Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொப்பி ஓர் ஆய்வு (1)

Posted on November 1, 2012 by admin

 

    தொப்பி ஓர் ஆய்வு (1)    

தொப்பி அணிவது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடையாளம் என இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

தொழுகை நோன்பு போன்ற வணக்கம் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ தாடி போன்ற வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ அதைப் பெரிதுபடுத்தாத முஸ்லிம்கள், ஒருவர் தொப்பி அணியத் தவறினால் அதைப் பெரிதுபடுத்துவதைக் காண முடிகிறது. தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் தொப்பி அணியாதவர் பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளதைக் காண முடிகிறது.

எல்லா நேரத்திலும் தொப்பி அணியாவிட்டாலும் தொழுகை, திருமணம், மற்றும் இஸ்லாமியப் பொது நிகழ்ச்சிகளில் கட்டாயம் தொப்பி அவசியம் என்று கருதப்படுகிறது. சில ஊர்களில் சினிமாவுக்குச் சென்றாலும் சூதாட்டத்தில் இறங்கினாலும் கூட தொப்பி அணிந்தே காட்சி தருவதையும் காண முடிகிறது.

இஸ்லாத்தின் முதன்மையான அடையாளமாக இந்திய முஸ்லிம்களால் கருதப்படும்,

தொப்பி குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறுகிறார்கள்?

தொப்பிக்கு இந்திய முஸ்லிம்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு ஆதாரம் உள்ளதா?

என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம்.

தொப்பி அவசியம் எனக் கூறுவோரும் அவசியம் இல்லை எனக் கூறுவோரும் தமது வாதத்தை நிலை நாட்ட எடுத்து வைக்கும் ஆதாரங்கள் யாவை? இவற்றில் எந்தக் கருத்து சரியானது? என்பதை முழுமையாக விளக்கும் ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது.

தொப்பி குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இது போதுமான நூலாகும் என்பது எங்களின் நம்பிக்கை. -நபீலா பதிப்பகம்

     தொப்பி ஓர் ஆய்வு      

முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்வதற்கு தொப்பி முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. தொப்பியே இஸ்லாத்தின் அடையாளம் என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிச் செயல்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்று வருகிறது.

முஸ்லிம்கள் நடத்தும் நிழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களும் தொப்பி அணிந்து முஸ்லிம்களைக் கவர முயற்சிப்பதையும் நாம் பார்க்கிறோம். முஸ்லிமல்லாதவர்கள் கூட தொப்பி தான் இஸ்லாத்தின் அடையாளம் என்று கருதும் அளவுக்கு இந்தக் கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது.

குறிப்பாக தொழுகை நேரங்களில் ஒருவரிடம் தொப்பி இல்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று பொது மக்களும் ஆலிம்களும் எண்ணுகின்றனர். எனவே பல பள்ளிவாசல்களில் “தொப்பி அணியாமல் தொழக் கூடாது!’ என்ற கடுமையான வாசகம் பள்ளிவாசலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு அல்லாஹ் முக்கியத்துவம் கொடுத்துள்ளானா? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.

    திருக்குர்ஆனில் ஆதாரம் இல்லை      

இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் தொப்பி அணிவது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது? தொப்பி அணிவதை வலியுறுத்தியோ ஆர்வமூட்டியோ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பது தான் இக்கேள்விக்கான விடையாகும்.

தொப்பியை வலியுறுத்துவது ஒரு புறமிருக்கட்டும். தொப்பியைக் குறிப்பதற்கு அரபு மொழியில் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்களில் ஒரு சொல் கூட குர்ஆனில் கூறப்படவில்லை. தொப்பி என்ற சொல்லே குர்ஆனில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் சொல்லாமல் இருக்க மாட்டான்.

    நபிவழியில் ஆதாரங்கள் உண்டா?    

சாதாரணமாக தொப்பி அணியாவிட்டாலும் தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று தான் அதிகமான முஸ்லிம்கள் நம்புகின்றனர். ஆனால் தொழுகையின் போது தொப்பி அவசியம் எனக் கூறும் ஒரு நபி மொழியும் இல்லை. தொழுகையின் போதோ தொழுகை அல்லாத மற்ற சந்தர்ப்பங்களிலோ தொப்பி அணிவது அவசியம் என்றோ அல்லது விரும்பத்தக்கது என்றோ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகவும் எந்தச் சான்றும் இல்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையிலும் மற்ற சந்தர்ப்பங்களிலும் தொப்பி அணியாமல் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன்னிலையில் நபித்தோழர் பலர் தொப்பி இல்லாமல் காட்சி தந்துள்ளனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் தமக்கு குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்ததால் எங்களைப் பார்த்து “உங்களுடைய இடத்தில் நில்லுங்கள்” என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 275)

