்கு தலைமை துருக்கி தான் என்ற எண்ணம் விதைக்கப்பட்டதன் விளைவாக இங்குள்ள் முஸ்லிம்கள் நாமும் தொப்பி போடுவது மார்கக்க் கடமை என்ற முடிவுக்கு வந்தனர். அதிலும் ஆரம்ப காலத்தில் ஒரு முழம் உயரமுள்ள துருக்கி தொப்பியையே அணிந்து வந்தனர். காலம் சென்ற ஜமாஅதுல் உலமா மாநிலத் தலைவரும் ரஹ்மத் மாத இதழ் ஆசிரியருமான கலீல் ரஹ்மான் ரியாஜீ அவர்கள் ஒரு முழ உயரம் கொண்ட துருக்கி தொப்பி அணிந்ததை நான் பார்த்துள்ளேன். இன்னும் பல மார்க்க அறிஞர்களையும் இவ்வாறு கண்டுள்ளேன்.

எனவே துருக்கியின் தாக்கம் காரணமாகவே தொப்பி இஸ்லாமியச் சின்னம் என்ற கருத்து இந்திய முஸ்லிம்களிடம் ஆழப் பதிந்ததே தவிர மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.

 source: www.onlinepj.com

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 + = 17

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb