தொப்பி ஓர் ஆய்வு (2)
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?” என்று விடையளித்தார்கள். (நூல்: புகாரி 352)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள். (நூல்: புகாரி 353)
இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக்குக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.
பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு ஒருவர் அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
அது போல் ஒருவர் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும், ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
தொப்பி அணியுமாறு அல்லாஹ்வோ அவனது தூதரோ கூறியதற்கு ஆதாரம் ஏதும் இல்லாததால் தொப்பி அணிவது மார்க்க சம்மந்தப்பட்டது அல்ல என்பதைச் சந்தேகமற அறியலாம்.
தொப்பி அவசியம் என்போரின் ஆதாரங்கள்
தொப்பி அணிவது அவசியம் என்ற கருத்துடையவர்கள் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றுள் சில ஆதாரங்கள் பலவீனமானவையாக உள்ளன.
மற்றும் சில ஆதாரங்கள் அவர்களின் கருத்தை நிலைநாட்டும் வகையில் இல்லை.
இன்னும் சில ஆதாரங்கள் அவர்களின் வாதத்துக்கு எதிராக உள்ளன. அவர்களின் ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
தொப்பி அணிவது அவசியம் என்பதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை தங்களின் ஆதாரமாக முன்வைக்கிறார்கள்
….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொப்பியா? அல்லது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.
திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. சொர்க்கத்தில் கிடைக்கும் உயர்ந்த பதவிகளை மக்கள் அண்ணாந்து பார்ப்பார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறும் போது அவர்கள் அண்ணாந்து பார்ப்பதை செயல் மூலம் காட்டினார்கள். இதை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் போது அவர்களும் தமது தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்து இப்படி அண்ணாந்து பார்ப்பார்கள் என்று கூறினார்கள்.
இப்படி அண்ணாந்து பார்ப்பதைச் செயல் மூலம் காட்டிய போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்று அடுத்த அறிவிப்பாளர் கூறுகிறார். அவர்களின் தொப்பி விழுந்தது என்று கூறியது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்ற கருத்தில் கூறினாரா? அல்லது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்ற கருத்தில் கூறினாரா? என்பதை அறிவிப்பாளர் தெளிவுபடுத்தவில்லை என்று அவருக்கு அடுத்த அறிவிப்பாளர் கூறுகிறார். இது அந்த ஹதீஸின் வாசகத்திலேயே கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்ததாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் இந்த ஒன்று மட்டுமே. இதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்தது உறுதிப்படுத்தப்படவில்லை.
இது இந்தச் செய்தியில் காணப்படும் முதல் பலவீனம். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள் குறித்தும் குறைபாடுகள் உள்ளதால் இந்தச் செய்தி மொத்தமாக நிராகரிக்கப்படும் நிலையில் இருப்பது இதில் உள்ள இரண்டாவது பலவீனமாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்தது உறுதி இல்லாவிட்டாலும் உமர் ரளியல்லாஹு அன்ஹு தொப்பி அணிந்திருக்கலாம் என்று முடிவு எடுப்பதைக் கூட மேற்கண்ட பலவீனங்கள் தடுத்து விடுகின்றன. இந்தச் செய்தி ஒட்டு மொத்தமாக பலவீனமாக உள்ளதால் இதை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொன்ன நபித் தோழர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.
“நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ருக்கானா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதீ 1706, அபூதாவூத் 3556)
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களில் ஒருவரான திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் தரத்தை அதன் கீழே இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: “இதன் அறிவிப்பாளர் தொடர் வலிமையானதல்ல. இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபுல் ஹஸன் அல்அஸ்கலானீ என்பவரையும் இரண்டாவது அறிவிப்பாளர் (முஹம்மத் பின் ருக்கானா என்ற) ருக்கானாவின் மகனையும் நாம் யாரென அறிய மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹதீஸ் கலையின் மற்ற அறிஞர்களும் இவர்கள் யார் என்ற விபரத்தைக் கூறவில்லை.
யார் என்றே தெரியாத இரண்டு அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இந்தச் செய்தி பலவீனமானது என்பதால் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்கள், இதை முழுமையாகவும் செயல்படுத்துவதில்லை. இந்தச் செய்தியின்படி தொப்பி அணிந்து அதன் மேல் தலைப்பாகையும் அணிய வேண்டும். இது தான் இந்த ஹதீஸின்படி முஸ்லிம்களின் அடையாளம். இதை யாரும் செயல்படுத்துவதில்லை. வலியுறுத்துவதும் இல்லை. தொப்பி அணிவதை வலியுறுத்துவோர் வெறும் தொப்பி மட்டும் அணிந்தால் போதும் என்றே கூறுகின்றனர். ஆனால் தொப்பி மட்டும் அணிபவர்கள் இணை வைப்பவர்களுக்கான அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாக உள்ளது.
இது பலவீனமான ஹதீஸாக இருப்பதுடன் தொப்பி அணிவதற்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.
பின்வரும் செய்தியையும் தங்களின் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பிக்கு மேல் தலைப்பாகை அணிவார்கள். (சில நேரங்களில்) தலைப்பாகை இல்லாமல் தொப்பி மட்டும் அணிவார்கள். (சில நேரங்களில்) தொப்பி இல்லாமல் தலைப்பாகை மட்டும் அணிவார்கள். (நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 1, பக்கம்: 130)
ஸாதுல் மஆத் எனும் மேற்கண்ட நூலாசிரியர் இப்னுல் கையும் ஆவார். இவர் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களில் ஒருவர் அல்ல. இவர் ஹிஜ்ரி 691-751 ஆண்டில் வாழ்ந்தவர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பான ஒரு செய்தியை இவர் குறிப்பிடுவதாக இருந்தால் அந்தச் செய்திக்கான ஹதீஸ் நூலை இவர் குறிப்பிட வேண்டும். அப்படி எந்த நூலையும் குறிப்பிடாமல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்தார்கள் என்று இவர் கூறுவதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் இவர் கூறுவது போல் ஹதீஸ் நூல்களில் எந்தச் செய்தியும் இல்லை என்பதே உண்மை.
“அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் சட்டை அணியக் கூடாது. முழுக்கால் சட்டை அணியக் கூடாது. புர்னுஸ் அணியக் கூடாது. அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்து கொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 134, 36 6, 1838, 1842, 5794, 5803, 5805, 5806)
இந்தச் செய்தியில் இடம் பெறும் “புர்னுஸ்’ என்ற சொல்லுக்கு தொப்பி என்று மொழி பெயர்த்து, இந்த ஹதீஸ் தொப்பி அணிவதற்கு ஆதாரம் என்று இவர்கள் கூறுகின்றனர். அதாவது “இஹ்ராம் கட்டியவர் தொப்பியை அணியக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டாதவர் தொப்பி அணியலாம் எனவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் தொப்பி இருந்துள்ளதையும் விளங்கலாம்’ எனவும் இவர்கள் கூறுகின்றனர்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.