புகாரியின் 571 ஆவது ஹதீஸில்

“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் சொட்ட, தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போல் உள்ளது” என்று இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வீட்டில் குளித்துவிட்டு வரும் போது அவர்களின் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மேலும் அவர்களின் கையை தலையில் வைத்தவர்களாகவும் வந்துள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்திருந்தால் தம் கையைத் தொப்பியின் மீது வைத்துக் கொண்டு வந்தார்கள் என்று நபித்தோழர் குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு கூறாததால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறும் தலையுடன் தான் வந்து தொழுவித்துள்ளார்கள் என்பதை அறியலாம். மேலும் யாரும் தலையில் நீர் வடிய தொப்பியணிந்து கொண்டு வர மாட்டார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணியாமல் தலையைத் திறந்த நிலையில் தான் பெரும்பாலும் இருந்துள்ளர்கள் என்பதைப் பின்வரும் நபிமொழிகள் மூலம் நாம் அறியலாம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை வாரி இரண்டு சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்களை விட அழகான ஒருவரை அதற்கு முன்பும் பின்பும் நான் பார்த்ததில்லை. (அறிவிப்பவர்: பரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: நஸயீ 5219)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் தொப்பி அணிந்திருந்தால் அவர்கள் தலை வாரி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய முடியாது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலை வாரி இருந்தார்கள் என்ற வாசகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலை திறந்த நிலையில் இருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நான் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுடி எப்படி இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களது தலைமுடி அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோள்களுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: கதாதா நூல்: முஸ்லிம் 4666)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுடி அலையலையானதாக இருந்தது; சுருள் முடியாகவும் இல்லை, படிந்த முடியாகவும் இல்லை என்று கூற வேண்டுமானால் தொப்பி அணியாமல் தலை திறந்த நிலையில் இருந்தால் தான் மற்றவர்களால் கூற முடியும்.

ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நரை முடி பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒரு சில நரை முடி கூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடிகள் தென்படும்” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஸிமாக் பின் ஹர்ப் நூல்: முஸ்லிம் 4680)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்கும் போது தெய்க்காமல் இருந்த போதும் தலையை தொப்பியால் மறைக்காமல் இருந்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3548)

தாடியில் உள்ள நரை முடி எத்தனை என்று சொல்வதற்கு ஏற்றவாறு எவ்வாறு தாடி மறைக்கப்படாமல் இருந்ததோ அப்படித்தான் தலையும் மறைக்கப்படாமல் இருந்துள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது முடியை (நெற்றியின் மீது) தொங்க விடும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். இணை வைப்பவர்ர்கள் தங்கள் தலை முடியைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும்) தொங்க விட்டு வந்தனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு இறைக் கட்டளை எதுவும் இடப்படவில்லையோ, அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் (தலை) முடியை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்துக்) கொண்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3558)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை நரை முடிகள் இருந்தன? எப்படி வகிடு எடுத்தார்கள்? என்றெல்லாம் அறிவிக்க வேண்டுமானால் திறந்த நிலையில் அவர்களின் தலை இருந்திருக்க வேண்டும் என்பதைச் சாதாரணமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமல்லாமல் நபித் தோழர்களும் கூட தலையை மறைக்காதவர்களாகப் பெரும்பாலும் காட்சியளித்துள்ளார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

நான் நீண்ட முடியுடையவனாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான் சென்று என் முடியைக் கத்தரித்து விட்டுச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் உன்னைச் சொல்லவில்லை என்றாலும் இது (முன்பை விட) அழகாக உள்ளது” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: நஸயீ 4980, அபூதாவூத் 3658)

முக்கியமான மார்க்க அறிஞர் முன்னால் செல்லும் பொது தொப்பி போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் ஒரு நபித்தோழர் தலையைத் திறந்த நிலையில் இருந்துள்ளார். முடியைக் குறைப்பதற்கு முன்னாலும் குறைத்த பிறகும் தலை திறந்தவராக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் அவர் வந்த போதும் தொப்பி போட்டுக் கொண்டு வரக்கூடாதா என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை

தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள். அப்போது, “இவர் தமது முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: நஸயீ 5141, அபூதாவூத் 3540)

தொப்பி தான் முக்கியமானது என்று இருந்தால் உனக்கு ஒரு தொப்பி கிடைக்கவில்லையா என்று அவர்கள் கேட்டிருப்பார்கள்.

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ரின் தந்தை) அபூகுஹாஃபா, (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலைமுடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4270)

தலைவிரி கோலமாக வந்தது, தலை வாராமல் வந்தது, வெள்ளை முடியுடன் வந்தது என்று பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் முன்னால் காட்சியளித்த போது எண்ணெய் தேய்த்து தலை வாரச் சொன்னார்களே தவிர, தலைக்குத் தொப்பி அணியுமாறு கூறவில்லை என்பதைக் கவனியுங்கள்.

ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. (நூல்: அபூதாவூத் 592)

தொழுகைக்கு வெளியே அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பி தொழுகையுடன் சம்மந்தமில்லாத சாதாரண ஆடையாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb